இணைபிரியா நிலை பெறவே 3 – 1

அத்தியாயம் 3

அடுத்த நாள் விடிந்ததில் இருந்தே ஆரபி இயல்பாக இல்லை. போகத்தான் வேண்டுமா என்பதிலேயே நின்றாள். செய்கிற வேலைகளில் கூடக் கவனம் சிதறிற்று.

“என்னம்மா? ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?” என்று, அவள் தந்தை செந்தில்குமரன் கவனித்துக் கேட்கும் அளவில் இருந்தது அவளின் கவனச் சிதறல்.

கடைசியில், “அம்மாச்சி, சாப்பாட்டுக்குக் கூப்பிட்டா கொஞ்சம் நேரத்துக்கா போகோணும். என்னவோ சாப்பிட மட்டும்தான் வந்தனான் எண்டு சொல்லுற மாதிரி, சரியா அந்த நேரத்துக்குப் போறது சரியில்ல. வெளிக்கிட்டுப் போயிற்று வாங்கோ!” என்று மங்கையற்கரசி சொன்ன பிறகே புறப்படவே ஆயத்தமானாள்.

அவள் இருந்த மனநிலையில் வினோதினியின் குழந்தைகளுக்கு ஒன்றும் வாங்கி வைக்கவும் இல்லை. அவளுக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். மூத்தவன் மகன். சின்னவள் பிறந்து ஒன்பது மாதங்கள். அவர்களை இதுவரை அவள் பார்த்ததில்லை.

நேராகப் புறப்பட்டுப் புதுக்குடியிருப்புச் சந்திக்குச் சென்று, சின்னவனுக்கு விளையாடப் பஸில் வாங்கினாள். குழந்தைக்கு இரண்டு குட்டிச் சட்டைகளும், விளையாட பொம்மையும், கொஞ்சம் பழங்களும் வாங்கிக்கொண்டு அவர்கள் வீட்டுக்கு ஸ்கூட்டியை விட்டாள்.

அவர்களது அரசியல் குடும்பம் என்பதில் முன்னரும் வாசலில் காவலாளி நிற்பார்தான். பழைய காவலாளிக்கு இவளைத் தெரியும். இப்போது நின்றவர் புதியவர். அவள் தன்னை வினோதினியின் நண்பி என்று சொல்லியும் உள்ளே விட மறுத்தார். முக்கியமாக அவள் கையில் இருக்கும் பைகளைப் பரிசோதிக்க வேண்டும் என்றார்.

ஏற்கனவே முழு மனத்தோடு வராததாலோ என்னவோ அது அவளை ஏதோ ஒரு வகையில் கோபம் கொள்ள வைத்தது.

அப்போதும் பக்கத்துத் தெருவில்தான் இருக்கிறேன், வினோதினியின் நண்பி, வேண்டுமானால் அவளையே கேளுங்கள் என்று இவள் எத்தனை முறை பொறுமையாகச் சொன்னாலும் அவர் கேட்பதாக இல்லை.

வினோதினியை அழைத்து அங்கு வரச் செய்து, அந்த மனிதரின் முகத்தைக் கறுக்க வைக்க அவளால் முடியும். ஏனோ அது அவளுக்குப் பிடிக்கவில்லை. தன்னைச் சோதனைக்கு உட்படுத்தித்தியோ, அல்லது தான் அவள் நண்பிதான் என்று நிரூபித்தோ அவன் வீட்டுக்குள் போக வேண்டுமானால் அவளுக்குப் போகவே தேவையில்லை என்று நினைத்தாள்.

பேசாமல் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்து அவள் திரும்ப ஆயத்தமாகையில் வந்தான் சகாயன். ஒற்றைப் பார்வையில் சூழ்நிலையை அளந்து, சட்டென்று அவளை மறிப்பது போன்று தன் பைக்கை நகர்த்தி நிறுத்தி, “என்ன?” என்றான் ஒன்றும் புரியாமல்.

“செக் பண்ணித்தான் உள்ளுக்கு விடுவன் எண்டு சொன்னனான் சேர். அதுக்கு மாட்டன் எண்டு சொல்லிப்போட்டுத் திரும்பிப் போறா.” மெல்லிய பயத்துடன் சொன்ன காவலாளியை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கையைக் காட்டினான்.

ஓடிப்போய் கேட்டைத் திறந்துவிட்டார் அவர்.

அவன் சொல்லி அவள் போவதா? தேவையே இல்லை! ஸ்கூட்டியை வெட்டித் திருப்பினாள்.

