இணைபிரியா நிலை பெறவே 2 – 2

தெருவோரமாகவே பிள்ளையாருக்கு முன்னால் பொங்கல் வைத்து, படைத்து, சுவாமி கும்பிட்ட பிறகு, அந்த வீதியில் போய் வருகிறவர்களுக்கும் பொங்கல் கொடுத்தார்கள்.

ஒரு ஐயாவுக்கு வாழை இலைத் துண்டு ஒன்றில் புக்கையைப் போட்டு, இரு கைகளாலும் நீட்டிய ஆரபியின் முதுகில் சுளீர் என்று ஒரு அடி விழுந்தது.

எதிர்பாராமல் நடந்த சம்பவத்தில் கையில் இருந்த புக்கையைக் கீழே போட்டுவிடப் பார்த்தவள், “அம்மா!” என்று அலறியபடி திரும்பினாள்.

அங்கே, பிள்ளையார் முன்னே பத்திரகாளியாக நின்றிருந்தாள் வினோதினி.

“எருமை! இப்பிடியாடி அடிப்பாய்? சுள் எண்டு இருக்கு.” என்று முதுகை வளைத்தவளுக்குப் பின் பக்கமாகக் கையைக் கொண்டுபோய் முதுகைத் தடவிக்கொடுக்கக் கூட முடியவில்லை.

“ரோட்டா போச்சு. அதால இதோட விடுறன். இல்லையோ முதுகுத் தோளை உரிச்சிருப்பன். திரும்பு!” என்று திட்டியபடியே அவளைப் பிடித்துத் திருப்பி, முதுகைத் தேய்த்துவிட்டாள் வினோதினி.

பார்த்திருந்த இரு வீட்டினர் முகத்திலும் முறுவல். “மகளின்ர பெஸ்ட் ஃபிரெண்ட். அங்க எங்களுக்குப் பக்கத்திலதான் இருக்கினம். நவரத்தினம் ஐயாவ தெரியும் எல்லோ. அவரின்ர மகள்.” என்று சம்மந்தி வீட்டினருக்கு அவளைக் குறித்துச் சொன்னார் மங்கையற்கரசி.

ஒரு பக்கம் முதுகைத் தேய்த்துவிட்டாலும், “என்னத்துக்கடி இவ்வளவு நாளும் கதைக்காம இருந்தனி? எத்தின நாள் கோல் பண்ணியிருப்பன். அங்க அகிரா, ரமா எல்லாரோடயும் கதைக்கத் தெரிஞ்ச உனக்கு, என்னோட கதைக்க நேரமில்லை என்ன?” என்று மூச்சுப் பிடித்துப் பொங்கிக்கொண்டிருந்தாள் வினோதினி.

“நேரம் இல்லையடி.” என்று இவள் சொல்லிமுடிக்க முதலே தடவிய கையாலேயே இன்னுமொன்று போட்டாள் வினோதினி.

“நீ தடவவே வேணாம், விடடி!” என்று நகர்ந்தவளை விடாமல் பற்றித் திரும்பவும் தேய்த்துவிட்டபடி, “இப்பவே வா வீட்டுக்கு.” என்று நின்றாள் அவள்.

“இப்ப எப்பிடியடி, அண்ணியாக்கள் நிக்கினம்.”

“அப்ப நாளைக்கு வாறியோ? உனக்குப் பிடிச்ச கருவாட்டுக் குழம்பு வைக்கிறன். அண்ணா நேற்றுத்தான் கருவாட்டுச் சந்தைல போய் வாங்கிக்கொண்டு வந்தவன்.”

அந்த அண்ணாதான் இத்தனைக்கும் காரணம். உள்ளே உள்ளம் இறுக, “நேரமில்ல வினு. கலியாண வேல ஓராயிரம் கிடக்கு.” என்றவள் வேகமாக அவளிடமிருந்து நகர்ந்து நின்றுகொண்டாள்.

இவளை முறைத்துவிட்டு, “அன்ட்ரி, ஒரு கொஞ்ச நேரம் எங்கட வீட்டுக்கு இவளை விடமாட்டீங்களா? இத்தின வருசமா ஊர்ப்பக்கம் வரவே இல்ல. என்னோட கதைக்கவும் இல்ல. சாப்பாட்டுக்கு வாடி எண்டு கூப்பிட்டா ஆகத்தான் லெவல் காட்டிக்கொண்டு நிக்கிறாள். விடுங்க அன்ட்ரி ப்ளீஸ். பிறகு ஹெல்ப்புக்கு நானும் வாறன்.” என்று கெஞ்சியவளிடம் மங்கையற்கரசியால் மறுக்க முடியவில்லை.

ஆனால், மகள் ஏன் இந்தளவில் மறுக்கிறாள் என்கிற யோசனை அவருக்கும். அதில், “கலியாண வேலை நிறைஞ்சு கிடக்குத்தானம்மா…” என்று அவளிடம் இழுத்துவிட்டு, “கொஞ்ச நேரம் தானேம்மா. ஆசையா சமைக்கிறன் எண்டு சொல்லுறா. போயிற்று வாங்கோவன்.” என்றார் ஆரபியிடம்.

“சரி நாளைக்கு வாறன், போ.” முதலில் அவளை இங்கிருந்து அகற்றுவோம் என்றெண்ணிச் சொன்னாள் ஆரபி.

வினோதினி இலேசுப்பட்டவள் இல்லையே. பிள்ளையார் முன்னேயே சூடம் ஏற்றி, நாளை வருகிறேன் என்று அவளைச் சத்தியம் செய்ய வைத்துவிட்டே விட்டாள்.

ஆரபிக்கு முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடிக்க, பார்த்திருந்த எல்லோருக்கும் சிரிப்பு.

அப்போதும் ஸ்கூட்டியில் புறப்படுகையில், “கட்டாயம் வரோணும்!” என்று சொன்னாள்.

“வருவனடி போ!”

“போ போ எண்டு துரத்திறியே எருமை, புக்கை தந்தியாடி?” என்று சீறினாள்.

நடந்த கலாட்டாவில் எல்லோரும் அதை மறந்துதான் இருந்தனர். மங்கையற்கரசியும் உதவ, அவளின் குடும்பத்தினர் எல்லோருக்கும் போதும் என்கிற வகையில் புக்கையைக் கட்டிக்கொடுத்தாள் ஆரபி.

அங்கிருந்த எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு, “கட்டாயம் வா! கருவாட்டுக் குழம்பு, மறந்திடாத.” என்றவளைக் கண்டு கடுப்பாகிப்போனாள் ஆரபி.

“கோயில்ல நிண்டு கருவாட்டுக் குழம்ப ஏலம் விடாம போடி!” என்று துரத்திவிட்டாள்.

நல்ல தோழி என்பதை விடவும் அருமையான தோழி அவள். இரண்டு குழந்தைகளுக்கு இன்று அன்னை. நாளைய நாளை நினைக்கையில் இப்போதே அடிவயிற்றைக் கலக்கியது ஆரபிக்கு.

அவன் நிற்காவிட்டால் நல்லது என்று நினைக்கையிலேயே அவன் நிற்க வேண்டும் என்று அவளின் வெட்கம் கெட்ட மனது எதிர்பார்த்தது.

ஆனால், அனைத்தையும் ஆட்டுவிக்கிறவன் அவனாக இருக்கையில் எப்படி நிற்காமல் போவான்?

error: Alert: Content selection is disabled!!