இருவர் அமரக்கூடிய சோபாவில் காண்டீபனும் மிதிலாவும் அமர்ந்திருக்க, அவர்கள் மடியில் அதிரன், தீபன், தீபனா மூவரும் அமர்ந்திருப்பதைத்தான் கதிரவனோடு சென்று வாக்குமூலம் கொடுத்துவிட்டு வந்த கேதகி கண்டாள்.
வாசுசேனனாக அறிமுகமாகி, அவளிடத்தில் மெல்லிய சலனத்தை உண்டாக்கிய காண்டீபன் என்கிற அந்த மனிதன் குடும்பமாக அமர்ந்திருந்த அந்தக் காட்சி கண்ணுக்கு மிக மிக அருமையாக தெரிந்த அதே நேரத்தில், உடலை ஊடுருவும் குளிரைப்போன்று உள்ளத்தை ஒரு வலி ஊடுருவாமல் இல்லை.
அதே நேரத்தில் உரிமைப் போராட்டம் நடத்துகிறாள் என்று அப்பட்டமாகக் காட்டும் செல்லப் பிடிவாத முகத்துடன் காண்டீபனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவன் கன்னத்தோடு கன்னம் வைத்துக்கொண்டு நின்றிருந்த தீபனாவைப் பார்த்ததும் அவள் உதட்டில் மெல்லிய முறுவல்.
அவளுக்கு யாராய் இருந்தாலும் முதலில் அவளோடுதான் ஒட்டிக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு நாள்களில் இவளுக்கே அது தெரிந்திருந்தது. அதை மெய்ப்பிக்கிறவளாக, கதிரவனைக் கண்டதும் அவளிடம் சின்னதாய் ஒரு தடுமாற்றம். இப்போது அவள் அவளின் ‘கடிடவன் மாமா’விடம் போவதா, இல்லை ‘காந்தி மாமா’விடமே இருப்பதா?
இதில் சியாமளாவின் மூத்தவன் வேறு, “ஹாய் கதிரவன் மாமா!” என்றதுதான் தாமதம், “கடிடவன் மாமா!” என்று குரல் கொடுத்து, காண்டீபனிடம் இருந்து ஒரு கையை மட்டும் எடுத்து அவன் புறமாய் நீட்டினாள்.
சியாமளாவின் மூத்தவனைத் தூக்கி மேலே போட்டுப் பிடித்து விளையாட்டுக் காட்டிவிட்டு வந்து அவளைத் தூக்க முயன்றான் கதிரவன்.
“இல்ல, நீங்க வாங்கோ!” என்றாள் அவள்.
“என்னம்மா?” ஏதோ சொல்லப்போகிறாளாக்கும் என்று அவள் உயரத்துக்கு குனிய, அவன் கழுத்தையும் அந்தக் கையால் சுற்றி வளைத்துக்கொண்டு, “என்ர கடிடவன் மாமா!” என்றாள் அதிரனிடம்
இப்போதுதான் கதிரவனுக்கே விடயம் பிடிபட்டது. பல வழக்குகளைப் பார்த்தவன் அவன். இந்தப் புது வழக்கை எப்படிக் கையாள்வது என்று தெரியாது சிறு சிரிப்புடன் விழித்து நின்றான். ஆனால் அவனுக்கு உதவுகிறவனாக, “எனக்கு என்ர அப்பா போதும்.” என்றான் அதிரவன் மென் முறுவல் ஒன்றுடன்.
கதிரவனுக்குப் போட்டி இல்லை என்றதும் அவனை அம்போ என்று விட்டுவிட்டுக் காண்டீபனைத் திரும்பவும் கட்டிக்கொண்டாள் தீபனா. கதிரவனால் சிரிப்பை அடக்கவே முடியாமல் போயிற்று.
அதற்குமேல் கேதகி அங்கே தேவையில்லை என்பதில் இனி கொழும்புக்குப் புறப்படலாம் என்று அவளிடம் சொன்னான் எல்லாளன்.
“அங்க உங்கட வேலைக்கு ஏற்பாடு செய்தாச்சு. ஏதும் பிரச்சினை வந்தா இனியும் நீங்க தனி எண்டு எப்பவும் நினைக்கக் கூடாது. நாங்க எல்லாரும் இருக்கிறம். சரியாய்?” என்றான் எல்லாளன் கனிவுடன்.
விழிகள் இலேசாகப் பனிக்க சரி என்பதுபோல் தலையசைத்தாள் அவள்.
“தனியா போவீங்களா? இல்லை ஆரையும் சேத்து அனுப்பவா?”
