“நாங்கள் வராமல் எப்படி என்பது உனக்கு இன்றுதான் தெரிந்ததா ரஞ்சன்? அல்லது இன்றுதான் திடீரென்று கடையைத் திறந்தாயா? அதனால்தான் உன்னால் எங்களிடம் முதலே சொல்ல முடியவில்லை போல..”
இப்போது என்ன சொல்வது என்று தெரியாமல் ரஞ்சன் அமைதியானான். அதுவும் சில வினாடிகளே!
“நான் சொல்லித்தான் நீங்கள் வரவேண்டும் என்றில்லை அம்மா. வெளியாட்களுக்குத்தான் சொல்லவேண்டும். வீட்டினருக்கு அது தேவையில்லை. அதனால் பின்னேரம் வாருங்கள்.” என்று தாயிடம் மீண்டும் அழுத்தமான குரலில் சொன்னவன், கைபேசியை அணைத்தான்.
வெளியே சென்ற ஜீவனோ, அவர்களின் கடை வாசலைத் தாண்டிச் செல்ல யாரையுமே விடவில்லை.
“அம்மா வாங்க.. அண்ணா வாங்க, அக்கா வாங்க.. தங்கச்சி வாங்க.. புதிதாகக் கடை திறந்திருக்கிறோம். வந்து பார்த்துவிட்டுப் போங்க..” என்று அந்த வீதியால் சென்ற அனைவரையுமே உள்ளே இழுத்தான்.
வெட்கம் பாராது, அப்படிச் செய்யும் நண்பனின் செயலில் நெகிழ்ந்து நின்ற ரஞ்சனுக்கு அதன் பிறகான நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.
சித்ராவுக்கும் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் போகவே, “நான் கிளம்புகிறேன் இதயன். அப்பாவுக்குத் தெரிந்த யாராவது என்னைப் பார்த்தால் வம்பு. கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டேன் என்று அம்மா வேறு கோபத்தோடு இருப்பார். அவரையும் சமாளிக்க வேண்டும்.” என்றபடி கிளம்பிவிட்டாள்.
அவனுக்கும் வந்துகொண்டிருந்த வாடிக்கையாளர்களைக் கவனிக்க வேண்டியிருந்தது. அதோடு,சுகந்தனுக்கு இது புதுத் தொழில் என்பதால், அவனையும் அதற்குப் பழக்கப் படுத்த வேண்டியிருந்தது.
கிடைத்த இடைவெளியில், “என்னடா விஷயம்?” என்று ரஞ்சனின் விழிகளை நேராகப் பார்த்துக் கேட்டான் சுகந்தன்.
அவன் விழிகளைப் பார்க்க முடியாமல் பார்வையைத் திருப்பியவன், “எல்லாம் காரணமாகத்தான்டா..” என்றான் இறுகிய குரலில்.
“காதலைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் ஒரு பெண்ணைக் காதலிக்கக் கூடாது ரஞ்சன். அது உனக்கும் கேவலம். அவளுக்கும் அவமானம்.”
“அதையெல்லாம் பார்க்கும் நிலையில் நான் இல்லை.” என்றான் அவன் அழுத்தமான குரலில்.
அதைக் கேட்ட சுகந்தன் நம்ப முடியாத பார்வை பார்த்தான்.
எதிலுமே நேர்மையை எதிர்பார்க்கும் அவன் நண்பனா இது?
“ஆனால் உன் கண்ணில் காதலை நான் பார்த்தேன். அவளை நீயும் விரும்புகிறாய்..” என்றவனுக்கு எந்தப் பதிலுமே சொல்லாமல் நின்றான் ரஞ்சன்.
அவனையே சிலநொடிகள் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, “நீ மாறிவிட்டாய் ரஞ்சன்..” என்றவனின் குரலில் இருந்தது வேதனையே.
“நானாக மாறவில்லை. என்னை மாற்றிவிட்டார்கள். இனி நானாக நினைத்தாலும் மாறமுடியாது!”
“சும்மா சாட்டுச் சொல்லாதே. நீ நினைக்க விரும்பவில்லை என்று சொல்!”
“அப்படியும் வைத்துக் கொள்ளலாம்!”
“நீ எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள். ஆனால், ஒரு பெண்ணின் பாவத்தைச் சம்பாதிக்காதே! அதுவும் சித்ரா.. பாவம்டா. மிகவும் நல்ல பெண்.” என்றவனை ஏளனமாக நோக்கின ரஞ்சனின் விழிகள்.
“என்னடா? உன் நண்பன் நான் கெட்டவனாகி விட்டேன். இன்று ஒருநாள் பார்த்த அவள் நல்லவள் ஆகிவிட்டாளா? அந்த நல்லவளைத்தான் ஏதாவது செய்யவேண்டும் என்று அன்று நீயும் ஜீவனும் வரிந்து கட்டிக்கொண்டு வந்தீர்கள். மறந்துவிட்டதா?”
“அன்று அவள் செய்தது பிழை. அதற்காக ஆத்திரப் பட்டோம். இன்று நீ செய்வது பிழை. அதுதான் உன்மீது கோபப் படுகிறேன்.”
“அன்று அவள் செய்த பிழைக்குப் படிப்பினை வேண்டாமா?”
