இணைபிரியா நிலை பெறவே – நிதனிபிரபு
அத்தியாயம் 1
ஆரபிக்குப் பயணங்கள் என்றால் மிக மிகப் பிடிக்கும். அதுவும் இந்த மூன்று வருடங்களும் அவள் செய்த பயணங்களை அவளாலேயே எண்ண முடியாது. ஒரு நாள் கிடைத்தால் கூடப் போதும். பேசாமல் பேருந்தில் ஏறி அமர்ந்துவிடுவாள்.
போகுமிடம் புருவங்களை உயர்த்திப் பார்க்கும் இடங்களாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க மாட்டாள். உடைந்துகிடக்கிற ஒரு பழைய வீடாக இருந்தால் கூட அவளுக்குப் போதும்.
அங்கே சென்று அமர்ந்துகொண்டு, இந்த வீட்டிலும் ஒரு குடும்பம் ஆனந்தமாக வாழ்ந்திருப்பார்கள், இதைக் கட்டும்போது வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிக் கட்டியிருப்பார்கள், குடிவந்த பிறகு ஒரு குழந்தையைக் கவனிப்பதுபோல் பார்த்து பார்த்துக் கவனித்திருப்பார்கள் என்றெல்லாம் யோசிப்பாள்.
கூடவே, இன்று கூரைகள் இல்லாமல், சுவர்கள் சிதிலமடைந்து, பற்றைகள் வீட்டுக்குள் வளர்ந்து, அனாதரவாகக் காட்சியளிப்பதைக் காண்கையில் இவளுக்கே ஊமைக் காயமாக ஏதோ ஒரு வலி நமநமக்கும்.
இன்று இந்த நிலையில் இருப்பதை அன்று இந்த வீட்டை ஆசையாசையாகக் கட்டிய மனிதர் பார்த்தால் எந்தளவில் துடித்துப்போவார் என்றெல்லாம் அவள் சிந்தனை ஓடும்.
அப்படிப் பார்க்கையில் இறப்புகள் கூட ஒருவகை விடுதலை என்பது எத்தனை உண்மை என்றெல்லாம் அவைகளுக்குள் ஓடும்.
அவளைத் தனிமை விரும்பி என்று சொல்வதைக் காட்டிலும் அமைதி விரும்பி என்று சொல்லலாம். அளவான நண்பர்கள். அவர்களோடு அளவான நட்பு. எல்லோரையும் அனுசரித்தே போவாள். பெரிதளவில் கோபப்படுவதில்லை.
அதே நேரத்தில் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவள். மிகுந்த நுண்ணுணர்வுகள் கொண்டவள். இலகுவில் காயப்பட்டுவிடுவாள். என்ன, அதை வெளியில் காட்டிக்கொள்ள மாட்டாள். அதனாலேயே யாரோடும் அளவுக்கதிகமாக உறவு கொண்டாடி, காயப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பாள்.
இன்றும் ஒரு பயணத்திற்காகத்தான் தயாராகிக்கொண்டிருக்கிறாள். அவள் தமையனுக்குத் திருமணம். பிறகு எப்படிப் போகாமல் இருப்பது?
அவள் தமக்கை அபிசா திருமணமாகி கொழும்பில் கணவனோடு வசிக்கிறாள். கிருத்திகன் என்று நான்கு வயதில் மகனும் உண்டு.
அம்மா, அப்பா, அண்ணா மூவரும் சின்னவனைப் பார்க்க என்று அடிக்கடி கொழும்பு வருவதால் அந்த நேரங்களில் அவளும் கொழும்பு சென்று எல்லோருடனும் இருந்துவிட்டு வந்துவிடுவாள்.
ஊருக்கு வந்துவிட்டுப் போ என்று பெற்றவர்கள் வற்புறுத்தாமல் இல்லை. ஆனாலும், அடிக்கடி அவளைப் பார்க்கக் கிடைப்பதால் ஏதோ ஒன்றைச் சொல்லி இவ்வளவு காலமும் சமாளித்துக்கொண்டாள். பெரிய கேள்விகளும் எழவில்லை.
இந்தமுறை அவர்கள் அழைக்கும் அவசியமே இல்லாமல் புறப்படுகிறாள். அதைவிட சொந்த ஊருக்கு இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் போகாமலேயே இருப்பது?
