இணைபிரியா நிலை பெறவே 27

அத்தியாயம் 27

நாள்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றனவா என்றுதான் ஆரபிக்கு நினைக்கத் தோன்றியது. அந்தளவில் அத்தனையும் வேகமாக நிகழ்ந்து, இதோ பொன் தாலியைப் பூட்டி, அவளைத் தன் திருமதியாக வரித்துக்கொண்டிருந்தான் சகாயன்.

அருகில் அமர்ந்திருந்தவனைத் திரும்பிப் பார்த்தாள். அதற்காகவே காத்திருந்தாற்போல் இலேசாக இவள் புறம் சரிந்து, “என்னடி மனுசி?” என்றான் அவன்.

உள்ளே சில் என்று பனிக்கட்டிகள் இறங்கிற்று அவளுக்கு. பட்டு வேட்டி சட்டையில், மணமகனுக்கே உரித்தான களையும் கம்பீரமும் சுமந்து, அன்று காதலை அவள் சொன்னபோது என்ன மாதிரியான துள்ளல் மனநிலையில் இருந்தானோ, அதற்கு இணையாக மகிழ்ச்சி பொங்க அமர்ந்திருந்தவனைக் கண்டு அவள் உள்ளம் நெகிழ்ந்தே போயிற்று.

“பிடிச்சிருக்கா?” தானும் இலேசாக அவன் புறம் சரிந்து, எதையோ எடுத்து வைப்பதுபோல் பாவனை காட்டியபடி வினவினாள்.

சரக்கென்று திரும்பிப் பார்த்தவனின் உதடுகளும் கண்களும் போட்டிபோட்டுக்கொண்டு அவளிடம் சிரித்தன. “இரவுக்குச் சொல்லுறன்.” என்றான் அவன் கள்ளூறும் சிரிப்புடன்.
முகம் முழுக்க மலர்ந்த முறுவலையும் வெட்கத்தையும் மறைக்க, மண்டபத்தை நோக்கிப் பார்வையைத் திருப்பினாள் ஆரபி.

இப்போதும் நிறைந்து வழிந்த அந்த மண்டபத்தைப் பார்க்கையில் மலைப்பாக இருந்தது.

அன்று மட்டக்களப்பில் இருந்து அவன் திரும்பிய நாளில் இருந்து சரியாக ஒரு மாதத்தில் இந்தத் திருமணத்தை நடாத்தியிருந்தான் அவன்.

அவன் வீட்டினருக்கு அனைத்தும் ஏற்கனவே தெரியும். இவள் வீட்டினருக்கும் தெரியப்படுத்திய பிறகு, இரு தரப்பினரையும் சந்திக்க மிகவுமே சங்கடப்பட்டுப்போனாள் ஆரபி.

அதுவும் அவள் வீட்டினர் தந்த மண்டகப்படியில் காதலைப் பற்றிச் சொல்லாமலேயே கலியாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கக் கூடாதா என்று நினைத்திருந்தாள்.

அந்தளவில் பேச்சுக் கேட்டிருந்தாள். விட்டுக்கொடுத்துப் போக வேண்டும், எதுவாக இருந்தாலும் மனம் விட்டுப் பேச வேண்டும், பிரச்சனை என்று வந்துவிட்டால் தவறே செய்திருந்தாலும் பெரியவர்களிடம் சொல்ல வேண்டும் என்று காதில் இரத்தம் வருகிற அளவுக்கு அபிசாவும் மங்கையற்கரசியும் புத்தி சொல்கிறார்களா, திட்டுகிறார்களா என்று பிரித்தறிய முடியா அளவில் அவளை ஒரு வழியாக்கியிருந்தார்கள்.

முறைத்துக்கொண்டு திரிந்த தமையனைச் சமாதானம் செய்வதற்குள் அவளுக்குப் போதும் போதுமென்றாயிற்று. பின்னே அன்று அவன் அவ்வளவு கேட்டும் வாயே திறக்கவில்லையே அவள்.

