என் சோலைப் பூவே 1 – 2

அதனாலேயே, அந்தப் பணம் இருக்கையில் அதைச் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வரவே இல்லை. அவருக்கு மட்டுமல்ல, கணவனை மலைபோல் நம்பியிருந்த இராசமணிக்கும் அது தோன்றாமலே போயிற்று!

 

அன்று அவர் கொஞ்சமாவது சேமித்து வைத்து இருந்திருக்க, இன்று அவரின் மனைவி பிள்ளைகளுக்கு இந்த நிலை வந்திருக்காது.

 

ஆனால், அடுத்து என்ன நடக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியுமா என்ன?

 

அப்படித்தான் ஒருநாள் மிகவும் சிக்கலான ஆபரேஷன் ஒன்றை வெற்றிகரமாக முடித்துவிட்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தவரின் உயிரை, வீதி விபத்து ஒன்று தனக்கு விருந்தாக்கிக் கொண்டது.

 

அன்றிலிருந்து அவரின் குடும்பநிலை தலைகீழாக மாறிப் போனது.

 

வெங்கடேசன் உயிருடன் இருந்த காலத்தில் சொத்துக்களைப் பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னபோது, நீங்கள் தான் அண்ணா எங்கள் சொத்தே என்று சொன்ன அவரின் சகோதரர்கள் மூவரும், அந்த அண்ணா இறந்ததுமே அடித்துப் பிடித்துச் சொத்துக்களைப் பிரித்துக் கொண்டார்கள்.

 

இதில் இன்றுவரை இராசமணிக்குப் புரியாத புதிராக இருப்பது, எவ்வளவோ சொத்துக்கள் இருந்தும் அவற்றைப் பிரித்தபோது அவர்கள் குடியிருக்கும் இந்த வீடு மட்டுமே அவர்களுக்குச் சொந்தமாக வந்தது எப்படி என்பதுதான்?

 

கேள்விகள் பல இருந்தாலும் அதைக் கேட்கும் தைரியமோ உரிமையோ அவருக்கு வழங்கப்படவில்லை. அப்போது பக்குவப்படாத பதினெட்டு வயதில் இருந்த ரஞ்சனுக்கும் அவற்றைப் பிரித்தாராயும் புத்தி இருக்கவில்லை. அதைவிட கண்ணா, ராசா என்று கொஞ்சும் இரண்டு அத்தைகளையும் சித்தப்பாவையும் சந்தேகப்படவும் தோன்றவில்லை.

 

ஏன், இந்தப் பெரிய வீடு அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதில் அப்போது அவனுக்குப் பெருமையும் கூட!

 

ஆனால் இன்று? அவர்களின் சுயரூபங்களை அறிய அறிய தனக்குள் இறுகிக் கொண்டே போய்விட்டான். அவன் இயல்பாகச் சிரிப்பதை மறந்தே பலகாலம் ஆகியிருந்தது.

 

தகப்பனை இழந்துவிட்ட இந்த ஐந்து வருடங்களில், அவன் அடைந்த இழப்புக்கள் எத்தனை? அவனுக்குக் கிடைத்த அனுபவங்கள் எத்தனை? இதை எல்லாம் எண்ணிப் பார்த்த இராசமணிக்கு நெஞ்சே அடைத்துவிடும் போலிருந்தது.

 

ஆனாலும் தன்னைத் தேற்றிக் கொண்டார். அது அவருக்குப் புதிதா என்ன?

 

அவர்கள் இருவரினதும் மதிய உணவோடு வந்தவர், “உன்னிடம் ஏதாவது பணம் இருக்கிறதா ரஞ்சன்?” என்று மகனிடம் கேட்டார். எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும், மாதக் கடைசி கையைக் கடித்தது.

 

“என்னிடம் எங்கே..?” என்று மெல்லிய சினத்தோடு ஆரம்பித்தவன், தாயின் முகம் கலங்குவதைக் கண்டு தன்னை அடக்கினான்.

 

“பொறுங்கள் பார்க்கிறேன்..” என்றவன் தங்கையிடம் திரும்பி, “வா..” என்றுவிட்டு, வாசலை நோக்கி நடந்துகொண்டே தன்னுடைய ‘பர்ஸ்’சை எடுத்து ஆராய்ந்தான்.

 

அதில் இருந்ததைப் பொறுக்கிக் கொடுத்துவிட்டு, “இவ்வளவு தான் இருக்கிறது. ஏதும் அவசரத் தேவையா? முதலாளியிடம் முன் பணம் வாங்கவா?” என்று கேட்டான்.

 

கண்கள் கலங்கிவிடும் போல் இருந்தது இராசமணிக்கு. அவர் மகன் இன்னொருவரிடம் கடனுக்குக் கை நீட்டுவதா?

 

கைகட்டியே வேலை செய்கிறானாம் என்று துடித்த மனதை அடக்கி, “சமையல் சாமான்கள் கொஞ்சம் வாங்கவேண்டும். அதுதான். இது போதும்..” என்றார்.

 

“சரிம்மா. வருகிறோம்.” என்றவன், தன்னுடைய உணவுப் பையையும் எடுத்துக்கொண்டு, மோட்டார் வண்டியில் தங்கையையும் ஏற்றிக்கொண்டு வேலைக்குச் சென்றான்.

