காரின் பின்னால் காட்டுமிராண்டி மனிதர்கள் இருவர். முன்னால் அவனும் அவளும். மூச்சு விடுவதற்குக் கூடப் பயந்தாள். அந்தளவில் இரும்பை உருக்கி உருவம் செய்தது போன்ற தோற்றத்தில் இருந்தான் அவன்.
அதே நேரத்தில் இரண்டு வாரங்களின் பின் வெளியுலகைப் பார்க்கிறாள். அழுகை வந்தது. கூடவே உள்ளத்தில் ஒரு பரபரப்பு. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தப்பித்துவிட முடிந்தால்?
முதலைகள் நிறைந்துகிடக்கும் அகழிக்குள் மாட்டிக்கொண்டு தப்பிக்க முயல்வது எத்தனை சாத்தியமற்றதோ அத்தனை சாத்தியமற்றது மல்யுத்த வீரர்கள் போன்று பயங்கரமான தோற்றத்துடன் இருக்கும் இந்த மூவரிடமிருந்து அவள் தப்பிக்க முயல்வது.
அதற்கென்று அடங்கி இருக்க முடியவில்லை. கிடைத்திருக்கிற சந்தர்ப்பத்தை விட்டுவிட்டு அழுதுகொண்டு இருக்க முடியுமா? உயிர்ப்பயம் ஏதாவது செய்துவிடத் துடித்தது.
கைகால்கள் எல்லாம் உதறின. பக்கத்தில் இருக்கிறவன் புறம் இலேசாகக் கூட அவள் திரும்பவில்லை. எதிர்ப்பக்கமே முகத்தை வைத்துக்கொண்டிருந்தாள். விழி வழியே அவளின் அடி நெஞ்சுவரை ஊடுருவும் வல்லமை மிக்க அவன் கூர் விழிகள் தன் மனத்தில் ஓடுகிறவற்றைக் கண்டுபிடித்துவிடுமோ என்றெண்ணி நடுங்கினாள்.
இத்தனை பயத்துக்கு மத்தியிலும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆட்கள் நடமாட்டம் மிகுந்த சந்தி ஒன்றில் வாகன நெரிசலால் காரின் வேகம் குறைந்தது. மெதுவாகி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. இதுதான் சந்தர்ப்பம், தப்பித்துவிடு என்று அறிவு அடித்துச் சொன்னது. பயம் நெஞ்சைக் கவ்விக் பிடித்தது. உதடுகள் உலர்ந்து தொண்டைத் தண்ணீர் வற்றி நெஞ்சு டமார் டமார் என்று அடித்துக்கொண்டது. ஆனாலும் படக்கென்று கதவைத் திறக்க முயன்றாள்.
முயன்றாள். அவ்வளவுதான். அடுத்த நொடியே இரும்பை ஒத்த அவன் கரம் அவள் பின்னந்தலையில் பதிந்து, காரின் சீட்டை மடிப்பதுபோல் அவளை அப்படியே முன்புறமாக மடித்திருந்தது. அவள் நெற்றி டாஷ்போர்டில் படார் என்று முட்டிற்று.
அவள் வலியில் அலறியும் விடவில்லை. விட்டால் டாஷ்போர்டினுள் தலையைப் புதைத்துவிடுவான் போலும். அவள் எவ்வளவு போராடியும் இம்மியளவு கூட அவனை அசைக்க முடியவில்லை.
அது ஒரு தானியங்கி கார்(Automatic Car) என்பதில் அதன் பிறகும் அவன் கரத்தை விலக்கிக்கொள்ளவே இல்லை. அவள் கெஞ்சி, அழுது, மன்னிப்புக் கேட்டு எந்தப் பிரயோசனமும் இல்லை. அவன் வீட்டின் முன்னே வந்து நின்றபிறகுதான் விட்டான்.
நிமிர்ந்தவளுக்கு நெற்றியில் வலி உயிர் போயிற்று. “ஏன் இப்பிடிச் சித்திரவதை செய்றீங்க? நான் என்ன பிழை செய்தனான்? விட்டுடுங்க ப்ளீஸ்! நான் போகோணும்!” பயம் இருந்தபோதிலும் நியாயமே இல்லாமல் நசுக்கப்படுகிறோம் என்கிற வலி அவளைக் குமுற வைத்தது.
அவன் எதையும் காதில் வாங்கவில்லை. ஒரு சிகாரை எடுத்து நெருப்பு மூட்டி உதட்டில் பொருத்திக்கொண்டு இறங்கி அவள் பக்கம் வந்தான். கதவைத் திறந்து அவளை வெளியே இழுத்து வீட்டுக்குள் கூட்டிச் சென்றான். ஒரு அறைக்குள் தள்ளிக் கதவை அடைத்தான்.
