என் சோலைப் பூவே 13 – 2

அந்த மாதமும் முடியும் முன்னரே திரும்பவும் எடுத்த பணத்தை மீண்டும் வைப்புச் செய்தான் ரஞ்சன்.

 

அவன் கடையில் இலாபமும் வரவர சந்தானத்திடம் எடுக்கும் பணத்தின் அளவு குறைந்துகொண்டே சென்றது.

 

மூன்றாவது மாதம் எண்பது ஆயிரங்கலாகக் குறைந்தது அவரிடம் அவன் எடுத்து மீண்டும் வைத்த பணத்தின் தொகை.

 

அடுத்த மாதத்தில் இருந்து எடுக்கத் தேவையில்லை என்று எண்ணியபடி இருந்தவனை, அந்த வார இறுதியில் வந்த சித்ராவின் விழிகள் யோசனையுடன் தழுவின. யோசனையை மட்டுமல்ல, இன்னும் பல பாவங்களைத் தாங்கி நின்றன அவள் விழிகள்.

 

முதலில் அதைக் கவனிக்காதபோதும் அவளது பார்வையில் இருந்த வித்தியாசத்தை விரைவாகவே கண்டுகொண்டான் ரஞ்சன்.

 

எப்போதும் அவள் விழி வழி வரும் செய்திகளைத் தெளிவாக விளங்கிக் கொள்பவனால் அன்று அவளது பார்வையின் அர்த்தத்தைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

 

அதை அலட்சியப் படுத்தப் பார்த்தவன் முடியாமல் ஒரு கட்டத்தில் என்னவென்பதாக விழிகளாலேயே அவளிடம் கேட்டான்.

 

அதை எதிர்பாராத சித்ரா சட்டென்று தடுமாறிப்போனாள். அவன் விழிகளைப் பாராது ஒன்றுமில்லை என்பதாகத் தலையை அசைத்துவிட்டு தந்தையின் அறைக்குள் சென்றுவிட்டாள்.

 

ரஞ்சன் ஒருநொடி அப்படியே நின்றுவிட்டான். ஒருநாளும் இல்லாத அவளின் அந்தச் செயல் அவனிடம் ஒருவிதப் படபடப்பையும், பதற்றத்தையும் தோற்றுவித்தது.

 

குற்றம் செய்த நெஞ்சு குறுகுறுக்கும் அல்லவா! அவனுள்ளம் பலதையும் எண்ணிக் கலங்கியது. அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், முதன்முறையாக அவனாக அவளுக்கு அழைத்தான்.

 

அழைப்புப் போய்க்கொண்டே இருந்தது.

 

என்னவாகிற்று அவளுக்கு.. என்று அவன் சிந்தனை ஓட, “ஹ..லோ…” என்றது அவள் குரல், அழைப்பு நிற்கும் தருவாயில்.

 

“ஏன்டி இவ்வளவு நேரமாக எடுக்கவில்லை..” இருந்த பதட்டத்தில் பாய்ந்தான் ரஞ்சன்.

 

“அது.. அப்பா..”

 

“ஓ.. அங்கிள் அருகில் நிற்கிறாரா?” என்று கேட்டவன், “அவரைவிட்டுத் தள்ளி வா..” என்றான்.

 

“ம்.. சரி…”

 

அப்போதுதான் அவள் குரலில் இருந்த ஒதுக்கத்தையும், சுருக்கமாக வரும் பதில்களையும் கண்டுகொண்டான் ரஞ்சன். வார்த்தைக்கு வார்த்தை அவள் சேர்க்கும் ‘இதய’னை காணோம்.

 

இது அவள் இயல்பில்லையே!

 

அவனாக ஒருநாளும் அவளைத் தேடி அழைப்பதில்லை என்று எப்போதும் குறைபடுபவள், இன்று அவன் அழைத்தும் இப்படிக் கதைக்கிறாள் என்றால்.. என்னவோ பிரச்சினை என்பது உறுதியாகியது.

 

“யாழி! ஏன் ஒருமாதிரி இருகிறாய்?”

