அத்தியாயம்-1
சமையலறையில் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தார் இராசமணி. அன்று அதிகாலையில் தன்னை மறந்து கண்ணயர்ந்து விட்டதன் விளைவு! நெற்றியில் அரும்பிய வியர்வையைக் கூடத் துடைக்க முடியாமல் வேலைகளை வேகவேகமாகச் செய்தன அவர் கைகள்.
“அம்மா..”
அழைத்த மகளைத் திரும்பிப் பார்க்காமலேயே, “என்ன நித்தி?” என்று கேட்டார்.
“அம்மா..!” தாய் தன்னைப் பார்க்காததில் உண்டான கோபத்தில் மீண்டும் சற்று அழுத்தி அழைத்தாள் நித்யா.
“அம்மாவுக்கு என்ன? சொல்வதைக் கொஞ்சம் விரைவாகச் சொல்லு. நின்று கதை கேட்க எனக்கு நேரமில்லை. உன் அண்ணா சாப்பிட வரப்போகிறான். நீயும் வெளிக்கிடு..”
அப்போதும் அவர் தன்னைக் கவனிக்காததில் மனம் சுணங்க, “நான் எப்போதோ வெளிக்கிட்டுவிட்டேன்..” என்றாள் நித்தி.
அந்தக் குரலில் மனம் கேளாமல் மகளைத் திரும்பிப் பார்த்தார் இராசமணி. வெள்ளைச் சீருடையில் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதற்குத் தயாராக நின்றவளிடம், “என்ன சொல்லு?” என்று கேட்டார் அவதியாக.
“எனக்கு குதி வைத்த செருப்பு வேண்டும்”
“செருப்பா? திரும்பவுமா? இதைக் கேட்டால் உன் அண்ணா கத்துவான்..” என்றவர், சமைத்து முடித்துவிட்ட உணவுகளை சாப்பாட்டுப் பெட்டிகளுக்குள் அடைக்கத் தொடங்கினார்.
அப்போதும் முகத்தை நீட்டிக்கொண்டு அங்கேயே நின்றவளிடம், “போனமாதம் தானே ஒன்று வாங்கினாய். அது இன்னும் நன்றாகத்தானே இருக்கிறது. திரும்பவும் எதற்கு இன்னொன்று? ஒவ்வொரு மாதமும் செருப்பு வாங்கக் காசுக்கு எங்கே போவது?” என்று அதட்டிவிட்டு, “இந்தா, சாப்பிடு” என்று உணவுத் தட்டை நீட்டினார்.
அப்போது, “அம்மா.. சாப்பிடத் தாருங்கள்..” என்றபடி, அங்கு வந்தான் ரஞ்சன்.
அவனிடமும் இன்னொரு தட்டை அவர் நீட்ட, அதை வாங்கியவன் அங்கே நின்ற தங்கையை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்று சாப்பாடு மேசையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினான்.
இரண்டு வாய் உள்ளே வைத்தபிறகும் அங்கே வராமல் சமையலறையிலேயே நின்றவளை, “நித்தி, இங்கே வா..” என்று அழைத்தான்.
தாயை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தமையனிடம் வந்தாள் நித்யா.
அவளின் தட்டில் உணவு இன்னும் அப்படியே இருப்பதைப் பார்த்துவிட்டு, “என்ன?” என்று கேட்டான்.
அந்த ‘என்ன’ அதட்டலாக வந்ததில் அவளுக்குள் ஒரு நடுக்கம் ஓடியது. இந்த அண்ணா கொஞ்சம் தன்மையாகக் கேட்கக் கூடாதா என்று மனதில் எண்ணியபடி, “அது.. அது அண்ணா…” என்று இழுத்தாள்.
பொறுமை இழந்த ரஞ்சன், “சொல்வதைக் கொஞ்சம் விரைவாகச் சொல்.” என்றான் மீண்டும் அதட்டலாக.
அவன் முகம் பாராது, “எனக்குக் குதி வைத்த செருப்பு வேண்டும்..” என்றாள் நித்தி வேகமாக.
அதைக் கேட்டவன் அவளை முறைத்தான். அதில் உதறல் எடுத்தாலும், “என் தோழிகள் எல்லோரும் வைத்திருக்கிறார்கள். அதைப்போல எனக்கும் வேண்டும்..” என்றாள் கொஞ்சம் பிடிவாதக் குரலில்.
“அவர்களிடம் இருப்பது எல்லாம் உன்னிடம் இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஏன், உன்னிடம் இருக்கும் செருப்புகள் எல்லாமே உன் தோழிகள் எல்லோரிடமும் இருக்கிறதா?”