இவர்களை இணைத்து வைக்க முதலே இரு வீட்டுக்கும் விருப்பம் இருந்தது. இவர்கள் காதலர்கள் என்று அறிந்ததும் விடுவார்களா? அதைவிட இவர்களுக்குள் இத்தனை சண்டை சச்சரவு இருந்திருக்கிறது என்று அறிந்ததும் அடுத்த சண்டையை இவர்கள் போடுவதற்கு முதல் இதோ திருமணத்தையே முடித்துவிட்டிருந்தார்கள்.

வினோவின் திருமணம் எத்தனை பெரிதாக நடந்தது என்று தெரியும். அப்படி இல்லை என்று சகாயன் சொல்லியிருந்தான். எளிமையாக இருக்கும் என்று எண்ணியிருந்தவள் வந்த அரசியல் புள்ளிகளையும், முக்கிய பிரமுகர்களையும் கண்டு மிரண்டுபோனாள்.

மணப்பெண்ணாக மேடையேறி வந்து அவன் அருகில் அமர்ந்ததும், அவள் கேட்ட கேள்வியே, “என்ன இவ்வளவு ஆக்கள் வந்திருக்கினம்?” என்றுதான்.

சடங்குகள் எல்லாம் முடிந்து, மதிய விருந்து, முக்கிய புள்ளிகள் புகைப்படம் எடுப்பது என்று பரபரப்பான நேரம் முடிந்த பொழுதில் ஒருவிதத் தயக்கத்துடன் மேடையேறி வந்தான் கிரி.

அன்று, ‘அவளிடம் மன்னிப்புக் கேட்கவா’ என்று கேட்டபோது திரும்பவும் எதையாவது ஆரம்பித்து வைக்காதே என்று சகாயன் சொன்னது மிக மிக ஆழமாக அவனைக் காயப்படுத்தியிருந்தது. வெளியில் காட்டிக்கொள்ளவில்லையே தவிர உள்ளுக்குள் மிகவும் உடைந்துபோனான். அதில் இருந்த உண்மையும் சேர்ந்து நன்றாகவே சுட்டிருந்தது.

கூடவே மட்டக்களப்புக்குச் சென்று வந்த அன்று, பாய்ந்து இவனைக் கட்டிக்கொண்டு, அவளோடு சமாதானமாகிவிட்டேன் என்று சொன்னவனின் முகத்தில் இருந்த வெளிச்சமும், நேரம் கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் தனியாக இருந்து அவளோடு கைப்பேசியில் பேசுகையில் அவன் முகத்தில் இருக்கிற பிரகாசமும் மகிழ்ச்சியும் இவனுக்கே கண்ணுக்கு நிறைவாக இருந்திருக்கிறது.

இப்படி இருந்திருக்க வேண்டியவனைத்தான் தேவையற்று அவர்களுக்குள் தலையிட்டு, வார்த்தைகளை விட்டு, சண்டையை உருவாக்கி, இறுகிப்போக வைத்திருக்கிறோம் என்று பலமுறை நினைத்திருக்கிறான்.

அவள்தான் தன் சந்தோசம் என்று என்றும் அவன் சொன்னதில்லை. ஆனால், அதை இவன் உணர்ந்திருக்கிறான்.

அதனாலேயே திருமணத்திற்கு இடைப்பட்ட காலத்தில் ஆரபியைச் சந்திக்கவோ, மன்னிப்புக் கேட்பதற்காகவேனும் அவளோடு பேசவோ அவன் முயற்சி எடுக்கவில்லை. தன்னால் திரும்பவும் எதுவுமாகி, அவர்களுக்குள் பிணக்குகள் எதுவும் வர வேண்டாம் என்று நினைத்தான். முதலில் திருமணம் முடியட்டும் என்று எண்ணினான். இதோ நல்லபடியாகத் திருமணமும் முடிந்தது.

