ஆட்டநாயகன் 9.3

 

ஆனால், நடந்த கொடூர சம்பவம் முற்றுமுழுதாகத் திட்டம் போட்டு நடத்தப்பட்ட ஒன்று. அதை அவள் செய்ததாக இருந்தால் நிச்சயமாக அப்படியான அழைப்புகள் ஏதும் நிகழ்ந்திருக்கும். இல்லையா இன்னொரு கைப்பேசி வைத்திருந்திருக்க வேண்டும். 

 

அவள் மீது அவனுக்குச் சந்தேகமில்லை. ஆனால், அவள் நிரபராதி என்று நிரூபிப்பதற்குச் சட்டத்துக்கு சாட்சி தேவை. அதைத் திரட்ட ஆரம்பித்திருந்தான். அதற்கு அவள் கிடைக்க வேண்டும். இல்லையா அவள் உடல் கிடைக்க வேண்டும். 

 

தயாநிதி வீட்டு சிசிடிவி ரெக்கோர்ட்டுகள் மொத்தமாக எரிந்து சாம்பலாகியிருந்தன. வீதியில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி கிளிப்புகளை அவனும் இன்னொரு முறை போட்டுப் பார்த்தான். 

 

சரியாகப் பதினோரு ஆட்கள். ஆனால், ஏதோ ஒரு உடை ஒரேபோன்று அணிந்திருந்தார்கள். முக்கியமாக எல்லோர் தலையிலும் நல்ல பெரிய வட்டச் செவிகள் இரண்டு. அப்படி என்ன உடை? இரவு என்பதில் அத்தனையும் கறுப்பு உருவங்களாக மாத்திரமே தெரிந்தன. 

 

“இதவிட வேற கிளிப்ஸ் கிடைக்கேல்லையா கதிரவன்?”

 

“இல்ல சேர். ரெண்டு கிளிப்ஸ்தான்.”

 

மற்றையதையும் போட்டுப் பார்த்தான். அதில் எங்கிருந்தோ கசியும் விளக்கு வெளிச்சத்தில் அவன் நினைத்ததுபோன்று எல்லோர் தலையிலும் அந்தச் செவிகள் இருந்தன. முகமூடிகள் என்று மிக நன்றாகத் தெரிந்தது. 

 

“போனவே திரும்பி வந்திருக்கோணுமே. அந்த கிளிப்ஸ் இல்லையா?”

 

கதிரவன் விழித்தான். ஆரம்பத்தில் அவன் இந்த கேஸில் இல்லை. எஸ்எஸ்பி தேவன் என்கிறவன்தான் பார்த்துக்கொண்டிருந்தான். எல்லாளன்தான் கதிரவன் தனக்கு வேண்டும் என்று கேட்டுத் தன் டீமினுள் இணைத்துக்கொண்டிருந்தான். 

 

அவர்கள் கையளித்ததை இவர்கள் இன்றுதானே பிரித்து மேய ஆரம்பித்திருக்கிறார்கள். 

 

“தெரியேல்லையே சேர்.” இந்தப் பதில் அவனுக்குப் பிடிக்காது என்று தெரிந்து தயங்கிச் சொன்னான் கதிரவன். 

 

அவன் எண்ணம் சரி என்பதுபோல் கண்டிப்பு நிறைந்த பார்வையை அவன் புறம் வீசிவிட்டு, தேவனுக்கு அழைத்து விசாரித்தான். 

 

“அதே இருட்டு, அதே ஆக்கள். அவ்வளவுதான் எல்லாளன் அதில இருக்கு.”

 

“பரவாயில்ல. அத நானும் ஒருக்கா பாக்கிறன். எங்க அந்த கிளிப்ஸ்?”

 

“உங்கட கண்ணுக்கு இருட்டுல நடக்கிறதும் தெரியும் போல. குடுத்துவிடுறன், பாருங்க.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் தேவன். 

