அத்தியாயம்-23
சித்ரா சென்ற திசையையே பார்த்தபடி நின்றான் ரஞ்சன். அவள் சொன்னவற்றை அவன் பெரிதாக எடுக்கவில்லை. கோபத்தில் அவள் கேட்ட கேள்விகளில் நியாயம் இருப்பது புரிந்தாலும், எடுத்துவிட்ட முடிவை அவனால் மாற்றவே முடியாது!
அவனுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ சாதனாதான் அவனது வருங்காலத் துணைவி. இது அவனே எடுத்துக்கொண்ட முடிவு. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்று எண்ணுகையிலேயே உள்ளே எங்கேயோ முணுக்கென்று வலித்தது. ஆனாலும், எதைப் பற்றியும் சிந்திக்கவோ, எடுத்த முடிவைப் பரிசீலனை செய்யவோ அவன் தயாராக இல்லை!
அந்தச் சின்ன வயதில், அவனுக்கு விழுந்த முதல் அடி சாதனாவிடம் இருந்தே! அவனது தன்மானத்துக்கு விழுந்த அந்த அடியை மறக்க இயலவில்லை!
அது அவனுடைய கௌரவப் பிரச்சினை. போன கௌரவத்தை, விழுந்த அடியை அவளைக் கட்டியே நேராக்க நினைத்தான்.
அவளிடம் இருந்து கிடைத்த மறுப்பும் புறக்கணிப்பும் அவன் மனதில் மாறா வடுவை உண்டாக்கியதில், அவளுடனான திருமணமே அந்த வடுவுக்கான மருந்து என்பது அவன் கண்டறிந்த பதில். அப்படியிருக்க சித்ராவை எப்படி ஏற்றுக்கொள்வது?
அடுத்ததாக அவனது ஆருயிர் தந்தையின் ஆசையும் அதுவல்லவா! அவர் உயிராய் மதித்த எந்தச் சொந்தங்கள் அவனையும் அவன் குடும்பத்தையும் தூக்கி எறிந்ததோ அந்தச் சொந்தங்களை மீண்டும் தன்னிடம் வரவைப்பதற்கான வழியாகவும் அவனதும் அவன் தங்கையினதும் திருமணத்தை நினைத்தவனுக்கு, அதில் எந்த மாற்றம் வருவதிலும் உடன்பாடு இல்லை.
ஆனால் சித்ரா?
அவனுக்கு அவளைப் பிடிக்காமல் இல்லை. ஆனால், துடுக்குத் தனத்துடனும் துருதுருப்புடனும் சிட்டுக் குருவியைப் போன்ற அழகான இளம் பெண்ணொருத்தி அவனையே சுற்றிச் சுற்றி வந்தால் சலனம் உண்டாவது சகஜம் தானே.
இதில் அவள் வேறு உருகி உருகி அவனைக் காதலிக்கையில், ஓரளவுக்கு மேல் அவளை அவனால் விலக்க முடியவில்லை என்பது நிஜம்!
ஆனால் அன்று அவர்கள் இருவருக்குமிடையில் நடந்தது?
அதை நினைக்கையில் அவன் முகம் கன்றிக் கருத்தது. அதற்கான முழுக்காரணமும் அவனே என்பதை மிக நன்றாகவே அறிவான்.
ஆனால், எதையும் அவன் திட்டமிட்டுச் செய்யவில்லையே! அவள் வாழ்க்கையை நாசமாக்கவும் நினைத்ததில்லையே! முடிந்தவரை அவளைத் தவிர்க்கத்தானே எண்ணினான்.
அவளைத் திருமணம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு இருந்ததில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு அவளிடமிருந்து அவன் விலக நினைத்ததும் உண்மையே!
அவர்களுக்குள் காதல் என்பது அவனே எதிர்பாராமல் உண்டான ஒன்று!
அப்போதும், இந்தக் காலத்தில் ஒரு பெண் அதுவும் சித்ராவைப் போன்ற தெளிவான பெண் காதலையோ காதல் தோல்வியையோ பெரிதாக நினைக்கமாட்டாள், அதனால் அவளை இலகுவாக விலக்கிவிடலாம் என்றுதானே நினைத்தான்.
ஆனால், அவன் நினைத்ததற்கு மாறாக அவள் அவனிடம் நியாயம் கேட்டு வந்து நின்றது பெரும் அதிர்ச்சி என்றால், அவளின் சவாலை நினைக்கையில் ஆத்திரமும் வந்தது.
அவர்களுக்குள் தவறு நடந்துவிட்டதுதான். ஆனால், கணவன் இறந்தால் மனைவி இன்னொரு திருமணம் செய்வதில்லையா? அவனுடன் வாழ்வதில்லையா? அப்படி அவனையும் அவனுடன் பழகியதையும் இறந்தகாலமாக ஒதுக்கிவிட்டு அடுத்தது என்ன என்பதைப் பார்க்காமல் எதற்கு அவனை தொந்தரவு செய்கிறாள்?
அப்படி அவளால் என்ன செய்துவிட முடியும் என்று எண்ணியவனுக்கு, அதற்கு மேல் கடையில் வேலை ஓடும்போல் தோன்றவில்லை.