ஆரபியும் அவன் வருவதைக் கவனித்தாள். இந்த இடைப்பட்ட நாள்களில் இருவருமே கிரி பற்றிப் பேசிக்கொண்ட தருணங்கள் மிக மிகக் குறைவு. இன்னுமே சொல்லப்போனால் கவனமெடுத்துத் தவிர்த்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால், அவனால் தமக்குள்ள நடந்தவற்றைப் பற்றி நிறையப் பேசியிருக்கிறார்கள். இனியும் தமக்கு நடுவில் யாரையும் கொண்டுவரக் கூடாது என்கிற தெளிவு வந்திருந்தது. ஒருவரிடம் மற்றவரின் எதிர்பார்ப்பு என்ன என்பதைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி, என்றுமே சகாயனால் இழக்க முடியாத நட்பு கிரி என்பது ஆரபிக்கும், எதுவானாலும் பேச்சு வார்த்தை எனக்கும் உனக்கும் மட்டும்தான், நமக்குள் அவன் வரக்கூடாது என்பது அவள் எதிர்பார்ப்பு என்பது சகாயனுக்கும் மிக நன்றாகவே புரிந்திருந்தது.

“ஹாப்பி மேரீட் லைஃப் மச்சான்!” முகம் முழுக்க மலர்ந்து விகசிக்க நண்பனை நெஞ்சோடு கட்டி அணைத்து, முதுகில் தட்டிக்கொடுத்து வாழ்த்தினான் கிரி. “சண்டையும் சச்சரவுமா பிக்கலும் பிடுங்கலுமா நல்லா இரடா!” என்றவனின் வாழ்த்தில் ஆரபியின் உதட்டிலும் மலர்ந்த முறுவல்.

ஆரபியிடமும் கைகொடுத்து வாழ்த்திவிட்டுப் பரிசுப் பெட்டி ஒன்றை நீட்டினான் கிரி.

நன்றி சொல்லிப் பெற்றுக்கொண்டாள் ஆரபி.

“டேய் என்னடா இது?” என்று அதட்டினான் சகாயன்.

“அது சும்மா மச்சான்.”

ஆரபிக்கு இப்போதும் அவனைக் கண்டதும் பழைய கசப்பான நிகழ்வுகள் எல்லாம் நினைவில் வராமல் இல்லை. ஆனால், கணவனோடு மனத்தளவில் இன்னுமே நெருக்கமாகிவிட்டதாலோ என்னவோ பழைய வெறுப்பு உண்டாகவில்லை.

அதைவிட அவர்களின் திருமணத்திற்காக சகாயன், குணால், ஆனந்தன், அபிசாவின் கணவன் என்று எல்லோருடனும் சேர்ந்து, அவனும் எந்தளவில் பாடுபட்டான் என்பதை நேரிடையாகப் பார்த்திருக்கிறாள். இரவு பகல் பாராது, உணவு உறக்கத்தைக் கவனிக்காது ஓடியோடிச் செய்திருக்கிறான்.

உண்மையான அன்பும் நட்பும் இல்லாமல் அந்தளவில் செய்ய முடியாது. அதைக் கொண்டு முதன் முறையாக மெல்லிய இணக்கமான மனநிலை அவளுக்கு அவன்பால் உண்டாகியிருந்தது.

“ஆரபி… அது சொறி நடந்த எல்லாத்துக்கும்…” மெல்லிய திணறலோடு சொன்னான் கிரி.

இதை நிச்சயம் ஆரபி எதிர்பார்க்கவில்லை. சகாயனை மெல்லிய அதிர்வும், என்ன சொல்வது என்று தெரியா நிலையுமாகப் பார்த்தாள்.

அப்படி அவன் மன்னிப்புக் கேட்டது சகாயனுக்கும் மனதிற்கு வருத்தமாக இல்லாமல் இல்லை. ஆனால், இது கேட்கப்பட வேண்டிய மன்னிப்பு. அந்த மன்னிப்பு அவர்கள் இருவர் மனத்தில் இருக்கிற பாரத்தை நிச்சயம் குறைக்கும் என்பதில் மாலை மறைவில் அவள் கரத்தை அழுத்திக்கொடுத்து ஆற்றுப்படுத்தினானே தவிர்த்து நடுவில் வரவில்லை.