“அது.. நீங்கள் ஷூக்கள் விற்கும் கடையில் வேலை செய்வதால், என்னிடம் எல்லா வகைச் செருப்புகளும் இருக்கிறது. அவர்களின் அப்பாக்கள் எல்லோரும் என்ன செருப்புக் கடையிலா வேலை செய்கிறார்கள்?”
அதைக் கேட்டவனின் முகம் இறுகியது. கோபத்தில் எதையாவது சொல்லிவிடுவோமோ என்று பயந்து, மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து மடமட என்று பருகினான்.
கிளாசை மேசையில் வைத்தபடி, “இங்கே பார். நான் செருப்புக் கடையில் தான் வேலை செய்கிறேன். அதற்காக வீடு முழுவதும் செருப்புகளைக் கொண்டுவந்து நிரப்ப முடியாது. வீட்டில் இருப்பதை முதலில் போடு. பிறகு புதிது வாங்குவதைப் பற்றி யோசிக்கலாம்.” என்றான் கண்டிப்பான குரலில்.
இனி என்ன சொன்னாலும் தமையன் கேட்க மாட்டான் என்று தெரிந்ததில் முகம் தொங்க நின்றவளை, “சாப்பிடு!” என்கிற அவனின் ஒரு அதட்டல், வேகமாக உணவை வாய்க்குள் அடைக்க வைத்தது.
முகம் சோர உணவை உண்ணும் நித்தியைப் பார்க்க, சொன்னதைக் கொஞ்சம் தன்மையாகச் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது ரஞ்சனுக்கு.
அவளின் காதில் தோடு என்கிற பெயரில் ஒட்டிக்கொண்டிருந்த குண்டுமணித் தங்கத்தைப் பார்த்தவனுக்கு, கழுத்து கைகள் எல்லாம் வெறுமையாக இருப்பதும் பட்டது. பள்ளிக்கூடத்துக்கு நகைகள் போடக்கூடாது என்றாலும், போடுவதற்கும் அவளிடம் ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை!
அனுமதி இல்லாமலேயே அவன் வேலை செய்யும் கடை முதலாளியின் மகளின் செழிப்பு கண்முன்னால் வந்து போனது. அந்தப் பெண்ணின் காதில் தொங்கும் வகை வகையான தோடுகள் மட்டுமே அவனறிந்து பலது. அவள் ஒரு தடவை அணிந்த உடைகளை மறுதடவை அணிந்து அவன் கண்டதே இல்லை. அவளை விட இவளுக்கு என்ன ஒரு இரண்டு வயது குறைவாக இருக்குமா?
அவன் தங்கை என்ன நகை நட்டா கேட்டாள்? ஒரு சோடிச் செருப்புதானே?
சமையலறைப் பக்கம் திரும்பி, “நித்தி பள்ளிக்கூடத்தால் வந்தபிறகு அவளோடு கடைக்கு வாருங்கள் அம்மா…” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, “அண்ணா.. உண்மையாகவா? வாங்கித் தருகிறீர்களா?” என்று உற்சாகத்தில் குதித்தாள் நித்யா.
“ம்.. ஆனால் இதுதான் கடைசி. இனி நீ கேட்கக் கூடாது!” என்றான் கண்டிப்பான குரலில்.
“சரியண்ணா.. இனிக் கேட்கமாட்டேன்.”
“சாப்பிட்டுவிட்டாய் என்றால் கிளம்பு, நேரமாகிறது..” என்றபடி எழுந்து கையைக் கழுவினான்.
இதை எல்லாம் சமையலறையில் வேலைகளைச் செய்தபடியே கேட்டுக்கொண்டிருந்த இராசமணிக்கு, தன் பிள்ளைகளை நினைத்து வேதனையாக இருந்தது.
அதுவும் பதினெட்டு வயது நிரம்பிய நித்தியின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போகும்போது, அவள் படும் பாட்டைப் பார்க்கையில் மிகவும் கஷ்டமாக இருக்கும் அவருக்கு.
‘கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை’ என்று சும்மாவா சொன்னார்கள்.
பிறந்ததில் இருந்தே வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்திருக்க, ஒருவேளை நித்திக்கு இப்படியான ஆசைகள் இல்லாமல் இருந்திருக்கலாம். பதின்மூன்று வயதுவரை செல்வச் செழிப்பில் வளர்ந்தவளை திடீரென்று வறுமை தாக்கினால், என்னதான் செய்வது?
இராசமணியின் கணவர் வெங்கடேசன். வைத்தியராகப் பணிபுரிந்தவர். கைராசிக்காரர் என்று பெயர் எடுத்து இருந்ததாலேயே கைநிறையச் சம்பாதித்தார். அதைவிட குடும்பச் சொத்துக்களும் இருந்ததில் அவருக்கோ அவர் குடும்பத்துக்கோ பணத்துக்கு என்றுமே குறைவு வந்ததில்லை.

