ஆட்டநாயகன் 41.1

அத்தியாயம் 41

அன்று எல்லாளனும் ஆதினியும் இவர்களைக் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போன பிறகு காண்டீபனால் அங்கு இருக்கவே முடியவில்லை. காட்டுச் செடியாகத் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து பழகியவன். ஒரு குடும்ப அமைப்புக்குள் ஒட்டியிருப்பது பெரும் கொடுமையாகத் தெரிந்தது.

அதைவிட அவர்களின் அன்புதான் பெரும் சிறையாயிற்று.

அப்படியிருந்தும் அப்பா அப்பா என்று அவனுடனேயே ஒட்டிக்கொண்டிருந்த அதிரனை அவனால் விலக்கி நிறுத்த இயலவில்லை. அதிரனுக்கும் தகப்பனிடம் சொல்வதற்கு பல வருடத்துக் கதைகள் குவிந்து கிடந்தன.

இயல்பான இணக்கத்தை அவனிடம் காட்டவும் இயலாமல், அவனை யாரோவாகத் தள்ளி நிறுத்தவும் முடியாமல் மிதிலாவும் தடுமாறிக்கொண்டிருந்தாள். அவன் அவள் கணவன்தான். ஆனால் அவளுடைய தீபனாக இல்லையே. யாரோவாய் நிற்கிறானே.

கூடவே சதா தனக்குள்ளேயே மூழ்கிக் கிடப்பவனைத் தொந்தரவு செய்யவும் பயந்தாள். இந்தக் கணவன் புதிதானவனாக இருந்தான்.

இரண்டு நாள்களாகச் செய்யாத உடற்பயிற்சி, பழைய காண்டீபனைப் பற்றி அறிந்துகொண்டது, அந்த வீடு, சிவநாதர், அவர் அவன் முதுகுக்குப் பின்னால் செய்த பச்சைத் துரோகம், தன்னால் போன இரண்டு உயிர்கள், பெற்ற தகப்பன் உயிரை எடுக்கக் காரணமாகிப்போனோமே என்கிற நினைப்பு, அன்னை இல்லாமல் நிற்கும் குழந்தை, இன்னும் என்னவெல்லாம் அவன் வாழ்வில் நடக்க இருக்கிறது என்று பல விடயங்கள் சூறாவளியாக அவனைச் சுழற்றி அடித்ததில் இறுகிப்போய் கிடந்தான்.

அத்தனையும் அவனைப் போட்டு அழுத்தின. அது காரணமா, இல்லை தாய் மடி திரும்பிய குழந்தை போல் தன் இடம் திரும்பியதால் அவன் ஆழ்மனத்தில் உண்டான மாற்றமா தெரியாது.

முதல் நாள் இரவின் அமைதியில் விழிகளை மூடி இருந்தவனின் பின் மண்டையிலேயே படார் என்று ஒரு அடி விழுந்தது. மொத்த மூளையும் கலங்கிப்போனது போலொரு வலி. கண்களெல்லாம் இருட்டிக்கொண்டு வர விருட்டென்று எழுந்து அமர்ந்துகொண்டு தன்னிச்சையாய்ப் பிடறியைத் தடவினான்.

அங்கே ஒன்றுமே இல்லை. அவன் கண்கள் எப்போதுமே இருளுக்குப் பழகியவை. வேகமாய்த் தன்னைச் சுற்றிப் பார்த்தான். யாருமே இல்லை. விருட்டென்று எழுந்து விளக்கைப் போட்டான். அவன் சாற்றியது போலவே கதவு இருந்தது.

என்னாயிற்று அவனுக்கு? அந்த வலி மட்டும் இன்னுமே இருந்தது. மீண்டும் தரையில் சரிந்தான். மெல்ல மெல்ல அந்த வலி சமப்பட்டு, மீண்டும் அவன் விழிகளை மூடிய வேளையில் மறுபடியும் படார் என்று இரும்புக்கு கம்பியாலேயே யாரோ அடித்தார்கள். அவன் தேகம் ஒருமுறை தூக்கிப் போட்டது. நெஞ்சு டமார் டமார் என்று அடித்துக்கொள்ள ஆரம்பிக்க விருட்டென்று மறுபடியும் எழுந்து அமர்ந்துவிட்டான்.

அவனால் முடியவில்லை. உறங்கப் போக முதல் மிதிலா கொண்டுவந்து வைத்துவிட்டுப் போன தண்ணீரை எடுத்துப் பருகினான். இந்த முறை அவன் விளக்கை அணைக்கவில்லை. அதைப் போட்டுவிட்டுச் சுவரோரமாகச் சாய்ந்து அமர்ந்தான்.

கைகால்களில் நடுக்கம். என்னவோ யாரோ தன்னை ஏதோ செய்யப் போவது போன்ற ஒரு மனப்பயம். அவனுக்கே அவன் நிலை பிடிக்கவில்லை. அவன் பயப்படுவதா? அவனின் இயல்பான அகங்காரம் எழுந்து நின்றாலும் அவன் கட்டுப்பாட்டையும் மீறி நடுங்கும் மனத்தை ஒன்றும் செய்ய இயலவில்லை.

