இல்லை என்பதுபோல் தலையைக் குறுக்காக அசைத்துவிட்டு நடந்ததைச் சொன்னான்.
“அவள்தான் உனக்குப் பிரச்சினையா வந்து நிக்கப் போறாள் வேந்தா!” என்றார் எச்சரிப்பாக.
அவன் வாயை இறுக்கி மூடிக்கொண்டு நின்றிருந்தான்.
“இப்ப எங்க இருக்கிறாள்?”
“கொக்குவில்ல.”
“அங்க எங்க?”
“எனக்குத் தெரிஞ்ச இடத்தில.”
“உனக்குத் தெரிஞ்ச இடம் எண்டா?”
அதற்குமேல் அவனால் சமாளிக்க முடியவில்லை. “என்ர வீடுதான் அது.” அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி சொன்னான்.
அவனையே இமைக்காது பார்த்தார் சிவநாதர். “ஆக, நான் நினைக்கிற மாதிரி லேசுப்பட்ட ஆள் இல்லை நீ என்ன?” என்றார் என்னவென்று பிரித்தறிய முடியாக் குரலில்.
“என்னோட இருந்துகொண்டே எனக்குத் தெரியாம வீடு வாங்கி வச்சிருக்கிறாய். ஆனா நான் உன்னை நம்பிக்கொண்டு இருக்கிறன்.” என்றதும் சுள்ளென்று அவனுக்கும் கோபம் வந்தது.
“உங்கட மகன்தானே நான்!” என்றான் அவனும் திருப்பி.
“நீங்க பெத்த மூண்டு பிள்ளைகள்ள ஆராவது ஒருத்தன் உங்களோட இருந்திருந்தா என்னைத் திரும்பிப் பாத்திருப்பீங்களா நீங்க? இல்லையே. பிறகு எப்பிடி உங்களை முழுசா நம்புவன்? உங்கட மகனா இருந்தாலுமே நான் உங்களால பாதிக்கப்பட்டவன். இண்டைக்கு வாரிசு இல்லை எண்டதால கூட்டிக்கொண்டு வந்து வச்சிருக்கிறீங்க. அதுக்காக நம்பிக்கை வந்திடுமா? இஞ்ச எனக்கு எண்டு என்ன இருக்கு? அதுதான் ஒரு வீடு வாங்கிப் போட்டிருக்கிறன்.” என்று தைரியமாகவே சொன்னான்.
அவனையே சில கணங்களுக்குப் பார்த்தவர் அந்தப் பேச்சைத் தொடரவில்லை. உடனேயே வாசுசேனனுக்கு அழைத்தார்.
*****
பருத்தித்துறை கற்கோவளம் ஒரு மீனவக்கிராமம். கரைவலை
மீன்பிடிதான் பிரதான தொழில்.
இருள் பிரியும் நேரத்திற்கே கடலுக்குச் சென்ற படகுகள், துடுப்புப் படகுகள், கரைவலைகளை எல்லாம் கரைக்கு வந்திருந்தன. மீன்களைப் பிடித்துவந்த வலைகளைப் பிரித்து, அதற்குள் இருந்த மீன்களை வகைப்படுத்தி, அவற்றை ஏலத்தில் விற்று என்று காலை நேரத்துப் பரபரப்புகளை எல்லாம் முடித்துக்கொண்டு களைத்துச் சோர்ந்துபோய்ப் படுத்திருந்தது கற்கோவளம் கடற்கரை.
அந்தக் கடற்கரை மணலின் மீது மல்லாந்து படுத்திருந்தான் வாசுசேனன். அதிகாலை நான்கு மணிக்கே அங்கு வந்துவிட்டான். உடல் களைக்கும் வரை நீந்திவிட்டு வந்து, அன்று கடலுக்குள் செல்லாமல் ஓய்வில் இருந்த படகு ஒன்றின் அருகில் படுத்தவன்தான்.
இப்போது மணல் சூடாகி வெற்று முதுகைச் சுட்டும் அசையவில்லை. உச்சிக்கு வந்துவிட்ட சூரியன் மல்லாந்து படுத்திருந்தவனின் மொத்தத் தேகத்தையும் எரித்தபோதும் அசையவில்லை.