“அவருக்கு உன்னத் தெரியாதெல்லா.” என்றான் அவன் சமாதானமாக.

அவன் ஒருவன் நிற்கிறான் என்றே நிமிர்ந்தும் பாராதவள் அவன் சொன்னதையா கேட்கப்போகிறாள். அவள் புறப்பட அதைத் தடுத்துக்கொண்டே, “உள்ளுக்குப் போ ஆரு!” என்றான் திரும்பவும்.

ஆருவாம்! என்ன உரிமையில் அவள் பெயரைச் சுருக்கி அழைக்கிறான்? அவள் முகத்தில் சினமும் சீற்றமும். இன்னும் வேகமாக அவனைச் சுற்றிக்கொண்டு போக முயன்றாள்.

அவனும் முன்னாலும் பின்னாலும் பைக்கை நகர்த்தி அவளைப் போகவிடாமல் செய்ய, பேசாமல் அங்கேயே ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறங்கி, விறுவிறு என்று நடக்கத் தொடங்கினாள் ஆரபி.

ஒரு கணம் கண்களை இறுக்கி மூடித் திறந்துவிட்டு வினோதினிக்கு அழைத்து நடந்ததைச் சொன்னான் சகாயன். உடனேயே வினோதினி ஆரபிக்கு அழைத்தாள். இவள் ஏற்கவேயில்லை என்றதும் இருந்த வீட்டுடையிலேயே தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வந்து இவளைப் பிடித்தாள்.

“அவர் விடாட்டி எனக்குச் சொல்ல மாட்டியா லூசு! பெரிய இவள் மாதிரி கோவிச்சுக்கொண்டு வாறாய்!”

“அப்பிடி உனக்குச் சொல்லி, என்னை நிரூபிச்சு வரோணும் மாதிரி இருக்கேல்ல வினு.”

பட்டென்று சொன்னவள் பேச்சில் வினோதினிக்கு முகம் இலேசாக மாறிப்போயிற்று.

“என்னடி இப்பிடி எல்லாம் கதைக்கிறாய்? அந்தளவுக்கு நான் முக்கியம் இல்லையா உனக்கு?” என்றாள் மனத்தாங்கலாக.

இப்போது ஆரபிக்குமே ஒரு மாதிரியாகிற்று. “சொறி வினு. உன்னைக் காயப்படுத்த நினைக்கேல்ல. ஆனா…” என்றவளுக்குச் சரியில்லாமல் போய்விட்ட தன் மனநிலையை அவளிடம் விளக்கவும் முடியவில்லை.

வினோதினி சட்டென்று சமாளித்துக்கொண்டாள். அவள் மனத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று எப்போதோ அவளுக்குத் தெரியும். இல்லாமல் இத்தனை வருடங்களாக விலகி இருந்திருக்க மாட்டாள். இது அவளும் இல்லை.

அதுதான் இப்போதும் அவளை இப்படிக் கதைக்க வைக்கிறது என்று விளங்கிற்று. கூடவே தன் தமையனுக்கும் அவளுக்கும்தான் ஏதோ பிரச்சனை என்றும் புரிந்தது. இல்லாமல் அவன் சொல்லியும் கேளாமல் இப்படி வரமாட்டாள்.

தற்போதைக்கு அதைப் பற்றிப் பேசாமல், “சரி விடு. உனக்காக ஆசையா சமைச்சு வச்சிருக்கிறன் வா. என்ர செல்லமெல்லா, உனக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கி வச்சிருக்கிறனடி.” என்று அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்துக்கொண்டு சென்றாள்.

காவலாளி இவளைக் கண்டதும் ஓடி வந்து மன்னிப்பை வேண்டி, இனி இப்படி நடக்கமாட்டேன் என்று சொன்னார். அது அவன் வேலை என்று புரிந்தது. சகாயன், வினோதினியின் அன்னை கலைமகள் மலர்ந்த முகத்துடன் வாசலுக்கே வந்து வரவேற்றார்.

அவருக்கும் தன் வீட்டில் இன்னொரு பெண்ணைப் போன்று இருந்தவளை இத்தனை நாள்களுக்குப் பிறகு பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. வினோதினியோடு ஏதும் சண்டையா என்று விசாரித்தார்.

அவளுக்குச் சங்கடமாகப் போயிற்று. விலகி இருக்கையில் தெரியவில்லை. அதுதான் சரி என்றும் நினைத்தாள். ஆனால், அவர்களை எதிர்கொள்கையில், அதுவும் வயதில் பெரியவர் வாஞ்சையுடன் கேட்கையில் மிகவுமே ஒரு மாதிரி இருந்தது. என்னவோ தவறு செய்துவிட்டவள் போன்று தடுமாறினாள்.

