இணைபிரியா நிலை பெறவே 20 – 2

நேசித்தகவனை நேசத்திற்கு உரியவனாக அவள் பார்க்கவில்லையாம். அவன் உதட்டோரம் வறண்ட புன்னகை ஒன்று வந்து போக பார்த்தது. ஆனாலும் அவளுக்குப் பதில் ஏதும் சொன்னான் இல்லை.

மகனைப் பார்க்கப் பெற்றவர்கள் மனம் வருந்திற்று. ஆரபி மீது மிகுந்த நேசம் கொண்டிருக்கிறான் என்று புரிந்தது. அதே நேரத்தில் அவன் கோபமும் கிரியின் அவசரக் குடுக்கைத் தனமும் சேர்ந்து அவர்கள் இருவர் வாழ்விலும் விளையாடியிருப்பதையும் அவர்களால் உணர முடிந்தது.

“எப்ப கதைக்கப்போறாய் தம்பி?” என்று வினவினார் கலைமகள்.

“நாளைக்கு வெளிக்கிட்டுடுவாள் அம்மா. அதுக்கு முதல் கதைக்கோணும்.”

“அப்ப கதைச்சுப்போட்டுச் சொல்லு.” என்றுவிட்டுப் போனார்கள் பெற்றவர்கள்.

“உனக்கு ஏனடா இந்த வேலை?” அவர்கள் தலை மறைந்ததும் கிரியை அதட்டினான் சகாயன்.

“ஒவ்வொரு முறையும் உனக்காகத்தான் கதைக்கப் போவன். அவளுக்கு என்னைப் பிடிக்காது. எனக்கு அவளைப் பிடிக்காது. அதாலயே அது எப்பிடியோ மாறி, வேற மாதிரி ஆயிடும். அதான் இந்த முறை அன்ட்ரி மூலம் கதைக்க வைக்க நினைச்சன்.” என்றுவிட்டுப் போனான் அவன்.

வினோவைப் பார்க்க, “நான் அவளோட கோவம்தான். அவளுக்கு நீ வேணாம் எண்டா எனக்கும் அவள் வேணாம்.” என்று முறுக்கினாள் அவள்.

“அப்பிடிச் சொல்லுறேல்ல!”

“நான் சொல்லுவன்!”

“பிழை செய்தது முழுக்க முழுக்க உன்ர அண்ணாதான்.”

“ஓ! அதான் கிரி அண்ணா வேணுமா, நான் வேணுமா எண்டு கேட்டவளா?” என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தான் அவன்.

நடந்ததைச் சொல்லி, “எவ்வளவு கெட்டித்தனமா எங்களிட்டப் போட்டு வாங்கியிருக்கிறாள் எண்டு பார் அண்ணா. அப்ப கூட உண்மையைச் சொல்லேல்லையே.” என்றவளுக்கு ஆரபி மீது மெய்யாகவே மிகுந்த அதிருப்தி.

சகாயனுக்கு இன்றைய நிலையில் மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கிற்று தங்கை சொன்ன விடயம். அன்று தான் அவ்வளவு எடுத்துச் சொல்லியும் தன் முடிவில் அவள் உறுதியாகத்தான் இருந்திருக்கிறாள். அதனால்தான் அதன் பிறகு அவள் சமாதானத்திற்கு வராததும். என்னவோ ஒன்றும் பிடிக்காமல் போய்விட, “எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணோணுமே?” என்றான் தங்கையிடம்.

கேள்வியாக ஏறிட்டவளிடம், “அவளுக்கு ஃபோனை போட்டு நான் அவளோட கதைக்கோணுமாம் எண்டு சொல்லு.” என்றதும் அந்த நொடியே எடுத்து அவளுக்கு அழைத்தாள்

“சொல்லடி!” என்றுதான் ஏற்றாள் ஆரபி.

“நான் வினோதினி!”

“இருந்திட்டுப் போ!” சின்ன கேலி இழையோடும் குரலில் சொன்னாள் ஆரபி.

“அண்ணா உன்னோட கதைக்கோணுமாம்!” இப்போதும் அதே இறுக்கமான குரலில் சொன்னாள் வினோ.

“என்ன?” அவள் அங்கே அதிர்வது அவள் குரலிலேயே தெரிந்தது.

“என்ர அண்ணா உன்ன நேர்ல பாத்து என்னவோ கதைக்கோணுமாம் ஆரபி.”

“வினோ…” என்றவளுக்கு வார்த்தைகள் வராமல் திக்கின. அவளுக்குத் தம் விடயம் தெரிந்துவிட்டது என்கிற பதற்றத்தில் அவன் நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்று சொன்னதற்கு மறுக்க வேண்டும் என்பதை மறந்து நின்றாள் ஆரபி.

