இணைபிரியா நிலை பெறவே 25.2

“ஆனா சுவாத்தியமாத்தான் இருக்கு.” என்றான் அணிந்திருந்த நைட்டியை தூக்கிக் காட்டி.

குளித்துவிட்டு அவன் அதே பழைய ஆடைகளை அணிந்துகொண்டு வந்தான். இதற்குள் தேநீர் ஊற்றி, இன்னும் இரண்டு பாண் துண்டுகளை பட்டர் பூசி, சீனி போட்டு வைத்திருந்தாள் ஆரபி. இருவருமாகச் சாப்பிட்டுவிட்டு இறங்கி வந்தபோது வீட்டு உரிமையாளர் பெண்மணி வந்தார்.

“தம்பி ஆரம்மா?” என்றார் விசாரணையாக. திரும்பி அவனைப் பார்த்தாள் ஆரபி. சின்ன முறுவலோடு நின்றிருந்தவன் வாயே திறக்கவில்லை.

அவனும் அவள் சொல்லப்போகும் பதிலுக்காகக் காத்திருக்கிறான் என்று புரிய, “இவரைத்தான் அன்ட்ரி வீட்டுல எனக்குப் பேசியிருக்கு.” என்று சொன்னாள் ஆரபி.

“உண்மையாவோ? சந்தோசம் சந்தோசம். மூண்டு வருசமா இஞ்சயே இருக்கிறீங்க. உங்கட அப்பா, அண்ணா, அத்தானைத் தவிர வேற எந்த ஆம்பிளைகளும் வந்ததே இல்ல. அதுதான் கேட்டனான். எங்களை நம்பித்தானே உங்களை இஞ்ச விட்டுட்டுப் போயிருக்கினம். எல்லாத்தையும் கேட்டு வச்சிருக்கோணும்தானே.” என்று நன்றாகப் பேசினாலும் தன் நிலையையும் சொன்னார் அவர்.

“ஓம் அன்ட்ரி, விளங்குது.”

“தம்பி எந்த ஊர்?”

“அவரும் புதுக்குடியிருப்புத்தான்.”

“ஓ!” என்று இழுத்தவரின் பார்வையே, அவர்களுக்குள் காதலோ என்று இருவரையும் அளவிட்டது. அது புரிந்து ஆரபி நெளிய சகாயனின் முறுவல் விரிந்தது. ஆனாலும் வாயைத் திறந்தான் இல்லை.

“தம்பி வந்திருக்கிறது உங்கட வீட்டுக்குத் தெரியுமோ?”

இப்போது அவனே பதில் சொன்னான். “இல்லை அன்ட்ரி, தெரியாது. சப்ரைஸா இவளைப் பாக்க வந்தனான். ஆனா பயப்பிடாதீங்க. இன்னும் ரெண்டு நாளுக்க இவளின்ர அப்பா உங்களோட கதைப்பார். அப்பிடிக் கதைக்காட்டி நான் வந்தத நீங்களே எடுத்துச் சொல்லுங்க.” என்ற பிறகுதான் அவர் முகம் ஓரளவிற்குத் தெளிந்தது.

“இண்டைக்கே வெளிக்கிட்டுடுவீங்களோ? அங்க இருந்து பைக்லயே வந்தமாதிரி இருக்கு.”

“நாளைக்குத்தான் வெளிக்கிடேப் போறன் அன்ட்ரி. ஆனா இரவுக்கு வெளிலதான் தங்கப்போறன்.”

அதன் பிறகுதான் அவர் முகம் தெளிந்தது.

“நீங்க எல்லாரும் படிச்ச, வளந்த பிள்ளைகள். அப்பிடித்தான் செய்வீங்க எண்டு தெரியும். அதுக்காகக் கேக்கேல்லை. இரவாகப் போகுது. இப்ப வெளிக்கிட்டு அங்க எப்ப போய்ச் சேருவீங்க எண்டுற அக்கறைலதான் விசாரிச்சனான்.” தன் சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் கிடைத்துவிட்ட நிம்மதியில் சமாளித்துவிட்டு அவர்களை விட்டார் அந்தப் பெண்மணி.

ஆரபியைப் பார்த்தான் சகாயன். தலையை நிமிர்த்தக்கூட முடியாமல் அவள் தடுமாறுவது புரிய, “சந்தேகமா பாத்தாலும் அவா பயப்பிடுறதிலயும் அர்த்தம் இருக்குதானே ஆரு. நீயேன் அதப் பிழையா நினைக்கிறாய்?” என்றான் அவன்.

“பிழையா இல்ல. ஒரு மாதிரி…” தன் உணர்வைச் சொல்லத் தெரியாமல் தடுமாறினாள்.

“விடு விளங்குது. ஆனா நல்ல அம்மா. எனக்கு என்ன, வாடகை வந்தா காணும் எண்டு இல்லாம கவனிச்சு விசாரிக்கிறாவே.”

“அது உண்மைதான். உடம்பு சரியில்ல எண்டு படுத்தா வந்து பாப்பா. பத்தியச் சாப்பாடு எல்லாம் செய்து தருவா.”