“விடுங்கம்மா. பிறகு திரும்பவும் கோவிச்சுக்கொண்டு போயிடுவாள்.” என்ற வினோதினியை முறைத்தாள்.

“என்ன முறைப்பு? குழந்தைப்பிள்ளை மாதிரி கோவிச்சுக்கொண்டு போயிற்று கோவம் வேற வருது உனக்கு. வா!” என்று சமையலறைக்கே நேராக அழைத்துப்போனாள்.

அவர்கள் வீடு பெரிய மாற்றமில்லாமல் அப்படியேதான் இருந்தது. அவளால்தான் முன்னர் போன்று இயல்பாக இருக்க முடியவில்லை. முன்னர் எல்லாம் சகாயனின் அறை, பெரியவர்களின் அறை தவிர்த்து அந்த வீட்டில் மிகுதி இடங்களுக்கு எல்லாம் வெகு இயல்பாகப் போய்வருவாள். ஆனால் இன்று?

அவன் பைக் வெளியே நின்றிருந்தது. அவனைக் காணவில்லை. ஆனாலும் எங்கோ ஒரு மூலையிலிருந்து அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்கிற உணர்வு அவளை இயல்பாக இருக்க விடாமல் செய்தது.

வினோதினியின் பிள்ளைகளோடு கூட அவளால் விளையாட முடியவில்லை.

வினோதினி பழைய மாதிரியே ஊர்க் கதைகளை எல்லாம் வளவளவென்று அளந்தாள். “முதல் அவாக்கு ஏதாவது குடிக்க குடு பிள்ளை.” என்று கலைமகள் சொன்ன பிறகுதான் குடிக்கவே தந்தாள். அந்தளவில் அவளுக்குச் சொல்வதற்கு நிறைய இருந்தன.

அவள் சின்னவள் சினுங்க ஆரம்பித்தாள். குழந்தைக்கு என்றே மசியலாக வைத்திருந்த உணவை வினோதினி ஊட்ட வெளிக்கிட, “என்னட்டத் தா!” என்று வாங்கி, தன் மடியில் குழந்தையை வைத்துத் தானே ஊட்டினாள் ஆரபி.

“அபி அக்கான்ர மகனைக் கவனிச்சுப் பழக்கம்போல உனக்கு.” அவள் இலாவகமாகக் குழந்தைக்கு உணவூட்டுவதைக் கவனித்துவிட்டு வினவினாள் வினோதினி.

“கிடைக்கிற லீவுக்கு எல்லாம் அங்க ஓடிடுவன். கிருத்திக்கும் நான் இருந்தா போதும்.”

“பிறகு ஏனடி ஊருக்கு வராமையே இருந்தனி?” என்ற அவளின் திடீர் கேள்வியில் அதிர்ந்து நிமிர்ந்தாள் ஆரபி.

“அண்ணாவோட ஏதும் பிரச்சினையாடி?”

“வினு.”

“இல்லாம அண்ணா சொல்லியும் கேக்காம கோவிச்சுக்கொண்டு போகமாட்டாய். இப்ப வரைக்கும் அண்ணாவும் வந்து உன்னோட கதைக்கேல்ல. நீயும் அவரைப் பற்றி ஒரு வார்த்த கேக்கேல்ல.” என்றவளிடம் என்ன சொல்லுவாள்?

“முந்தி எல்லாம் அவரைப் பற்றித் திட்டிக்கொண்டே இருப்பாய். நினைவிருக்கா? ஆனாலும் அண்ணா ஒண்டு சொன்னா செய்யாம இருக்க மாட்டாய். ஆனா இப்ப…” என்றவளின் தொடர் கேள்விகளில் ஆரபிக்குக் கண்கள் கரித்துக்கொண்டு வந்தன.

சட்டென்று மடியில் இருக்கும் சின்னவளுக்கு உணவூட்டுவது போன்று தலையைக் குனிந்துகொண்டாள்.

“உங்களுக்க என்ன நடந்தது, இல்ல என்ன நடக்குது எண்டு எனக்குத் தெரியேல்ல. ஆனா எண்டைக்கும், என்ன பிரச்சினை எண்டாலும் உன்ர ஃபிரெண்ட் நான் இருக்கிறன் எண்டுறத மறந்திடாத.” அவள் பதிலை எதிர்பாராமல் தன் நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொன்னாள் வினோதினி.

error: Alert: Content selection is disabled!!