இனி அவள் தனிதானே. இத்தனை காலமும் அதை ஏற்று அமைதியாகத்தான் தன் வாழ்க்கையை நகர்த்தினாள். இடையில் வந்த இந்தக் கொஞ்ச நாள்களில்தான் மனதை அலைபாயவிட்டுவிட்டாள். “தனியாவே போவன் சேர். எனக்குப் பழக்கம்தான். அப்ப இப்பவே நான் வெளிக்கிடலாமா சேர்?” என்று வினவினாள்.
“அண்ணா எண்டு சொல்லுங்கோம்மா.”
“ஓகே அண்ணா!” எனும்போது அவள் கட்டுப்பாட்டையும் மீறி குரலில் இலேசான கரகரப்பு.
நிறைய நாள் அந்த வீட்டில் அவள் இருக்கவில்லை. ஆனால், அந்த வீடு, வீட்டு மனிதர்கள், அவர்களின் குடும்ப அமைப்பு, ஒருவருக்கு மற்றவர் எப்போதும் துணையாக இருப்பதை எல்லாம் பார்க்கையில்தான் தான் எவ்வளவு பெரிய அபாக்கியவாதி என்றே அவளுக்குப் புரிந்திருந்தது.
“சரி வெளிக்கிடுங்கோ. நான் டிக்கெட் புக் பண்ணுறன்.” என்றவன் சொன்னதுபோலவே கொழும்புக்கான அடுத்த புகையிரதத்தில் இருக்கை ஒன்றினை முன் பதிவு செய்து கொடுத்தான்.
தன் பயணப்பையுடன் தயாராகி வந்து, பனித்துவிட்ட விழிகளோடு அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு, காண்டீபனின் முன்னே வந்து நின்றாள்.
“உங்களை இப்பிடிக் குடும்பமா பாக்க சந்தோசமா இருக்கு சேர். அதே நேரம் அங்க உங்கட கட்டுப்பாட்டில் இருந்த வரைக்கும் மூண்டு ஆம்பிளைகளோட இருக்கிறன் எண்டுற பயத்தை நீங்க தரவே இல்ல. எல்லாத்துக்கும் தேங்க்ஸ்!” என்று கண்ணில் நீர் திரளச் சொல்லிவிட்டுப் புறப்பட்டிருந்தாள்.
“இவா ஆரு?” அவ்வளவு நேரமாக அனைத்தையும் அமைதியாகக் கவனித்திருந்த மிதிலா, ஆதினியிடம் விசாரித்தாள்.
ஆதினிக்கு எல்லாம் தெரியும். ஆனால் அவளிடம் சொல்லலாமா என்று தெரியாது. கணவனை என்ன செய்ய என்று பார்த்தாள்.
காண்டீபனை எப்படிக் கண்டு பிடித்தேன் என்று எல்லாளன் சொன்னானே தவிர்த்து வேறு எதைப் பற்றியும் எல்லாளன் சொல்லவில்லை. அதில், “சொல்லுறதுக்கு நிறைய விசயம் இருக்கு மிதிலா. அதையெல்லாம் ஆறுதலா கதைப்பம். எனக்கு முதல் இவனோட சில விசயங்கள் கதைக்கோணும்.” என்றுவிட்டுக் காண்டீபனைத் தனியாக அழைத்துச் சென்றான்.
சம்மந்தருக்கு நடந்த விபத்தைப் பற்றித்தான் கேட்க வேண்டும். அதை எப்படிக் கேட்பது என்று தெரியாது நின்றான்.
“என்ன கதைக்கோணும் உனக்கு?” காண்டீபனே அவனைப் பேசத் தூண்டினான்.
வேறு யோசிக்காமல் தன் கைப்பேசியை எடுத்து, அதில் இருந்த சம்மந்தரின் புகைப்படத்தைக் காட்டி, “இவரப் பாத்திருக்கிறியா?” என்றான் பெரும் இறுக்கத்தோடு.
“ஏன் கேக்கிறாய்?” பார்வை புகைப்படத்துக்குச் சென்று வரக் கேட்டான்.
“அப்ப பாத்திருக்கிறாய்.”
பதில் சொல்லாமல் முகம் திருப்பி நின்றான் காண்டீபன்.
“அவர் ஆர் எண்டு தெரியுமா?”
சரக்கென்று திரும்பியவனின் விழிகளில் கூர்மை ஏறிற்று. “ஆர் அவர்? எனக்கு ஆர் அவர்?” என்றான் உடனேயே.
அவனுக்கு அவர் முக்கியமானவராக இல்லை என்றால் இவன் இப்படிக் கேட்கப்போவது இல்லையே என்று நொடியில் ஓடிப்பிடித்தான்.
“அவர் உயிரோட இல்லை எண்டுறதை முதல் முதல் பாத்து உறுதிப்படுத்தினவன் நீ. உனக்கு அவரைத் தெரியாதா?”

