இணைபிரியா நிலை பெறவே 19

அத்தியாயம் 19

இப்படி ஒரு திருப்பத்தை சகாயனே எதிர்பார்க்கவில்லை. அதற்கென்று மகிழவும் முடியவில்லை. இவன் அன்னை இந்தப் பக்கம் வந்ததும் அங்கே அவள் தன் வீட்டினரிடம் மறுத்துச் சொல்லிக்கொண்டிருந்த காட்சியே பதிலைச் சொல்லிற்று.

“என்ன அண்ணா, உனக்கு ஆருவப் பிடிச்சிருக்கா? நீயும் அவளும் எப்ப பாத்தாலும் முட்டிக்கொண்டு இருப்பீங்க. இது சரியா வருமா? உனக்கு ஓகேயா?” என்றாள் வினோ உண்மையான கேள்வியும் சிறு கிண்டலுமாக.

அதற்கு அவனைப் பதில் சொல்லக்கூட விடாமல், “ஆனா ஒண்டு, எதிரும் புதிருமா இருக்கிற ரெண்டு பேருக்குத்தான் நல்லா ஒத்துப்போகுமாம்.” என்றவள் தலையில் பொய்யாகக் குட்டினானே தவிர்த்து எதையும் வாய்விட்டுச் சொன்னான் இல்லை.

“என்ன தம்பி, அவாவக் கேட்டதில குறை ஒண்டும் இல்லையே?” அங்கே கேட்டுவிட்டு வந்து இங்கே வினவினார் கலைமகள்.

“முதல் அவள் என்ன சொல்லுறாள் எண்டு பாப்பம் அம்மா.” பிடி கொடுக்க மறுத்தான் அவன்.

“அப்ப உனக்கு விருப்பம்?” இடையிட்டுச் சொன்னாள் அவன் தங்கை.

கலைமகளுக்கும் அதேதான் ஓடியது. ஆனாலும் ஆரபி வீட்டிலிருந்து எந்தப் பதிலும் வராமல் மகன் மனத்தில் எதையும் பதிக்க விரும்பாதவர், “பேசாம இருங்கோ வினோ. இதாலதான் மனதில இந்த ஆசை இருந்தாலும் இவ்வளவு நாளும் சொல்லாம இருந்தனான். ஆரபி வீட்டில முடிவு சொல்லட்டும். பிறகு பாப்பம்.” என்று முடித்தார்.

கூடவே, “ஃபிரெண்ட் எண்டு ஃபோனை போட்டு ஓம் எண்டு சொல்லு என்று அரியண்டப்படுத்தக் கூடாது. இது விளையாட்டு விசயம் இல்லை. வாழ்க்கை. விருப்பமில்லை எண்டு சொன்னா விட்டுடோணும்.” என்றும் சொன்னார்.

அது சகாயனைச் சுட்டது. அவளிடம் மனத்தைச் சொல்வதற்கு முதல் எந்தளவில் அவளை நெருக்கினான் என்று இன்று நினைக்கையில் மனத்தில் பாரம் ஏறிற்று.

முதலில் கொழும்பு சென்று தமக்கையோடு தங்கியிருந்தவள் அப்படியே மட்டக்களப்பில் வேலை எடுத்துக்கொண்டு போன பிறகு, ஒரு நாள் அவளைப் பார்க்க அவள் அலுவலகத்திற்கு நேரிலேயே சென்றிருந்தான்.

ஆனால் ஆரபி இவனைச் சந்திக்க மறுத்திருந்தாள். அதுவும் அத்தனை காலமும் அவனைத் தடை செய்து வைத்திருந்ததை நீக்கி, “அண்டைக்கே எல்லாத்தையும் முடிச்சுப்போட்டுத்தான் ஊர்ல இருந்து வெளிக்கிட்டு வந்தனான். இனியும் எனக்கு உங்களைப் பாக்கவோ, உங்களோட கதைக்கவோ விருப்பம் இல்லை. இதுக்கு மேலயும் என்னைத் தேடி வந்து தொந்தரவு செய்தா, எங்கட வீட்டுக்கும் எங்க இருக்கிறன் எண்டு சொல்லாம காணாமப் போயிடுவன். அதுதான் விருப்பம் எண்டா தாராளமா வந்து நில்லுங்க!” என்று கோபக்குரலில் அனுப்பியிருந்தாள் அவள்.

