அதே வேகத்துடன் நிமிர்ந்து, “இஞ்ச ஒருத்தர் நான் வண்டு முருகனா கூட வர லாயக்கு இல்லை எண்டு சொன்னவர் எல்லா. ஆனா இந்த ஆதினி இப்ப பேமஸ் கிரிமினல் லோயர் தெரியுமா?” என்று கணவனை ஓரக்கண்ணால் நோக்கிச் சொல்லிவிட்டு, தன்னுடைய கறுப்பு அங்கியை எடுத்து அணிந்துகொண்டு வந்து, “எப்பிடி இருக்கிறன் அண்ணா?” என்று தன்னை ஒருமுறை சுற்றிக் காட்டினாள்.
கண்ணீர் படர்ந்துவிட்ட விழிகளோடு அவளை ஒற்றைக் கரத்தால் அனைத்து, “எங்கட ஆதினிக்கு என்ன குறை? முதல் கேஸிலேயே பெண் சிங்கம் மாதிரி வாதாடினாளாம் எண்டு நெட்ல படிச்சனே.” என்றபோது அவன் குரல் கரகரத்துப்போயிற்று.
*****
காவல்துறையின் பிரதான அலுவலகத்தில் மேலதிகாரி டிஐஜியின்(DIG) அலுவலக அறையில் அவர் முன்னே அமர்ந்திருந்தான் எல்லாளன். முதலில் அவன் நலனை விசாரித்தார் அவர். நலன்பெற்று வருவதாக அவனும் பதில் சொன்னான். அடுத்ததாகத் தற்போது அவன் பார்த்துக்கொண்டிருக்கும் தயாநிதி குடும்பம் மற்றும் சம்மந்தரின் கொலை வழக்குகள் பற்றி விசாரித்தார்.
அவர் அழைக்கும்போதே தான் கணித்தபடிதான் நடக்கப்போகிறது என்று புரிந்துகொண்டிருந்தான் எல்லாளன். அது கொடுத்த இறுக்கத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், “தயாநிதி கேஸ்ல வேந்தனை அரெஸ்ட் பண்ணி இருக்கிறம் சேர். மா… சம்மந்தர் கேஸ் விசாரணை போய்க்கொண்டு இருக்கு.” என்று பதிலிறுத்தான்.
சம்மந்தரின் வழக்கு அடங்கிய கோப்பினை வாங்கிப் பார்த்தார். அதில் அவன் இணைத்திருந்த ஃபுட்டேஜை பார்த்துவிட்டு, “இந்த மொட்டை ஆர் எண்டு கண்டு பிடிச்சீங்களா?” என்று விசாரித்தார்.
“தேடிக்கொண்டிருக்கிறன் சேர்.”
“இன்னும் தேடுறீங்களா எல்லாளன்? சம்மந்தரை அவன் பாக்கிற பார்வையப் பாக்க அவன்தான் இந்தக் கொலையைச் செய்த மாதிரி இருக்கே.” என்றார் அவர்.
“அதுக்கு சான்ஸ் இல்லை சேர்.”
அவர் கேள்வியாகப் புருவங்களைச் சுருக்கினார்.
“லொறி அடிச்சிட்டு போன ரெண்டாவது நிமிசம் அவன் வந்து பாக்கிறான். அவனும் அங்க நிண்ட ஒரு ஆளே தவிர அவன் செய்யேல்ல.”
“ஆளை வச்சு ஏற்பாடு செய்திட்டு வந்து பாத்திருக்கலாமே.”
“தன்னை வெளில காட்டக்கூடாது எண்டு ஆளை வச்சுச் செய்தவன் அவனே வந்து பாப்பானா சேர்?”
“இதெல்லாம் உங்கட கேள்விகள் எல்லாளன். உண்மை என்ன எண்டுறது அவனை அரெஸ்ட் பண்ணி விசாரிச்சாத்தானே தெரிய வரும்.”
இன்னொரு கைதா? அவன் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.
“உங்களை ஆர் கத்தியால குத்தினது?” அடுத்த விசாரணையை ஆரம்பித்தார் அவர்.
“தெரியாது சேர்.”
“ஒரு போலீஸ் ஒபீசர் நீங்க. அதைவிட நீங்க எப்பிடி எண்டு டிப்பார்ட்மெண்ட்ல எல்லாருக்கும் தெரியும். உங்களுக்கு அவனை ஆர் எண்டு தெரியாதா? இதுல ஒரு ஃபுட்டேஜ் கூடக் கிடைக்கேல்ல. கோயில் ரெக்கோர்டர் வேலை செய்யேல்ல. என்ன நடக்குது எல்லாளன்?” என்று கோபமாய்க் கேட்டார் அவர்.
“இதை நீங்க தேவனிட்டத்தான் சேர் கேக்கோணும். அவர்தான் என்ர கேஸ் பாக்கிறார்.”
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன்னிடம் இருந்த ஒரு வீடியோ கிளிப்பைப் போட்டுக் காட்டினார் அவர்.