எல்லாவற்றையும் விட எதையும் தள்ளிப்போடுவதைக் காட்டிலும் சந்தித்துவிட்டால் என்ன என்கிற கேள்வி கொஞ்ச நாள்களாக வர ஆரம்பித்திருந்தது.
மட்டக்களப்பில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். தமையனின் திருமணத்திற்காக அடுத்த இரண்டு வாரங்கள் விடுமுறை எடுத்திருந்தாள்.
கொண்டுபோகும் பயணப்பையில் தேவையானவற்றை எல்லாம் வைத்து, சிப்பையும் இழுத்து மூடிவிட்டு நிமிர்ந்து, என்னவோ போருக்குத் தயாராகிறவள் போன்று, வாயைக் குவித்துக் காற்றை ஊதி வெளியேற்றிவிட்டுப் புறப்பட்டுவிட்டாள்.
ஏசி பஸ் தன் ஜன்னலோர இருக்கை ஒன்றை அவளுக்குப் பரிசளித்து மகிழ்ந்துகொண்டது. இயர்போன்களை காதுகளில் கொழுவி, பாட்டினை ஒலிக்கவிட்டாள். ஆனால் என்ன, அத்தனை பாடல்களும் அவள் நினைக்கக் கூடாது என்று நினைக்கிற அவனையும் அவளையும் இணைத்துவைத்தே அழகு பார்த்தன.
அதையெல்லாம் வெறுத்தபடியே விரும்பினாள். இந்த நினைவுகள் எல்லாம் வேண்டாம் என்று சொல்லியபடியே மறக்காதிருந்தாள்.
இந்தளவில் அவளை அலைக்கழிப்பவனை இந்த மூன்று வருடங்களும் அவள் பார்க்கத்தான் இல்லையே தவிர்த்து, அவன் பற்றிய செய்திகள் அவள் காதில் விழாமல் இல்லை. அன்றைக்கு விடவும் இன்றைக்கு இன்னுமே பொல்லாதவனாகிவிட்டானாம். மூர்க்கன், முரடன் என்று அவனுக்குப் பல பெயர்கள். அதையெல்லாம் கேட்கிற பொழுதுகளில் வலிக்காமல் இல்லை. ஆனால் தாங்கிக்கொண்டாள். வேறு என்னதான் செய்வது?
அவன் தங்கையும் இவளும் ஒன்றாகப் படித்தவர்கள். போதாக்குறைக்கு இவர்களின் சொந்த இடமான மன்னார், புதுக்குடியிருப்பின் சாரணர் இயக்கத்தில் அவனும் அவளும் இருந்திருக்கிறார்கள்.
அதுவும் அவளை விடவும் ஐந்து வயது பெரியவனான அவன் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமிடத்தில் இருந்தவள் அவள். அவன் எழுதவேண்டிய நோட்ஸ் அனைத்தையும் இவள் தலையிலேயே கட்டிவிடுவான்.
அப்படியானவன் மீது எப்படிக் காதல் வந்தது? நற்பண்பு கொண்டவன் மீது, நம்மை மதிப்பவன் மீது, நமக்காகவும் யோசிப்பவன் மீதுதானே காதல் வரும். இவளுக்கு மட்டும் ஏன் அவன் மீது வந்தது?
இந்தப் பயணம் இத்தனை காலமும் அவள் செய்த சாதாரணப் பயணங்கள்போல் இருக்கும் என்று அவள் நினைக்கவில்லை.
தவிர்க்கவே முடியாத சந்திப்புகள் நிகழும். அதை எதிர்கொள்ள வேண்டும். எதிர்கொண்டு எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று காட்ட வேண்டும்.
கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கும் மேலான பயணம். தனக்குள் போராடியபடியே கடந்தாள். அவளை அழைத்துப்போக ஆனந்தன் வந்திருந்தான். அவளை விடவும் இரண்டு வயதுகள் மாத்திரமே பெரியவன். அதில் பெயர் சொல்லிக் கூப்பிடுவதில் ஆரம்பித்து அடேய் வரையிலும் அவள் வாயில் சர்வசாதாரணமாக வந்துபோகும்.
