பணம் வந்தால், வசதி மட்டுமல்ல பிரிந்துபோன சொந்த பந்தமும் அல்லவா வந்து ஒட்டிக்கொள்ளும்.
அப்படி, இந்த ஒரு வருடத்துக்குள் அவனது சொந்தங்களும், ‘நீயும் எங்கள் அண்ணாவைப் போல் கெட்டிக்காரன் என்று எங்களுக்குத் தெரியும் ரஞ்சன். நன்றாக வருவாய் என்று நினைத்தோம், அப்படியே வந்துவிட்டாய்..’ என்பதை வேறுவேறு விதமாகச் சொல்லிக்கொண்டே வந்து ஒட்டிக் கொண்டார்கள்.
மனதில் வெறுப்பு நிரம்பிக் கிடந்தாலும், அவனது லட்சியமே அவர்கள் பார்க்க வாழ்ந்து காட்டவேண்டும் என்பதுதானே. அதனால், அவனும் அவர்களை ஏற்றுக் கொண்டான். அதோடு, அவர்கள் வந்து சேர்ந்ததும் நித்யாவினதும் தாயினதும் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் பெருமையும் கூட அவன் வாயை அடைத்தது.
இது எல்லாவற்றையும் விட அவனது தந்தை வெங்கடேசனின் ஆசையே அவன் அவர்களைச் சேர்த்துக் கொண்டதற்குப் பெரும் காரணமாக அமைந்தது.
அவனது சின்னத்தை சுசீலாவின் மகன் நவீனுக்கு நித்யாவைக் கொடுக்க வேண்டும் என்பது அவரது ஆசை. சிறுவயது முதலே சகோதரர்களுடன் ஒன்றாகவே வாழ்ந்தவர், அந்த உறவு விலகிவிடக் கூடாது என்பதற்காகவே சாதனாவை ரஞ்சனுக்கும் நித்யாவை நவீனுக்கும் என்று முடிவு செய்திருந்தார்.
அவரின் மறைவும், சொத்துக்களின் இழப்பும் அனைத்தையும் மாற்றிவிட்டபோதும், இன்று பழைய நிலைமைக்குத் திரும்பிக்கொண்டிருந்த ரஞ்சனுக்கு, தந்தையின் ஆசையை நிறைவேற்றக் கிடைத்த சந்தர்ப்பத்தை விட விருப்பமில்லை.
அவனால்தான் அவர் ஆசைப்பட்டது போன்று வைத்தியர் ஆகவும் முடியவில்லை. சாதனாவை மணக்கவும் முடியவில்லை. தங்கையின் மூலமாவது அவரின் ஆசையை நிறைவேற்ற எண்ணியிருந்தான்.
ஆனாலும், அவர்கள் ரஞ்சனின் வீட்டுக்கு வந்து போனபோதும், அவன் தாயும் தங்கையும் அவர்களின் வீடுகளுக்குப் போய்வந்த போதும் அவன் ஒருநாளும் அவர்கள் யாரின் வீடுகளுக்கும் சென்றது இல்லை.
எல்லோரும் ஒன்றாகக் கூடியிருக்கும் வேளையில் சாதனாவை சுபேசனுடன் கண்டிருக்கிறான். ஆனால், பேச முயற்சித்ததும் இல்லை, அவளாகப் பேச வந்தாலும் விலகிவிடுவான்.
அப்படியிருக்க, எதற்குக் கடைக்கு வருகிறேன் என்கிறாள் என்று ஓடியது அவன் சிந்தனை.
அமைதியாக வந்தவனிடம், “யார் இதயன்? உங்கள் அத்தையா? என்னவாம்..” என்று கேட்டாள் சித்ரா.
“ம்.. நாளைக்குக் கடைக்கு வருகிறார்களாம்..” என்றான் சுருக்கமாக.
