அன்றும் பிள்ளைகள் இருவரையும் நேசரியில் இருந்து அழைத்து வந்து, உடம்பு கழுவி, உடை மாற்றி, உணவு கொடுத்து, கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்க்கவிட்டாள்.
அப்போதுதான் எல்லாளன் வந்தான்.
அவனைக் கண்டுவிட்டு அவள் புருவங்கள் உயர்ந்தன. இந்த நேரத்தில் அவன் வருவதெல்லாம் உலகதிசயமாயிற்றே. அவள் காரணம் கேட்பதற்குள் அப்பா என்று இரண்டு குழந்தைகளும் அவனிடம் தாவினர். கையில் இருந்த இடம் மாற்றல் கடிதத்தை அவளிடம் கொடுத்துவிட்டு, அவர்களைக் கைக்கு ஒன்றாக அள்ளிக்கொண்டான் எல்லாளன்.
அவன் அவர்களோடு விளையாட அவள் அதைப் பிரித்துப் படித்தாள். அவளுக்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை. பேயைக் கட்டினால் புளியமரம் ஏறித்தான் ஆக வேண்டும் என்று என்றைக்குச் சொன்னாளோ அன்றிலிருந்து எல்லாவற்றுக்கும் அவளும் தயார்தான்.
யாழ்ப்பாணம் என்றதும் அவள் முகமும் மலர்ந்துபோயிற்று.
அவளுக்கும் அந்த மலர்ச்சி ஒரு கணம்தான். வழக்கறிஞர் ஆதினி சட்டென்று விழித்துக்கொள்ளவும் அவள் புருவங்கள் சுருங்கின.
“போய்த்தான் பாப்பமே!” என்றான் பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்தாலும் இவளிலும் கவனமாக இருந்த எல்லாளன்.
ஆம் என்பதுபோல் தலையசைத்தவள் அங்கே சிரித்தபடி புகைப்படச் சட்டத்தினுள் சிரித்துக்கொண்டு இருந்தவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவனாகத் தேடி வந்து பழகியது, அவளை நெறிப்படுத்தியது, ஆறுதலாக இருந்தது, கடைசியாக அவனை மரக்குற்றி ஒன்றில் கையில் விலங்கு மாட்டப்படட நிலையில் பார்த்தது, அதற்கும் கடைசியாக இவர்கள் எல்லோரையும் திரும்பிப் பார்த்துவிட்டு அவன் போனது… அதற்குமேல் யோசிக்க முடியாமல் சட்டென்று விழிகளை இறுக்கி மூடிக்கொண்டாள்.
ஆனால், காட்சிகள் கட்டுப்பாட்டில் நிற்க வேண்டுமே. நெஞ்சு இரண்டாகப் பிளந்தது போல் பிளந்து கிடக்க, கைகால்கள் திசைக்கு ஒன்றாக விசிறப்பட்டிருக்க, வேரறுந்த மரமாய் மண்ணில் கிடந்தவனின் தோற்றத்தில் அவள் விழிகள் கண்ணீரைச் சொறிந்துவிட்டிருந்தன. பிள்ளைகள் பார்க்க முதல் வேகமாகத் துடைத்துக்கொண்டாலும் அவள் கணவன் பார்த்திருந்தான்.
சின்னவர்களோடு வந்து அவளருகில் அமர்ந்து அவளையும் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான். அவன் பார்வையும் நண்பனில்தான். யாழ்ப்பாணத்துக்கு மாற்றல் என்று தெரிந்ததில் இருந்து அவன் மனநிலையும் மாறிப்போயிற்று.
நீ இருக்கிறியே மச்சான் என்று இவன் மடியில் தலை வைத்துப் படுத்தவனை விட்டுவிட்டான். ‘நீயும் நானும் பிரிஞ்சேதான் இருக்கோணும் போல!’ கடைசியாக அவன் சொன்ன வார்த்தைகள் இவை. செய்தது தப்பு என்று தெரிந்தும் தண்டனையை அனுபவித்துவிட்டு வந்து வாழ ஆசைப்பட்டவன் இன்று இல்லை. அவன் போய் எட்டு வருடங்களாகிறது. அதற்குக் காரணமானவனைக் கருவறுத்துவிட்டான்தான். இருந்தாலும் அவனின் காண்டீபன் திரும்பி வரப்போவதில்லையே.
“அப்பா அழுறீங்களா அப்பா?” அவன் மடியில் அமர்ந்திருந்த தீபன், அவனின் கன்னங்கள் இரண்டையும் பற்றி வினவவும்தான் தெளிந்தான்.
*****
ஆதினி பிறந்து வளர்ந்த யாழ்ப்பாண வீட்டின் கீழ் மாடியில் அவள் தமையன் அகரன் குடும்பத்துடன் இருந்தான். மேல் மாடியைக் கிட்டத்தட்டத் தனி வீடுபோல் எப்போதோ மாற்றியிருந்தார் இளந்திரையன். இப்போது அங்கேதான் வசிக்க வந்திருந்தார்கள் எல்லாளன் ஆதினி குடும்பம்.
இவளுக்கு அங்கு ஒதுக்கி, அவற்றை இங்கு பிரித்து என்று இடுப்பு விட்டுப்போயிருந்தது. இளந்திரையன், அகரன், சியாமளா, சாந்தி அக்கா என்று எல்லோரும் உதவிக்கு வந்தாலும் முடிய வேண்டுமே.