அதில் காண்டீபன் ஒரு பைக்கில் வந்து இறங்குவதும், வேறு எந்த வேலையையும் பார்க்காமல் நேராக சம்மந்தரை வந்து பார்த்துவிட்டுப் போவதும் பதிவாகியிருந்தன.
ஆக அவன் எண்ணியது சரிதான். பாம்பு கொத்தியே விட்டது. அந்த நொடியே சிவநாதரை ஏதாவது செய்துவிடத் துடித்தான் எல்லாளன்.
“இவனைப் பாக்க உங்கட ஃபிரென்ட் காண்டீபன் மாதிரி இல்லையா எல்லாளன்? அல்லது காண்டீபனேதானா?” பார்வையால் அவனை ஆராய்ந்தபடி கேட்டவரின் கேள்வியில் அவன் இரத்தம் கொதித்தது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “காண்டீபன் செத்திட்டான் சேர்! அது உங்களுக்கே தெரியும்.” என்றான் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு.
“அப்ப இவன் ஆர்?”
“இவன் வாசு.”
“சோ அவனைப் பற்றி உங்களுக்கு தெரிஞ்சிருக்கு. ஜெயில் வரைக்கும் போய் விசாரிச்சும் இருக்கிறீங்க. பிறகு ஏன் அரெஸ்ட் பண்ணேல்ல?”
“கொலைய அவன் செய்யேல்ல சேர்.”
“என்னவோ நேற்றுத்தான் போலீஸ் டிப்பார்மென்ட்ல சேர்ந்தவர் மாதிரிப் பதில் சொல்லாதீங்க எல்லாளன். எங்களுக்குக் கிடைச்சிருக்கிற ஒரேயொரு துருப்பு அவன். அவனை அரெஸ்ட் பண்ணி விசாரிச்சு ரிப்போர்ட் குடுக்கிறதும், கோர்ட்ல கொண்டுபோய் நிப்பாட்டுறதும்தான் உங்கட வேலை. கொலைய அவன் செய்தானா இல்லையா எண்டுறத கோர்ட் தீர்மானிக்கும்.”
அப்படி நம்பித்தானே முதல் முறை அவனைக் கைது செய்தான். நடந்தது என்ன? இன்னொரு முறையா? அவன் உயிர் துடித்தது. தன்னை அடக்கிக்கொண்டு அவர் முன்னே சாதாரணமாய் இருக்கப் பெரும் பிரயத்தனப்பட்டான் எல்லாளன்.
“உங்களக் குத்தினதும் இவனா இருக்கலாமோ எண்டு டவுட்டா இருக்கு எனக்கு.”
பதில் சொல்லாமல் அவரையே பார்த்திருந்தான் எல்லாளன்.
“நண்பன் எண்டுறதால மறைக்கிறீங்களா?”
“வாசு என்ர ஃபிரெண்ட் இல்ல. அவன் என்ர ஃபிரெண்ட்டா இருந்திருந்தா என்னை ஏன் குத்தப்போறான்?”
“அவனை அரெஸ்ட் பண்ணி விசாரிச்சா இதுக்கான பதில் தெரிய வரும்தானே.” என்றவர் ஒரு கடிதத்தை எடுத்து அவன் புறம் நீட்டினார்.
அது அவனுக்கான இடைநீக்கத்(suspension) கடிதம். அதுவும் ஒரு மாதத்திற்கு. அதிர்ந்துபோனான் எல்லாளன். கூடவே தயாநிதி குடும்பக் கொலை வழக்கு சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார் அவர்.
கொதித்துப்போனான் எல்லாளன். மேலதிகாரியிடம் காட்டவா முடியும்?
“இதுக்கு என்ன அவசியம் சேர்?” என்றான் ஆத்திரத்தை அடக்கி.
“உங்களுக்கு இப்ப தேவையானது முறையான ஓய்வு எல்லாளன். அதோட இந்த மூண்டு கேஸ்லயும் நீங்க ஏதோ ஒரு வகைல சம்மந்தப்பட்டு இருக்கிறீங்க. சோ நியாயமா நடப்பீங்க எண்டுற நம்பிக்கை டிப்பார்ட்மெண்டுக்கு இல்ல. சத்தியநாதன் வழக்கில சந்தேகம் உங்களிலதான். வேந்தனுக்கு நீங்க என்னவும் செய்யலாம் எண்டும் செல்லினம். சம்மந்தர் வழக்கில சம்மந்தப்பட்டிருக்கிற வாசு உங்கட ஃபிரெண்ட் மாதிரியே இருக்கிறான். சோ இதுக்கு மேலயும் உங்களிட்ட இந்த கேஸுகளை விடேலாது எல்லாளன்.”
மேலதிகாரியின் உத்தரவை மீறவா முடியும்? உள்ளம் கொதிக்க எழுந்து வெளியே வந்தான் எல்லாளன்.