அந்தக் கடை முழுவதும் அவளின் நினைவுகளே அவனைச் சுற்றிச் சுழன்று வந்து தாக்கியது.
வீட்டுக்குப் போய் அப்படியே மதிய உணவை முடித்துவிட்டு வரலாம் என்று எண்ணியவன், கடையில் வேலைக்கு நின்றவர்களிடம் சொல்லிக்கொண்டு தன் வண்டியில் புறப்பட்டான்.
சித்ராவைப் பற்றிய சிந்தனைகளோடு சென்று கொண்டிருந்தவனின் முகம், அங்கே வீதியில் வந்துகொண்டிருந்த கண்ணனைக் கண்டதும் மலர்ந்தது.
அதிகமான வேலைப்பளுவால் கண்ணனோடு கதைக்கும் சந்தர்ப்பம் அவனுக்கு நிறைய நாட்களாக அமையவே இல்லை.
இன்று அவரைக் கண்டதும், அவனின் இன்றைய முன்னேற்றத்துக்கு காரணமானவர் அவர் என்கிற நினைவும் தோன்ற மகிழ்ச்சியோடு வண்டியை நிறுத்தி, “கண்ணண்ணா..” என்று, சத்தமாக அழைத்தான்.
யார் என்பதாகத் திரும்பிப் பார்த்தவரின் முகம் ரஞ்சனைக் கண்டதும் மலர்வதற்குப் பதிலாக இறுகியது. அது புத்தியில் பட்டாலும் பெரிதாக எடுக்காமல், “நில்லுங்கள் கண்ணன் அண்ணா..” என்றவன், தன் வண்டியை வீதியின் ஓரமாக நிறுத்திவிட்டு அவரிடம் சென்றான்.
“எப்படி இருக்கிறீர்கள்?” மகிழ்ச்சியோடு கேட்டவனிடம்,
“ம்.. இருக்கிறேன்.” என்றார் அவர் சுருக்கமாக.
“வேலை எல்லாம் எப்படிப் போகிறது? எனக்கு நேரம் இல்லை அண்ணா. அதுதான் அங்கே கடைக்கு வரமுடியவில்லை. கோபிக்காதீர்கள்.”
“வேலைக்கு என்ன குறை? நேர்மையான முதலாளி. நல்ல வேலை. பிறகு என்ன?” என்றார் அவர் பட்டும் படாமல்.
அப்போதுதான் அவர் தன்னைப் பற்றி ஒன்றும் விசாரிக்கவில்லை என்பதும், தான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பட்டும் படாமலும் பதில் சொல்கிறார் என்பதும் புரிய, முகம் சுருங்கியது அவனுக்கு. “என்ன கண்ணன் அண்ணா. ஏன் ஒருமாதிரி இருக்கிறீர்கள்? ஏதாவது பிரச்சினையா?” என்று விசாரித்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்த கண்ணன், “நான் எப்போதும் போலத்தான் இருக்கிறேன் ரஞ்சன். ஆனால் நீதான் மாறிவிட்டாய். அதுதான் உனக்கு அப்படித் தெரிகிறது.” என்றார் ஒருமாதிரிக் குரலில்.
புருவங்கள் நெரிய, “நான் மாறிவிட்டேனா? இல்லையே… அதே ரஞ்சன்தான்.” என்றான் அவன்.
தலை மறுப்பாக அசைய, “நிச்சயமாக இல்லை! எனக்குத் தெரிந்த, என்னுடன் வேலை பார்த்த ரஞ்சன் கோபக்காரனாக இருந்தாலும் நல்லவன். நேர்மை உள்ளவன். உழைப்பாளி!” என்றார் அவர்.
மனம் துணுக்குற, “அண்ணா…” என்று இழுத்தவன், “இப்போதும் நான் உழைப்பாளி தான்.” என்றான், தன் மனதை அவருக்குக் காட்டாதிருக்க முயன்றபடி.
“உழைப்பாளி தான். ஆனால், நேர்மை அற்ற உழைப்பாளி. உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்த உழைப்பாளி.” என்றார் கடுமையான குரலில்.
அதைக்கேட்ட ரஞ்சனால் சற்று நேரம் எதுவுமே சொல்ல முடியவில்லை. நன்றி கெட்டவன் என்று அவர் மறைமுகமாகச் சொல்கிறார். அவன் பெரிதாக மதிக்கும் ஒருவரின் மதிப்பில் தான் தாழ்ந்து போனோம் என்பது மிகுந்த வேதனையைக் கொடுத்தது.
அதோடு, அவனுக்கு அவனே எத்தனையோ நியாயங்களைக் கற்பித்து செய்த ஒரு செயலை இன்னொருவரின் வாயால் கேட்கையில் அவமானமாக உணர்ந்தான்.
“ஏன் இப்படியெல்லாம் கதைக்கிறீர்கள்?” உணர்ச்சிகளைத் தொலைத்த குரலில் கேட்டான்.
“வேறு எப்படிச் சொல்லச் சொல்கிறாய் ரஞ்சன்?” என்று ஆத்திரப்பட்டார் அவர்.

