ஆட்டநாயகன் 40.2

வீட்டுக்குள் நுழைந்ததும் விறாந்தையில் ஒரு பக்கச் சுவரில் ஒரு பக்கம் அவன் படத்துக்கு பூமாலை போடப்பட்டிருந்தது என்றால் இன்னொரு பக்கம் அவன் தந்தைக்கு.

எல்லாளன் முதல் வேலையாகச் சென்று அவன் படத்தில் இருந்த பூ மாலையை கழற்றிவிட்டு அவன் புகைப்படத்தையும் கழற்றினான்.

எது உந்தியது என்று தெரியாது தானாகச் சென்று தந்தையின் முன்னே நின்றான் காண்டீபன். இரண்டு ஆண் பிள்ளைகளை பெற்ற மனிதர். கடைசி காலத்தில் ராஜாவாக வாழுவேன் என்று நினைத்திருக்கக் கூடும். நடந்தது? ஒருவனை நியாயமே இல்லாமல் பறிகொடுத்தது போதாது என்று இன்னொருவன் அவர் உயிர் அநியாயமாகப் போகக் காரணமாய் இருந்திருக்கிறான்.

மிதிலாவினால் பேசவே முடியவில்லை. அந்த வீட்டில் அவன் நிற்கிறான் என்பதை இன்னுமே நம்ப முடியாதவள் போன்று அவனையே பார்த்து நின்றிருந்தாள்.

சற்று நேரத்தில் மகளையும் கொண்டு வந்த மாதவன், “கேஸ் என்ன நிலைல இருக்கு சேர்?” என்று எல்லாளனை விசாரித்தான்.

“எனக்கு கத்திக்குத்து விழுந்ததால அப்பிடியே இருக்கு மாதவன்.” என்றவனை அதிர்ந்து பார்த்தான் மாதவன்.

மிதிலாவை ஒருமுறை பார்த்துவிட்டு நடந்ததைச் சொன்னான்.

பெரும் அதிர்வுடன் காண்டீபனைப் பார்த்தான் மாதவன். அவனுக்குப் பழைய நினைவுகள் இல்லை என்பதை இப்போதுதான் அவனால் நம்ப முடிந்தது.

அவனை விட அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் மிதிலா. எல்லாளனுக்குக் கத்திக்குத்து விழுந்திருக்கிறது என்று பார்க்கச் சென்று கடைசியில் கணவனைக் கண்ட அதிர்வில் இதை விசாரிக்கத் தவறியிருந்தாள், தெரிந்த இப்போதோ, “சொறி! அவருக்கு உங்களை ஆர் எண்டு தெரியாதுதானே. அதான்.” என்று காண்டீபனுக்காய் அவனிடம் மன்னிப்புக் கேட்டவளைக் கண்டு எல்லாளன் முகத்தில் முறுவல் அரும்பிற்று.

பாத்தியா என்பதுபோல் நண்பனைப் பார்த்தான்.

அடுத்த இரண்டு நாள்கள் எல்லாளனுக்கு ஓய்விலேயே கழிந்திருந்தன. உண்மையில் அது அவனுக்கு மிக மிகத் தேவையாகவும் இருந்திருந்தது. காயம் இன்னுமே பெரிதாக ஆறியிராதபோதும் மூன்றாம் நாள் காலை எழுந்து தயாராகினான். சரியாக அந்த நேரம் பார்த்து அவனுக்கு அழைத்தான் காண்டீபன்.

உதட்டில் சிறிதாய் முறுவல் மலர, “என்னடா?” என்றான்.

“வந்து என்னை எங்கயாவது கூட்டிக்கொண்டு போ!”

“நான் என்ன உன்னை மாதிரி வேலை வெட்டி இல்லாம இருக்கிறனா?” என்றவனின் கேள்வியில் அந்தப் பக்கம் அவன் பல்லைக் கடிப்பது அப்படியே தெரிந்தது.

அப்போதும் விடாமல், “வை நேரமிருந்தா வாறன்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் அவனை ஏற்றிச் செல்ல வந்த கதிரவனிடம் காண்டீபன் வீட்டுக்கு விடச் சொன்னான்.

“உடம்பு பரவாயில்லையா சேர்?” ஜீப்பை செலுத்தியபடி விசாரித்தான் கதிரவன்.

“மனம் தெளிவா இருக்கு கதிரவன்.” என்றவனைச் சிறு முறுவலுடன் திரும்பிப் பார்த்தான் கதிரவன்.