 

அவளைப் பள்ளிக்கூட வாசலில் இறக்கி விட்டுவிட்டு, “போகும்போது கவனமாகப் போ..” என்று, தினமும் சொல்வதை இன்றும் சொல்லிவிட்டுத் தன்னுடைய கடைக்குச் செல்லும் வழியில் வண்டியை விட்டான்.

 

சிரித்த முகத்தோடு செல்லும் பள்ளி மாணவர்களைப் பார்க்கையில் அவன் முகத்தில் ஏக்கம் படர்ந்தது. அவனும் முன்னொரு காலத்தில் இப்படித்தானே.

 

அப்போதெல்லாம் சோகம் என்றால் என்னவென்று அறிந்திருப்பானா? கஷ்டம் என்றால் என்னவென்று தெரியுமா? ஏன், இந்த வறுமை, வெறுமை, இயலாமை, கோபம், ஆத்திரம், இறுக்கம் என்று எதையுமே அவன் அறிந்ததில்லையே!

 

இன்று?

 

மனதின் இறுக்கம் முகத்தில் தெரிய நிமிர்ந்தவனின் பார்வையில், எதிரில் வந்துகொண்டிருந்த சாதனா பட்டாள். அவனின் பெரியத்தை மல்லிகாவின் மகள்!

 

அவனைக் கண்டும் காணதது போல் செல்பவளைப் பார்த்து அவன் முகம் கல்லாக இறுகியது. ஒரு காலத்தில் ‘ரஞ்சன் மச்சான்’ என்றபடி அவன் பின்னாலேயே சுற்றியவள்.

 

“உங்களுக்குத்தான் என்னைத் திருமணம் செய்து வைப்பார்களாம். உண்மையாகவா ரஞ்சன் மச்சான்..?” என்று இமைகளைப் படபடவென்று கொட்டியபடி கேட்டவள்!

 

அந்தப் பார்வையிலேயே அவனைக் கிறுகிறுக்க வைத்தவள்!

 

உள்ளுக்குள் மலர்ந்த பெருமையோடு, “உன்னை நான் கட்ட மாட்டேன் போ..” என்று அவனைப் பொய்யாகச் சொல்ல வைத்தவள்!

 

பெற்றவரை இழந்து பரிதவித்து நின்றபொழுது, ஆறுதல் தேடி அலைந்த அவன் விழிகளைக் கண்டுவிட்டு அலட்சியமாக முகத்தைத் திருப்பிக் கொண்டவள்!

 

வெங்கடேசன் இறந்தபோது அவன் உயர்தரப் பரீட்சையை(ப்ளஸ் டூ) முடித்திருந்தான். வேதனையோடு நாட்கள் கடக்க, நல்ல பெறுபேற்றோடு பரீட்சையில் சித்தி அடைந்ததில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடமும் கிடைத்தது அவனுக்கு. அதுவும் அவனது அப்பாவைப் போலவே மருத்துவனாக ஆசைப்பட்டவனுக்கு மருத்துவ பீடமே கிடைத்தது இன்னும் மகிழ்ச்சி.

 

அந்தச் சந்தோசத்தில் ஓரளவுக்கு தந்தையின் இறப்பில் இருந்து மீண்டு, மகிழ்ச்சியோடே படிக்கச் சென்றான்.

 

அதன்பிறகு வந்த இரண்டு வருடங்கள் மிக நன்றாகத்தான் சென்றது. அவனுக்குப் பிடித்த படிப்பு, புதிய சூழல், புதிய நண்பர்கள் என்று அவன் நாட்கள் கடந்தன.

 

அப்போதெல்லாம் விடுமுறைக்கு வீட்டுக்கு வருபவன், அத்தைகளின் வீட்டுக்கோ சித்தப்பாவின் வீட்டுக்கோ போகலாம் என்றால், தாய் எதையாவது சொல்லித் தடுத்துவிடுவார். ஏன் என்கிற கேள்வி எழுந்தாலும், அதை அவன் ஆழமாக யோசித்தது இல்லை.

 

இரண்டாவது வருடக் கடைசியில், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவனின் வாழ்க்கை மீண்டும் ஒருமுறை தலைகீழாக மாறிற்று!

 

அன்று மாலை இராசமணி நித்தியுடன் கோவிலுக்குச் சென்றுவிட, தொலைகாட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவனை வீட்டுத் தொலைபேசி தொல்லை செய்தது.

 

எடுத்துக் காதில் வைத்தவனின் தலையில், “தம்பி, அம்மாவிடம் வரும் திங்களுக்கு முதல் நகைகளுக்கு வட்டியைக் கட்டச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் எல்லாமே அறுதியாகிவிடும்..” என்று குண்டை இறக்கினார், அந்தப் பக்கம் பேசிய நகை அடகு வைக்கும் கடைக்காரர்.

 

என்ன நகை? என்ன வட்டி? என்று ஒன்றும் புரியாமல் குழம்பி நின்றவனின் பார்வையில், கோவிலால் வந்த தாயின் வெறும் கழுத்தும் கைகளும் அப்போதுதான் பட்டது.

error: Alert: Content selection is disabled!!