அவர்களின் திருமணத் திட்டங்கள் எதுவும் தெரியாத போதும், ஜீவனின் உபயத்தால் அவன் சொந்தங்கள் முதலில் அவனை ஒதுக்கியதும் இப்போது விழுந்து பழகுவதையும் அறிந்திருந்த சித்ராவும் அதற்கு மேல் எதையும் துருவவில்லை.
ரஞ்சனின் வண்டி நகைக்கடைகள் பரவலாக இருக்கும் வீதிக்குள் செல்வதைக் கண்டவள், “இங்கே ஏன் இதயன்?” என்று கேட்டாள்.
அவள் கேள்விக்குப் பதிலைச் சொல்லாமல், வண்டியை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு அவளோடு அங்கிருந்த நகைக் கூடத்துக்குள் நுழைந்தான் அவன். அவளிடம் ஒன்றையும் கேட்காது தானே நகைகளை ஆராய்ந்தான்.
“என்னமாதிரியான நகை பார்க்கிறீர்கள்?” என்று கேட்ட பணியாளரிடம், “மோதிரம்.. பெண்களுக்கானது காட்டுங்கள்.” என்றான்.
அதைக் கேட்டவளுக்கு மனதில் பெரும் சந்தோசமே எழுந்தது. அவளது பிறந்தநாளுக்குப் பரிசளிக்க அல்லவா பார்க்கிறான்.
போனவருடம் வாழ்த்துச் சொல்லவே மறுத்தவன், இன்று நகை வாங்கித் தருகிறான் என்பது அவனது காதலை அல்லவா காட்டுகிறது.
மலர்ந்த விழிகளால் அவள் அவனைப் பார்க்க, அவனோ தீவிரமாக மோதிரங்களை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
அவனோடு சேர்ந்து அவளும் அவற்றை விழிகளால் அலச, அங்கிருந்த ஒரு மோதிரம் அவளைப் பெரிதும் கவர்ந்தது.
இரண்டு கரங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்த இரு இதயங்களைத் தாங்கி நிற்பது போன்று அமைந்திருந்த அந்த மோதிரத்தை அவன் எடுப்பான் என்று ஆவலோடு அவள் காத்திருக்க, பூக்கொடி போன்று அமைக்கப்பட்டிருந்த வேறு ஒரு மோதிரத்தைத் தேர்ந்தெடுத்தான் ரஞ்சன்.
அவள் நினைத்ததை அவன் எடுக்காததில் மனம் ஏமாற்றத்தில் சுருண்ட போதும், அவன் எடுத்திருந்த மோதிரமும் கண்ணைப் பறித்தது.
எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாத அழகான மோதிரம் தான். ஆனாலும், காதல் கொண்ட மனங்களுக்குப் பொருத்தமாக வேறொரு மோதிரம் இருக்க, அவன் ஏன் அதை எடுத்தான்?.
ஆனாலும், முதன்முதலாக அவளுக்குப் பரிசளிக்கப் போகிறான். அந்தப் பரிசு அவனுக்குப் பிடித்ததாகவே இருக்கட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு அவள் காத்திருக்க, அவனோ பணியாளரிடம் இப்போது, “காப்பு(வளையல்) காட்டுங்கள்.” என்றான்.
‘எனக்கு எதற்கு காப்பு..’ என்று தோன்றியபோதும், அது அவளுக்கு என்று அவனாக வாயைத் திறந்து சொல்லவில்லையே .. அவன் தங்கைக்காக இருந்தால்?
எனவே அவனாகச் சொல்லட்டும் என்று காத்திருந்தாள்.
காப்புகளைத் தெரிவு செய்தவன், தங்கச் சங்கிலியையும் தெரிவு செய்து நெக்லஸ் பக்கம் செல்லவும், அவையெல்லாம் அவன் தங்கைக்குத்தான் என்பது அவளுக்குத் தெளிவாகியது.
எனவே உற்சாகமாக அவளும் தேர்வில் ஈடுபட்டாள்.