“என்ன சொல்ல எண்டே தெரியேல்ல. ஏதோ ஒரு கோவம் இருந்தது உண்மைதான். அதுக்காக நீங்க ரெண்டு பேரும் பிரியோணும் எண்டு எண்டைக்கும் நினைச்சதில்ல. அதே மாதிரி உன்னை மரியாதை இல்லாம கதச்சதுக்கும் சொறி.”

தடங்கல் இல்லாமல் பேச மிகவுமே சிரமப்பட்டான் கிரி. ஆரபிக்கே அவனைப் பார்க்க ஒரு மாதிரி இருந்தது. அதே நேரத்தில் என்ன செய்ய என்றும் தெரியவில்லை. நாம் இருக்கும் சூழ்நிலை, நம் மனநிலை, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே நாம் ஒரு விடயத்தைப் பார்க்கும் கோணத்தில் தாக்கம் செலுத்தும்.

அன்றைய நாள்களில் எல்லாம் அவள் ஒரு வகையான அழுத்தத்தில் இருந்தாள். கிரி நிதானமற்றவன் என்றால் இவளால் நிதானமாக நின்று அவன் சொல்ல வருவதைக் கேட்க முடிந்ததில்லை. ஆனால் இன்று, மிகுந்த மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாள். ஒரு நெகிழ்ந்த நிலை. சகாயனின் நேசத்தின் ஆழத்தை அறிந்துகொண்ட தெளிவும் கைகொடுக்க, “பரவாயில்ல விடுங்கோ. நானும் கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம்.” என்று சமாளித்தாள்.

“பிரேக்கப் எண்டு உன்னட்டச் சொல்லிப்போட்டு வந்து இவன் இவனாவே இல்ல. அதுவரைக்கும் கூட ஏதோ ஒரு குறை குற்றம் உன்னைப் பற்றி என்ர மனதில இருந்தது. இவனை அப்பிடிப் பாத்த பிறகு எனக்கு என்னிலயே கோவம் வந்திட்டுது. அவனுக்கு என்னை விட நீதான் முக்கியம். உனக்கு அந்தச் சந்தேகமே வேண்டாம்.” என்றவனை மேலே பேச விடாமல், “டேய் மச்சான்! அப்பிடி எல்லாம் இல்லையடா.” என்று அவனை அணைத்துக்கொண்டான் சகாயன்.

அவன் கீழே இறங்கியதும், “அப்பிடி எல்லாம் இல்லை எண்டா விளங்கேல்ல? நான் இல்லை எண்டா அவருக்குத் தாலி கட்டி இருப்பீங்களோ?” என்ற ஆரபியின் கேள்வியில் திகைத்துத் திரும்பிய சகாயன், சட்டென்று சிரித்தான்.

“இண்டைக்கு நீ எவ்வளவுதான் தலைகீழா நிண்டு சண்டை இழுத்தாலும் சிங்கம் சிக்காதடி!” என்றதும் அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“அதென்ன இண்டைக்கு?” காது மடல் வரை சூடாகிப்போனாலும் அவனைப் பாராமல் வினவினாள்.

“இண்டைக்கு நான் கன்னி கழியிற ஐடியால இருக்கிறன்.” என்றதும் மேடையில் நிற்கிறோம் என்பதையும் மறந்து அவன் இடுப்பில் பிடித்துக் கிள்ளிவிட்டாள் ஆரபி.

கீழிருந்து இவர்களைக் கவனித்திருந்த இரு குடும்பத்தினருக்கும் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் இவர்களா கிட்டத்தட்ட ஆறு வருடங்களாகப் பிக்கலும் பிடுங்கலுமாக இருந்தார்கள் என்று நம்ப முடியாமல் இருந்தது. அந்தளவில் இருவர் முகங்களையும் நிறைந்த மகிழ்ச்சி.

error: Alert: Content selection is disabled!!