அந்த ஆத்திரத்தில், “நேர்மை நீதி நியாயம் எண்டு பிழைக்கத் தெரியாதவரக் கட்டி நான் படுற பாடு இருக்கே. ரெண்டு வருசத்துக்கு ஒரு இடம் எண்டு மாறிக்கொண்டு… ஒரு லஞ்சம் வாங்கத் தெரியாது. நீக்குப் போக்கா நடக்கத் தெரியாது. எல்லாம் இந்த அப்பாவால வந்தது. உலகத்தில வேற மாப்பிள்ளையே இல்லை எண்டு இவரைப் பாத்திருக்கிறார்…” என்று புறுபுறுத்தபடி பெட்டியை திறந்து உடைகளை அலமாரியில் வைத்துக்கொண்டிருந்தாள் ஆதினி.
குளியலறையில் இருந்து இடுப்பில் துண்டுடன் வந்தவன் காதிலும் இது விழுந்தது. “எனக்கு என்னடி குறை? குடும்பம் நடத்த என்ர சம்பளம் காணாதா உனக்கு? லஞ்சம் வேணுமாம் லஞ்சம்!” என்றபடி வந்து அவளை இலேசாக இடித்துத் தள்ளிவிட்டு அலமாரியில் அடுக்கியிருந்த உடைகளை எல்லாம் வேண்டும் என்றே கலைத்தான் எல்லாளன்.
“டேய் எள்ளுவய! இருக்கிற வேலை காணாது எண்டு என்ன வேலை பாக்கிறீங்க நீங்க. உடுப்புகளை கலைக்காதீங்க!” என்று அவனைப் பிடித்து தள்ளிவிட முயன்றாள் அவள்.
“அப்ப உன்னை கலைக்கவா?” என்றான் அவள் புறம் திரும்பி.
ஒரு கணம் திகைத்தலும், “பக்கத்தில வந்தீங்களோ கொலைதான் விழும்!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் அவள்.
“மூச்சு முட்டுற அளவுக்கு கொல்லடி எண்டுதானே சொல்லுறன்.” அவளைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்தபடி சொன்னவனின் பேச்சும் பார்வையும் அடுத்து என்ன நடக்கும் என்று சொல்லிற்று அவளுக்கு.
“ஸ்டேஷன் போகோணும் எண்டு சொன்னீங்க.” அவளுக்குமே கணவனின் தோள் சுகமாய் இருக்க அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“போகத்தான் வேணும். அதுக்கு முதல் என்ர சிலுக்கக் கவனிச்சிட்டுப் போறன். நிறைய நாளாச்சு.” என்றவனை அடப்பாவி என்று பார்த்தாள் ஆதினி.
கடந்த மூன்று நான்கு நாள்களாக வீடு மாறும் வேலைப்பளு, அவன் அங்கே கையளிக்க வேண்டிய தன் வேலைகள் என்று இருவருமே ஓடுப்பட்டுத் திரிந்ததில் எதற்கும் அவர்களுக்கு நேரமிருக்கவில்லைதான். அதற்கென்று நிறைய நாள் என்பானா?
“இல்லையா என்ன?” என்றான் அவன் சிரித்தபடி.
அந்தச் சிரிப்பு அவள் மனத்தை ஈர்க்க அவனையே பார்த்தாள்.
முதன் முதலில் அவள் மனத்தில் சலனத்தை உண்டாக்கியவன். இதே வீட்டில் வைத்துத்தான் நொடியில் அவளைத் தன் கை வளைவில் கொண்டுவந்து துவக்கைப் பறித்தான். அவன் சாதாரணமாக அதைச் செய்துவிட்டுப் போக, அவள் மயங்கி நின்றதும் இங்கேதான்.
அந்த எண்ணங்கள் தந்த இதமான மனநிலையில் எம்பி அவன் தாடையில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள் ஆதினி
அது தந்த உந்துதலில் அவள் இதழ்களில் புதைந்தவன் அப்படியே அவளுள் அமிழ்ந்துபோனான்.
அவன் விலகி எழுந்தபோது அவள் களைத்துச் சோர்ந்திருந்தாள். காவல்நிலையம் செல்வதற்குத் தயாராகிவிட்டுப் பார்த்தான் எல்லாளன். அவள் எழுந்துகொள்வதாக இல்லை என்றதும் போய்த் தேநீர் ஊற்றிக்கொண்டு வந்து வைத்துவிட்டு அவளருகில் அமர்ந்தான்.
“இனி நீ ஒண்டும் செய்யாத. ரெஸ்ட் எடு. நான் வந்து மிச்சத்தைப் பாக்கிறன்.” என்றான் அவள் தலையை வருடி.
“என்னைச் சும்மா விட்டிருக்க இவ்வளவுக்கு முக்காவாசி வேலைய முடிச்சிருப்பன். எல்லாம் உங்களால!”
“என்ன என்னால? நான் பக்கத்தில வந்தா நீயும் விடுவியா?” என்றவனின் பேச்சில் கொலைவெறியாகிப்போனவள் அவன் காக்கி உடையில் இருக்கிறான் என்றும் பாராமல், அவனைக் கட்டிலில் விழுத்தி நன்றாக நான்கு போட ஆரம்பித்தாள்.
“ராஸ்கல்! செய்றதை எல்லாம் செய்துபோட்டு என்ன எல்லாம் கதைக்கிறீங்க?”
அவள் அடிகளை சுகமாக வாங்கியபடி, “வெளில உன்ர சிலுக்கு நிக்குது பாத்தியா? அது அறுதப் பழசாகியும் உன்ர நொண்ணன் தூக்கிப் போடாம வச்சிருக்கிறான். ஆனா என்ர சிலுக்கு இன்னும் பளபளப்பா, ஜொலிஜொலிப்பா, பாக்கிற நேரம் எல்லாம் பத்திற மாதிரி இருந்தா நான் என்ன செய்ய?” என்று சிரித்தான் அவன்.