அவன் சொன்னது உண்மை என்று சொல்வது போன்று அவன் முகம் தெளிவாய் இருந்தது.

காண்டீபனின் வீட்டுக்கு வெளியிலேயே ஜீப்பை நிறுத்திவிட்டு இறங்கி உள்ளே சென்றார்கள். அவர்கள் இருவரையுமே விடாமல் பார்த்தான் காண்டீபன். “என்னடா?” அந்தப் பார்வைக்கான பொருளை மொழிபெயர்க்க முடியாமல் வினவினான் எல்லாளன்.

ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை குறுக்காக அசைத்தான் அவன்.

என்னவோ இருக்கிறது என்று மனம் சொல்லிற்று. இந்த இரண்டு நாள்களும் அவனை வெளியே எங்கும் செல்ல இவன் அனுமதிக்கவில்லை. அதுவும் அதிரன் பள்ளிக்கூடத்துக்கு விடவும் அழைத்து வரவும் தந்தையை வரச்சொல்லிக் கேட்டும் எல்லாளன் மறுத்த கோபம் காரணமாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டு, “வெளிக்கிட்டுக்கொண்டு வா. வெளில போகோணும்.” என்று அவனை அனுப்பி வைத்தான்.

இதற்குள் மிதிலா அவர்கள் மூவருக்கும் தேநீர் கொண்டு வந்து தந்தாள்.

“எங்க அதிரன்?”

“ஸ்கூல் போய்ட்டான்.”

“எப்பிடி இருக்கிறான்.” மிதிலாவும் மகனும் எந்த அறையில் இருக்கிறார்கள் என்று எல்லாளனுக்குத் தெரியும். அதற்குப் பக்கத்து அறைக்குள் தயாராகச் சென்றுவிட்டவனைத் தலையசைப்பால் காட்டி வினவினான்.

“இப்ப நீங்க பாத்தா மாதிரியேதான். எப்பவும் அமைதியாவே இருக்கிறார். அதியோட மட்டும் நல்ல ஒட்டு. இரவில அவர் நித்திரை கொள்ளுறதே இல்ல மாதிரி இருக்கு. எவ்வளவு கேட்டாலும் மனம் விட்டு கதைக்கிறாரே இல்ல.” கவலையோடு அவனுக்கு கேட்டுவிடாத மெல்லிய குரலில் சொன்னாள்.

இதற்குள் தயாராகி வந்தவனையும் அழைத்துக்கொண்டு அவன் போனது வைத்தியசாலைக்கு.

இவர்களுக்கு அலுவல் முடிய எப்படியும் நேரமாகும் என்று தெரிந்து கதிரவனை வேறு வேலையாக அனுப்பி வைத்துவிட்டு இவர்கள் இருவர் மட்டுமே வைத்தியசாலைக்குச் சென்றனர்.

“இஞ்ச என்னத்துக்கு? உனக்கு காட்டவா?”

“எனக்கில்ல உனக்கு!” என்றுவிட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்று அவன் நிலையைச் சொல்லி, அவனை பரிசோதிக்கச் சொன்னான்.

தனக்குத் தேவையான மற்ற விபரங்களையும் கேட்டுக்கொண்டு, காண்டீபனையும் பரிசோதித்துவிட்டு, மேல் மாடியில் இருக்கும் மூன்றாவது அறைக்கு ஸ்கேன் செய்வதற்கு காண்டீபனைப் போகச் சொன்னார் அவர்.

அறையை விட்டு இவர்கள் வெளியே வந்தபோது வந்தார் ஆதினியை பார்த்த பெண் மருத்துவர்.

“ஹல்லோ சேர். எப்பிடி இருக்கிறீங்க?” என்றவரின் நலன் விசாரிப்புக்குப் பதில் சொல்லிவிட்டு, “நான் இஞ்சயேதான் நிப்பன். நீ போயிற்று வா.” என்று காண்டீபனை அனுப்பினான்.

இதற்குள், “ஆதினி எப்பிடி இருக்கிறா? அபார்ஷன் ஆன அதிர்ச்சில இருந்து வெளில வந்திட்டாவா?” என்றவரின் கேள்வி முடியும் முன்னே, “என்ன?” என்றுகொண்டு திரும்பி வந்திருந்தான் காண்டீபன்.

