“இண்டைக்கு எத்தின மணி வரைக்கும் வேலை செய்ய பிளான் பண்ணி இருந்தனீங்க?”
“ஆறு மணி வரைக்கும்.”
கையைத் திருப்பி நேரம் பார்த்தான். அப்போதுதான் மாலை ஐந்து பத்து. “பிறகு என்ன?” என்றான் அவளிடம்.
“ஒழுங்கா வேலையப் பாக்கச் சொல்லு மச்சான். என்னவோ நான் ஏதோ செய்திடுவன் எண்டமாதிரி அகிராவப் போகச் சொன்னவள் எல்லா. தனியா இருந்து செய்யச் சொல்லு!” என்றான் கிரியும் ஆத்திரத்தில் முகம் சிவக்க.
“இன்னும் என்ன செய்யக் கிடக்கு?” என்று சீறினாள் அவள்.
“அப்பிடி என்ன செய்தனான் எண்டு சொல்லு? விரும்பின பெட்டையிட்ட விருப்பத்தைச் சொல்லாம உன்னட்டயா வந்து சொல்லோணும்?” என்று பதிலுக்குச் சீறினான் அவன்.
“அப்பிடி வந்து சொல்லியிருந்தா தெரிஞ்சிருக்கும்.” என்றாள் விழிகளில் அனல் பறக்க.
ஆரம்பத்தில் இருந்தே கிரியை அவளுக்குப் பிடிக்காது. அவனால்தான் சகாயனும் சண்டை சச்சரவு என்று இருக்கிறான் என்று நினைப்பாள். அகிராவோடு அவன் நடந்த விதத்திலிருந்து அறவே அவனை வெறுத்தாள். அதனாலோ என்னவோ அவனிடம் அவளால் அமைதியாகப் போக முடிவதில்லை. சகாயன் இருக்கிறான் என்பதையும் மறந்து பதிலுக்குப் பதில் என்று நின்றாள்.
ஆனால், அவள் அப்படிச் சொன்னது கிரியைச் சீண்டிவிட்டது. “சொன்னா என்ன செய்வாய்? உன்னால என்ன செய்யேலும்?” என்றுகொண்டு வந்தான்.
“மச்சான் விடு!” என்று அவனை அடக்க முயன்றான் சகாயன்.
அதற்குள், “சொல்லியிருந்தா பல்லை உடைச்சுக் கைல தந்திருப்பன்!” என்றிருந்தாள் ஆரபி. உன்னால் என்ன செய்ய முடியும் என்றால் எதுவுமே செய்ய முடியாது என்பதுதானே அதன் பொருள். அது அவளைச் சீண்டிவிட்டிருந்தது.
“பாத்தியாடா இவளின்ர வாயை.” என்று பல்லைக் கடித்த கிரியிடம், “மச்சான், நீ போ முதல்!” என்றான் சகாயன்.
“என்னை என்னத்துக்கடா போகச் சொல்லுறாய்? உனக்கு முன்னாலேயே என்ன எல்லாம் கதைக்கிறாள் எண்டு பாத்தனிதானே. இவளாலதான் அகிரா எனக்கு இல்லாம போயிற்றாள். நான் அவமானப்பட்டுக் கேவலப்பட்டதும் இவளால. ஆனாலும் அடங்குகிறாள் இல்ல பாத்தியா.”
அந்த விடயத்தில் சகாயனுக்கும் கோபமே. கிரி செய்தது தவறுதான். ஆனால், அது முடிந்துபோன ஒன்று. அவன் திரும்பவும் மோசமாக நடந்துவிடுவான் என்று தானாகவே நினைத்துக்கொண்டு, அவன் முன்னாலேயே அகிராவை அங்கிருந்து அகற்றிய அவள் செய்கைஅவனுக்கும் பிடிக்கவில்லை. அதிகப்பிரசாங்கத்தனமாக தோன்றிற்று.
