“எனக்கு என்ன முடியவில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். நீதான் வேலைகளைப் பார்க்க விடுகிறாய் இல்லை.” என்ற கணவரை முறைத்தார் லக்ஷ்மி.
“சும்மா வாயால் சொல்லாதீர்கள். படியிறங்கி வந்ததே உங்களுக்குக் களைக்கிறது. வந்ததும் வராததுமாக எதற்கு இப்போது சோபாவில் சாய்ந்தீர்களாம்? முன்னர் எல்லாம் நீங்கள் இப்படி ஓரிடத்தில் அமருகிற ஆளா?”
“சரிம்மா, விடு. கொஞ்ச நாளானால் எனக்கு எல்லாமே சரியாகிவிடும். பிறகு சித்துவுக்கும் உன் ஆசைப்படி மிகச் சிறப்பாக திருமணத்தைச் செய்வோம். விளையாட்டுக்கு அவள் சொல்வதை எல்லாம் நீ கணக்கில் எடுக்காதே.” என்று மனைவியைத் தேற்றிய சந்தானத்துக்கே தெரியவில்லை, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், ஒருவித கட்டாயத்திலேயே அவளது திருமணம் நடக்கப் போகிறது என்பது!
அப்போது காயப்பட்ட மனதோடு, கையாலாகாத தனத்தோடு கையைக் கட்டி அந்தத் திருமணத்தை அவர் வேடிக்கை மட்டுமே பார்க்கப் போகிறார் என்பதும்.
மேலே தன்னுடைய அறைக்குச் சென்ற சித்ராவின் உள்ளத்தில் மீண்டும் அவள் மனக் கள்வனே வந்து நின்றான். சும்மாவல்ல, கோபப்பார்வையுடன்.
“அடப்பாவி! கற்பனையில் கூட வந்து முறைக்கிறானே. இவனை எல்லாம் காதலிக்க வைத்து, ஒரு கல்யாணத்தைக் கட்டி நான் குடும்பத்தை நடத்தின மாதிரித்தான்!” என்று செல்லமாக வாய்விட்டே சலித்துக் கொண்டாள்.
தன் கைப்பையில் இருந்த அவனது கைக்குட்டையை எடுத்தவள், அதை ஆசையுடன் தடவிக் கொடுத்தாள். அதிலிருந்த வியர்வை அவனுடைய உழைப்பைச் சொல்வது போலிருந்தது அவளுக்கு.
அதைத் தன் கையாலேயே அலசிக் குளியலறையில் காயப்போட்டாள். அன்று மட்டுமல்ல அடுத்தடுத்த நாட்கள் கூட ரஞ்சனுடன் அவள் என்னவெல்லாம் பேச நினைகிறாளோ அதை எல்லாம் அந்தக் கைக்குட்டையுடனே பேசிக் கொண்டாள்.
அந்தச் சில நாட்களிலேயே மனதளவில் அவன் அவளுக்கு மிக நெருக்கமானவனாகிப் போனான்.
இங்கே ரஞ்சனுக்கு சித்ரா வராததில் அடுத்தடுத்த நாட்கள் நிம்மதியாகவே கழிந்தது.
அவ்வப்போது கடைக்கு வந்து செல்லும் சந்தானத்தோடு, அவரது சோர்வு காரணமாக லக்ஷ்மி அம்மாளும் கூடவே வந்ததில், அவரைத் தனிமையில் சந்தித்துப் பணம் கேட்கும் சந்தர்ப்பம் அவனுக்கு அமையவே மறுத்தது.
லக்ஷ்மியைப் பற்றியும் அவரது படபடப்பான குணத்தைப் பற்றியும் அறிந்திருந்தவனுக்கு, அவர் முன்னிலையில் அதுபற்றிக் கதைக்கத் தயக்கமாகவும் இருந்தது.
அப்படியிருந்தும் ஒருநாள் கணவனும் மனைவியுமாக அவர்கள் வந்திருந்தபோது, கடையில் லக்ஷ்மி செருப்புக்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டுவிட்டு சந்தானத்திடம் விரைந்தான் ரஞ்சன்.
“அங்கிள், உங்களோடு கொஞ்சம் கதைக்கவேண்டும். நேரமிருகிறதா?” என்று கேட்டவன் தொடர்ந்து, “முடியுமா?” என்று அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கேட்டான்.
சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் நிமிர்ந்து, “முடியாமல் என்னப்பா. சொல்லு, என்ன கதைக்கவேண்டும்?” என்று அவர் கேட்கையிலேயே ஒரு சோடிச் செருப்புக்களுடன் அறைக்குள் வந்தார் லக்ஷ்மி.
அங்கு நின்றிருந்த ரஞ்சனைக் கண்டுவிட்டு, “வாப்பா ரஞ்சன், அம்மாவும் தங்கையும் எப்படியிருக்கிறார்கள் ?” என்று விசாரித்தார்.
“எல்லோரும் நன்றாயிருகிறோம் ஆன்ட்டி.” என்று அவனது வாய் சொன்னாலும், மனதோ இனி எப்படி அங்கிளிடம் பணத்தைக் கேட்பது என்று தடுமாறியது.
அமைதியாக நின்றவனைப் பார்த்து, “சொல்லு ரஞ்சன், ஏதோ கதைக்க வேண்டும் என்றாயே.” என்றார் சந்தானம்.
“அது அங்கிள்..” என்று இழுத்தவனின் விழிகள் கணவன் மனைவி இருவரையும் பார்த்தன. ஆரம்பித்த விசயத்தைக் இடையில் விடவும் மனதில்லை. அதேநேரம் லக்ஷ்மியின் முன்னால் பணம் வேண்டும் என்று கேட்பதை நினைக்கவே அவனுக்கு என்னவோ மாதிரி இருந்தது.
“சொல்லப்பா…” என்று, தயங்கியவனை ஊக்கினார் சந்தானம்.
இப்படி அடுத்தவரிடம் கையேந்தும் நிலையில் நிற்கும் தன்னிலையை நொந்தவன் நடப்பதைக் கண்டுகொள்வோம் என்று மனதைத் திடம் படுத்திக் கொண்டு கேட்டான். “எனக்கு.. கொஞ்சம் பணம் வேண்டும் அங்கிள்.”
அவன் ஆயிரங்களில் கேட்பதாக எண்ணி, “இதற்கா இவ்வளவு தயங்கினாய். எவ்வளவு வேண்டும் சொல்லு.” என்று சாதாரணமாகக் கேட்டார் சந்தானம்.
“அது.. இரண்டு லட்சம்.”
அதைக் கேட்ட கணவன் மனைவி இருவரினதும் விழிகள் அவசரமாகச் சந்தித்துக் கொண்டன. மனைவியின் விழிகளில் மறுப்பைக் கண்டவர், ‘கொஞ்சம் பொறு’ என்று பார்வையிலேயே சொல்லிவிட்டு, “உனக்கு ஏன் இவ்வளவு பணம் ரஞ்சன்? என்ன தேவை.” என்று கேட்டார் அவர்.
என்ன பதிலைச் சொல்ல முடியும் அவனால்? பொய் சொல்லவும் வராமல் மௌனத்தையே பதிலாகக் கொடுத்தான் ரஞ்சன்.
சந்தானத்துக்கும் முகத்துக்கு நேரே அவனிடம் மறுக்க முடியவில்லை. அதற்காக அவ்வளவு பெரிய பணத்தைக் கொடுக்கவும் முடியாதே. அவரும் என்ன சொல்வது என்று அறியாது அவனையே யோசனையோடு பார்த்திருந்தார்.
கணவனையும் ரஞ்சனையும் பார்த்த லக்ஷ்மிக்கு யோசனையாக இருந்தது. கணவரின் இளகிய மனம் அவர் அறியாதது அல்ல. மறுக்கமுடியாமல் அவர் பணத்தைக் கொடுத்து அவன் ஏமாற்றிவிட்டால்?
ஏமாற்ற வேண்டாம். அவனாலேயே கொடுக்க முடியாத நிலை வந்துவிட்டால்? கொடுத்த பணத்தைத் திரும்பிப் பெறுவதற்காக கோர்ட் கேஸ் என்று அலையமுடியுமா? அல்லது அவன் பின்னால்தான் அலைய முடியுமா? சும்மாவே முடியாமல் இருக்கும் கணவருக்கு எதற்கு வேண்டாத வேலைகள்?
