என் சோலைப் பூவே 19 – 2

 

“அதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாமா? இப்போது அவன் அங்கு வேலை செய்யவில்லையே. பிறகு என்ன? இவ்வளவு உரிமையாக விளக்கை ஏற்றுகிறாள், திருநீறைப் பூசிவிடுகிறாள். ரஞ்சன் ஒன்றும் சொல்லாமல் நிற்கிறான். என்னதான் நடக்கிறது இங்கே? அதுசரி. எங்கள் அண்ணா இல்லைதானே. யார் என்ன ஆட்டம் ஆடினாலும் கேட்பதற்கு ஒருவரும் இல்லை என்கிற திமிர்.” என்று ரஞ்சனைச் சாடினார் மல்லிகா.

 

அதைக் கேட்ட இராசமணிக்கு ஊமையாக நிற்கும் மகனின் மேல் படு பயங்கரமாகக் கோபம் வந்தது.

 

“வாயைத் திறந்து பதிலைச் சொல்லேன் ரஞ்சன். எதற்கு இப்படி ஒன்றுமே சொல்லாமல் நிற்கிறாய்.” என்றவரை, ஆத்திரத்துடன் இடை மறித்தது சாதனாவின் குரல்.

 

“அதெப்படி அத்தை வாயைத் திறப்பார்? ஊருக்கு என்னையும் உள்ளுக்கு அவளையும் வைத்திருக்க நினைக்கிறார் போல. அந்தப் பெண்ணோடு ரஞ்சன் மச்சானை முதலே நானும் கண்டிருக்கிறேன். ஸ்கூட்டியில் ஒன்றாகப் போனார்கள்.” என்று, அன்று கண்டதை சொன்னாள் சாதனா.

 

அவளின் பேச்சில் சினம் தலைக்கேற, “வாயை மூடு!” என்று உறுமினான் ரஞ்சன்.

 

“என்னை எதற்கு அதட்டுகிறீர்கள்? நான் சொன்னது பொய் என்று சொல்லுங்கள் பார்ப்போம்..” என்றாள் சாதனா சவாலாக, அவன் உறுமலுக்கு அடங்காது.

 

நடப்பவற்றை நகுலனும் அவன் குடும்பத்தாரும் வேடிக்கை பார்ப்பதைக் கவனித்துவிட்டு, “எல்லோருக்கும் முன்னால் நம் வீட்டு விசயத்தைக் கடை பரப்பாமல் வாயை மூடிக்கொண்டு இரு!” என்று பற்களுக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் ரஞ்சன்.

 

அதற்கு மேலும் அங்கேயே நின்று வார்த்தைகளை வளர்க்காமல், ‘எல்லாம் இவளால் வந்தது!’ என்று ஆத்திரத்தோடு சித்ராவை நோக்கி அவன் கோபத்தோடு செல்ல, “பாருங்கள் அத்தை உங்கள் மகனை. அவளை ஒன்றும் சொல்லவில்லை. என்னைத் திட்டுகிறார்..” என்று இராசமணியிடம் முறையிட்டாள் சாதனா.

 

“நான் வீட்டுக்குப் போகிறேன்..” என்று அழுதபடி வெளியே ஓடினாள்.

 

“உங்கள் மகனின் கடைத் திறப்புவிழாவுக்கு வந்ததற்கு நல்ல பரிசு தந்துவிட்டீர்கள்.” என்றார் தேவன்- சாதனாவின் தந்தை.

 

“இனியும் எதற்கு இங்கே நிற்கிறாய்? அவமானப் பட்டது போதாதா?” என்றுவிட்டு அவர் வெளியேற, இராசமணியை முறைத்துவிட்டுக் கணவரைப் பின் தொடர்ந்தார் மல்லிகா.

 

அவர்களோடு அங்கிருந்த சொந்தம் முழுவதும் ஒவ்வொரு குத்தல் மொழிகளுடன் ஒட்டு மொத்தமாகக் கடையை விட்டு வெளியேறினர்.

 

போகிற போக்கில் நவீனும் நித்யாவை முறைத்துவிட்டுப் போக, அவளுக்கு அழுகை வந்தது. “பாருங்கம்மா, இந்த அண்ணாவால் நவீன் என்னை முறைத்துவிட்டுப் போகிறார்.” என்றாள் அழுகையோடு.

 

ஆத்திரத்தோடு இராசமணி ரஞ்சனை நோக்கித் திரும்ப, சித்ரா ஒரு சோடிச் செருப்புக்களை அவன் கையில் கொடுப்பதும், அதை வாங்காமல் அவன் என்னவோ கோபத்தோடு அவளிடம் சொல்வதும் தெரிந்தது.

 

அங்கே ரஞ்சனோ, “இங்கே எதற்கு வந்தாய்? உன்னை வா என்று நான் அழைத்தேனா?” என்று வெறுப்போடு சித்ராவிடம் கேட்டான்.

 

அதைக் கேட்டவளின் விழிகளில் கண்ணீரோடு வேதனையும் நிரம்பியது. ஆனாலும் அவள் பார்வை தளரவில்லை. “நீங்கள் என்னை அழைக்கத் தேவையே இல்லை இதயன். அந்தளவுக்கு நானும் நீங்களும் வேறு வேறல்ல.” என்று நிதானமாகச் சொன்னவள், “இந்தச் செருப்புக்கு பில்லைப் போடுங்கள்.” என்றாள் கையிலிருந்ததைக் காட்டி.