“என்னடா சொல்கிறாய்?” என்று அதிர்ச்சியோடு கேட்டான் சுகந்தன்.
அவன் நண்பன் நெஞ்சில் வஞ்சம் வைத்துப் பழிவாங்கும் அளவுக்குக் கெட்டவனா? அதுவும் ஒரு பெண்ணை? நம்ப முடியவில்லை அவனால்.
“நானாக எதுவும் செய்ய நினைக்கவில்லை. அவளாக வந்து மாட்டிக் கொண்டாள். அதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.” என்றான் அவன் அசட்டையாக.
“அவளாக வந்தால் எதையும் செய்வாயா நீ?” என்று கோபத்தோடு கேட்டவனிடம், “இதைப் பற்றி இதற்கு மேல் எதுவும் கதைப்பதற்கு இல்லை சுகந்தன். முன்னெடுத்து வைத்த காலை இனி நான் பின்னெடுப்பதாக இல்லை. இனி எதையும் யோசிப்பதாகவும் இல்லை. நான் முன்னேற வேண்டும். இதுதான் என் தேவை. அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். முடிந்தவரை நேர்வழி. முடியவில்லையா, எந்த வழியானாலும் சரிதான். போய்ச் சேருமிடம் நான் நினைத்த இடமாக இருந்தால் சரிதான்.” என்றவன், அதற்குமேல் சுகந்தனிடம் எதுவுமே கதைக்கவில்லை.
சுகந்தன் மூலம் அனைத்தையும் அறிந்து கதைக்க வந்த ஜீவனிடம் பிடிகொடுக்கவில்லை அவன்.
“சரி! எதையும் வாயைத் திறந்து சொல்லாதே! உன்னோடே வைத்துக்கொள்! ஆனால், கடை திறப்பது பற்றி யாருக்கும் தெரியாது என்றாய், பிறகு எப்படி அவள் வந்தாள்?” என்று சுகந்தன் கேட்டபிறகே, ரஞ்சனுக்கும் அந்தக் கேள்வி தோன்றியது.
சிறிது யோசித்துவிட்டு, “கண்ணன் அண்ணாவிடம் கேட்டிருப்பாள். அவர் என் நண்பர்கள் கடை திறப்பதாகவும், நான் அதற்குப் போயிருப்பதாகவும் சொல்லியிருப்பாராய் இருக்கும்..” என்றவனுக்கு, இல்லையே என்று தோன்றியது.
அங்கே பின்னறையில், அவனைக் கட்டியபடி வாழ்த்தினாளே ‘இந்தக் கடையும் நீங்களும் இன்னும் முன்னுக்கு வரவேண்டும்’ என்று.. அது எப்படி? அவளுக்கு இது அவன் கடை என்று தெரியுமா? கண்ணன் அண்ணா சொல்லியிருப்பாரா? இருக்காதே! அப்படி அவர் பேச்சு மாறுகிறவர் அல்லவே!’
அல்லது நண்பர்களோடு அவனையும் வாழ்த்தினாளா?
குழம்பி நின்றவன் அதைத் தெரிந்துகொள்ள அவளிடம் கேட்கவேண்டும் என்று நினைக்கவே இல்லை. அதுவே அவனது திட்டங்களுக்குத் தடையாக வந்துவிட்டால்?
ஏதோ, அவள் வந்த வரையில் மகிழ்ச்சி. அதுவே போதும் என்று தன்னைச் சமாளித்துக் கொண்டவன், அதுபற்றியும் நண்பர்களிடம் வாய் விடவில்லை.
நினைவுகளில் இருந்து வெளி வந்தவனுக்கு, அவன் செய்வது சரிதானா என்கிற கேள்வி எழுந்தது.
அந்தக் கேள்வியே அவனைப் புரட்டிப் போடப் பார்க்க, தலையை உலுக்கி அதில் இருந்து வெளியே வந்தான் ரஞ்சன்!
அது சரியோ பிழையோ, இப்போதைக்கு அந்த முடிவு அவனுக்குச் சரியானதே! சாதகமானதே! அந்தளவும் போதும்.
அடுத்து நடப்பதை நடக்கும்போது பார்க்கலாம் என்று, எதற்கும் தயாராகியது அவன் மனது!
ஒரு முடிவுடன் கைபேசியில் மீண்டும் இலக்கங்களை அழுத்தியவன், இரண்டரை லட்சங்களுக்கு செருப்புக்களை ஆர்டர் கொடுத்தான்.
அடுத்தநாள் மனைவியுடன் வந்த சந்தானம் அந்த வாரத்து வியாபாரப் பணமான மூன்றரை லட்சங்களை எப்போதும் போல் வங்கியில் வைப்புச் செய்யும்படி அவனிடம் கொடுத்தார்.
அதைப் பெற்றுக் கொண்டவன் நேரே சென்றது தன் கடைக்கே.
அங்கே சுகந்தனை உள்ளறைக்கு அழைத்துச் சென்றவன், வியாபாரப் பணத்திலிருந்து ஐம்பதினாயிரமும் சந்தானத்தின் பணத்திலிருந்து இரண்டு லட்சங்களையும் எடுத்து மொத்தமாகக் இரண்டரை லட்சங்களை அவனிடம் கொடுத்தான்.

