“அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?”
“தருவதாகச் சொல்லியிருக்கிறேன். இந்தத் திருமணம் எப்படியாவது நடக்கவேண்டும்!”
அவனை யோசனையுடன் பார்த்தாள் சித்ரா. ரஞ்சன் இப்போது வசதியாகத்தான் இருக்கிறான். ஆனால் இவ்வளவு சீதனம் கொடுக்கும் வசதி இருக்கிறதா என்கிற கேள்வி எழுந்தது அவளுக்கு.
அதை வெளிப்படையாகக் கேட்க முடியாமல், “நம்மால் முடியுமா?” என்று பொதுவாகக் கேட்டாள்.
முடியுமா முடியாதா என்று சொல்லாமல், “முடியவேண்டும்!” என்றான் அவள் கணவன் பிடிவாதக் குரலில்.
“இதை உங்கள் அம்மாவிடம் சொன்னீர்களா? அவர் என்ன சொல்கிறார்?”
“அவருக்குச் சம்மதம்தான். சீதனம் அதிகம் என்றாலும் நித்திக்கு அவனைப் பிடித்திருக்கிறதே. அதைவிட இதிலாவது அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்று என்கிறார் அவர்!”
அதென்ன ‘இதிலாவது’ என்று கோபமாகக் கேட்கத் தோன்றியபோதும் அதை அடக்கிக் கொண்டாள்.
“பிறகு என்ன, எல்லோருக்கும் சம்மதம் என்றால் சரிதானே. திருமணத்தை எப்போது செய்வது என்று ஏதாவது சொன்னார்களா?”
“இன்னும் இரண்டு வாரத்தில் எங்களுக்குள் நிச்சயத்தைச் செய்துவிட்டு அடுத்த மாதம் திருமணம் வைக்கலாம் என்று யோசனை.”
“ஓ..! ஆனால், அதற்குள் அவர்கள் கேட்ட சீருக்குப் பணத்தைத் தயார் செய்ய முடியுமா? திருமணத்துக்கும் பணம் வேண்டுமே!”
அவனும் அதைப்பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தான்.
அதையே அவளும் கேட்டதில், “ஏன், உன் பிச்சைக்காரக் கணவனிடம் ஏது பணம் என்கிற சந்தேகம் வந்துவிட்டதா உனக்கு?” என்று சுள்ளென்று கேட்டான் ரஞ்சன்.
“ஏதோ நீங்கள் என் கணவன் என்பதாவது உங்களுக்கு நினைவில் இருக்கிறதே. அந்தவரையில் சந்தோசம் தான்.” என்றவள் அவனைக் கூர்மையாகப் பார்த்தபடி, “என்ன, இன்று அளவுக்கு அதிகமாகவே கோபம் வருகிறது. அங்கே உங்கள் அத்தை மகள் ரத்தினம் நின்றாளோ. அவளைக் கண்டதும் இழப்பின் அளவு பெரிதாகத் தெரிகிறதோ?” என்று குத்தலாகக் கேட்டவள் அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.
நெஞ்சோ கனத்துப் போனது. கோபப் படவேண்டிய அவளே பொறுமையாகப் போக அவனானால் அவளைக் குத்திக்கொண்டே இருக்கிறானே!
திருகோணமலையில் அமைந்திருந்த மிகப் பெரிய திருமண மண்டபம், மக்களால் நிறைந்து கிடந்தது.
மணமேடையில் மணமக்கள் வீற்றிருக்க, ஐயர் அக்கினி வளர்த்து மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்தார்.
நித்தியும் நவீனும் ஒருபக்கம் ஐயர் சொல்லும் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் விழிகளால் காதல் மொழி பேசிக்கொள்வதும், மாலைகளின் மறைவில் விளையாடுவதும் என்று தங்களது திருமண வாழ்க்கையை மிகுந்த எதிர்பார்ப்புடனே எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
அவர்களைக் பார்த்தும் பார்க்காததுபோல் பார்த்த சித்ராவுக்குள் ஒருவித உணர்வுகளின் தாக்கங்கள்.
மனதுக்குப் பிடித்தவனே மணவாளனாக அமைவது என்பதே ஒவ்வொரு பெண்களுக்கும் மிகப் பெரிய வரம்! அப்படியானவனை சொந்த பந்தங்களின் முன்னிலையில் சுற்றங்கள் வாழ்த்தக் கணவனாக அடைவது என்பது பெரும் பேறு!
இவை எதுவும் அவளுக்குக் கிட்டியதில்லை!
காதலனாக எண்ணியவன் கணவனாக மாலையிட்டபோது கல்லாக இறுகிப் போயல்லவா அவளருகில் நின்றான்!
நித்தியின் வெட்கச் சிரிப்பையும், அதை ஆசையோடும் ஆவலோடும் பார்க்கும் நவீனையும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவளுக்கு. அதேவேளை அவளுக்குள் இருந்த ஏக்கமும் அதிகரித்துக்கொண்டே சென்றது.