 

“இல்லையே.. அப்படி ஒன்றுமில்லையே.”

 

“பொய் சொல்லாதே! உன் பார்வையே பிழையாக இருந்தது. அதோடு இவ்வளவு நேரமாக என்னோடு கதைக்கிறாய், இன்னும் ஒருதடவை கூட நீ என் பெயரைச் சொல்லவில்லை. என்னடி? என்ன பிரச்சினை? சொன்னால் தானே எனக்குத் தெரியும்?” படபடத்தான் அவன்.

 

“அதுதான் ஒன்றுமில்லை என்கிறேனே..” ஓரளவுக்குத் தன்னை சமாளித்துக்கொண்டு சொன்னாள்.

 

“இல்லை. ஏதோ இருக்கிறது. நீ முதலில் மேலே ‘ஸ்டோர் ரூம்’க்கு வா. உன்னோடு நேரில் கதைக்கவேண்டும்.”

 

“அது.. அப்பா இருக்கிறார்.. நான் வீட்டுக்குப் போகவேண்டும்..” என்று, எதையெதையோ தடுமாறிச் சொன்னாள் சித்ரா.

 

ரஞ்சனுக்கு கண்மண் தெரியாத ஆத்திரம் வந்தது. யாரின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு நினைத்ததைச் செய்து முடிக்கும் இயல்புள்ளவள் அவள். அப்படியானவள் ‘அப்பா இருக்கிறார்’ என்று சொன்னதை நம்ப முடியவில்லை.

 

ஏனோ அவனை அவள் தவிர்க்கிறாள் என்பது விளங்கவே, அவளை இழுத்துவைத்து அறைந்தால் என்ன என்று கூடத் தோன்றியது. ஆத்திரத்தில் கைபேசியை பட்டென்று அணைத்துவிட்டான்.

 

அந்தப் பக்கம் இருந்த சித்ராவுக்கு விழிகள் நீரால் நனையப் பார்த்தது. இமைகளைப் படபடவென்று கொட்டி விழி நீரைத் தடுத்தவளுக்கு, நெஞ்சில் எழுந்த வலியை அடக்கும் வழி தெரியாமல், நெஞ்சை இரண்டு கையாளும் அழுத்திக் கொண்டாள்.

 

குளியலறைக்குச் சென்றுவிட்டு அறைக்குள் வந்த சந்தானம், மகளை அப்படிப் பார்த்ததும் பதறிவிட்டார். “சித்தும்மா.. என்னடா? என்ன செய்கிறது?” என்று பதறியபடி அவர் அருகில் வரவும், முதலில் என்ன சொல்வது என்று தெரியாது தடுமாறி, “அது.. அது வி..விக்கல் அப்பா..” என்றாள் ஒருவழியாக.

 

“அதற்கு ஏனம்மா கண்கள் கலங்கி இருக்கிறது, முகமும் சோர்ந்து தெரிகிறது..” மகளின் பதிலில் திருப்தியுறாமல் கேட்டார் அவர்.

 

“அது விக்கலும் இருமலும் சேர்ந்து வந்துவிட்டதப்பா.. அதுதான். நீங்கள் பதறாதீர்கள்.” என்றாள், தன்னை ஒருவழியாகச் சமாளித்து.

 

அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக் கொடுத்தார் மகளிடம். “விக்கலுக்குத் தானா இந்தப்பாடு.. நீ இருந்த விதத்தைப் பார்த்ததும் என்னவோ ஏதோ என்று பதறிவிட்டேன்..” என்றவரின் கை, தண்ணீரைப் பருகிய மகளின் தலையை வருடிக் கொடுத்தது.

 

அந்தப் பரிவிலும் கண்ணைக் கரித்தது சித்ராவுக்கு. இன்னுமின்னும் தண்ணீரை அருந்தி தன்னைச் சமாளித்துக் கொண்டாள். “வீட்டுக்குப் போவோமா அப்பா. எனக்கு போரடிக்கிறது..”