“நான் என்னத்துக்கு அடங்கோணும்? அடங்கிற அளவுக்கு நானா கேவலமான வேலை எல்லாம் பாத்தனான்?” என்றவளை, “இப்ப நீ பேசாம இருக்கப் போறியா இல்லையா?” என்று அதட்டினான் சகாயன்.
அவனை ஆத்திரத்துடன் முறைத்தவள், “நான் போறன்!” என்றுகொண்டு எழுந்துகொள்ள, “போனியோ வீண் பிரச்சினை வரும் ஆரபி. வர வர நீ ஓவரா போறாய்.” என்று எச்சரித்தான் சகாயன்.
“என்ன ஓவரா போ…” என்றவளை, “வாயை மூடு!” என்று குரலை உயர்த்தி அடக்கினான் சகாயன்.
பயந்துபோனாள் ஆரபி. அவமானத்தில் அழுகை வந்தது. தான் என்ன தவறு செய்தோம் என்று மனம் குமுறிற்று. இங்கு வந்ததே பிழை என்று நினைத்தாள். அவள் கண்ணீரையும் கோபத்தையும் அடக்கிக்கொண்டு நிற்க, முதல் வேலையாகக் கிரியை அங்கிருந்து அகற்றினான் சகாயன்.
அவன் போனதும் வந்து தொப்பென்று நாற்காலியில் அமர்ந்து தலையைப் பற்றிக்கொண்டவனுக்கு ஆரபி மீது அவ்வளவு ஆத்திரம். அந்த ஆத்திரத்தில் வாயை விட்டுவிடக் கூடாது என்று சிரமப்பட்டுத் தன்னை அடக்க முயன்றுகொண்டிருந்தான். ஆனால், ஆரபிக்கு அங்கே நிற்கத் துளியும் விருப்பமில்லை.
“நான் போப்போறன்!” என்றாள் அறிவிப்புப் போன்று.
நிமிர்ந்து அவளைப் பார்த்தான் சகாயன். முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள். “பயந்தவள் மாதிரிக் காட்டுறது எல்லாம் நடிப்பு என்ன? என்ன வாய் உனக்கு.” என்றான் கோபமும் சினமுமாக.
நடிப்பா? நடித்து யாரை ஏமாற்றினாளாம்? அதைவிட அவன் கேட்ட விதம் அவளை மட்டமாக நினைத்துக் கேட்டதுபோல் காட்டியது.
அது கொடுத்த சினத்தில், “உங்கட நண்பர் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவார். கேட்டுக்கொண்டு நிக்க நான் என்ன புழுவா?” என்று அவனிடமும் சீறினாள்.
கலங்கிச் சிவந்துவிட்ட அவள் முகத்தையே பார்த்தான் சகாயன். அவள் அழுகையை அடக்கிக்கொண்டு நிற்பது தெரிந்தது. ஒவ்வொரு முறையும் அர்த்தமே இல்லாதவற்றுக்காகத் தாம் இருவரும் இப்படி முட்டிக்கொண்டு நிற்பது மிகுந்த வருத்தமளித்தது.
அவன் பார்வை தன் முகத்திலேயே தங்கியிருப்பது பிடிக்காமல், “நான் போகோணும்!” என்று முறுக்கினாள் அவள்.
அவன் உதட்டோரத்தில் மெல்லிய முறுவல். இருந்த கோபம் எல்லாம் தேநீருக்குள் விழுந்த சீனியாகக் கரைந்து காணாமல் போயிற்று. இவளைப் பிடித்துவைப்பதற்கு என்ன பாடெல்லாம் படுகிறான். அவளானால்… ஏன் இவளை இந்தளவில் பிடித்துத் தொலைக்கிறது என்று அவனுக்குப் புரியவே இல்லை. ஒரு பெருமூச்சுடன் தலையைக் கோதிக் கொடுத்தான்.
“நடந்தத விட்டுட்டு வேலையைப் பார்.” என்றான் தன்மையாக.
“இல்ல. எனக்குப் போகோணும்.” அவளிடம் ஒரு பிடிவாதம். அவளை மதிக்காதவனுக்கு அவளை மட்டமாக நினைப்பவனுக்கு இனியும் உதவி செய்வதா என்று கொதித்தாள்.