 

அவனுக்குத் தன்னைத் தூக்கிவிட்டு எல்லாளனைப் போட்ட கடுப்பு. முன்னரும் எல்லாளனைப் பிடிக்காது. அதைக் காட்டிவிட்டு வைத்திருந்தான். 

 

அது வந்ததும் போட்டுப் பார்த்தான் எல்லாளன். அவன் சொன்னது போன்று இருட்டில் அதே நபர்கள், அதே தோற்றத்தில் ஆனால் கிடுகிடு என்று நடப்பது தெரிந்தது. காரியத்தை முடித்துவிட்டதில் முடிந்தவரை விரைவாகத் தப்பியோடுகிறார்கள். 

 

அசட்டையாக விட முடியவில்லை. ஊன்றிக் கவனித்தபோது பன்னிரண்டு பேர் செல்வது தெரிந்தது. சட்டென்று பரபரப்பாகிப்போனவன் திரும்ப திரும்பப் போட்டு ஊன்றிக்  கவனித்தான். அந்த ஒரு நபரை இருவர் இழுத்துச் செல்வது நன்றாகத் தெரிந்தது. அந்த நபரின் தலையில் அந்தச் செவிகள் இல்லை. 

 

அப்படியானால் அது கேதகியா? இத்தனை பேரையும் ஒன்றாகப் போட்டு எரித்தவர்கள் அவளை எதற்குத் தூக்கிச் செல்ல வேண்டும்? கேதகி அவர்களுக்கு ஏன் தேவை? கொண்டுபோய் என்ன செய்தார்கள். இளம் பெண்ணாயிற்றே என்று யோசித்ததும் அவன் தேகம் இறுகிற்று. பல்லைக் கடித்தான். 

 

“இது என்ன உடுப்பு கதிரவன், தலைல ரெண்டு செவி? யோசிங்க பாப்பம். அப்பிடியே அதே ரோட்டில பின்னால போய்ப் பாருங்க. எங்கயாவது சிசிடிவி இருக்கும். ஏதாவது ஒரு வாகனத்திலதானே வந்திருக்கோணும். நம்பர் கிடைக்குதா, இல்ல எப்பிடியான வாகனம் எண்டு அடையாளம் கண்டுபிடிக்க முடியுதா எண்டு பாருங்க. இந்த தேவன் ஒழுங்கா விசாரிச்சிருப்பான் எண்டுற நம்பிக்கை எனக்கு இல்லை.” 

 

கடகடவென்று அவனுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தவனுக்குத்  தன்னை இழுத்து எதற்கு இந்தக் கேசில் போட்டார்கள் என்கிற கேள்வி உள்ளே குடைந்துகொண்டேயிருந்தது. 

 

இதே போன்று ஒரு வழக்கில் அவனைப் போட்டுத்தான் அவன் கையாலேயே காண்டீபனைச் சிறையெடுத்து, அதன் பின் கொன்றார்கள்.

 

அதை நினைத்ததுமே அவன் உடலும் உள்ளமும் துடித்து நிமிர்ந்தன. அணிந்திருந்த காக்கி உடையை நீவி விட்டுக்கொண்டான். அது அவனின் கனவு. உயிர் நண்பனின் கனவு. அதை இவன் தன் தோள்களில் சுமக்கிறான். கடைசியாக அவன் சொல்லிவிட்டுப் போனதும் அதைத்தானே. 

 

சட்டென்று நிலைகுலைந்துபோனவன் எழுந்து விறுவிறு என்று காவல்நிலையத்தை விட்டு வெளியே நடந்தான். ‘காண்டீபா!’ மனம் அரற்றியது. ‘எப்பயாவது என்னை மன்னிப்பியாடா?’ ஆத்மார்த்தமாக நண்பனோடு உரையாடினான்.

 

இவன் அவனைக் கைது செய்யாது போனாலும் அவன் மரணம் நிகழ்ந்துதான் இருக்கும். தமயந்தியின் நிலைக்குக்  காண்டீபன்தான் காரணம் என்று தெரிந்து, அவனை ஒழிப்பதற்கு முடிவு செய்துவிட்டுத்தான் அனைத்தையும் இவன் மூலமாகச் சத்தியநாதன் காய் நகர்த்தினான். 