 

ஒரு நாளும் இல்லாமல் அன்று அவள் அப்படிக் கேட்டது வியப்பாக இருந்தபோதிலும், மகளின் வாடிய முகம் கருத்தில் பட, “சரி, வா போகலாம்..” என்றவர், அவளையும் அழைத்துக் கொண்டு காருக்கு நடந்தார்.

 

கடையினூடாக நடந்து வெளியே செல்லும் வரையிலும் சித்ராவின் தலை நிமிர்ந்தே இருந்தபோதும், அவள் விழிகள் அக்கம் பக்கம் என்று எந்தப் பக்கமும் பாராது நேர் பார்வையாகவே இருந்தது.

 

தன்னை யாரோ.. யாரோ என்ன யாரோ, ரஞ்சனின் விழிகள் துளைப்பதை அவள் உணராமல் இல்லை. ஆனாலும் அவனைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அப்படியே காரில் ஏறிச் சென்றுவிட்டாள்.

 

போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் ஆத்திரத்துக்கு அளவே இல்லாமல் ஏறிக்கொண்டே சென்றது.

 

இனி அவளோடு கதைக்கவே கூடாது! அவளாக வந்தாலும் முகம் பார்க்கக் கூடாது! என்னை எப்படி அலட்சியப் படுத்தினாளோ அப்படி அவளையும் தூக்கி எறியவேண்டும்!

 

இப்படி பல உறுதிகளை உடனேயே எடுத்தது அவன் மனம்.

 

மனதில் இருந்த ஆத்திரத்தின் வடிகாலாக வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்ய ஆரம்பித்தான். நேரம் செல்லச் செல்ல, கோபம் அவன் கட்டுக்குள் வரவர, மீண்டும் ஏன் என்னுடன் கதைக்காமல் போனாள்.. அப்படிப் போகமாட்டாளே.. என்கிற கேள்விகள் உதயமாகத் தொடங்கின.

 

அவளின் அந்தப் புறக்கணிப்பு அவனைத் தாக்கினாலும், ஒருபக்கம் ஒருவிதப் பதட்டமும் இல்லாமல் இல்லை. அடுத்தடுத்த நாட்கள் அந்தப் பதட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட்டு, நடப்பதை நடக்கும்போது கண்டு கொள்ளலாம் என்கிற தெளிவுக்கு மீண்டும் வந்திருந்தான் அவன்.

 

அதோடு, என்ன நடந்தாலும் அவன் கடைக்கு இனி எந்தப் பாதிப்பும் வராது என்பது வேறு தெம்பைக் கொடுத்தது.

 

அப்படியே அந்த வார இறுதியும் வந்துசேர்ந்தது. ஆனால், சித்ராதான் வரவில்லை. அவன் விழிகள் அடிக்கொரு தரம் கடையின் வாசலைப் பார்த்து ஏமாந்தது. உங்களோடு கதைக்காமல் என்னால் இருக்கமுடியாது என்று சொன்னவளுக்கு என்னவாகிற்று?

 

அவனே ஒதுக்கி வைக்க நினைத்தபோது, விடாது அவனை நெருங்கியவளின் இன்றைய விலகலுக்கான காரணம் என்ன? திரும்பவும் கோபம் வந்தது. அந்தத் திமிர் பிடித்தவளுக்கு இவ்வளவு பிடிவாதாமா என்று ஆத்திரப் பட்டான்.

 

அவளுக்கு அழைத்துப் பார்க்கலாமா என்றுகூட நினைத்தான். அவனுக்குள் இருந்த பிடிவாதக் குணம் அதற்குத் தடையாக நின்றது.

 

இப்படியே அந்த வாரமும் ஓடிப்போக, அந்தச் சனிக்கிழமையும் மதியம் வரை அவள் வருவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

 

அந்த ஏமாற்றம், சினத்தையும் ஆத்திரத்தையும் கொடுக்க, மேலே ஸ்டோர் ரூமுக்குச் சென்று புதிதாக வந்திறங்கிய ஷூக்களை ஒவ்வொரு பெட்டிகளுக்குள்ளும் அடைக்கத் தொடங்கினான்.

 

 

 

error: Alert: Content selection is disabled!!