“பிறகு என்ன? அதுவும் அக்கறைதான், இதுவும் அக்கறைதான்.” என்றதும் அவள் முகமும் தெளிந்துபோயிற்று.

கடைக்குச் சென்று அவனுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொண்டு, அவனுக்கு ஒரு அறை எடுத்துவிட்டு, அப்படியே இரவு உணவையும் முடித்துக்கொண்டு வந்தார்கள்.

ஆரபிக்குள் மெல்லிய படபடப்பு. என்ன திரும்ப வந்திருக்கிறான் என்று வீட்டுக்காரப் பெண்மணி கேட்பாரோ என்று. ஆனால் சகாயனே நேராகச் சென்று, கொஞ்ச நேரம் அவளோடு பேசிக்கொண்டு இருந்துவிட்டுப் போவதாகச் சொல்லிவிட்டு வந்தான்.

திரும்பவும் குளித்து, வாங்கிக்கொண்டு வந்த ஷோர்ட்ஸ், ஆர்ம்கட் பனியனோடு வந்தவனைக் கண்டு தடுமாறிப்போனாள் ஆரபி. அவன் பார்வையைத் தவிர்த்தபடி தானும் சென்று குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்தாள்.

அதுவரை சுவரோரமாகப் போடப்பட்டிருந்த அவள் கட்டிலில் சரிந்திருந்த சகாயன் திரும்பி அவளைப் பார்த்தான். இப்போதும் பார்வையைத் தவிர்த்தபடி கண்ணாடி முன்னே சென்று அவள் தலை வாரி தளர பின்னிக்கொண்டிருந்தாள்.

அவள் தடுமாற்றம் புரியாமல் இருக்குமா அவனுக்கு? எழுந்து, சுவருக்கு ஒரு தலையைணையைக் கொடுத்து சாய்ந்து அமர்ந்தான்.

அவள் அறையில் சோபா போன்று எதுவும் இல்லை. நாற்காலி மேசைதான் இருந்தது. அவள் அதில் சென்று அமர, “ஆரு!” என்று அழைத்தான் சகாயன்.

அவள் பார்க்க கைகளை விரித்தான். இலேசாகத் தயங்கினாலும் வந்து அந்தக் கைகளுக்குள் அடங்க அவள் யோசிக்கவில்லை.

“என்ன?” என்றான் அவளைத் தன் ஒரு பக்கத் தோளில் சாய்த்துக்கொண்டு.

ஒன்றுமில்லை என்று குறுக்காகத் தலையை அசைத்தாள் ஆரபி.

“பயமா இருக்கோ?” குறும்புக் குரலில் வினவினான்.

அவள் அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்தாள்.

“இரவு தங்கவேண்டாம் எண்டு மறைமுகமா சொன்ன அந்த அம்மா, எதையும் பகல்லயும் செய்யலாம் எண்டுறதை யோசிக்காம விட்டுட்டாவே.” என்றதும் பட்டு பட்டு என்று அவனின் மறுபக்க தோளில் அடித்தாள் ஆரபி.

“உனக்கும் அந்தப் பயம்தானே?” என்றான் சிரிக்கும் குரலில்.

இல்லை என்று மறுத்துத் தலையை அசைத்தாள் ஆரபி.

“பொய் சொல்லாத!”

“உண்மையா. எனக்கு என்னிலதான் நம்பிக்கை இல்ல. எதையும் தடுக்கிற நிலைமையில நான் இல்ல.” என்றதும் அவளையே பார்த்தவன் அவள் முகம் நோக்கிக் குனிந்து ஆழ்ந்து முத்தமிட்டான்.

“எதையும் முடிக்கிற நினைப்பில நானும் இல்ல.” என்றான் அவள் நெற்றி முட்டி.

விழிகளைத் திறந்து அவனைப் பார்த்தாள் ஆரபி. அவள் கண்களுக்குக் கோபக்காரனாய், சண்டைக்காரனாய், பிடிவாதக்காரனாய், அடாவடிக்காரனாய், ஏன் கொடுமைக்காரனாய்க் கூடத் தெரிந்திருக்கிறான். ஆனால் இன்று மிக மிக அழகனாய்த் தெரிந்தான். அவன் கழுத்தை வளைத்து தன்னிடம் இழுத்து அவன் கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்தாள் ஆரபி.

சன்ன முறுவலோடு அவன் புருவங்களை உச்சிமேட்டுக்கே உயர்த்தினான் அவன். முகம் இலேசாகச் சூடானாலும் பார்வையைத் தாழைக்கவில்லை அவள். அவன் கன்னம் வருடி, கேசம் கோதினாள்.

புரிதல் இல்லாமல் பெரும் பிரிவுவரைத் தம் உறவைக் கொண்டு போனவர்கள். காயப்பட்டு, காயப்படுத்தி காதலை மீட்டுக்கொண்டார்கள்.

error: Alert: Content selection is disabled!!