“தேவை இல்லாம கதைக்காம அவர் ஆர் எண்டு சொல்லு!”
“அவரை என்ன செய்தனி எண்டு நீ சொல்லு முதல்!”
இரண்டு சிங்கங்களும் ஒருவரை ஒருவர் முறைத்து நின்றன.
“எல்லாளா!”
“நான் உனக்குச் சொல்லாம விடப்போறேல்ல. கட்டாயம் சொல்லுவன். அதுக்கு முதல் அவரை நீதான் கொன்றியா எண்டு எனக்குத் தெரியோணும்.” எதற்கும் எல்லாளன் இறங்கி வரவில்லை.
“அவரை நான்தான் போடுறதா இருந்தது. கப்பல்ல இருந்து பொருள் அவசரமா கொண்டுவரவேண்டி இருந்ததால நான் அங்க போய்ட்டன். ஆனா நான் போட்ட பிளானத்தான் இன்னொருத்தன் செய்தவன்.”
அவனே நேரடியாகக் கொல்லவில்லை என்பது பெரும் ஆசுவாசத்தைத் தந்தாலும் அவனும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாதே. எல்லாளனின் மனப்பாரம் மொத்தமாய் இறங்க மாட்டேன் என்றது.
“அதான் சொல்லிட்டனே. அவர் ஆர் எண்டு…” என்றவனின் கேள்வி முடியும் முன்னே, “உன்ர அப்பா.” என்றான் எல்லாளன் எங்கோ பார்த்துக்கொண்டு.
காண்டீபனின் மொத்தத் தேகமும் விறைத்து நிமிர்ந்தது. ஒரு கணம் அந்த மனிதரின் முகம் மனக்கண்ணில் வந்து போயிற்று. பெற்ற தகப்பனையே கொல்வதற்கு அவனே திட்டம் போட்டுக் கொடுத்திருக்கிறான். இல்லை, அவனுக்குத்தான் அவர் யார் என்று தெரியாது. சிவநாதருக்குத் தெரியும். அவன் மீது பற்றுக்கொண்டவர் போன்று நடந்துகொண்டு அவனுக்குப் பின்னால் எவ்வளவு பெரிய வேலையைப் பார்த்திருக்கிறார்? அவனை… என்று பல்லைக் கடித்தவன் ஆத்திரத்தை அடக்க முடியாமல் காற்றில் ஆக்ரோஷத்தோடு கையை விசுக்கினான்.
அப்போதும் அவன் சினம் அடங்குவதாக இல்லை. ஜீன்ஸ் பொக்கெட்டினுள் கையை விட்டுத் தன் சிகாரை எடுத்தான். அதை வாயில் வைத்துத் தீயை மூட்டினான்.
அதிர்ந்துபோய் அவனைப் பார்த்து நின்றான் எல்லாளன். வாலிப வயதில் இவன் ஒரு முறை பியர் குடித்தான் என்று இவனைப் போட்டு அடித்தவன் அவன். ஆனால் இன்று?
அவனைக் கவனிக்கும் நிலையில் காண்டீபன் இல்லை. புகையை இழுத்துவிட்டபடி கூண்டுப்புலி போன்று அங்குமிங்குமாக நடந்தான். எப்போதுமே ஒருவர் பற்றிய விபரம் அனுப்புகையில் பெயர், வயது, இருக்கும் இடம், எங்கெல்லாம் போவார், என்ன செய்வார் போன்ற சகல விடயங்களும் வரும்.
சம்மந்தருக்கு மட்டும் ஒய்வு பெற்ற காவல் அதிகாரி, சக்கர நாற்காலியில் இருப்பார், காவல்துறைக்குத் தகவல் சேகரித்துக் கொடுப்பவர், உள்ளூரில் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் அவர் பங்கு பெரும் பங்கு என்பதால்தான் அவரைப் போடும்படி சிவநாதர் அவனிடம் சொல்லியிருந்தார்.
பெயரைக் காணோமே என்று ஓடினாலும் இன்னும் சில நாள்களில் சடலமாகப்போகிறவரின் பெயர் தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் என்ன என்று அலட்சியமாக எண்ணியிருக்கிறான். அந்தப் பெயர் எல்லாவற்றையும் அவனுக்குக் காட்டிக்கொடுத்துவிடும் என்று மறைத்திருக்கிறார்.
“அவனை… அவனை இதைவிட மோசமா போட்டுட்டு வாறன்!” என்று புறப்பட்டவனை இழுத்து நிறுத்தினான் எல்லாளன். முதல் வேலையாக அவன் வாயில் இருந்த சிகாரை பிடுங்கி காணிக்கு வெளியே எறிந்தான். “இனியும் நீ பத்திறத பாத்தனோ அடி வெளுத்து விட்டுடுவான் ராஸ்கல்!” என்றான் விரல் நீட்டி.
“நீ என்ன லூசா? அது இல்லாம என்னால இருக்கேலாது.” என்று பாய்ந்தான் காண்டீபன்.
“ஏன் பிறக்கேக்கையே பத்திக்கொண்டே பிறந்தியோ?”
“எல்லாளா…!” என்றவன் தன் மொட்டை மண்டையை ஆற்றாமையுடன் தடவிக்கொடுத்தான். அதிலிருந்த அந்தக் காயத்தின் அடையாளம் தான் இன்று இந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான மூள காரணத்தைச் சொல்லிற்று.
