என் சோலைப் பூவே 27 – 2

“என்ன பசியில்லை? நீயென்ன மகாராணியா? உனக்குப் பசிக்கிற போதெல்லாம் நான் சேவகம் செய்ய. மரியாதையாக எழுந்து வா!” என்று சிடுசிடுத்தான் அவன்.

 

“இதுநாள்வரை என் வீட்டில் நான் மகாராணியாகத்தான் இருந்தேன்” என்று அழுத்தமான குரலில் சொன்னவள்,

 

“ஏதோ காலம் காலமாய் எனக்குச் சேவகம் செய்தவர் மாதிரிப் பேசுகிறீர்களே. எனக்குப் பசித்தால் நான் சாப்பிட்டுக் கொள்வேன். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்!” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, இப்போது மெய்யாக அன்றிப் பொய்யாகப் புத்தகத்தில் மூழ்கிவிட்டது போன்று காட்டிக்கொண்டாள்.

 

அவளின் அலட்சியத்தில், “திமிர் பிடித்தவள்!” என்று பல்லைக் கடித்துவிட்டு எழுந்து சென்றான் ரஞ்சன்.

 

அவன் சென்ற திசையையே பார்த்த சித்ராவுக்கு அவன் புரியாத புதிராகத் தெரிந்தான்.

 

அவர்கள் மூவருமாக ஒன்றாகச் சாப்பிடுகையில் அவள் எதற்கு இடையூறாக என்று நினைத்தே மறுத்தாள்.

 

அதோடு பசித்தால் தானே உண்ண முடியும்!

 

உன்னைக் கஷ்டப் படுத்துவேன் என்று சொன்னவனின் இந்த அக்கறையான செயல்களுக்கான அர்த்தத்தை அவளால் புரிந்துகொள்ளவே இயலவில்லை.

 

அதன் காரணம் காதலாலோ என்று நினைக்கையிலேயே அவள் இதழ்கள் ஏளனமாக வளைந்தன.

 

அவனாவது அவளைக் காதலிப்பதாவது?

 

அவனுக்கு எப்போதும் அவன் குடும்பமும் சொந்தமும் தானே முக்கியம் என்று எண்ணியவள் ஏதோ தோன்ற எழுந்து சென்று கீழே பார்த்தாள். பார்த்தவளுக்குத் திகைப்பா, அதிர்ச்சியா, வேதனையா என்று வரையறுக்க முடியாத உணர்வு ஒன்று வந்து தாக்கியது. அதற்குக் காரணம், அங்கே கீழே பெரிதாக விரிந்து கிடந்த ஹாலில் ஒரு பக்கமாகப் போடப்பட்டிருந்த சாப்பாட்டு மேசையில் தனியாக அமர்ந்து உண்டுகொண்டிருந்தான் ரஞ்சன்.

 

நெஞ்சுக்குள் என்னவோ செய்தது அவளுக்கு. சொல்லிக்கொள்ளாமலேயே அவள் வீட்டு நினைவும், அவர்களது இரவுச் சாப்பாட்டு நேரமும் மனக்கண்ணில் வந்தது.

 

எவ்வளவு ஆனந்தமான பொழுது அது. அங்கும், அதுநாள்வரை மூவர்தான் இருந்தார்கள். தாயின் அக்கறையோடு கூடிய திட்டலும், தந்தையின் கேலியும் அவளது கலாட்டாவும் என்று சந்தோசமாக அல்லவா கழியும் நேரம்.

 

இங்கானால் இப்படி மயான அமைதி நிலவுகிறதே! அதுவும் அந்த வீட்டுக்கு மாடாக உழைத்துப் போடும் அவனுக்கு அருகில் நின்று பார்த்துப் பார்த்துப் பரிமாற ஒருவர் கூடவா இல்லை?

 

அவன் மேல் கோபம் இருந்தாலும் அதை உணவிலா காட்டுவது? இதென்ன கொடுமை?

 

அவன் செய்தது பிழையாக இருந்தாலும் ஒரு தாயாக தன் மாமியாரால் எப்படி இப்படி நடக்க முடிகிறது?

 

சித்ராவும் தான் பிழை செய்தாள். அதுவும் சாதாரணப் பிழை அல்ல!

 

ஒருவனைக் காதலித்து அவனிடம் ஏமாந்து வயிற்றில் குழந்தையோடு வந்தபோது அந்த அடி அடித்த அம்மா, இரவு உணவை அவள் மறுக்க மறுக்க ஊட்டிவிட்டாரே!

 

அந்தத் தாய்க்கும் இந்தத் தாய்க்கும் எவ்வளவு வித்தியாசம்..

 

சிந்தனையில் உறைந்து நின்றவளின் விழிகளில், ரஞ்சன் தன் தட்டில் தானே உணவை இட்டுக் கொள்வது தெரியவும், அதற்கு மேலும் அவளால் அங்கு நிற்க முடியவில்லை.

 

வேகமாகக் கீழே இறங்கிச் சென்றவள் அவன் தட்டில் குறைந்திருப்பதைப் பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள்.

 

ஒரு நொடி அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு தட்டுக்கு முன்னால் கையை நீட்டி மறித்தான் ரஞ்சன். “நீ போ. நானே போட்டுக்கொள்வேன். இது எனக்குப் பழக்கம் தான்..”

