என் சோலைப் பூவே 29 – 1

அத்தியாயம்-29

 

காலச் சக்கரத்தின் ஓட்டத்துக்கு ஏற்ப நாட்கள் மிக வேகமாக நகர்ந்தது. அன்று காலையில் வழமை போன்று கடைக்குச் செல்லத் தயாரான ரஞ்சனும் சித்ராவும் அவர்கள் அறையில் இருந்து கீழே இறங்கி வந்தபோது, அவர்களைக் கண்ட இராசமணியின் முகம் கடுத்தது.

 

“இங்கே ஒரு வயதுக்கு வந்த பெண் வீட்டில் இருக்கிறாள் என்கிற அக்கறை யாருக்காவது இருக்கிறதா? நான் பெற்றதுக்குத்தான் அக்கறை இல்லை என்றால் வந்ததுக்கும் கூடவா இல்லை. அதுசரி, எப்போது எவன் கிடைப்பான், அவனை மடக்கிப் போடலாம் என்று அலைந்ததுகளுக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது. தங்கையை வைத்துக்கொண்டு திருமணம் செய்தது போதாது என்று ஜோடியாக வேறு திரிகிறதுகள்.” என்று அவர்களுக்கு கேட்கும் விதமாகவே சத்தமாக முணுமுணுத்தார் அவர்.

 

தாயின் குரல் கேட்டு தன் அறையிலிருந்து வெளியே வந்த நித்தி, “என்னம்மா?” என்று கேட்க, அவளிடமும் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டினார் அவர்.

 

“என்ன நொன்னம்மா?போயும் போயும் இந்த வீட்டில் வந்து பிறந்திருக்கிறாயே! இப்படியே காலம் முழுக்க இங்கேயே கிட. கல்யாணம் காட்சி என்று பார்க்கவும் நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும். உனக்கு எங்கே அதெல்லாம் கிடைக்கப் போகிறது. அதிர்ஷ்டம் கெட்ட என் வயிற்றில் வந்து பிறந்திருக்கிறாயே!” என்றார் ஆத்திரத்தோடு.

 

தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நித்தி முழிக்க, கோபத்தோடு தாயிடம் எதையோ சொல்லத் தொடங்கிய ரஞ்சனின் கையைச் சட்டெனப் பிடித்துத் தடுத்தாள் சித்ரா.

 

அவன் திரும்பிப் பார்க்க ஒன்றும் கதைக்கவேண்டாம் என்று கண்ணசைவால் காட்டிவிட்டு, பிடித்த கரத்தை விடாது அவனை அவள் வெளியே அழைத்துச் செல்ல, “இந்தக் கருமத்தை எல்லாம் என் கண்ணால் பார்க்க வேண்டியிருக்கிறது!” என்று சத்தமாகவே சொன்னார் ரஞ்சனின் தாயார்.

 

“என்னை எதற்கு இழுத்துக்கொண்டு வந்தாய்?” தாய் மேல் இருந்த கோபத்தில் எரிந்து விழுந்தான் ரஞ்சன்.

 

“பின்னே வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? மாமி சொல்வதில் என்ன பிழை? உங்கள் தங்கையை வைத்துக்கொண்டு நம் திருமணம் நடந்ததே பிழை. இதில் இவ்வளவு நாட்களாகியும் நீங்கள் அவள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யவும் இல்லை. அவர் கத்தாமல் வேறு என்ன செய்வார். அன்று நவீனின் வீட்டுக்குப் போய்க் கதையுங்கள் என்று நான் சொன்னதற்கு என் வேலையை எனக்குப் பார்க்கத் தெரியும் என்றீர்கள். அப்படி நீங்கள் அதை அன்றே செய்திருக்க இன்று இந்தப் பேச்சு வந்திராதே!” என்றாள் சித்ராவும் சூடான குரலில்.

 

அவளை முறைத்தபடி, “எல்லாம் உன்னால் தானே வந்தது. நீ செய்த வேலைகளுக்கு எந்த முகத்தை வைத்துக்கொண்டு என்னை அங்கே போகச் சொல்கிறாய்? அவர்களின் கோபம் கொஞ்சம் ஆறட்டும் என்று காத்திருந்தேன்..” என்றான் அவனும் ஆத்திரத்துடன்.

 

இந்த முசுட்டு மூஞ்சியை வைத்துக்கொண்டுதான் என்று சூடாகச் சொல்லத் துடித்த நாவை அடக்கியபடி, “சரி, எல்லாமே என்னால் நடந்ததாகவே இருக்கட்டும். நடந்தவைகளை இனி மாற்ற முடியாது இல்லையா. அதனால் இனியாவது போய்க் கதையுங்கள்.” என்றாள் பொறுமையாக.

 

“ம்ம்..”

 

அவள் சொல்கிறாள் என்பதற்காகவே மறுக்கும் வேகம் எழுந்தாலும், வேறு வழியின்றி எரிச்சலோடு ‘ம்’ கொட்டினான்.