பதில் அனுப்பலாம் என்றால் அதற்குள் அவனை மீண்டும் தடை செய்திருந்தாள். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு அங்கே அவள் அலுவலகத்திலேயே ஒரு பேப்பரை வாங்கி,

ஹாய் ஆரு,

உன்னத் தேடி வந்து வெய்ட் பண்ணிக்கொண்டிருந்த இந்த நிமிசம் வரைக்கும் உன்னட்ட என்ன சொல்லப்போறன், எந்த முகத்தை வச்சுக்கொண்டு மன்னிப்புக் கேக்கப்போறன், கொஞ்சம் கூட நியாயமே இல்லாத என்ர நடத்தைக்கு என்ன விளக்கம் சொல்லப்போறன் எண்டு எனக்குத் தெரியவே இல்ல. ஆனாலும் உன்னைப் பாக்கோணும், உன்னோட எப்பிடியாவது கதைக்கோணும், உன்னட்ட மன்னிப்புக் கேக்கோணும், உன்னோட சமாதானம் ஆகிடோணும் எண்டுதான் அங்க இருந்து மெனக்கெட்டு இஞ்ச வந்தனான்.

எல்லாத்தையும் முடிச்சுப்போட்டு வந்திருக்கிறதா சொல்லுறாய். என்னால அப்பிடி எதையும் முடிக்கேலாது ஆரு. காலத்துக்கும் எனக்கு நீதான். எனக்கு வாழ்க்கை எண்டு ஒண்டு அமைஞ்சா அது உன்னோட மட்டும்தான். உன்ர கோபம் ஆறி, நீ வாற வரைக்கும் வெய்ட் பண்ணிக்கொண்டு இருப்பன். முடிஞ்சா என்னை மன்னிச்சுடு. அண்டைக்கு அப்பிடி நான் நடந்திருக்கவே கூடாது. நான் வெக்கப்பட்டுத் தலை குனியிற நாள் அது.

உண்மையா சொறி. முதல் தரம் என்னை நீ சிகரெட்டோட பாத்த நேரம், இப்பிடி அவளுக்கு முன்னால நிண்டுட்டனே எண்டு வெக்கப்பட்டிருக்கிறன். அதே நான், வேணுமெண்டே உனக்கு முன்னால நிண்டு அதப் பத்தி இருக்கிறன். உன்னை நான் கேவலப்படுத்தேல்ல. என்ன நானே தரமிறக்கிக் காட்டி இருக்கிறன். அதுக்கான தண்டனையா இந்தப் பிரிவை எடுக்கிறன்.

கடவுள் சத்தியமா சொறியடி. தேவையில்லாம நிறையக் கதைச்சு, உன்னை உடம்பாலயும் மனதாலயும் நோகடிச்சு, நீ சொன்ன மாதிரியே கிரிக்கு முன்னால உன்னை விட்டுக்குடுத்து எண்டு அண்டைக்கு நான் செய்தது எதுவுமே மன்னிக்கிற மாதிரியான விசயங்கள் இல்லைதான்.

ஆனா, எப்பவுமே எங்கட காதலுக்காக, எங்கட அந்த உறவு நிலைக்கிறதுக்காக நான் மட்டுமே எல்லாத்தையும் செய்ற மாதிரியான ஒரு எண்ணம் எனக்கு எப்பவுமே இருந்திருக்கு. என்னவோ எல்லாத்துக்கும் என்னை நீ அலைய விடுற மாதிரி, உனக்கு நான் பொருட்டே இல்லையோ எண்டுற மாதிரி என்னை உணர வச்சிருக்கிறாய்.

வினோன்ர கலியாணத்திலயும் என்னைப் பாக்கிற சந்தர்ப்பம் அமைஞ்சதால வந்து கதைச்சாய். இல்லாட்டி? பேசாமத்தானே இருந்திருப்பாய். அந்தளவுக்கு நான் என்ன உனக்குப் பத்தோட பதினொண்டா எண்டுற எண்ணம் வரும்.

அதுக்காக நான் நடந்துகொண்ட முறை சரி எண்டு சொல்லேல்ல. அதுவும் கிரிக்கு முன்னால… இப்ப நான் அவனோடயும் கதைக்கிறேல்ல. ஆனா எனக்கு அவனில கோவம் இல்ல. என்னிலதான் கோவம். நான் சரியா இருந்திருந்தா எல்லாம் சரியா இருந்திருக்கும்.

