“அப்போ அவன் என் மகளின் கையைப் பிடித்து இழுத்தது சரி என்கிறாயா கண்ணா?” என்று நிதானமாகச் சந்தானம் கேட்டபோதும், அவர் குரலில் கோபம் குறையாமலேயே இருந்தது.
அவருக்குப் பதிலைச் சொல்லாமல் சித்ராவின் புறம் திரும்பினார் கண்ணன்.
“சும்மா நின்ற உன்னையா கையைப் பிடித்து இழுத்தான்?”
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் சிலநொடிகள் தடுமாறியபோதும், “அவன் என்னை மரியாதை இல்லாமல் ‘ஏய்’ என்று கூப்பிட்டான். போதாததுக்கு கையை வேறு பிடித்து இழுத்தான்.” என்று கண்ணனைப் பார்த்துச் சொன்னவள், தான் அவனோடு சென்று மோதியதைச் சொல்லமுடியாமல் முகம் கன்றத் தலையைக் குனிந்தாள்.
“உன்னைக் காப்பாற்றும் அவசரத்தில் ஏய் என்று கூப்பிட்டது ஒரு குற்றமா சித்ரா? அவன் உன்னை விடப் பெரியவன் தானே. அப்படிக் கூப்பிட்டால் நீ என்ன குறைந்தா போய்விடுவாய்? அதைவிட இதற்கு முதல் எப்போதாவது இப்படி மரியாதை இல்லாமல் அல்லது தப்பாக உன்னிடம் நடந்திருக்கிறானா அவன்?” என்று கேட்டார் கண்ணன்.
அவரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்றவளைக் கூர்ந்து பார்த்து, “ஆனால், நீதான் உன்னைவிட வயதில் பெரியவனைப் பார்த்து எப்போதும் அவன் இவன் என்று கதைக்கிறாய். இவ்வளவு கதைக்கும் நீ மட்டும் அவனை அறைந்தது சரியா? ஒரு ஆண்பிள்ளையைக் கைநீட்டி அடிக்கலாமா?” என்றார் குற்றம் சாட்டும் குரலில்.
இது புதுத் தகவல் சந்தானத்துக்கு. அதிர்ச்சியில், “என்னது?” என்று சற்று உரக்கவே கேட்டார் அவர்.
தந்தையைப் பார்க்க முடியாமல் சித்ராவின் தலை தானாகக் குனிந்தது. அவள் தோழிகளோ செய்வது அறியாமல் கைகளைப் பிசைந்தபடி நின்றனர்.
“கண்ணன் சொல்வது உண்மையா?” என்று கேட்டவருக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்றாள் சித்ரா.
“இந்தப் பழக்கம் எல்லாம் எங்கே பழகினாய்? அவன் திருப்பி அடித்திருந்தால் என்ன செய்திருப்பாய்? பெண்பிள்ளைகள் அடக்கமாக இருக்க வேண்டாமா?” என்று மகளிடம் சீறியவர், “என்ன நடந்தது கண்ணா? இவள் அவன் தன் கையைப் பிடித்து இழுத்ததாக மட்டும்தான் சொன்னாள்.” என்றார் கண்ணனிடம்.
சந்தானத்திடம் நடந்தவைகளைச் சொன்ன கண்ணன், “அவன் விலகு என்று சொல்லியும் இவள் அந்த இடத்திலேயே நின்றாள். அதனால்தான் கையைப் பிடித்து இழுத்தான். அது பிழையா? அல்லது உங்கள் மகளின் தலையில் பெட்டி விழுந்தாலும் பரவாயில்லை என்று வேடிக்கை பாத்திருக்க வேண்டுமா?” என்று கோபமாகவே கேட்டார்.
சித்ராதான் சின்னப்பிள்ளை, அவசரப்பட்டு ஒன்றைச் செய்துவிட்டாள் என்றால், அனுபவம் மிக்க சந்தானமும் அவள் சொன்னதை மட்டுமே நம்பி ரஞ்சனைக் கடையில் இருந்து வெளியேற்றியது கண்ணனுக்கு மிகுந்த கோபத்தைக் கொடுத்திருந்தது.
கண்ணன் சொன்னதைக் கேட்ட சந்தானம் மகளின் பேச்சைக் கேட்டு அவசரப்பட்டு விட்டோமே என்று வருந்தினார். ‘செருப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்த என்னைக் கையைப் பிடித்து இழுத்தான் ரஞ்சன்..’ என்று கண்கலங்க மகள் சொன்னது அவரை நிதானம் இழக்க வைத்தது.
பெண் பிள்ளையை நட்டநடுக் கடையில் கையை பிடித்து இழுப்பது சாதாரண விஷயம் அல்லதானே!
