அத்தியாயம் 24
இருவருக்குள்ளும் மற்றவரால் உண்டான காயம். இருவருக்குள்ளும் மற்றவர் மீது ஆதங்கம். இருவருக்குள்ளும் உன்னால் என்னை இத்தனை இலகுவாய் உதற முடிந்ததா என்கிற சிணுக்கம். இத்தனை இருந்தும் இருவருக்கும் மற்றவரின்றி வாழும் தைரியமில்லை.
முட்டலும் மோதலுமாக இருக்கும் வரை கோபங்களும் குறைகளும் காயங்களும் பெரிதாய்த் தெரிந்தன. எல்லாம் போதும், முடித்துக்கொள்வோம் என்று வந்ததும் பதறிப்போயினர். அப்போதுதான் ஒருவர் மற்றவர் வாழ்வில் எந்தளவுக்கு இன்றியமையாதவர் என்று புரிந்தது.
இதையெல்லாம் வாய் வார்த்தைகளாகப் பேசிக்கொள்ளும் அளவுக்கு அவர்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த உணர்வுகள் விடும் என்கிற நம்பிக்கை இருவருக்குமே இல்லை.
முற்றிலுமாக உடைந்து கதறிவிடும் நிலையில் அவள் என்றால், உன்னைத் தாண்டி எனக்கொரு வாழ்க்கை இல்லை என்பதை உணர்த்திவிடும் உந்துதலில் அவன்.
அவள் அறைக்குள் அழைத்ததே போதுமாக இருக்க, தன் மனத்தை நொடியில் சொல்கிறவனாக அவளை இழுத்து அணைத்துக்கொண்டான் சகாயன். ஆரபி அதிர்ந்தது ஒரு கணம்தான். அடுத்த கணம் எனக்கும் இதுதான் வேண்டும் என்று சொல்கிறவளாக அவன் கைகளுக்குள் அடங்கினாள்.
இருவருக்குமான முதல் அணைப்பு, புது நெருக்கம் என்கிற உணர்வெல்லாம் ஆரபிக்கு இல்லவே இல்லை. இந்த ஒற்றை அணைப்பிற்காகவே காத்திருந்தாற்போல் தானும் அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு மார்பில் முகம் புதைத்தாள்.
அவன் இதயத்தின் அதிவேகத் துடிப்பு அவன் நிலையையும் சொல்லிற்று. அவள் விழிகள் உடைப்பெடுத்து வழிய ஆரம்பித்தன.
அதை அவனும் உணராமல் இல்லை. தடுக்க வரவில்லை. தன் அணைப்பை மென்மையாய் இறுக்கி, அவள் தலையைத் தன் மார்புடன் சேர்த்தணைத்து, அவள் உச்சியில் உதடுகளைப் பதித்து விழிகளை மூடிக்கொண்டவன் கண்ணோரங்களும் இலேசாகக் கசிந்திருந்தன.
“பயந்தே போயிற்றன்.” மெல்ல முணுமுணுத்தான்.
“நானும்.” அவன் மார்ப்புக்குள் இருந்தே கண்ணீர்க் குரலில் சொன்னாள் ஆரபி.
அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி, கலங்கிச் சிவந்திருந்த விழிகளையும் அந்த முகத்தையும் பார்த்தான். அவனை இழந்துவிட்டோமோ என்று பயந்து வந்த கண்ணீராயிற்றே. உனக்கு நான் முக்கியமில்லையா என்று முறுக்கிக்கொண்டிருந்த அவன் உள்ளத்தினுள் அவள் கண்ணீர் தித்திப்பாய் இறங்கிற்று.
“பிடிச்சிருக்கா?” என்றான் இரகசியக் குரலில்.
எத்தனை வருடங்களுக்குப் பிறகு கேட்கிறான்? அவள் உடல் கூட்டினுள் உயிர் பாய்ந்தது. அந்த உணர்வு மேலீட்டில் விழிகள் திரும்பவும் கசிந்து வழிந்தன.
“ஆரு, பிடிச்சிருக்காடி?” ஈர விழிகளின் மீது தன் உதடுகளை ஒட்டி எடுத்துவிட்டு நெருக்கம் மிகு குரலில் திரும்பவும் வினவினான்.
தானும் அவன் முகம் தாங்கி, “உங்களுக்கு?” என்றாள் நடுங்கும் குரலில். “வெறுத்திட்டீங்களோ எண்டு பயந்திட்டன்.”
“உன்னையா? நானா?” என்றவனால் மேலே பேச இயலவில்லை. அவள் இன்றி அவன் தவித்த தவிப்பை எவ்விதமான வார்த்தைகள் கொண்டு விளக்குவது என்று தெரியாமல், அவள் நெற்றி முட்டி விழிகளை மூடிக்கொண்டான் சகாயன்.