 

“மதியாதார் வாசல் மிதிக்கக் கூடாது என்கிற நாகரீகம் கூடவா தெரியாது உனக்கு? கதவு திறந்திருந்தால் எங்கு வேண்டுமானாலும் எதையோபோல் நுழைவாய் போல!” என்றான் அவன்!

 

விலுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் இதயத்தை அவன் வார்த்தைகள் மிகச் சரியாகச் சென்று தாக்கின.

 

விரக்திப் புன்னகையோடு, “நாகரீகமா?” என்று கேட்டவளுக்கு, அவன் நடந்துகொண்ட முறை அனைத்தும் நாகரீகத்தில் சேர்த்தியா என்கிற கேள்வி எழுந்தது.

 

இல்லையே என்று எண்ணியதுமே அவள் குரல் மீண்டும் திடம் பெற்றது. “நாகரீகம் பார்த்தால் என் வாழ்க்கை நாசமாகிவிடும்.” என்று தலையை நிமிர்த்தியே உரைத்தவள், ஒரு தொகைப் பணத்தை அவன் கையில் திணித்துவிட்டு, “வருகிறேன்..” என்றபடி கடையை விட்டு வேகமாக வெளியேறினாள்.

 

வெஞ்சினம் கொண்ட அவன் விழிகள் அவளை உறுத்ததையோ, சினத்தால் அவன் வெகுண்டதையோ உணராமல் சென்றவளின் நெஞ்சம் ஆறா வடுவைச் சுமந்திருந்தது.

 

இனி என்ன செய்யப் போகிறாள்? அவள் வயிற்றில் வளரும் குழந்தையின் நிலை என்ன? அவளோடு சேர்ந்து அதுவும் பழியைச் சுமக்கப் போகிறதா? இதற்கு அது ஜனிக்காமலேயே இருந்திருக்கலாம்.

 

எல்லோர் முன்னாலும் வீராப்பாக நடந்து கொண்டாலும், எப்படி என் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறேன் என்று எண்ணியவளுக்குக் கண்ணீர் மட்டுமே பதிலாகக் கிடைத்தது.

 

ஸ்கூட்டியை ஓட்டக் கூட முடியாத அளவுக்கு உடலும் மனமும் வலுவிழந்து கிடக்க, ஒருவழியாக வீட்டுக்கு வந்துசேர்ந்தாள் சித்ரா.

 

அங்கே அடக்கமுடியாத ஆத்திரம், அழுகை, கோபத்துடன் மகளின் வரவுக்காகக் காத்திருந்தார் அவள் தாயார்.

 

என்றுமில்லாது அன்று சோபாவில் அமர்ந்தபடி வாசலையே பார்த்திருந்த தாயாரும், ஆத்திரத்தில் கனன்று கொண்டிருந்த அவரின் முகமுமே விஷயம் அவருக்குத் தெரிவிக்கப் பட்டுவிட்டதை சித்ராவுக்கு உணர்த்தியது.

 

சொல்லொணா துயரம் தாங்கிய விழிகளால் தாயாரைக் குற்ற உணர்ச்சியோடு அவள் பார்க்க, ஆவேசத்துடன் எழுந்து வந்த லக்ஷ்மி, “லதா சொன்னது உண்மையா?” என்று கேட்டார்.

 

அவர் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை தாழ்ந்தபோதும், ஆம் என்பதாக ஆடியது அவள் தலை.

 

அவ்வளவுதான்! பத்ரகாளியாக மாறிப்போனார் லக்ஷ்மி.

 

அவளின் தலைமுடியைக் கொத்தாகப் பற்றி கன்னம் கன்னமாக அறைந்தார். “சொன்னேனேடி, பெண் பிள்ளையாய் அடங்கி ஒடுங்கி வீட்டில் இரு என்று படித்துப் படித்துச் சொன்னேனே. கேட்டாயா? எது சொன்னாலும் திருப்பிக் கதைப்பது. வாய் காட்டுவது. இன்று அது உன்னை எந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது பார்த்தாயா?” என்றார் ஆத்திரமும் அழுகையுமாக.

 

பதில் ஏதும் சொல்லாது நின்ற மகளைக் கண்டு இன்னும் ஆத்திரம்தான் வந்தது அவருக்கு.

 

“வாயை திறந்து சொல்லடி. யார் காரணம் இதற்கு? அவனைத்தான் கட்டப் போகிறேன் என்றாயாமே. பெற்ற எங்களுக்குத் தெரியாமல், நீயாகப் பிடித்தவன் யார்? இதற்குத்தான் எப்போது கேட்டாலும் திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாயா? எவ்வளவு அழுத்தமடி உனக்கு. வாய் காட்டினாலும் என் பிள்ளைக்கு ஒன்றும் தெரியாது, அவள் குழந்தை என்று நினைத்தேனே.. இப்படி வயிற்றில் பிள்ளையை வாங்கிவந்து என் தலையில் கல்லைப் போட்டுவிட்டாயேடி படுபாவி! சொல்லுடி, யார் அவன்?” என்று அழுதபடி அடித்தவரின் கை அவளது முதுகு, கை, கன்னம் என்று அனைத்து இடங்களிலும் தன் தடத்தைப் பதித்தது.

 

அவ்வளவு அடித்தும் வாய் திறவாது அமைதியாக நின்றவளைப் பார்க்க அவருக்கு அடிவயிறு கலங்கியது. அடித்த அவருக்கே கை வலிக்க அவளானாள் சிலையாக நிற்கிறாளே!

error: Alert: Content selection is disabled!!