சாதாரண மாரடைப்பு என்று வைத்தியர் சொல்லிவிட்டபோதும், இப்போது சட்டென்று சோர்ந்துவிடும் அவருக்கு சிறு பிரச்சினை தன்னும் உருவாவதில் உடன்பாடு இல்லை. நாளைக்கு அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை எடுத்துப் பார்க்க ஆண்பிள்ளையையா பெற்றிருக்கிறார்கள். எனவே கணவரை முந்திக்கொண்டார் லக்ஷ்மி.
“உனக்கு என்ன தேவையோ தெரியவில்லை ரஞ்சன். ஆனால் அவ்வளவு பணத்துக்கு நாங்களும் எங்கே போவது? இவரின் வைத்தியத்துக்கே காசு நிறையச் செலவாகிவிட்டது. அதோடு, வெளியே போகும் பணம் திரும்பி வராவிட்டால்…” என்றவரை வேகமாக இடைமறித்தான் ரஞ்சன்.
“இல்லை ஆன்ட்டி. நிச்சயமாக நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். என் சம்பளத்தில் மாதாமாதம் நீங்கள் பிடித்துக் கொள்ளலாம். என் வீடும் அங்கிளுக்குத் தெரியும். பிறந்ததில் இருந்து அங்குதான் இருக்கிறேன். அங்கு நீங்கள் யாரிடமும் விசாரிக்கலாம். ஏன், இங்கே மூன்று வருடமாக வேலை செய்கிறேன். யாரையாவது எதற்காவது ஏமாற்றி இருகிறேனா என்று விசாரியுங்கள்.” என்று சற்றுக் கோபமாகவே சொன்னான்.
“நீ ஏமாற்றுவாய் என்று நானும் சொல்லவில்லை ரஞ்சன். உன்னால் திருப்ப முடியாவிட்டால்..? உன் அங்கிளுக்கும் உடம்பு முடியாது. ஒரு பிரச்சினை என்றால் அவரால் முன் போல் அலையவும் முடியாது. ஒரு ஐந்து, பத்து ஆயிரங்கள் என்றால் பரவாயில்லை…” என்றவர், “சரி, ஒரு ஐம்பதாயிரம் வரை என்றாலும் வாங்கிக் கொள். அதைத் திருப்பித் தந்துவிட்டு வேண்டுமானால் பிறகு இன்னொரு ஐம்பதாயிரம் வாங்கிக் கொள்.” என்றார் லக்ஷ்மி.
அவர் என்ன விளக்கம் சொன்னாலும், வெளிப்பூச்சுப் பூசிச் சொன்னாலும் அவர் சொன்னதன் அர்த்தம் இதுதான். அவன் ஏமாற்றினாலோ, அல்லது பணத்தை வாங்கிவிட்டு ஏதாவது பிரச்சினை பண்ணினாலோ அவர்களால் அதற்கு அலைய முடியாது என்கிறார். அதாவது, அந்த இரண்டையும் அவன் செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கிறார். வெட்கிப்போனான் ரஞ்சன்!
அவன் மீது நம்பிக்கை இல்லை என்பதே அவர் இவ்வளவு நேரம் சொன்னதன் சாராம்சம்.
ஏன் நம்பிக்கை இல்லை? அப்படி எதில் உங்களை எமாற்றினேன் என்று கோபத்தோடு கேட்க நினைத்தவனின் மனது அவனைப் பார்த்து எள்ளி நகையாடியது.
உன் அம்மாவே உன்னை நம்பாத போது, அடுத்தவர் நம்பவில்லை என்று எதற்குக் கோபம் வரவேண்டும்?
அதுதானே என்று எண்ணியவனின் மனம் முழுவதும் கசந்து வழிந்தது. அதற்கு மேலும் அவர்கள் முன் நிற்க விரும்பாது, வெளியே செல்லத் திரும்பினான்.
அதுவரை அவன் முகத்தையே பார்த்திருந்த சந்தானம், “கொஞ்சம் நில் ரஞ்சன்.” என்றார்.
அவருக்கு அவன் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. அதற்காக வெறும் நம்பிக்கையின் பெயரில் அவ்வளவு பணத்தைக் கொடுப்பதும்முடியாதுதான். மறுத்துவிட்ட மனைவியின் பேச்சை மீறியும் கொடுக்க விருப்பமில்லை.