நிலத்தில் விழுந்துகிடந்து கண்ணீர் உகுத்தாள் கேதகி. நெற்றி வலி வேறு உயிர் போனது. அவளுக்கு என்ன நடக்கிறது? அப்படி என்ன தவறு செய்தாள் என்கிற காரணத்தையாவது சொல்ல வேண்டாமா? ஒரு தெளிவு கிடைக்கும். அவள் பக்கமிருந்து விளக்கம் எதையாவது கொடுக்கவும் முடியும்.
கொஞ்ச நேரத்தில் படார் படார் என்று ஏதோ சத்தம். என்னவோ மிருகங்கள் சேர்ந்து படு பயங்கரமாக மோதிக்கொள்வது போலிருக்கவும் பயந்துபோனாள். அன்று தயாநிதி வீட்டில் இப்படித் திடீரென்று கேட்ட சத்தமும், அதன் பிறகு நடந்த கொடூரமும் நினைவில் வர உடல் ஒருமுறை தூக்கிப்போட்டது.
எழுந்து ஓடி வந்து கதவைத் திறக்க முயன்றாள். அது பூட்டப்பட்டிருந்தது. திரும்பவும் ஓடிப்போய் ஜன்னலால் பார்த்தாள். அவளோடு வந்த அந்த மூவரும் மோதிக்கொண்டிருந்தார்கள். பார்த்தவளுக்கு உயிர்க்கூடே ஆடிப்போயிற்று.
மூவர் முகங்களிலும் ஆக்ரோஷம். இரையைப் புசித்துவிடும் நோக்கில் வெறிகொண்டு பாயும் மிருகங்களைப் போலிருந்தனர். அதுவும் அவளை இழுத்து வந்தவன் அந்த இருவரின் உடலைப் பிய்த்து உயிரைக் குடித்துவிடுகிறவன் போன்று உக்கிரம் கொண்டு தாக்கிக்கொண்டிருந்தான்.
இவர்களிடமா அவள் சிக்கிக்கொண்டிருக்கிறாள்? இந்த மாமிச மலையிடமிருந்தா தப்பிக்க முயன்றாள்? தான் நிறைய நாள்களுக்கு உயிரோடு இருக்க மாட்டோம் என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. கண்ணீர் அதுபாட்டுக்குக் கொட்டிற்று.
பயத்தில் வியர்த்தது. தொண்டை உலர்ந்தது. அணிந்திருந்த மேற்சட்டையாலேயே முகத்தைத் துடைத்துக்கொண்டாள்.
அப்படியே தொய்ந்து அமர்ந்துவிட்டாள். அன்னைக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் வந்தாளே, அதற்குக் கிடைத்த தண்டனையா இது? அவ்வளவு பெரிய தவறா அவள் செய்தது? அடைக்கப்பட்ட அறையினுள் அடைந்துகிடந்தாள். நேரம் போய்க்கொண்டிருந்தது. பசி, தாகம் எதுவுமில்லை அவளுக்கு. எவ்வளவு நேரம் கடந்ததோ கதவைத் திறந்துகொண்டு அவன் வந்தான்.
பயத்தில் நிமிர்ந்து அமர்ந்தாள் கேதகி.
அவன் கையில் உணவுத் தட்டு. அவள் முன்னே தரையில் வைத்தான். பக்கத்தில் தண்ணீரும். அவளுக்கு அழுகை வந்தது. பயமும் இறைஞ்சலுமாக அவனை நோக்கினாள். உள்ளே பெரும் அச்சம் உண்டானாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை.
“ஏன் என்னை அடைச்சு வச்சிருக்கிறீங்க?”
“நான் என்ன பிழை செய்தனான்?”
“ப்ளீஸ் ஏதாவது சொல்லுங்க.”
“ரெண்டு கிழமையாச்சு. ஏன் எதுக்கு எண்டு தெரியாம ஆளாளுக்கு இழுத்து வந்து அடைச்சு வச்சிருக்கிறீங்க.”
அவள் பேசவே இல்லை என்பதுபோல் அந்த அறையின் ஜன்னலை ஆராய்ந்தான். அதை உடைக்கவோ கழற்றவோ முடியாது என்று தெரிந்ததும் திரும்பி நடந்தான். திரும்பவும் கதவடைக்கப் போகிறான் என்றதும், “எனக்கு பாத்ரூம் போகோணும்.” என்றாள் அவசரமாக.
நின்று திரும்பி அவளைப் பார்த்தான். தப்பித்துப் போவதற்காக அப்படிச் சொன்னாளோ என்று அவளையே அவளைக் குறித்து நினைக்க வைத்தது அந்தப் பார்வை.
“இல்ல உண்மையா…” எனும்போதே மேலே பேச முடியாமல் தொண்டை அடைத்துக் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