மலர்ந்து விகசித்த முகத்துடன் வந்து அவளின் பயணப்பையை வாங்கிக்கொண்டவனைக் கண்டு, “என்னடா அண்ணா, இப்பவே கலியாணக் களை வந்திட்டுது போல இருக்கு.” என்றாள் சிரிப்புடன்.
சிறிதாகக் கூச்சப்பட்டு வெட்கப்பட்டான் அவள் தமையன். அதைத் தன் சிரிப்பில் மறைத்துக்கொண்டு, “இஞ்ச பார், இனியும் சும்மா சும்மா இந்த டா போடுறது, பெயர் சொல்லுற வேலை எல்லாம் வச்சிருக்கிறேல்ல சொல்லிப்போட்டன். அண்ணா எண்டு மரியாதை தந்து கதை. நாளைக்குப் பிள்ளை குட்டி எண்டு நாங்களும் ஊருக்க பெரிய மனுசர் ஆகப்போறம்.” என்றான் அவன் அலட்டலாக.
“அதுக்கு நீ வேற தங்கச்சிக்கு அண்ணாவா பிறந்திருக்கோணும். எனக்கு இல்ல. வந்திட்டான் பிள்ளை பெறுறது எல்லாம் பெரிய மனுசத்தனம் எண்டு சொல்லிக்கொண்டு.” என்று ஹெல்மெட் போட்டிருந்த அவன் தலையில் கொட்டினாள்.
“உனக்குப் பொறாமை. உனக்கு முதல் எனக்குக் கலியாணம் நடக்குது எண்டு.”
“அறிவடா அண்ணா நீ.” அண்ணனும் தங்கையும் விளையாட்டுக்குப் பிடுங்குப்பட்டுக்கொண்டே பேருந்து நிலையத்திலிருந்து புதுக்குடியிருப்பை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தனர்.
“ஆனந்தா நிப்பாட்டு. அந்த ஐயாட்ட ஒரு இளநி வாங்கித் தா!” வீதியோரமாக இருந்த மர நிழலின் கீழ் நின்று, இளநீர் விற்றுக்கொண்டிருந்தவரைக் காட்டிச் சொன்னாள் ஆரபி.
நிழலில் கொண்டுபோய் பைக்கை நிறுத்திவிட்டு இரண்டு இளநீருக்குச் சொன்னான் ஆனந்தன்.
அந்த ஐயாவும் இளநீரைச் சீவி, பேப்பர் கோப்பைகளுக்குள் ஊற்றி, அதனோடு ஊறவைத்த கசகசா கொஞ்சம், வழுக்கை, ஐஸ் கட்டித் துண்டுகள் எல்லாம் போட்டுத் தந்தார்.
எரித்துக்கொண்டிருந்த வெய்யிலுக்கு இவர்களின் தொண்டைக்குள் சில்லென்று இறங்கிற்று இளநீர்.
திடீரென்று பளார் என்று கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.
யாரோ இருவரை நடு வீதியில் போட்டு அடித்துக்கொண்டிருந்தான் சகாயன். வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்தான். சட்டையின் கைகள் முழங்கை வரை மடித்துவிடப்பட்டிருக்க, வேட்டியை மடித்துக் கட்டியிருந்தான்.
ஒருவனின் தலையைப் பிடித்து நிலம் நோக்கி அழுத்திக்கொண்டே, அவன் நடு முதுகில் ஓங்கிப் போட்ட ஒற்றை அடியில் இவளுக்கு முதுகுத் தண்டு சில்லிட்டுப்போனது.
அவனைப் பார்க்கும் சூழ்நிலை அமையும் என்று தெரிந்தாலும் இப்படிப் பார்ப்போம் என்று ஆரபி எதிர்பார்க்கவே இல்லை. அவனும் இவளைப் பார்த்தான். பார்த்தபடியே திரும்பவும் அந்த அவனைப் போட்டுப் பிளந்துகட்டினான்.
இவள்தான் நடுங்கிப்போய்க் கண்களை இறுக்கி மூடிக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள். நெஞ்சம் அவனின் ஒவ்வொரு அடியையும் போலவே டமார் டமார் என்று அடித்துக்கொண்டது.