 

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் அவனையும் கொல்ல வேண்டும், அதை இவன் கையால் செய்ய வைத்து இவனையும் துடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு நிகழ்த்தியது.

 

ஆக காண்டீபனின் மரணம் என்பது நிகழ்ந்துதான் இருக்கும். சத்தியநாதன் நிச்சயமாய் நடத்தியிருப்பான். ஆனாலும் எல்லாளனால் என்றுமே இதற்கு நான் காரணம் இல்லை என்று நினைக்க முடிந்ததேயில்லை. 

 

இந்த முறை யார்? எதற்கு? நினைக்கவே தான் ஒரு காவல் அதிகாரி என்பதையும் தண்டி அவன் உள்ளம் பதறிற்று. தன் உயிரான உறவுகள் ஒவ்வொருவரும் கண்முன்னே வந்துபோக இன்னுமின்னும் நிலைகுலைந்துபோனான். 

*****

 

சிவநாதசுப்ரமணியருக்கு அழைத்து எல்லாளன் வேகமாகத் துப்புத் துலக்க ஆரம்பித்துவிட்டதைச் சொல்லிவிட்டு வைத்தான் தேவன். அவன் அவர் தூக்கிப்போடும் லஞ்சத்தில் சொத்துச் சேர்த்து வைத்திருப்பவன். 

 

அவனிடம் கேட்டு, வேந்தன் சிக்குவதற்குச் சாத்தியமும் இல்லை, இந்த வழக்கில் கடைசிவரையில் குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கவும் முடியாது என்று அவன் சொன்ன பிறகுதான் எல்லாளனை இங்கே மாற்றினார். 

 

அதன் பிறகுதான் கேதகி இதற்குள் இருந்ததும், அவளை வேந்தன் கூட்டிச் சென்று வைத்திருப்பதும் அவருக்குத் தெரிய வந்திருந்தன. தான் ஒரு திட்டம் போட்டு ஒவ்வொன்றையும் செய்ய, குறுக்காக வரும் வேந்தன் தானும் ஒன்றைச் செய்கிறானே என்கிற சினம் வராமல் இல்லை. 

 

அவளை அந்த நிமிடமே முடித்துவிடத்தான் விரும்பினார். மகன் ஆசைப்பட்டுவிட்டானே என்று கொஞ்சம் தயங்கினார். அவனுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய எதையும் தான் கிடைக்கவிடவில்லை என்கிற நினைப்பும் சேர்ந்துகொண்டது. 

 

எல்லாம் நல்லபடியாக முடிந்தால் அவள் இருக்கட்டும், பிரச்சனையாக வருவாள் என்று தெரிந்தால் முடித்துவிடலாம் என்கிற முடிவில்தான் அப்போதும் இருந்தார். அதனால்தான் வாசுசேனனிடம் அவளை ஒப்படைத்தார். 

 

அவனிடம் இருக்கும் கேதகியைக் கண்டு பிடிப்பதோ, இல்லை அவனிடமிருந்து கேதகியைக் கைப்பற்றுவதோ எல்லாளனால் அல்ல அந்த ஆண்டவனால் கூட முடியாது என்று அவருக்குத் தெரியும். அதில் ஒரு இன்பமும் கூட. முடிந்தால் அவளைப்  பிடித்துப் பாரடா என்று சத்தமே இல்லாமல் எல்லாளனிடம் சவால் விட்டிருந்தார். 

 

இப்போது ஒரு யோசனை. அப்படியே எதுவும் கையை மீறிப்போனால் வாசுசேனனைக் கைகாட்டிவிட வேண்டியதுதான் என்று தோன்றியதும் அவர் உதட்டினில் ஒரு தந்திரச் சிரிப்பு.

error: Alert: Content selection is disabled!!