இராசமணியின் அன்பு மகளாக, ரஞ்சனின் ஒரேயொரு தங்கையாக, கணவனாகப் போகிறவனின் மனதுக்குப் பிடித்த இனியவளாக நிற்கும் நித்தியைப் பார்க்கையில் மெல்லிய பொறாமை கூட எட்டிப் பார்த்தது.
இது எதுவும் அவளுக்கு வாய்க்கவில்லையே என்று எண்ணியபடி அங்கே முன் வரிசையில் அமர்ந்திருந்த தாய் தந்தையரைத் திரும்பிப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள் சித்ரா.
இன்னொரு பெண்ணின் திருமணத்தில் கூட மருமகனோடு சேர்ந்து நின்றிருந்த மகளின் மீதே பார்வையைப் பதித்திருந்த அவர்களும், அவளின் புன்னகையைக் கண்டுவிட்டு மலர்ந்து சிரிக்க கண்ணைக் கரித்தது அவளுக்கு.
அவளும் மகிழ்ச்சியாக இல்லை. அவளைப் பெற்றவர்களுக்கும் சந்தோசத்தைக் கொடுக்க முடியவில்லை அவளால்.
அவளுக்குமட்டும் ஏன் இப்படியான ஒரு வாழ்க்கை ? நித்தியை விட அவள் எதில் குறைந்து போனாள்?
இதோ அவள் உயிராகக் காதலித்து, பிடிவாதமாகக் கட்டிக்கொண்ட கணவன் அவளுக்கு அருகில், சொல்லப் போனால் அவளது தோளோடு தோள் உரசிக்கொண்டுதான் நிற்கிறான்.
ஆனால், மனதளவில் பல மைகளுக்கு அப்பால் அல்லவா நிற்கிறான்! அந்த மைல்களைக் கடந்து அவனை நெருங்க முடியாமல் தடையாக நிற்பது அவளது சுயமரியாதை அல்லவா!
என்ன இருந்தாலும் என்னை ஏமாற்றிவிட்டு இன்னொருத்தியைக் கட்டத் துணிந்தவன் தானே என்கிற எண்ணம் உண்டாக்கிய கசப்போடு அவள் அவனைத் திரும்பிப் பார்க்க, அவளது அசைவை உணர்ந்து திரும்பியவன் கேள்வியாக புருவங்களை உயர்த்தினான்?
அதை எதிர்பாராத சித்ரா முதலில் தடுமாறி பிறகு ஒன்றுமில்லை என்பதாகத் தலையை அசைத்துவிட்டு, மணமேடையில் பார்வையைப் பதிப்பவள் போன்று நின்றுகொண்டாள்.
யோசனையோடு மனைவியையே பார்த்த ரஞ்சனின் விழிகளில், அன்றைய திருமணத்துக்காக மையிட்டிருந்த அவள் விழிகளில் தெரிந்த வலி தென்பட்டது.
ஏன் இப்படியிருக்கிறாள்? காலையில் இருந்து நன்றாகத்தானே இருந்தாள்?
அன்று காலையில் நேரத்துக்கே எழுந்த ரஞ்சன், அவன் அறையில் சித்ரா தயாராவதால் அருகிலிருக்கும் மற்றொரு அறையில் குளித்து, வேட்டி சட்டையில் தயாராகி அவனது அறைக்குள் வந்தபோது, அங்கு மயில் வண்ணப் பட்டுச் சேலையில் அழகிய பதுமை என நின்றவளைப் பார்த்து ஸ்தம்பித்துத்தான் போனான்.
தலைக்குக் குளித்துத் தளரப் பின்னிய கூந்தலுடன், விற்புருவங்கள் நீண்டு கிடக்க, கருவண்டு விழிகள் மையில் தோய்ந்திருக்க, செப்பிதழ்கள் உதட்டுச் சாயத்தில் நனைந்திருக்க, அவனது திட மனதை நீண்ட நாட்களுக்குப் பிறகு அசைத்துப் பார்த்தது அவளின் பேரழகு!
அவள் மேல் ரசனையுடனும் ஆசையுடனும் படிந்த விழிகளை அசைக்க முடியாது நின்ற இடத்திலேயே வேரோடி நின்றவனை எதேர்ச்சையாக நிமிர்ந்து பார்த்த சித்ராவுக்கும் பார்வையை அகற்ற முடியவில்லை.
அன்று, அவர்களது திருமணத்துக்கும் அவன் வேட்டி சட்டைதான் உடுத்தியிருந்தான். ஆனாலும், மனதில் இருந்த வெறுப்பினால் அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை.
இன்றோ, அவனது கம்பீரமும், திடகாத்திரமான உடற்கட்டும், அவனுக்கு மிக நன்றாகப் பொருந்திப் போயிருந்த வேட்டி சட்டையும் அவள் மனதை அசைத்துப் பார்த்தது என்றால், அவன் விழிகளின் பாவம் அவளை அப்படியே கட்டிப் போட்டது!
இருவரும் மற்றவரின் மேலிருந்த கோபத்தை மறந்து, தங்களை மறந்து, ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க, கீழேயிருந்து கேட்ட இராசமாணியின் குரலில் அவர்களைச் சூழ்ந்திருந்த மாயவலையில் இருந்து சட்டென மீண்டனர்.