 

“நானும் உங்களுடன் வரவா?”.

 

“இல்லை! வேண்டாம்.” என்றான் அவன் சட்டென.

 

விழிகள் கூர்மை பெற அவள் அவனைப் பார்க்க, “ப்ச்! உன்னை அவர்கள் எதுவும் சொல்வார்கள். அதுதான் வேண்டாம் என்றேன்.” என்றவன், வண்டியில் ஏறியமர்ந்து அதை இயக்கினான்.

 

அவளும் அவன் பின்னால் ஏறியபடி, “என்னை கடையில் இறக்கி விட்டுவிட்டு நீங்கள் போய்வாருங்கள்!” என்றாள்.

 

“ம்ம்..” என்றபடி ரஞ்சன் வண்டியை ‘ரிபோக்’க்கு விட்டான்.

 

அங்கே சந்தானத்திடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு, சித்ராவிடம் விழிகளால் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தவனோடு சேர்ந்து வந்தாள் சித்ரா.

 

என்ன என்பதாக அவன் பார்க்க, “அவர்கள் என்ன சொன்னாலும் கோபப்படாமல் பார்த்துப் பேசுங்கள். நமக்கு முக்கியம் நித்தியின் திருமணம் மட்டுமே.” என்றாள் சித்ரா.

 

சட்டென மூண்ட எரிச்சலோடு, “என்ன, திடீரென்று என் தங்கையின் மேல் பாசமழை பொழிகிறாய்?” என்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு குத்தலாகக் கேட்டான் ரஞ்சன்.

 

தாயின் பேச்சு அடங்கியிருந்த அவன் மனக் கோபத்தைக் கிளறியிருந்தது.

 

நித்தியின் வாழ்க்கையைக் கெடுப்பேன் என்றவளின் இந்த அக்கறை நடிப்பாகவே தோன்றியது.

 

சித்ராவும் அவனுக்குச் சளைத்தவள் அல்லவே!

 

“உங்களைக் கட்டியிருக்கிறேன் இல்லையா. அதுதான் திடீர் திடீரென்று மாறும் உங்களின் புத்தி எனக்கும் வந்துவிட்டது. எல்லாம் பழக்கதோஷம்!” என்று சூடாகவே திருப்பிக் கொடுத்தாள்.

 

அவளைக் காதலிப்பதாகச் சொல்லிவிட்டு சாதனாவைத் திருமணம் செய்வதாக அவன் எடுத்த முடிவைக் குத்திக் காட்டுகிறாள் என்று புரியவே அனலைக் கக்கும் விழிகளால் அவளை முறைத்துவிட்டுச் சென்றான் ரஞ்சன்.

 

இந்தத் திருமணம் எந்தத் தடங்கலும் இன்றி நன்றாக நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டது சித்ராவின் மனம்.

 

இல்லாவிட்டால் அந்தப் பழியும் அவள் மீதல்லவா விழுந்துவிடும். அதையும் தாண்டி, கணவன் மேல் கோபம் இருந்தாலும் அவன் போகும் காரியம் கைகூடவேண்டும் என்றும் எதிர்பார்த்தது மனது.

 

போனவன் மதியமாகியும் திரும்பாததில் தவித்துப் போனாள் சித்ரா.

 

போனகாரியம் என்னவோ ஏதோ என்று அவள் யோசித்தபடி இருக்க, “என்னம்மா, ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்?” என்று மதிய உணவோடு வந்த தாய் கேட்டபோது, “ஒன்றுமில்லை அம்மா. எப்போதும் போலத்தான் இருக்கிறேன்.” என்று சமாளித்தாள்.

 

அதற்கு மேலும் அங்கே இருக்க முடியாமல், தங்கள் இருவருக்குமான உணவை எடுத்துக்கொண்டு ரஞ்சனின் கடைக்கு அவள் செல்லவும் அங்கே அவன் வரவும் சரியாக இருந்தது.

 

களைத்துப் போய் வந்தவனிடம் எதுவும் கேட்காமல் உணவைப் பரிமாறினாள். அமைதியாக உண்டபோதும் அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடிக்கொண்டே இருந்தது.

 

உணவுவேளை முடிந்ததும், “அவர்கள் என்னவாம்? திருமணத்திற்கு சம்மதம் சொன்னார்களா?” என்று கேட்டாள் சித்ரா.

 

“ம்.. சம்மதித்தார்கள்..” என்று இழுத்தவனிடம், மலர்ந்த முகத்தோடு, “பிறகு என்ன யோசனை?” என்று கேட்டாள் சித்ரா.

 

“ஐம்பது பவுன் நகையும் இருபது லட்சம் பணமும் கேட்கிறார்கள்..”

 

சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது சித்ராவுக்கு. சொந்தத்துக்குள் நடக்கும் திருமணம், அதற்கே இவ்வளவுசீதனமா? திருமணம் செய்கிறார்களா அல்லது மகனை நல்ல விலைக்கு விற்கிறார்களா?

error: Alert: Content selection is disabled!!