ஆட்டநாயகன் 8.2

தனித்துவிடப்பட்ட அவளையும் அவள் அன்னையையும் பற்றிய கவலை அவருக்கு எங்குமில்லை. எப்போதாவது அவள் நினைவு வருகையில் அழைத்துப் பேசுவார் போலும். 

 

என்னதான் கோப முகமூடியின் பின்னே தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டாலும் அவள் காயங்கள் அந்த வீட்டில் வைத்துக் கிளறுப்பட்டுப் போயிற்று. எல்லாவற்றுக்கும் பயந்து, ஒடுங்கி வாழ்ந்த அவர்களின் வாழ்க்கை கண்முன்னே வந்துபோயிற்று. 

 

அவளுக்கும் அன்னைக்கும் வாடகைக்கு ஒரு வீடு கிடைக்காது, அப்படியே கிடைத்தாலும் ஆண் துணை இல்லாத அவர்களுக்குப்  பாதுகாப்பானதா என்று பார்க்க வேண்டும், வீட்டில் ஒரு சின்ன வேலை இருந்தாலும் ஆண்களை வீட்டுக்குள் எடுக்கப் பயம், ஒரு ரூபாயைக் கூட வீணாகச் செலவு செய்ய மாட்டார்கள். 

 

நாளைக்கு ஒன்று என்றால் எங்களைப் பார்க்க யாருமில்லை என்கிற நினைப்பு, பாதுகாப்பற்ற பலகீனமான மனநிலை என்று வெளிப்பார்வைக்கு அவள் ஆரோக்கியமான ஒருத்தியாக வளர்ந்தாலும், மனத்தளவில் பயம், பதற்றம், பலவீனம் எல்லாம் நிறைந்த ஊனமுற்ற மனத்துடன்தான் இருந்தாள். 

 

மனத்தின் அச்சங்களும் நடுக்கங்களும் வெளியில் தெரியாது என்பதில் அவள் நிலை யாருக்கும் தெரியாது. 

 

அந்தப் பலகீனப்பட்ட மனதா, இல்லை வெறுப்பையும் கோபத்தையும் நெஞ்சு முழுக்கத் தேக்கி வைத்திருந்தாலும் ஒரு நாள் அவரோடு செலவழித்துவிட்டு வருவோம் என்கிற அவளே ஒத்துக்கொள்ள விரும்பாத அவளின் அடிமனத்தின் ஆசையா தெரியாது வந்துவிட்டாள்.

 

வந்து அவர்கள் முகங்களில் இருக்கிற மகிழ்ச்சியை, ஆனந்தத்தை எல்லாம் பார்த்தபிறகு எல்லாவற்றையும் வெறுத்தாள். 

 

அந்த மன உளைச்சல் அவளை உறங்க விடவில்லை.மெல்ல எழுந்து அறையின் வெளியே வந்தாள். அங்கே நின்றால் யாரினதும் பார்வையில் படுவோமோ என்று மொட்டை மாடிக்கு வந்திருந்தாள். 

 

என்னவோ உள்ளம் அன்னையை அளவுக்கதிகமாகத் தேடிற்று. இங்கு வந்து அவருக்குத் துரோகமிழைத்துவிட்டோமோ என்று யோசித்தாள். தன்னை மறந்து இருளில் பார்வையைப் பதித்து எவ்வளவு நேரம் நின்றாளோ. திடீரென்று கேட்ட அலறலிலும் கூக்குரல்களிலும் பயந்து நடுங்கிப்போனாள்.

 

சில கணங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அடுத்து என்ன செய்யவேண்டும் என்றும் தெரியவில்லை. பயமும் பதற்றமுமாக மொட்டை மாடியிலிருந்து விழுந்தடித்துக்கொண்டு இறங்கினாள். அடுத்த மாடியையும் அவள் இறங்குவதற்குள் குப்பென்று நெருப்பு மேலெழும்பி வந்தது. 

 

பெரும் அலறல். வீடு மொத்தமும் தீ பற்றிக்கொண்டது கண்முன்னே தெரிய நெஞ்சுக் கூட்டில் தண்ணீரே வற்றிப்போயிற்று அவளுக்கு. 

 

வந்ததை விடவும் வேகமாக மேலே ஓடினாள். வெளிப்பக்கமிருந்த படிகள் நல்ல காலத்திற்கு நினைவில் வந்தது. குடுகுடு என்று அதன் மூலம் இறங்கியவளுக்கு எங்கே போவது, எப்படிப் போவது என்று ஒன்றும் தெரியவில்லை. 

 

அந்த வீடே அவளுக்கு அன்றைக்குத்தான் அறிமுகமானது. அப்படியிருக்க அந்தத் தெரு, ஊர் என்று என்ன தெரியும்? காலில் செருப்பில்லை. கையில் இருந்த கைப்பேசி எங்கே போனது என்றே தெரியவில்லை.

 

முதலில் யார் இதைச் செய்தார்கள், அவர்கள் பார்வையில் பட்டால் அவள் கதி என்ன என்று நினைக்கவே நெஞ்சமெல்லாம் சில்லிட்டது. 