ஆனால், இப்போது ஆத்திரத்தில் அவசரப் பட்டுவிட்டேனே என்று தன்னைத் தானே நொந்துகொண்டார் சந்தானம்.
சித்ராவுக்கோ இவ்வளவு நேரமும் அவன் செய்ததுதான் பிழை என்று இருந்த வீம்பு மெல்ல அகல, ‘அவன் வயிற்றில் அடித்துவிட்டாயே’ என்று கண்ணன் சொன்னதில், தப்புச் செய்து விட்டோமோ என்று தோன்றத் தொடங்கியது.
அதோடு அவன் திருப்பி அடித்திருந்தால்? இனி வேலைக்கும் சாப்பாட்டுக்கும் என்ன செய்வான்? அனுபவம் இல்லாதவளின் உள்ளம், கொள்ளை அடிப்பானோ? களவு எடுப்பானோ? என்று பல பயங்கரங்களை எண்ணிக் கலங்கியது.
அவன் அப்படி நடந்தால் அதற்குக் காரணம் அவள் அல்லவா? நினைக்கவே பயமாக இருந்தது அவளுக்கு.
தலையில் பெட்டி குத்தி, வைத்தியசாலையில் கிடந்து, அங்கு போடுகிற ஊசியின் வலி, மாத்திரைகளின் கசப்பை நினைக்கவே அவளுக்கு கசந்து வழிந்தது.
இதெல்லாம் நடந்திருக்க, அவளின் தாய் லக்ஷ்மி வேறு, ‘பெண்பிள்ளை இப்படி நடக்கலாமா, அப்படிச் செய்யலாமா’ என்று அவளைப் போட்டுப் படுத்தி எடுத்திருப்பார். இதில் எல்லாம் இருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணம் அவன். ஆனால் அவளோ கையை நீட்டிவிட்டாள்.
உள்ளம் குன்ற, “சாரி கண்ணாண்ணா..” என்றாள், மெலிந்துவிட்ட குரலில்.
“என்னிடம் சாரி சொல்லி என்னம்மா பிரயோசனம்? அவன் கடையை விட்டுப் போய்விட்டானே.”
“அவனின்.. அவரின் கைபேசி நம்பர் இருந்தால் தாங்கண்ணா. அழைத்துச் சாரி கேட்கிறேன்.” என்றவளை முறைத்தார் சந்தானம்.
“உன் பேச்சைக் கேட்டு நானும் அவனைத் திட்டிவிட்டேனே. இனியாவது கொஞ்சம் பொறுப்போடு நடக்கப் பழகு. நம்மிடம் வேலை செய்பவர்களை நாம் மதிக்க வேண்டும். அவர்களால் தான் நாம் இந்த நிலைமையில் இருக்கிறோம். அதை என்றைக்கும் மறக்காதே.” என்றார் கண்டிப்புடன்.
தந்தையின் கண்டிப்பில் கண்கள் கலங்கத் தலையைக் குனிந்துகொண்டாள் சித்ரா.
அதைப் பார்த்துவிட்டு, “சரி விடு. நானே அழைத்து அவனிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நீங்கள் உங்களுக்குப் பிடித்த செருப்புகள் எடுத்து விட்டீர்களா?” என்று, அவர்கள் எல்லோரிடமும் பொதுவாகக் கேட்டுப் பேச்சை மாற்றினார்.
அப்போதும் முகம் தெளியாமல், “சாரிபா..” என்றாள் சித்ரா. தோழிகளோ என்ன சொல்வது என்று தெரியாது அமைதியாகவே நின்றனர்.
மகளின் தலையைத் தடவி, “அதுதான் விடு என்று சொல்லிவிட்டேனே. இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்.” என்று அவளைச் சமாதனப் படுத்தினார்.
“போங்கள். போய் உங்களுக்கு விருப்பமான செருப்புகளை எடுங்கள்.” என்று அவர்களை அனுப்பிவிட்டு, கைபேசியை எடுத்து ரஞ்சனுக்குத் அழைத்தார். அந்தப் பக்கம் மணி ஒலித்தபோதும் அவன் எடுக்கவில்லை.
“இன்னும் கோபமாக இருக்கிறான் போல. எடுக்கிறான் இல்லை.” என்றார் கண்ணனைப் பார்த்து.
“நான் அழைத்துப் பார்கிறேன்..” என்ற கண்ணன், கைபேசியை
க் காதுக்குக் கொடுத்த வண்ணம் அந்த இடத்தை விட்டு அகன்றார்.
“அவன் கதைத்தால் அவனை நான் இங்கே வரச் சொன்னதாகச் சொல்லிவிடு கண்ணா..” என்றார் சந்தானம்.

