ஆட்டநாயகன் 9.2

அவள் இந்தளவில் பயந்து நடுங்குகிறவள் இல்லை. ஆனால் அவள் வாழ்வில் நொடிக்கு நொடி நிகழும் பயங்கரங்கள் அவளை அப்படி ஆக்கிவைத்திருந்தன. 

 

அப்போதும் வாயைத் திறக்காமல் இரண்டு விரல்களை மாத்திரம் அசைத்து வா என்றான் அவன். அவமானமாய் உணர்ந்தாள். அவள் என்ன புழுவா? அதையெல்லாம் கேட்கும் தைரியம் இல்லாமல் எழுந்து போனாள். கால்கள் பலகீனத்திலும் படபடப்பிலும் தள்ளாடின. 

 

சின்ன வீடுதான். இவள் அடைக்கப்பட்டிருக்கும் அறைக்குப்  பக்கத்தில் இன்னொரு கதவு இருப்பது தெரிந்தது. அப்படியானால் அதுவும் ஒரு அறை. இரண்டையும் சேர்த்தது போல் ஒரு குட்டி ஹோல். அதன் இன்னொரு பக்கத்தில் சமையலறை. அந்தளவுதான் அந்த வீடு. வீட்டின் பின் கதவைத் திறந்ததும் அதன் பக்கத்தில் இருந்த மற்றக் கதவைத் திரும்பவும் கையால் காட்டினான் அவன். 

 

வீட்டோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தாலும் தனியாக இருந்தது குளியலறை. அந்தக் கதவை மெல்லத் திறந்து பார்த்தாள். கொஞ்சம் விசாலமாக, குளிக்கும் வசதியோடு இருந்தது. உள்ளே நுழைந்து கதவைச் சாற்றினாள். அவன் கண்ணிலிருந்து மறைந்தது சின்னதாய் ஒரு ஆசுவாசம். அந்தக் கதவிலேயே சாய்ந்து விழிகளை மூடி ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டாள்.

 

விழிகளைத் திறந்தாள். எதிரே கண்ணாடி. அவளா இது? கலைந்து, கசங்கி, சோர்ந்து, முகம் வீங்கி, நெற்றி புடைத்து என்று அவளுக்கே அவளைப் பார்க்கக் கண்ணீர் வந்தது. வாழ்வில் பெரிதாக எந்தச் சந்தோசத்தையும் அனுபவித்ததில்லை. கற்பனைகளையும் கனவுகளையும் சுமந்ததும் இல்லை. நிதர்சனத்தை உணர்ந்து வாழ்ந்தவள். அப்படியிருக்க அவளுக்கு ஏன் இந்த நிலை? காரணத்தையாவது சொல்லக்கூடாதா? வாழ்வில் ஒரு பாதி சரியில்லாவிட்டால் மறுபாதி நன்றாக இருக்கும் என்பார்கள். அவளுக்கு மட்டும் ஏன் இப்படி? 

 

கலங்கிவிட்ட விழிகளைத் துடைத்துக்கொண்டு தன் தேவைகளை முடித்துவிட்டு வந்தாள். அவள் கதவைத் திறக்க அவன் வாசலிலேயே நின்றான். தப்பிக்க முயன்றால் ஒரே அடியில் முடித்துவிட நினைத்திருப்பானாக இருக்கும். அந்தக் குட்டி விறாந்தை வரையும் வந்தவன் அவள் அவளுக்கான அறைக்குள் போகட்டும் என்று நின்றான். வாசல் வரை வந்தவள் ஒரு கணம் நின்று அவன் புறமாகத் திரும்பினாள்.

 

“இதுக்கு முதல் என்னை நீங்க பாத்திருக்கிறீங்களா?” அதைக் கேட்கும்போதே அவளுக்கு விழிகள் கலங்கின. 

 

“உங்களுக்கு நான் ஏதாவது பிழை செய்திட்டேனா?”

 

“ஆனா நான் உங்களைப் பாத்தது கூட இல்ல. எனக்குத் தெரிஞ்சு ஆருக்கும் எந்தப் பிழையும் செய்ததும் இல்லை. பிறகும் ஏன் அடச்சு வச்சிருக்கிறீங்க? காரணத்தையாவது சொல்லுங்க ப்ளீஸ்.” என்று கெஞ்சினாள். 

 

அவளையே பார்த்தான் அவன். அவள் கண்ணீர், கேள்விகள் எதுவும் அவனைப் பாதிக்கவில்லை போலும். “உன்ர பெயர் என்ன?” என்றான். 

 

அவள் விழிகள் அதிர்வில் அகன்றன. அவள் பெயர் கூட அவனுக்குத் தெரியாதா? நம்ப மாட்டாதவள் போன்று அவனையே பார்த்தாள். பிறகு எப்படி இப்படி அவளைக் கடத்தி, கடுமை காட்டி, காரணமே சொல்லாமல் அடைத்து வைத்திருக்கிறான்? 

