அந்தப் பைகளில் பொறிக்கப் பட்டிருந்த பெயர்களே உள்ளே இருப்பது ஆடைகள் என்பதைச் சொல்ல பேசாமல் நின்றாள் சித்ரா.
அவள் ஏதும் சொல்வாள், அல்லது பைகளை எடுத்துப் பார்ப்பாள் என்று அவன் எதிர்பார்க்க அவளோ நின்ற இடத்திலிருந்து அசையவே இல்லை.
அவளுக்காக அவன் ஒன்றைச் செய்தபோதும், அதற்கும் எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதாக நின்றவளின் செயலில் உண்டான சினத்தில், “அம்மாவிடம் உனக்காகப் பேசியதால் உன் மீது இருக்கும் கோபம் போய்விட்டது என்றோ, உன்னைக் காதலிக்கிறேன் என்றோ நினைத்துவிடாதே. இப்போதும் உன்னை எனக்குப் பிடிக்கவில்லைதான். அதற்காக அம்மாவோ நித்தியோ உன்னை மரியாதை இல்லாமல் நடத்த விடமாட்டேன். இனி அவர்கள் அப்படி நடக்க மாட்டார்கள். அதேபோல நீயும் கொஞ்சம் உன் நாவை அடக்கப் பழகு! வயதில் மூத்தவர்களிடம் மரியாதையாகப் பேசு!” என்றவனின் குரல் கடைசி வரிகளைச் சொல்கையில் கடுமையாக மாறியிருந்தது.
எதற்காக அப்படிச் சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்டவள் ஆத்திரத்தோடு அவனை முறைத்தாள். “முதலில் உங்கள் அம்மாவை வயதுக்கு ஏற்ற மாதிரி நடக்கச் சொல்லுங்கள். என் அம்மா என்னைப் பெற்று ஊர் மேய விட்டிருக்கிறார்களாம். அதுதான் ஒழுக்க சீலரான உங்களை நான் பிடித்தேனாம். என் அம்மா அப்படியா என்னை வளர்த்தார்கள்? நான் ஊர் மேய்ந்ததை அவர் கண்டாரா? என்னைச் ச..னியன் என்கிறார். நான் சனியனா?” என்று ஆத்திரத்தோடு தொடங்கியவளின் குரல் முடிக்கையில் அடைத்தது.
இந்த அழுகை வேறு என்று வெறுப்போடு நினைத்தவள், அதை அவனுக்குக் காட்டப் பிடிக்காது முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
ரஞ்சனுக்கோ, நடந்ததை அறியாமல் தான் வாய் விட்டுவிட்டோமோ என்றிருந்தது.
லக்ஷ்மி அம்மாளைப் பற்றியும் அவர் மகள் மேல் வைத்திருக்கும் பாசம் பற்றியும் அவன் அறிவானே. அவரை ஒருகுறை சொல்ல முடியுமா? அதோடு அவளைப்போய் அப்படிச் சொல்வதா?
ச்சே! இந்த அம்மாவை என்னதான் செய்வது என்றிருந்தது அவனுக்கு.
அழுகையில் துடித்த இதழ்களையும், கண்ணீரைக் கொட்டத் தயாராக நின்ற விழிகளையும் கட்டுப் படுத்தியபடி நின்றவளைப் பார்த்து, “சாரி!” என்றான் அவன் ஆழ்ந்த குரலில்.
அந்தக் குரல் அவளை என்னவோ செய்தபோதும், “ஆனால், இதற்கு நான் நன்றி சொல்லமாட்டேன்.” என்றாள் கட்டிலில் இருந்த பைகளைக் காட்டி.
“ஒரு உப்புக்கட்டியும் உன் வீட்டில் இருந்து கொண்டுவரக் கூடாது என்று பெரிதாகச் சொன்னவர், இதை முதலே செய்திருக்க வேண்டும். செய்யாமல் விட்டது உங்கள் தவறு. ஆனால், அதற்கான தண்டனை எனக்கு.” என்றவள், “எப்போதும் நீங்கள் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை அனுபவிப்பது மட்டும் நான்!” என்றாள் வறண்ட குரலில்.
அதைக்கேட்டுப் பேச்சற்று நின்றான் ரஞ்சன்.