 

அதைக் கேட்டவளுக்குப் பற்றிக்கொண்டுதான் வந்தது. இப்படித் தனியாகச் சாப்பிடுவதற்கு அவன் பழகும்வரை அந்த வீட்டில் இருக்கும் இரண்டு பெண்களும் எதை வெட்டிக் கிழிக்கிறார்கள் என்று நினைத்தவுடன் தோன்றிய ஆத்திரத்தை அவனிடமே காட்டினாள்.

 

“எனக்கு என் வேலையைப் பார்க்கத் தெரியும். நீங்கள் முதலில் வாயை மூடிக்கொண்டு சாப்பிடுங்கள்!”

 

“என்ன? என் மேல் அக்கறை உள்ளவள் போன்று நடிக்கிறாயா?”

 

“ஆமாமாம்! நீங்கள் பெரியா மகாராஜா பாருங்கள். உங்களிடம் நான் நடிக்க!” நொடித்தாள் சித்ரா.

 

“பின்னே பாசத்தில் வந்து சாப்பாடு போடுகிறாயா?”

 

“என்னது பாசம் காட்டுவதா? உங்கள் மீதா? ஏன், ஒருமுறை அதைக்காட்டி நான் பட்டது போதாதா? ஏதோ தனியாகச் சாப்பிடுகிறீர்களே என்று பரிதாபத்தில் வந்து போட்டேன்..” என்றவளின் பேச்சைக் கேட்டதும் அவன் முகம் சுண்டிப் போனது.

 

“உன் பரிதாபம் எனக்குத் தேவையில்லை. நீ போகலாம்.” என்றான் இறுகிய குரலில்.

 

சித்ராவுக்கு சுர் என்று கோபம் ஏறியது. “என் பரிதாபம் தேவையில்லை என்றால், வேறு யாரின் பரிதாபம் தேவைப்படுகிறது? உங்கள் அத்தை மகள் ரத்தினத்தின் கரிசனையா?”

 

சித்ராவை நிமிர்ந்து பார்த்து முறைத்தான் ரஞ்சன். “அடுத்த வீட்டுப் பெண்களைப் பற்றித் தேவையில்லாமல் கதைக்காதே!” என்றான் இறுக்கமான குரலில்.

 

அவளைப் பற்றி ஒன்று சொன்னால் அவனுக்கு வலிக்கிறதோ என்கிற எரிச்சலில், “பார்ரா! அங்கே கொளுத்திப் போட்டால் இங்கே பற்றி எரிகிறது!” என்று எரிச்சலோடு சொன்னவள், கையிலிருந்த கரண்டியைப் பட்டென்று சட்டியில் போட்டுவிட்டு அதற்கு மேலும் அங்கே நிற்காது வந்து பொத்தென்று படுத்துக்கொண்டாள்.

 

உணவை முடித்துவிட்டு வந்த ரஞ்சனும், மறு ஓரத்தில் படுத்துக்கொண்டான்.

 

பெரிய கட்டிலாக இல்லாதபோதும், இருவர் படுக்கக் கூடிய அளவிலேயே அது இருந்தது.

 

அவர்கள் இருவருக்கும் நடுவில் சிறிய இடைவெளியே இருந்தபோதும் அதைத் தாண்ட இருவரும் நினைக்கவும் இல்லை. அதை எதிர்பார்க்கவும் இல்லை.

 

இருவருமே அழுத்தமான பிடிவாதக் குணமுள்ளவர்கள் என்பதாலும், அடுத்தவரின் மேல் மனம் முழுவதும் வெறுப்பைச் சுமந்துகொண்டிருந்ததாலும் எந்த விதச் சலனுமும் இன்றி அருகருகே படுத்திருந்தனர்.

 

சிறிது நேரத்தில், உறங்கிவிட்டதற்கு அறிகுறியாகக் கேட்ட ரஞ்சனின் சீரான சுவாசத்தில், மாலை உறங்கியதில் உறக்கமின்றித் தவித்த சித்ரா அவன் புறமாகத் திரும்பிப் படுத்தாள்.

 

நெற்றியில் ஒரு கையை வைத்தபடி உறங்குபவனின் முகத்தையே பார்த்தபடி முதன்முதலில் அவனோடு அவள் சண்டை பிடித்த தினத்தில் இருந்து அன்றுவரை நடந்த ஒவ்வொன்றையும் வலிக்க வலிக்க அசைப்போட்டபடி இருந்தவளின் விழிகள் எப்போது மூடிக்கொண்டன என்பதை அவள் அறியாள்.

 

காலையில் ரஞ்சனின் முகத்திலேயே கண்விழித்தாள் சித்ரா.

 

இவன் எப்படி என் அறையில் என்று ஒருநொடி அதிர்ந்தவளுக்கு, தானிருப்பது அவனறையில் என்பது மெல்லத்தான் நினைவில் வந்தது.

 

வெளியே செல்வதற்கு அவன் தயாராகிக் கொண்டிருப்பது தெரிய, சட்டென எழுந்து, “நானும் உங்களோடு வருகிறேன்..” என்றவள், அவனது பதிலை எதிர்பாராது குளியலறைக்குள் புகுந்தாள்.

 

காலைக் கடன்களை முடித்துவிட்டு வந்தவளிடம், “எங்கே வரப்போகிறாய்?” என்று கடுமையான குரலில் கேட்டான் அவன்.

 

“அப்பாவின் கடைக்குப் போகவேண்டும். என்னை அங்கே இறக்கி விட்டுவிட்டு நீங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள்.”

error: Alert: Content selection is disabled!!