 

அப்படியே நிற்க முடியாமல் வாசலுக்கு வந்து ஓட்டம் பிடித்தவள் தப்பிக்க முதலே மாட்டிக்கொண்டாள். அவளுக்கு அவ்வளவுதான் தெரியும். சட்டென்று மயங்கிப்போனாள். வீதியில் அவர்கள் இழுத்துக்கொண்டு போகையில் இலேசாக விழிப்பு வந்து விடுபடத் திமிறினாள். பயத்தில் கத்தப்போனவளை யாரோ ஒருவன் வாயைப் பொத்திக்கொண்டான். எவ்வளவோ திமிறி, அடித்து, அவர்கள் முகங்களைக் கிழிக்க முயன்றும் பலனில்லை. பளார் பளார் என்று கன்னத்தில் விழுந்த அறைகள் மொத்தமாக அவளை ஒடுக்கியிருந்தன. 

 

இப்போதும் தான் எங்கு இருக்கிறோம், ஏன் இப்படி அடைத்து வைத்திருக்கிறார்கள், அவர்கள் யார், என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. அழுது, கெஞ்சி, கோவப்பட்டு என்ன செய்தும் பிரயோசனம் இல்லை. அவளைப் பெற்றவர் குடும்பத்தினர் தப்பியிருப்பார்கள் என்கிற நம்பிக்கையே அவளுக்கு இல்லை. 

 

ஒரு தொலைபேசி இல்லை, கைப்பேசி இல்லை, தொலைக்காட்சி பார்க்க அனுமதி இல்லை. வெளியே போக முடியாது. 

 

மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவள். ஒன்றுமே சொல்லாமல், இப்படி வேலைக்கும் போகாமல் இருந்தால் நிறுவனம் என்ன சொல்லும், அயலட்டை மனிதர்கள் என்ன நினைப்பார்கள்? அவளைத் தேட யார் இருக்கிறார்கள், இனி என்னாகும் என்று அவளை சுற்றிச் சூழ்ந்திருந்தவை கேள்விகளும் குழப்பங்களும் பயமும் மட்டுமே. 

 

அவளுக்குக் காவலுக்கு இருக்கும் முகங்களைக் கண்டாலே நடுங்கியது. மது புகை என்று தாராளமாகப் புழங்கும் கடுமையான முகங்களும், அச்சமூட்டும் விழிகளும் திக் திக் நிமிடங்களாகவே கடத்தினை. அவள் ஒரு பெண்ணாயிற்றே.

 

இதில் அவளை அவன் நேசிக்கிறானாம், திருமணத்திற்கு சம்மதிக்கட்டுமாம் என்று வேறு நெருக்க ஆரம்பித்திருந்தான் அவர்களின் தலைவன். 

 

அவளை திருகோணமலையில் கண்டதாக அவன் சொல்லும் கதையைக் கேட்க அவளுக்குத் தலையைச் சுற்றியது. மனம் ஒரு பாதுகாப்பான துணை தேடி அழுதது. யாராவது வந்து காப்பாற்றிவிட மாட்டார்களா என்று துடித்தாள். 

 

இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கிறது. காவல்துறை இன்னுமே அவளைத் தேடி வரவில்லையே என்று தவியாகத் தவித்துக்கொண்டு இருந்தபோதுதான் அவள் இருந்த அறையின் கதவைப் படார் என்று திறந்துகொண்டு வந்தான் ஒருவன். 

 

அவள் இதயத்தின் துடிப்பே நின்றுபோயிற்று. பயத்தில் கத்தப்பார்த்தாள். மொட்டைத் தலையும், அதன்மேல் ஓடிய காயத்தின் அடையாளமும், அவன் தோற்றமும் கண்டு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. அதுவும் சாம்பலும் இரத்த நிறமும் கலந்துகிடந்த அந்த விழிகள் அவளைப் பார்த்த பார்வையில் இரையை நோக்கி வரும் புலியின் கண்கள் நினைவில் வந்து அவள் தொண்டையை உலரவைத்தது. 

 

அவன் அவளை நெருங்க நெருங்க தேகம் கிடு கிடு என்று நடுங்கிற்று. சுவரோடு சுவராக ஒன்றினாள். அவன் அவளின் ஒற்றைக் கையைப் பற்றி இழுத்தான். அவ்வளவுதான். பயத்தில் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு வீறிட்டபடி தன் கையை இழுத்துக்கொள்ள முயன்றாள் கேதகி. 

 

சட்டென்று அவள் கன்னங்கள் இரண்டையும் ஒற்றைக் கையால் இறுக்கிப் பற்றி, தன் வாயின் மீது விரல் வைத்து, “உஷ்!” என்று அவன் காட்டிய சைகையில் மூச்சைக் கூட இழுத்துப் பிடித்துக்கொண்டு நின்றுவிட்டாள் கேதகி. 

 

அப்படியே நின்றவளை இழுத்துக்கொண்டு போனான் அவன். “ப்ளீஸ் ப்ளீஸ்! நீங்க எல்லாம் ஆர் எண்டே எனக்குத் தெரியாது. நான் எந்தப் பிழையும் செய்யேல்ல. இந்த ஊருக்கு இதுக்கு முதல் நான் வந்தது கூட இல்லை. என்னை விட்டுடுங்க, நான் போகோணும்.” என்று சத்தமே இல்லாமல் அவள் கெஞ்சியது எதுவும் அவன் காதில் விழவில்லை. 

 

வீட்டின் வாசலில் நின்றிருந்த காரின் கதவைத் திறந்து அவளை உள்ளே தள்ளிவிட்டு காரை எடுத்தான் அவன். 

 

error: Alert: Content selection is disabled!!