“அண்ணா போவம்!” என்றாள் எழும்பாத குரலில் நடுங்கியபடி.
ஆனந்தனுக்கும் முகம் மாறிப்போனது. அந்த இடத்தில் தங்கையோடு நிற்பது அவனுக்கும் உசிதமாக இல்லை. அந்த ஐயாவுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு அவளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.
சட்டென்று அவர்களின் முன்னால் வந்து நின்று மாறித்தான் சகாயன்.
“எங்க போறாய்?” கேள்வி ஆனந்தனிடம் இருந்தாலும் பார்வை ஆரபியிடம் இருந்தது.
ஆரபி வேகமாக அவனுக்கு எதிர்ப்புறத்தில் முகத்தைத் திருப்பிக்கொள்ள, “வீட்டுக்குத்தான் அண்ணா.” என்றான் ஆனந்தன்.
“இந்தப் பக்கத்தால் போக வேண்டாம். உள் றோட்டால போ.”
“அது ரெண்டு கிலோமீற்றர் சுத்தோணும்.”
“பரவாயில்ல போ!” என்றவன், “பெரிய மனுசி எப்ப வந்தவா?” என்றான் பார்வையால் ஆரபியைக் காட்டி.
“இப்பதான்.”
“திரும்பி எப்ப போறா?”
“என்ர கலியாணம் முடிஞ்சு.”
“அதுதான் எப்ப?”
ஆனந்தனுக்கு நாள் சரியாக நினைவில் இல்லை. அவள் சொல்லியிருந்தாள்தான். இவன்தான் மனத்தில் பதியவைக்கவில்லை. அதில் திரும்பி ஆரபியைக் கேள்வியாகப் பார்த்தன்.
“அண்ணா நீ பைக்கை எடு!” என்றாள் ஆரபி சிடுசிடுப்பாக.
“எடுத்திடுவியோ? எங்க எடு! எடுத்துத்தான் பாரன்!” என்றவன் ஒற்றைக் காலைத் தூக்கி அவன் பைக்கின் முன் டயரில் வைத்து நின்றான்.
அவன் செயல் பிடிக்காமல் அவள் முகம் சுளித்துக்கொண்டது. அதே நேரம் சொல்லாமல் விடமாட்டான் என்று தெரிந்து, “இருபதாம் திகதி.” என்றாள் அவனைப் பாராமல்.
“ஆக, ஒழுங்கா கேட்டா பதில் வராது. கேக்கிற மாதிரிக் கேக்கோணும்.” என்றுவிட்டுக் காலை எடுத்தான் சகாயன்.
அதையே அனுமதியாகக் கொண்டு பைக்கை எடுத்தான் ஆனந்தன். முக்கியமாகக் சகாயன் சொன்ன பாதையிலேயே பைக்கைத் திருப்பினான். கொஞ்ச நேரம் அண்ணன் தங்கை இருவரும் நடந்ததை ஜீரணிக்கிறவர்கள் போன்று அமைதியாகவே பயணித்தார்கள்.
ஆரபியால் கண்ட காட்சியிலிருந்து வெளிவரவே முடியவில்லை. இத்தனை காலமும் காதால் கேட்டவை எல்லாம் உண்மை என்று கண்ணால் கண்டிருக்கிறாளே.
எல்லாம் முடிந்துபோயிற்றுத்தான். ஆனாலும், ஏன் இப்படியாகிப்போனான், ஏன் அவர்களுக்குள் இப்படியெல்லாம் நடந்துபோனது என்கிற வலி அவளைப் போட்டு ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது.
உன்னை நான் கடந்து வந்துவிட்டேன் பார் என்று காட்ட வேண்டும் என்று எண்ணிக்கொண்டுதான் வந்தாள். ஆனால், அது எவ்வளவு அப்பட்டமான பொய் என்று அவள்தான் அறிந்து நிற்கிறாள்.
அவள் கன்னம் வருடிக் காதல் சொன்னவன், அவளுக்கு முன்னாலும் பின்னாலும் திரிந்து அவளையும் காதலிக்க வைத்தவன் ஏன் இந்தளவில் மாறிப்போனான் என்று தனக்குள் அழுதாள்.