“வேலையப் பார் ஆரபி. இதக் கெதியா முடிக்கோணும்.”
அவள் பதில் சொல்லாமல் நின்று தன் பிடிவாதத்தைக் காட்டினாள்.
‘ஓ அந்தளவுக்குத் தைரியமா உனக்கு?’ கால்களை நீட்டிக்கொண்டு கையையும் மார்போடு கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டு அவளையே பார்த்தான்.
அவளுக்கு அவன் செய்கை இன்னுமே மனத்தைக் குமுற வைத்தது. நண்பர்கள் இருவரும் அபாண்டமாக அவள் மீது பழியைப் போடுவார்கள். அவள் அதற்குக் கோபப்படக்கூடாதாம். அதுவும் இவன் நண்பனைக் கடிந்து ஒரு வார்த்தை சொல்லவில்லையே.
நீ நாள் முழுக்க இருந்து நன்றாகப் பார் என்று எண்ணிக்கொண்டு அவள் இரண்டு அடிகள்தான் எடுத்து வைத்திருப்பாள். மின்னல் விரைவில் வந்து அவள் முன்னே நின்றிருந்தான் சகாயன். திடுக்குற்று இரண்டடி பின்னால் வைத்தவளுக்குள் கலவரம்.
“நடந்த பிரச்சினை வேற, நாங்க பாத்துக்கொண்டு இருக்கிற வேலை வேற ஆரபி.” என்றான் அவன் இறுக்கமான குரலில்.
“எனக்கு வீட்டுக்குப் போகோணும்.” எனும்போதே அவள் குரல் உடைகிறேன் என்று நின்றது.
இவ்வளவுக்குப் பிறகு அவளால் வேலை பார்க்க முடியாது என்று புரிந்தது. இப்போது அவளை விட்டால் பிடிக்கவும் முடியாதே.
“நாளைக்கு வருவியா?” தன்மையாகவே கேட்டான்.
அவள் பதில் சொல்லாமல் நின்ற விதமே பதிலைச் சொல்லிற்று.
“அவன் வரமாட்டான். நீ வா.”
நீதானேடா எனக்குப் பிரச்சினையே.
“இன்னும் ரெண்டு நாள் வேலைதான் ஆரபி.”
“ஆரபி!”
அவன் அதட்டலில் வேகமாக நிமிர்ந்து, “நான் வீட்டுக்குப் போகோணும். விடுங்க ப்ளீஸ்!” என்று சொன்னவளின் குரலோடு சேர்ந்து விழிகளும் கலங்கியிருக்கவும் அவன் பதறிப்போனான். “ஏய் என்ன?” என்றுகொண்டு கிட்ட வர முயல, “ப்ளீஸ் நான் போகட்டா?” என்றாள் கண்ணீருடன்.
அவள் மீது பரிதாபம் எழுந்த அதேவேளை கோபமும் உண்டாயிற்று. அதில் அவளுக்கு வழிவிட்டு நின்றுகொண்டு, “இப்ப போ. நாளைக்கு வருவாய் எண்டு நம்புறன். முதல் சொன்னதுதான். இந்த வேலை ஊருக்காக நாங்க செய்றது. உனக்கு இத எப்பிடி எப்பிடிச் செய்றது எண்டு தெரியும். அதைவிட நீ செய்ற வேலை எப்பவும் நீற்றா இருக்கும். அதாலதான் திரும்ப திரும்ப உன்னை வற்புறுத்துறன். அதே மாதிரி நடந்த பிரச்சினை வேற, இந்த வேலை வேற. இதுக்கு மேல உன்னை நான் வற்புறுத்த மாட்டன். நாளைக்கு நீ வராட்டி அதுக்குப் பிறகு எப்பவும் நீ வர வேணாம். இந்த லைப்ரரி இயங்கவும் இயங்காது.” என்று சொல்லித்தான் விட்டான்.