ஒரு கை மணலில் விசிறிக் கிடக்க, மறு கை சூரியக் கதிர்கள் கண்களைக் குத்திவிடாதபடிக்கு முகத்தின் மீது கிடந்தது.
அப்போதுதான் அழைத்தார் சிவநாதர். வெற்று மார்பில் இளைப்பாறிக்கொண்டிருந்த கைப்பேசியை, மணல் அப்பிக் கிடந்த கரத்தாலேயே அதை எடுத்து யார் என்று பார்த்துவிட்டுக் காதுக்குக் கொடுத்தான்.
“சொல்லுங்க!”
“அவசர வேலை ஒண்டு. இப்பவே கொக்குவில்ல நான் சொல்லுற இடத்துக்குப் போ. அங்க ஒரு பெட்டை இருப்பாள். அவளை உன்ர இடத்தில கொண்டுபோய் வச்சிரு. உன்னையும் உன்னோட இருக்கிற அந்த ரெண்டு பேரையும் தவிர்த்து வேற ஆர் கண்ணிலயும் அவள் படக்கூடாது. முக்கியமா எல்லாளனுக்கு அவள் ஒருத்தி இருக்கிறாள் எண்டுற விசயமே தெரிய வரக்கூடாது. அதையும் தாண்டி ஏதாவது சேட்டை விட்டாள் எண்டா மொத்தமா முடிச்சுவிடு!”
“அப்பா!” என்று பதறி அழைத்தான் வேந்தன்.
“ஷ்!” ஒற்றை விரலை வாயில் வைத்து அவனை அடக்கிவிட்டு, “இப்பவே காரியத்தை முடி!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
“என்னடா அப்பா?”
“எனக்கு அவள் வேணும் ஐயா.”
“அவள் வேணுமா இல்ல உனக்கு உன்ர உயிர் வேணுமா என்று கேட்டுவிட்டுப் போனார் அவர்.
*****
சிவநாதர் வீட்டிலிருந்து புறப்பட்ட எல்லாளன் நேராகத் தயாநிதியின் வீட்டைப் பார்க்கப் போனான். இப்போதும் யாரும் உள் நுழையாதபடிக்குத் தடுக்கப்பட்டு வாசலிலேயே இரண்டு காவலர்கள் காவலுக்கு நின்றனர். இவனைக் கண்டுவிட்டு விறைப்பாக நின்று சல்யூட் வைத்தனர்.
இவன் இந்த வழக்குக்காகவே திரும்பவும் யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகி வந்திருக்கிறான் என்று அறிந்தோ, அல்லது யாராவது வந்தால் ஏதாவது தகவல் திரட்ட முடியுமா என்றோ சில பத்திரிகைக்காரர்களும், யூடியூப் காரர்களும் நின்றிருந்தனர்.
இவனைக் கண்டதும் பாய்ந்து வந்த மைக்ரோஃபோன்களை ஒவ்வொன்றாகக் கடந்து, பதில் ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று பார்த்தான்.
“இவ்வளவு பெரிய வீடு, புதுசா கட்டியிருக்கு, ஆள் வேற பசையானவன். சிசிடிவி இருக்கேல்லையா?”
“இருந்த அடையாளங்கள் இருக்கு சேர். ஆனா, எல்லாமே எரிஞ்சுபோச்சு. ஒயிலும் ஊத்தினதால தீயணைப்புப் படையாலயும் ஈஸியா நெருப்பை ஆணைக்கேலாம போச்சு.”
முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிட்டது போன்று முற்றிலும் கருமை படிந்து கிடந்த வீடு அப்படித்தான் சொல்லிற்று.
உள்ளே சென்று பார்த்தான். சோக் பீஸினால் ஒவ்வொருவரும் விழுந்து கிடந்த இடங்கள், பெற்றுக்கொண்ட தடயங்கள் இருந்த இடங்கள் எல்லாம் குறிக்கப்பட்டிருந்தன. அவற்றில் கால் வைக்காமல் கடந்து மாடியேறினான்.
மொட்டை மாடியில் இருந்து வெளிப்புறமாக இறங்குவதற்கு படி இருந்தது. அதன் மூலம் தப்பிப் போயிருப்பாளா? முதலில் இதைச் செய்தது யார்? மொட்டை மாடியில் நின்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்துவிட்டு காவல்நிலையம் புறப்பட்டான்.