அதன் பிறகு உறங்கவே இல்லை. காலையில் எழுந்து வந்த மிதிலா, முகமெல்லாம் அதைத்து, விழிகள் இரண்டும் இரத்தக் கட்டிகளாகச் சிவந்து இருந்த அவனைக் கண்டு பயந்துபோனாள்.

என்னவென்று விசாரித்தவளிடம் ஒன்றுமில்லை என்றுவிட்டான். அவள் உடனேயே எல்லாளனுக்கு அழைத்துச் சொன்னாள். அவனிடமும் புது இடம் என்பதில் உறங்க முடியவில்லை என்றுவிட்டான்.

ஏனோ அடுத்த நாளின் இரவை நினைக்கவே பயந்தான். ஆனால் இரவும் வந்தது, கூடவே நரகமும் வந்தது. இன்னதுதான் என்கிற காரணமே இல்லாமல் அல்லாடிக்கொண்டிருந்த மனத்தை ஒரு நிலைப்படுத்தி, அவன் அமைதியாகும் வேளையில் என்னென்னவோ காட்சிகள் எல்லாம் வந்துபோக ஆரம்பித்தன. புருவங்களைச் சுளித்து தலையை அப்படியும் இப்படியுமாக அசைத்து அவற்றை விரட்டியடிக்க முயன்றான்.

முடியவில்லை.

யாரோ அவனை இருட்டறை ஒன்றில் தள்ளினார்கள், எங்கோ இழுத்துக்கொண்டு போனார்கள், கால்களையும் கைகளையும் கட்டிப் போட்டுவிட்டுத் தம்முடைய சப்பாத்துக் கால்களாலேயே மிதித்தார்கள்.

இரண்டு ஆண்களும் ஒரு குட்டிப் பெண்ணும் இன்னும் சிலரோடு முற்றத்தில் கிளித்தட்டு விளையாடினார்கள், அந்தப் பெண்ணைக் கேலி செய்து சிரித்தார்கள், அவனை எங்கோ கட்டி வைத்து அவன் நாசியில் எதையோ திணித்தார்கள், வலுக்கட்டாயமாக அவனைப் புகைக்க வைத்தார்கள், மறுத்தவனைப் போட்டு அடித்தார்கள். உடையற்ற உடலைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு ஒரு உயிரை இப்படியும் சித்திரவதை செய்ய முடியுமா என்று பயப்படும் அளவிலான அந்தக் காட்சிகளைக் கண்டு வேர்த்து விறுவிறுத்துப்போய் எழுந்து அமர்ந்துவிட்டான்.

கண்ணீர் தானாய்க் கண்களில் வழிந்தது. அவனுக்கு நடந்த கொடுமைகளைக் கண்டு அவன் உள்ளமே அழுதது. நெஞ்சு இதோ வெடிக்கிறேன் என்று டமார் டமார் என்று அடித்துக்கொண்டது. இல்லை, அப்படி எதுவும் இருக்காது, இதெல்லாம் கெட்ட கனவுகள் என்றெண்ணி விரட்ட முயன்றான். முடியவில்லை. கற்பூரத்தைக் கொளுத்தித் தலைக்குள் வைத்தது போலவே தலை விண் விண் என்று வலித்தது. தலையைக் கொண்டுபோய்ச் சுவரில் மோதினால் பரவாயில்லை என்று நினைக்கும் அளவில் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.

இன்னும் பல மோசமான காட்சிகள் கண்முன்னே வந்து வந்து போக ஆரம்பித்தன. அந்தக் காட்சிகள் அத்தனையும் அருவருப்பூட்டி, இரத்தத்தைக் கொதிக்க வைத்து, ஆத்திரத்தையும் ஆக்ரோசத்தையும் உண்டாக்கியிருந்தன.
இந்த இரண்டு நாள்களும் அவன் ஒருவிதமான ஆழ்ந்த அமைதிக்குள் நுழைகையில் வந்த காட்ச்சிகள் இப்போது அவன் தெளிவாய் இருக்கையிலேயே தெரிய ஆரம்பித்தன. தலையை திரும்ப திரும்ப உதறி அவற்றை விரட்ட முயன்றான். இயலவேயில்லை. எவ்வளவுதான் விரட்டி அடித்தாலும் அத்தனையும் கண்முன்னே வந்து நின்றன.

அடுத்த நாள் முழுக்கத் தனிமையிலேயே கிடந்தான். உண்ணவில்லை, உறங்கவில்லை, எதுவும் செய்யவில்லை. அவன் இருந்த அறையின் தரையில் தலைக்கு கைகளைக் கொடுத்து, கண் மூடிக் கிடந்தவனின் உள்ளம் ஊமையாய் அழுதுகொண்டேயிருந்தது. அனுபவித்துக் கடந்துவந்த அந்த நரக வாழ்க்கையை இன்னொரு முறை நினைவுகளால் கடக்க முடியாமல் நெருப்பில் விழுந்த புழுவாகத் துடித்துக்கொண்டிருந்தான்.

ஆத்திரம், அழுகை, ஆவேசம் என்பதையெல்லாம் தாண்டி இனியும் உயிர் வாழத்தான் வேண்டுமா என்றிருந்தது. யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியும் போல் இல்லை. அதிரனைக் கூடத் தவிர்த்தான். அவன் அசிங்கமானவனாய், அருவருப்பானவனாய் அவனுக்கே தெரிந்தான்.

error: Alert: Content selection is disabled!!