உண்மைதானே என்று அவன் நெஞ்சே அவனைச் சுட்டது!
அவள் முன் நிற்காமல் திரும்பியவனின் பார்வையில் மேசையில் இருந்த அவர்களது திருமண மாலைகளும் அதன் அருகே இருந்த சித்ராவின் நகைகளும் பட்டன.
திருமணத்தின் போது அவளை முழுதாகக் கவனிக்காதவனுக்கு அவள் போட்டிருந்த நகைகள் கண்ணில் படவே இல்லை. இப்போது அவற்றைக் கண்டதும் சினம் துளிர்க்க, “நான் சொன்னபடியே ஒன்றும் கொண்டுவராதவள் போல் கதைத்தாய். இதையெல்லாம் எதற்குக் கொண்டுவந்தாய்.” என்று மேசையிலிருந்த நகைகளைக் காட்டிக் கேட்டான்.
“அது அம்மா போட்டுவிட்டது. எப்படியெப்படி எல்லாமோ என் திருமணத்தைச் செய்ய நினைத்தவர்கள் என் பெற்றவர்கள். அதற்குத்தான் வழியில்லை. இதையாவது போட்டுக்கொள் என்று அவர் சொல்லும்போது என்னால் மறுக்க முடியாது. இனியும் என்னால் அவர்கள் மனதை நோகடிக்க முடியாது.” என்று அவனை நிமிர்ந்து பார்த்துச் சொன்னவள், “உங்கள் கைபேசியைத் தாருங்கள்.” என்று கேட்டாள் அவனிடம்.
பாக்கெட்டில் இருந்து அதை எடுத்து அவளிடம் நீட்டியபோதும், “ஏன், உன்னது எங்கே?” என்று கேட்டான் ரஞ்சன்.
“வீட்டில் விட்டுவிட்டேன்..” என்றாள் அதை வாங்கியபடி.
“ஓ.. சரி, நாளைக்கு ஒன்று வாங்கித் தருகிறேன்.” என்று அவன் சொல்லவும், “ம்.. ஐபோன் ஆறு வாங்குங்கள்!” என்றாள் அவள்.
‘இவளுக்கு இருக்கும் கொழுப்புக்கு ஐபோன் ஆறு கேட்கிறதா..’ என்று நினைத்தபடி அவன் அவளைப் பார்க்க அவளோ அவனைப் பாராது அவன் கைபேசியில் ஏதோ இலக்கங்களை அழுத்திக் கொண்டிருந்தாள்.
“அதெல்லாம் வாங்கும் அளவுக்கு அவ்வளவு பணம் என்னிடம் இல்லை!” என்றான் அவன் வேண்டும் என்றே!
ஒருநொடி இலக்கங்களைத் தட்டுவதை விட்டுவிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஓ..! அப்போ ஐபோன் ஐந்து வாங்குங்கள்.” என்றாள் அப்போதும் சாதரணமாக.
“அதற்கும் பணமில்லை.”
“ஐபோன் நாலு?”
“ம்கூம்..!” உதட்டைப் பிதுக்கினான் ரஞ்சன்.
“மூன்று?”
அவன் உதடுகள் மட்டுமே பிதுங்கியது.
“சரி. அப்போ நான் அப்பாவிடமே கேட்கிறேன்.” என்றவளை, இப்போது முறைத்தான் ரஞ்சன்.
“அதை வாங்கிக்கொண்டு அப்படியே அவரிடமே போய்விடு!” என்றான் நக்கலும் கோபமாக.
“அப்படியானால் நீங்களே ஐபோன் ஆறே வாங்கித் தாருங்கள். நான் என்ன கேட்டாலும் என் அப்பா வாங்கித்தருவார். அதற்கு நம் திருமணமே சாட்சி.” என்றவளை முறைத்தான் அவன்.
அவளோ நீ முறைத்தால் எனக்கென்ன என்பதாக பார்வையை வெட்ட, “சரி! வாங்கித் தந்து தொலைக்கிறேன்!” என்றான் பல்லைக்கடித்தபடி.
‘அது!’ என்பதாக ஒரு பார்வை பார்த்தாள் சித்ரா.