அப்படியே கைச்சங்கிலி(ப்ரேஸ்லெட்) என்று மொத்தமாக அவன் எடுத்த நகைகளின் பெறுமதி மூன்று லட்சங்களை நெருங்கியது.
அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தபிறகும் கூட இவ்வளவு நகையும் யாருக்கு என்று அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.
அப்படியே அங்கிருந்த ஹோட்டலுக்கு அவன் செல்லவும், அவனைப் பின்தொடர்ந்தவள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடித்தான் போனாள்.
அம்மாவின் கண்ணில் படமுதல் வெளியேறும் வேகத்தில் காலை உணவைத் தியாகம் செய்திருந்தவளுக்கும் ஏதாவது உண்டால் நன்றாக இருக்குமோ என்று தோன்றிக் கொண்டுதான் இருந்தது.
அதை அவளாகச் சொல்ல முதலே அவனாக உணர்ந்துகொண்டது அவளை நெகிழ்த்தியது என்றால், அவனோடு சேர்ந்து உண்ணப் போகிறாள் என்பது வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவு ஆனந்தத்தைக் கொடுத்தது.
அங்கே ஹோட்டலில் உட்பக்கமாக இருந்த மேசையில் அருகருகே அமர்ந்து கொண்டார்கள்.
“உங்களுக்கு உங்கள் தங்கையை நிறையப் பிடிக்குமா இதயன்?” என்று கேட்டாள் சித்ரா.
இதையேன் இப்போது கேட்கிறாள் என்பதாகப் பார்வையைச் செலுத்திவிட்டு, “யாருக்குத்தான் தன் தங்கையைப் பிடிக்காது?” என்றான் அவன்.
“அதுதான் இவ்வளவு நகையும் வாங்கினீர்களா?”
வியந்த பார்வையை அவள் புறம் திருப்பியவனின் உதடுகளில் புன்னகை மெல்ல மலர்ந்தது. “உன்னிடம் யார் சொன்னது இதெல்லாம் நித்திக்கு வாங்கினேன் என்று..?”
“பின்னே யாருக்கு? ஆன்ட்டி போடுவது மாதிரியான நகைகள் இல்லையே இது.. இளம் பிள்ளைகள் போடுவது மாதிரித்தானே எடுத்தோம்..” என்றவளின் குரலில் குழப்பம் நிரம்பிக் கிடந்தது.
அவள் முகத்திலேயே பார்வையைப் பதித்திருந்தபோதும், சில நொடிகளை மௌனத்திலேயே கழித்தான்.
பிறகு, “இவையெல்லாம் பிறந்தநாள் பரிசாக உனக்கு நான் வாங்கியவை..” என்றவன், தன் கையில் இருந்த பையை மேசையில் இருந்த அவள் கரங்களுக்குள் வைத்தான்.
அதைக் கேட்டவளின் முகம் முதலில் அதிர்ச்சியைக் காட்டியது. பின்னர் புருவங்கள் யோசனையாகச் சுருங்கின. விடையைக் கண்டுகொண்டவளின் முகம் வேதனையையும் கோபத்தையும் பிரதிபலித்தது.
இறுதியாக உறுதி பூண்ட முகத்துடன், ஒருகையால் அந்தப் பையை அவன் புறமே தள்ளிவைத்தாள். “இதெல்லாம் எனக்கு எதற்கு இதயன்? என்னிடம் இதைப்போல நிறைய இருக்கிறது.” என்றாள், உணர்ச்சிகளைத் துடைத்த குரலில்.
அதுவரை அவள் முகத்தில் மாறிமாறி வந்த பாவங்களைக் கவனித்துக்கொண்டே இருந்த ரஞ்சனும், “உன்னிடம் இல்லை என்று நான் சொன்னேனா? இது நான் தரும் பரிசு. வைத்துக்கொள்.” என்றபடி, அவளிடம் அந்தப் பையைத் திரும்ப நீட்டினான்.