ஆனா செய்த இந்தப் பிழைகளுக்காக உன்னை விட்டுட்டுப் போயிடுவன் எண்டு மட்டும் நினைக்காத. எனக்கு நீதான். என்னோட கதை ஆரு. என்னோட சண்டை பிடி, ஏனடா இப்பிடிச் செய்தனி எண்டு சட்டையப் பிடிச்சுக் கேளு. ஆனா விலகி நிக்காத.

நாங்க காதலிச்ச காலத்தை விடக் கதைக்காம இருந்த காலம்தான் நிறையவா இருக்கு. அந்த இடைவெளியக் கூட நானா வந்து சரியாக்கினாத்தான் உண்டு. இல்லாட்டி நீ அப்பிடியே விட்டுடுவியா எண்டுற கேள்விதான் என்னைப் போட்டு எப்பவும் தின்னும்.

என்னால அதைத்தான் ஏற்றுக்கொள்ளவே முடியிறேல்ல. ரெண்டு பேர் சம்மந்தப்பட்ட உறவுல, அந்த உறவு நிலைக்கிறதுக்கான முயற்சில ரெண்டு பேரும்தானே இறங்கோணும். எனக்கு வாழ்க்கை முழுக்க நீ வேணும் எண்டு நினைச்சு நான் காதலைச் சொன்ன மாதிரி, உனக்கு காலம் முழுக்க நான் வேணும் எண்டு நினைச்சுத்தானே நீயும் ஓம் எண்டு சொன்னனீ. அந்தக் காதலுக்காக, நான் உனக்கு வேணும் எண்டுறதுக்காக நீ என்ன செய்திருக்கிறாய் எண்டு யோசிச்சா எதுவுமே இல்ல. என்ன நடந்தாலும், அது என்ர பக்கம் பிழையாவே இருந்தாலும் ஒவ்வொரு முறையும் நானாத்தான் எங்கட உறவுக்காக போராடவேண்டி இருக்கு.
அந்தளவுக்கு உனக்கு நான் பொருட்டில்லையோ எண்டுற கோவம்தான் இது எல்லாத்துக்கும் அடித்தளம்.

இந்த முறையாவது நீயா என்னட்ட வா ஆரு. வந்து சண்டை பிடி. எப்பிடியடா அப்பிடி என்னட்ட நடப்பாய் எண்டு கேளு. பிடிக்கிற சண்டை கூட உனக்கு நான் வேணும் எண்டுறதை எனக்குச் சொல்ல வேணாமா?

வேற என்ன சொல்லுறது எண்டு தெரியேல்ல. நடந்த எல்லாத்துக்கும் சொறி. நீயா என்னட்ட வருவாய் எண்டுற நம்பிக்கையோட போறன். இனி நான் வர மாட்டன்.

சகாயன்

என்று எழுதி, ஒரு அன்வெலப் கவர் வாங்கி, அதில் போட்டு ஒட்டி, அங்கிருந்த பெண்ணிடம் கொடுத்து அனுப்பிவிட்டு வந்துவிட்டான்.

சொன்னதுபோல் அதன் பிறகு அவன் அவளைத் தேடிக்கொண்டு போகவில்லை. இது அவள் ஊரை விட்டுப் போன முதல் ஆறு மாதங்களுக்குள் நடந்தது. அதன் பிறகான அந்த இரண்டரை வருடங்களும் அவளுக்காகக் காத்திருந்து காத்திருந்தே கரைந்துபோனதே தவிர அவள் வரவேயில்லை.

உண்மையிலேயே பெரும் ஏமாற்றம் அது அவனுக்கு. ஒரு விதமான வலி அவனுள் நிரந்தரமாயிற்று. புறக்கணிப்பு ஒரு எளிய மனிதனைக் கூட பலமாய்த் தாக்கும். சகாயனைப் போன்ற ஒருவனை? வெளியில் காட்டிக்கொண்டது இல்லையே தவிர்த்துத் தனக்குள் மொத்தமாக இறுகிப்போனான்.

அப்படியானால் நீ சொல்வதை எல்லாம் கேட்டு, உனக்கு ஏற்றாற்போல் வளைந்துகொடுத்து நான் போனால் மட்டுமேதான் நம் உறவு நிலைக்குமா? தவறு ஒன்று நடந்தால் பேசித் தீர்க்கவோ, சண்டை பிடித்துச் சமாதானம் ஆகவோ வரமாட்டாய். மொத்தமாக வெட்டிக்கொண்டு நின்றுவிடுவாள் என்றால் என்ன இது?