தன்னைச் சுற்றி இன்னும் எத்தனை சதி வலைகள் என்று புரியாமல் திகைத்து நின்றான்.
அவனை அப்படிப் பார்க்க முடியாமல் வந்து அவனை அணைத்துக்கொண்டான் எல்லாளன்.
“எனக்கு அவனை ஏதாவது செய்யோணும் எல்லாளா!” என்றான் அவனை விலக்கி விட்டபடி.
“நான் மட்டும் சும்மாவா விடப்போறன்? ஆனா நீ ஒண்டும் செய்யாத. எங்க எல்லாருக்கும் நீ வேணும் காண்டீபா. உன்னை ஒரு தரம் இழந்து நாங்க பட்ட பாடெல்லாம் போதும். சிவநாதரை நான் பாக்கிறன். நிதானமா பிளான் பண்ணி எல்லாத்தையும் சிறப்பா செய்யலாம். அதுக்கு முதல் சிவநாதரின்ர பிளான் என்ன எண்டு எங்களுக்குத் தெரியோணும்.”
முன்னராக இருந்திருக்க வருவது வரட்டும் என்று களத்தில் இறங்கியிருப்பான் காண்டீபன். ஆனால் இன்று, சிவநாதரின் குள்ளநரித்தனத்திற்கு தான் இரையாகிவிடக்கூடாது என்றே அவனும் நினைத்தான். அது அவருக்கான வெற்றியாயிற்றே. அதில், “இன்னும் என்ன எனக்குத் தெரியாததுகள் இருக்கு? எல்லாத்தையும் இப்பவே மொத்தமா சொல்லு எல்லாளா. இப்பிடிக் கொஞ்சம் கொஞ்சமா அறியிறது நரகமா இருக்கு.” என்று சொன்னான் காண்டீபன்.
“இல்ல வேற இல்ல. எனக்குத்தான் சில டவுட்ஸ் இருக்கு.”
என்ன என்று பார்த்தான் காண்டீபன்.
“கடலுக்க போய் பொருளைக் கொண்டு வந்தது…”
“நான்தான்.”
“வேற ஏதாவது…”
“ரெண்டு கொலை.” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு
“என்ன மச்சான் நீ?” எல்லாளனாலேயே பொறுத்துக்கொள்ள இயலாமல் போயிற்று.
“என்னோட ரெண்டு பேர் இருக்கிறாங்கள். அவங்கள் ரெண்டு பேரும் அண்ணாவும் தம்பியும். அடிதடி எண்டு இருந்து ஜெயில் வந்திருக்கிறாங்கள். அந்த நேரம் தனியா இருந்த அவேன்ர அம்மாவை கெடுத்துக் கொலை செய்திருக்கிறான் வேந்தன்ர ஆள். சாட்சி இல்லாம தப்பிட்டான். அவன்ர கழுத்த சிவநாதர் வீட்டுல வச்சே பிளேடால அறுத்தனான்.” என்னவோ ஆப்பிளை அறுத்தது போன்று சொன்னான் காண்டீபன்.
“அடுத்தது?”
“அப்…பா” அந்த ஒற்றைச் சொல்லைச் சொல்லவே முடியாமல் சிரமப்பட்டுச் சொன்னான் காண்டீபன்.
“தயாநிதி குடும்பம் செத்தது?”
“இல்ல.. அதுக்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ல…” என்றுவிட்டு கேதகி வேந்தனிடம் இருந்தால் எல்லாளனிடம் மாற்றிக்கொள்வார்கள் என்று அவனிடம் கொடுத்தது முதல், அவளை வைத்து அத்தனை வழக்குகளில் இருந்தும் தன்னை அவன் விடுவித்துக்கொள்ள முயன்றது தொடங்கி, அதற்கு இடையூறாக எல்லாளன் வரவும்தான் சிவநாதரின் ஏவலில் அவனைக் கொல்ல வந்தான் என்பது வரை அனைத்தையும் சொன்னான் காண்டீபன்.
இதற்குள் கேதகியை இரயில் ஏற்றிவிட்டுத் திரும்பி வந்தான் கதிரவன். அவளுக்கும் ஒரு முறை அழைத்து, நல்ல படியாகப் போகிறாளோ என்று தெரிந்துகொண்டுவிட்டு, “ரெண்டு நாளைக்கு எனக்கு ரெஸ்ட் வேணும் கதிரவன். அதுக்குப் பிறகுதான் வருவன். ஆனா நீங்க வேந்தன்ர ஆக்கள் எல்லாரின்ர செல்போன் டவரையும் செக் பண்ணுங்க. அதுவும் தயாநிதி வீடு எரிஞ்ச அந்த டைம்ல, அதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முதல் எங்க இருந்தது எண்டு பாருங்க. நல்லா கவனிச்சு எப்பிடியாவது உண்மைய வரவைக்கேலுமா எண்டும் பாருங்க.” என்று அடுத்தடுத்து அவன் செய்யவேண்டியவற்றைச் சொன்னான்.
“ஓகே சேர்!” என்று விறைப்பாய் நின்று சல்யூட் வைத்துவிட்டு அவன் புறப்பட, “பகல் சமையல் முடிஞ்சிருக்கும். சாப்பிட்டுப் போங்க.” என்று மூன்று ஆண்களும் வீடு நோக்கி நடந்தனர்.