அந்த ஒற்றைச் செய்கையிலேயே தனக்கு இணையான துன்பத்தை அவனும் அனுபவித்திருக்கிறான் என்று புரிந்துபோயிற்று. மீண்டும் அவன் முகம் தாங்கி, “இந்த உறவு வேண்டாம் எண்டு நான் சொன்ன நேரம் கூட எனக்குத் தெரியேல்ல. நீங்க செய்த பிழைகளும், அது தந்த காயங்களும் என்னை யோசிக்க விடவே இல்ல. ஆனா அண்டைக்கு நீங்க சொல்லிப்போட்டுப் போன நேரம்…உயிரே போயிற்றுது சகாயன். ஐயோ ஐயோ எண்டு என்ர மனம் அழுத அழுகை இருக்கே…” என்றவளுக்குப் பேச்சுத் தடைப்பட்டுப் போயிற்று.
அதை அவள் சொல்லித்தான் அவன் உணர வேண்டுமா என்ன? அன்று அவனும் அந்த நிலையில்தானே இருந்தான். “போதும் ஆரு. அழுதது, கவலைப்பட்டது, கண்ணீர் விட்டது எல்லாம் போதும்!” என்றான் அவளை அணைத்து முகத்தைத் துடைத்தபடி.
“கோவம் இல்லையே?”
அப்போதும் முழுவதுமாகச் சமாதானம் ஆகாமல் கேட்டவளிடம், “ம்ஹூம்!” என்று மறுத்தான் அவன்.
“என்னை வெறுக்கேல்லையா?”
“இந்தக் கேள்விக்கான பதில் உனக்கே தெரியும்.”
“காதலச் சொல்லுறதுக்கு ரெண்டு வருசம். சமாதானம் ஆகிறதுக்கு ஒரு வருசம். அடுத்த சண்டைல மூண்டு வருசம் எண்டு இருந்தவளை இப்பவும் பிடிக்குமா உங்களுக்கு?”
அந்தக் கேள்வியில் இருந்த மனநிலை மொத்தமாய் மாற, உதட்டினில் மலர்ந்த சன்ன சிரிப்புடன் ஒற்றைக் கண்ணைச் சிமிட்டினான் அவன்.
நொடியில் அவள் மனநிலையும் மாறிப்போயிற்று. சிரிக்கும் அந்தக் கண்கள், அதில் மின்னிய குறும்பு, அந்தப் பார்வை அவளுள் புகுந்து நிகழ்த்தும் மாயம், அவர்களின் நெருக்கம் எல்லாம் இப்போதுதான் கவனத்திற்கு வந்தன. அவனிடமிருந்து பார்வையைத் பதித்தபடி மெல்ல விலக முயன்றாள்.
“எங்க போறாய்?” என்று வேகமாக இழுத்தணைத்தான் அவன்.
“சகாயன் ப்ளீஸ்!”
“இவ்வளவு நேரமா இல்லாம இப்ப என்ன?” நகைக்கும் குரலே இப்போது அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்று அவனுக்கும் தெரிந்திருப்பதைச் சொல்லிற்று. ஆனாலும் கேட்கிறான்.
“அதுக்கெண்டு அப்பிடியே நிக்கிறதா?” என்றாள் அவனைப் பாராமல்.
“சும்மா நிக்கோணும் எண்டில்லை.” வார்த்தைகளுக்கு மட்டுமில்லாமல், இடையோடு பற்றியிருந்த தன் பிடிக்கும் அவன் கொடுத்த அழுத்தத்தில் துள்ளி விலகியிருந்தாள் ஆரபி.
முகம் மொத்தமாக இரத்த நிறம் கொண்டிருந்தது. “நம்பி அறைக்க விட்டதுக்கு ஏற்ற மாதிரி நடக்கோணும்.” மிரட்டல் போல் விரல் நீட்டிச் சொல்லிவிட்டுக் குளியலறைக்குள் புகுந்துகொண்டவளின் நெஞ்சின் படபடப்பு உச்சக்கட்டத்தில் இருந்தது.
பிரிவாற்றாமையைத் தீர்க்கும் வேகத்தில் அவன் அணைப்பினுள் அடங்கியிருந்தபோது தெரியவில்லை. அதன் பிறகு சிறிதாய் அவன் இடையில் தந்த அழுத்தம் இப்போதும் அவள் உதட்டைப் பற்ற வைத்தது. வேறு ஒன்றுமே செய்யவில்லை அவன். அதற்கே இப்படியா?
கொஞ்ச நேரம் அப்படியே நின்று தன்னை ஆசுவாசப்படுத்தினாள். முகத்தைத் தண்ணீரில் அடித்துக் கழுவிக்கொண்டு வெளியே வந்தவள் ஒரு கணம் அதிர்ந்து நின்று பக்கென்று சிரித்திருந்தாள்.
அங்கே அவன் தன் ஆடைகளை எல்லாம் களைந்துவிட்டு அவளின் கையில்லாத நைட்டியில் நின்று, பானுக்கு(bread) பட்டர் தடவிக்கொண்டிருந்தான். அதுவும் சாரத்தை மடித்துக் காட்டுவதுபோல் நைட்டியை மடித்துக் கட்டியிருந்ததைக் கண்டு சத்தியமாக அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. குளியலறைக் கதவைப் பற்றி நின்று விழுந்து விழுந்து சிரித்தாள்.