நாளடைவில் தான் நடந்துகொண்ட செயலின் வீரியம் குறைந்துபோய், எப்போதுமே நான் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை என்கிற விடயம் அவனுள் பெரிதாக வளர ஆரம்பித்திருந்தது.

எப்போதுமே அவனைத் தூக்கி எறிவது அவளுக்கு சிரமமாகவே இருந்ததில்லையே. இந்தமுறையும் அதையேதான் செய்வாள் என்று அவன் எதிர்பார்த்திருக்க, அவள் அவன் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கவில்லை.

அவள் மறுபடியும் மட்டக்களப்புக்குப் புறப்படுவதாகச் சொன்ன நாளுக்கு முதல் நாள், நவரத்தினத்தை நேரிலேயே வந்து பார்த்தார் செந்தில்குமரன். அவள் அவனை அந்த நோக்கில் பார்த்தது இல்லையாம் என்று அவர் சொன்னபோது, கலைகள் நவரத்தினத்துக்கு என்ன சொல்வது என்று தெரியாது போயிற்று.

நண்பியின் தமையனைச் சகோதரனாகப் பார்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாயிற்றே. அப்படி நினைத்துவிட்டாள் போலும் என்று எண்ணிக்கொண்டனர். வேறு என்ன சொல்லியிருந்தாலும் பேசிப் பார்த்திருப்பார்கள். சகோதரனுக்கு ஒப்பாகப் பார்த்திருக்கிறாள் என்கிற பொருளில் அவர்களுக்கு அது வந்து சேர்ந்துவிட்டதில் சரி என்று கேட்டுக்கொள்வதைத் தவிர்த்து வேறு வழியில்லாது போயிற்று.

வினோதினிக்கும் கவலைதான். ஆனால், சகோதரனாகப் பார்த்தேன் என்கிறவளிடம் அவளால் எதையும் பேச முடியாதே.

இதைக் கேட்ட சகாயன் உள்ளத்தில் அக்கினிதான் கொழுந்துவிட்டு எரிந்தது. வேறு எதைச் சொல்லியிருந்தாலும் அடுத்தது என்ன என்று யோசித்திருப்பான் போலும். இது என்ன விதமான பேச்சு. தன்னை முற்றிலுமாக மறுப்பதற்காக அப்படிச் சொல்லியிருக்கிறாள் என்று புரிந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கிரியுமே இதை எதிர்பார்க்கவில்லை. “எல்லாம் என்னால என்னடா?” என்றான் ஒரு மாதிரியான குரலில். “இந்த முறையாவது நான் வாய வச்சுக்கொண்டு இருந்திருக்கலாம். ஒவ்வொரு முறையும் என்ர கோவத்தால நான்தான் உனக்கு பிரச்சினையா வந்து நிக்கிறன் என்ன?”

“நீயும் ஒரு காரணமே தவிர நீ மட்டுமே காரணம் இல்ல கிரி. முக்கிய காரணம் நான்தான். ஆனா…” என்றவனுக்கு இப்போதெல்லாம் தன் மனத்தின் அழுத்தங்களை நண்பனிடம் கூடப் பகிர முடிவதில்லை.

இந்தப் பேச்சு கிரியின் வீட்டில் வைத்துத்தான் நடந்தது. சகாயன் புறப்பட்ட பிறகும் நிறைய நேரம் இருந்த இடத்தை விட்டு கிரி அசையவேயில்லை.

சகாயன் அப்படி இல்லை என்று சொன்னாலும் இன்று அவன் அனுபவிக்கிற அத்தனை துன்பங்களுக்கும் பெரும் காரணம் தான் என்றே நம்பினான். அப்படி இருக்க அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைப்பதற்காகத் தானும் ஏதாவது ஒரு வகையில் முயன்று பார்க்க வேண்டும் என்று எண்ணியவன் கலைமகளைத் தனியாக வந்து பார்த்தான்.

சகாயன் ஆரபி உறவைப் பற்றிச் சொல்லி, இத்தனை வருடங்களும் அவள் ஊர்ப் பக்கமே வராமல் இருந்தது ஏன் என்றும் சொல்லி, தான் செய்தவற்றையும் மறைக்காது அவன் சொன்னபோது கலைமகள் அதிர்வின் உச்சத்திற்கே போய்விட்டார்.

error: Alert: Content selection is disabled!!