 

கேட்க யாருமில்லை என்று வந்த அலட்சியமா? ஆத்திரமும் அழுகையுமாக அவனையே பார்த்தாள். 

 

“பெயரைக் கேட்டனான்.” என்றான் அவன் தாடை இறுக.

 

“நானும் சில கேள்விகள் கேட்டனான்.” பெயர் கூடத் தெரியாத ஒருத்தியை இந்தளவில் வதைப்பானா என்கிற ஆத்திரம் அவளையும் திமிர வைத்தது. 

 

அவளையே சில கணங்களுக்குப் பார்த்தவன் மெல்ல அவளை நெருங்கினான். நடுங்கிப்போனாள் அவள். காரில் கிடைத்த அனுபவம், “கேதகி” என்று அவசரமாகச் சொல்ல வைத்தது. 

 

“ஊர் எது?” 

 

“பிறந்தது வவுனியா. ஆனா வளந்தது, படிச்சது, இப்ப வேலை பாக்கிறது எல்லாம் கொழும்பு.” 

 

“அம்மா அப்பா?” 

 

“அம்மா இல்லை. அப்பா… அப்பா தயாநிதி.” 

 

“தயாநிதி?” என்ன தொனியில் கேட்டான் என்றே கண்டுபிடிக்க இயலாமல் கேட்டான். 

 

ஆம் என்று தலையை அசைத்தாள். இப்படி அவள் பற்றிய அரிச்சுவடி கூடத் தெரியாமல் கடத்தி வைத்திருக்கிறான் என்றால் இவன் கூலிப்படையைச் சேர்ந்தவனா? அப்படியானால் இவன் தலை இவனை விடப் பொல்லாதவனா? அவளுக்கும் அவனுக்கும் என்ன விரோதமாம்? 

 

மின்னல் விரைவில் கேள்விகள் தலைக்குள் குறுக்கும் மறுக்குமாக ஓட, “என்னைக் கடத்தச் சொல்லி உங்களிட்ட ஆர் சொன்னது?” என்று கேட்டாள் அவள். 

 

அவளையே சில கணங்களுக்குப் பார்த்துவிட்டு உள்ளே போ என்று பார்வையாலேயே அறையைக் காட்டி ஆணையிட்டான் அவன். 

 

அவளுக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது. “என்னை ஏன்…” என்று குமுறலோடு கிளம்பிய பேச்சு, அவன் பார்வை கடுமையாக மாறிய விதத்தில் அப்படியே நின்றுபோயிற்று. 

 

அவன் எல்லாம் கேட்டுக்கொண்டான். அவள் கேட்டதற்கு மட்டும் பதில் இல்லை. உள்ளம் குமுற உள்ளே சென்றுவிட்டாள்.  

 

*****

 

சைபர் கிரைம் பிரிவில் கேதகியின் கைப்பேசி எண்ணைக் கொடுத்து கடந்த இரண்டு வருடங்களுக்கான கைப்பேசி அழைப்புகளை எடுக்கச் சொல்லியிருந்தான் எல்லாளன். அவன் தயாநிதி வீட்டைப் பார்த்துக்கொண்டு காவல்நிலையத்திற்குத் திரும்பியபோது அது வந்திருந்தது. 

 

உணவு ஆர்டர், டாக்சி, ஊபர் போன்ற சில இலக்கங்கள் எப்போதாவது அழைக்கப்பட்டிருக்க, குறிப்பிட்ட ஆறேழு இலக்கங்கள் மாத்திரமே அவள் தொடர்பில் இருந்தன. அவற்றோடும் சில நிமிடங்கள் மாத்திரமே பேசியிருந்தாள். அதைத் தாண்டி மாதத்தில் ஒரு முறை அல்லது இரு முறை தயாநிதியோடு பேசியிருக்கிறாள். அதுவும் அவராக அழைத்திருக்கிறாரே தவிர அவளாக அழைத்துப் பேசியதே இல்லை. 

 

அவள் எப்போதும் தொடர்பில் இருந்த அந்த ஆறேழு இலக்கங்களும் அவளின் நண்பர்கள், அலுவலக சகபாடிகளாக இருக்கலாம். ஆனாலும் அந்த இலக்கங்களைப் பற்றி விசாரித்துச் சொல்லும்படி கொழும்பு காவல்துறைக்குத் தகவல் அனுப்பினான். 

 

இவற்றைத் தவிர்த்து புதிய எந்த எண்ணுக்கும் அவள் அழைக்கவில்லை. ஆக சமீப காலத்தில் புதிதாக யாரோடும் அவள் கதைக்கவில்லை. அப்படியானால் எந்த திட்டத்தையும் யாரோடும் சேர்ந்து அவள் போடவில்லை. 

 

error: Alert: Content selection is disabled!!