“நம்பிக்கைத் துரோகம், நேர்மையா இல்லாம இருக்கிறது, உண்மைய மறைக்கிறது, விட்டுக்கொடுக்கிறது எல்லாம் காதலில மட்டுமில்ல நட்பிலயும் இருக்கக் கூடாது ஆரபி. பிழை வேற. தப்பு வேற. தப்புச் செய்தா விலகிடோணும். நட்பு பிழை செய்தா அடிச்சாவது திருத்தோணுமே தவிர விட்டுட்டு ஓடக் கூடாது. அப்பிடி விட்டுப்போட்டு வா எண்டு சொல்லவும் கூடாது. எனக்கும் ஒரு நண்பி இருந்தவள். நேசரி காலத்தில இருந்து ஒண்டா படிச்சு, ஒண்டா வளந்து, ஒரு தட்டில சாப்பிட்டுப் பழகினவள். அவள் எனக்கு எல்லாத்தையும் மறச்சிருக்கிறாள். உண்மையா இருக்கேல்ல. இப்ப நான் என்ன செய்ய? அவளை வெட்டி விடட்டா?” என்றதும் சட்டென்று கண்ணீர் இறங்கிற்று ஆரபிக்கு.

“வினு?” என்றாள் பேச முடியாமல்.

இதற்குள், “வினோ, சும்மா இரு!” என்று அவளை அதட்டிவிட்டு அவளின் கைப்பேசியை வாங்கிக்கொண்டு விலகி வந்தான் சகாயன்.

“எனக்கு உன்னை ஒருக்கா நேர்ல பாத்துக் கதைக்கோணும்.” என்று இறுக்கமாக ஒலித்த சகாயனின் குரலில் தடுமாறிப்போனாள் ஆரபி.

ஏற்கனவே வினோவின் பேச்சில் முற்றிலுமாக நிலைகுலைந்துபோயிருந்தாள். இதில் அவள் உணர்வுகளிலும் உயிரிலும் கலந்துபோனவனின் குரலும் சேர்ந்து என்னவோ செய்ய அவளுக்குப் பதிலே வரமாட்டேன் என்றது.

“இத வச்சு திரும்பவும் உன்ன பாக்க வரவோ, உனக்குப் பின்னால வரவோ மாட்டன் ஆரபி. பயப்பிடாத.” என்றவனின் வார்த்தைகள் பலமாய்த் தாக்கின அவளை.

“எங்க வர?” என்றாள் கமறிய குரலில்.

“எங்கட அம்மாளாச்சி கோயிலுக்கு.”

“அது… ஆரும் பாத்தா?”

“அத நானும் யோசிப்பன்.” என்று நேரத்தைச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் சகாயன்.

அன்று மாலையே வினோவையும் அவள் மூத்தவனையும் சேர்த்து அழைத்துக்கொண்டு புறப்பட்டான். நடக்கப்போவது தெரியுமாதலால் காரில் தமையனின் அருகில் அமர்ந்துகொண்டாள் வினோதினி. சற்று நேரத்தில் பின்னால் ஏறப்போகிற ஆரபியோடு ஒன்றாக அமர்வதால் அவளுக்கு விருப்பமில்லை.

“வினோ” என்ற தமையனை இடைமறித்து, “அண்ணா, அப்போத சொன்னதுதான். உனக்கும் அவளுக்கும் நடுவில நான் வரேல்ல. எனக்கும் அவளுக்கும் நடுவில நீயும் வராத!” என்றாள் முடிவாக.

“வரக் கூடாதுதான். ஆனா இந்த அண்ணாக்காக என்ர தங்கச்சி கொஞ்சம் பொறுமையா இருக்க மாட்டாளா?” என்றதும் கலங்கிவிட்ட விழிகளோடு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் வினோ. இந்தளவில் அவளுக்காகப் பாக்கிறவனை விட்டு விலகி நிற்கும் ஆரபி மீது இன்னும் ஆதங்கம்தான் உண்டாயிற்று அவளுக்கு.

“பின்னால போய் ஏறு!” அவள் தலையைப் பிடித்து ஆட்டி விட்டுவிட்டு இதமாகச் சொன்னான்.

ஒன்றுமே சொல்லாமல் இறங்கி பின்னால் மகனோடு அமர்ந்துகொண்டாள். சகாயன் காரைக் கொண்டுபோய் அம்மன் கோவில் முன்னே நிறுத்தினான். கலக்கத்துடன் அருகில் வந்த ஆரபி, பின்னால் அமர்ந்திருந்த வினோவைக் கண்டுவிட்டுத் தடுமாறினாள்.

வினோ அவள் புறம் திரும்பவே இல்லை. நடுவில் மகனை இருத்தி பெல்ட் போட்டுவிட்டிருந்தாள். இது சகாயனின் கடுமையான உத்தரவு. சின்னவர்களை மடியில் வைத்திருப்பது, பெல்ட் போடாமல் வைத்திருப்பதை எல்லாம் அனுமதிக்கவே மாட்டான். இவள் ஒரு பக்கம் அமர்ந்திருக்க தடுமாற்றத்துடன் மறுபக்கம் ஏறி அமர்ந்தாள் ஆரபி.

அப்போதும் வினோ அவள் புடம் திரும்புவதாக இல்லை.

error: Alert: Content selection is disabled!!