போனவரின் காதில் அவர் பேச்சு விழுந்திருக்கும் என்று எல்லாளன் யோசிக்கவே இல்லை.

ஆனால் அவனோ, “இப்ப என்ன சொன்னனீங்க?” என்று வைத்தியரைப் பார்த்து உறுமிக்கொண்டிருந்தான்.

“என்ன சேர் இது? முதல் ஆர் இவர்?” பயத்தில் எல்லாளன் பக்கமாய் ஒதுங்கியபடி கேட்டார் அவர்.

“டேய், நீ போ முதல்!” என்று அவனை விரட்ட முயன்றான் எல்லாளன்.

“அப்ப நீ சொல்லு! என்ன நடந்தது?”

அவனுக்குப் பதில் சொல்லாது, “டொக்டர், நீங்க போங்க. நான் பிறகு உங்களோட கதைக்கிறன்” என்று முதல் வேலையாக அவரை அனுப்பிவிட்டு அவனை இழுத்துக்கொண்டு நடந்தான் எல்லாளன்.

மேலே சென்று வைத்தியர் சொன்ன மூன்றாவது அறைக்கு கொஞ்சம் முன்னேயே நின்றுவிட்டான் காண்டீபன். “எனக்கு நீ உண்மையச் சொல்லாம நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டன்!” என்றான் பிடிவாதமாய்.

“காண்டீ!”

“…”

“நேரம் போகுது மச்சான்.”

“…”

“இப்ப என்னடா சொல்லோணும் உனக்கு? அவா சொன்னது உண்மைதான். நீ தள்ளிவிட்டதில கரு கலஞ்சிட்டுது. போதுமா உனக்கு?” என்றதும் அப்படியே நின்றுவிட்டான் அவன்.

இவனையே இமைக்காது நிலைத்து பார்த்தான்.

“டேய் மச்சான்! அதெல்லாம் ஒண்டும் இல்லையடா!” என்று நெருங்கி வந்தவனை விலக்கி விட்டுவிட்டு ஸ்கான் அறைக்குள் சென்று மறைந்தான் காண்டீபன்.

ஸ்கேன் எடுத்து, வைத்தியர் அதனை ஆராய்ந்து, இவனை பார்த்து முடித்து வெளியே வந்து, இப்போதைக்கு நரம்புகள்ல எந்த பாதிப்பும் இருக்கிற மாதிரி தெரியேல்ல எல்லாளன். மற்றும்படி நினைவு திரும்புமா இல்லையா எண்டு என்னால உறுதியா சொல்லேலாமா இருக்கு. இன்னும் சில ஸ்கான் எடுக்கோணும். ஆனா இவருக்கு நித்திரை பிரச்சினை இருக்கு. அது நல்லதில்லை. ஆரோக்கியமான சாப்பாடு, மன நிம்மதி, நித்திரை இதெல்லாம் முக்கியம்.” என்றுவிட்டு சில மருந்துகளை எழுதிக்கொடுத்து, தவறாமல் எடுக்கச் சொல்லி அறிவுறுத்தினார்.

அதுவரை ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்தவனின் அமைதி பொறுக்காமல், “இப்ப என்ன எனக்கும் அவளுக்கும் வயசு போயிற்றுதா? இல்ல எங்களுக்கு பிள்ளையே இல்லையா? எப்பிடியும் இன்னொரு குழந்தை பெறத்தான் போறம். சும்மா அதையே நினைக்காத!” என்றான் தேறுதலாய்.

அப்போதும் அவன் அமைதியாகவே வர, “டேய் இஞ்ச பார்! கட்டாயம் உனக்கு நினைவு திரும்பும். அப்பிடியே இல்லாட்டியும் கவலைப்படாத. ஒரு சின்ன விஷயத்தையும் விடாம நானும் உன்ர தங்கச்சியும் எல்லாத்தையும் உனக்குச் சொல்லுறம். ஓகேயா?” என்றவனுக்கு உண்மையாகவே அவனுக்கு நினைவு திரும்பிவிடக் கூடாது என்கிற பிரார்த்தனைதான்.

“அப்ப என்ன மச்சன், நானும் எனக்கு எதுவுமே நினைவு வராத மாதிரி நடிக்கவா?” என்றவனின் கேள்வியில் நடந்துகொண்டிருந்த எல்லாளன் அப்படியே நின்றுவிட்டான்.

தொடரும்…

error: Alert: Content selection is disabled!!