என் சோலைப் பூவே 29 – 3

கன்னங்கள் கதகதக்க நின்றவளை ஆழ்ந்த பார்வையால் அளந்தபடி, “கிளம்பிவிட்டாய் என்றால் போகலாமா?” என்று கேட்டான் ரஞ்சன்.

 

அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ, “ம்..” என்று முணுமுணுத்துவிட்டு அவள் முன்னே நடக்க, அவளின் பின்னழகைப் பார்த்த ரஞ்சனின் ஆண்மனது ஆடித்தான் போனது.

 

அதிலிருந்து தப்பிக்க எண்ணித் தலையை உலுக்கிக் கொண்டவன், வேகமாகச் சென்று அவளுடன் சேர்ந்தே படியிறங்கினான்.

 

மகனும் மருமகளும் ஒன்றாக இறங்கி வருவதைப் பார்த்த இராசமணி கூட அருமையான ஜோடிப்பொருத்தம் என்று எண்ணி வியந்துதான் போனார். அதையும் கவனிக்கத் தவறவில்லை ரஞ்சன்.

 

அப்படி, அவர்களின் மேல் கோபத்தில் இருந்த தாயையே வியக்க வைத்த அழகு குன்றாமல் நிற்கும் மனைவியின் விழிகளில், இப்போது ஏன் இந்த வலி என்று ஓடிய அவன் சிந்தனையை ஐயர் சொன்ன ‘கெட்டிமேளம் கெட்டிமேளம்’ என்ற வார்த்தைகள் கலைத்தது.

 

நவீனின் கரங்கள் தங்கையின் கழுத்தில் தாலியை அணிவிப்பதைப் பார்த்தவனின் மனதில் பெருத்த சந்தோசமும் நிம்மதியும் படர்ந்தது. எதையோ பெரிதாகச் சாதித்து விட்டதைப்போன்று உணர்ந்தான்.

 

தன் கடமையையும் தந்தையின் ஆசையையும் நிறைவேற்றிவிட்ட மன நிறைவோடு, அதைப் பகிர்ந்துகொள்ள பக்கத்தில் நின்ற மனையாளைத் திரும்பிப் பார்த்தவனின் மனதை அவள் நின்ற கோலம் மீண்டும் அசைத்தது.

 

இதழ்களில் நெளிந்த புன்னகையோடு அர்ச்சதையைத் தூவிக் கொண்டிருந்தவளின் விழிகளில் மெலிதாகக் கண்ணீர் கசிந்திருக்க அந்த முகத்தில் தெரிந்த ஏக்கத்தில் ஆடித்தான் போனான் ரஞ்சன்.

 

அது போதாது என்று, ஆசையோடும் ஆவலோடும் விழியகற்றாமல் அவள் பார்க்க, அப்படி எதைப் பார்க்கிறாள் என்று எண்ணியபடி மணமேடையைப் பார்த்தான் ரஞ்சன். அங்கே நேசம் பொங்க நித்தி தன் கணவன் ஆகிவிட்டவனைப் பார்க்க அவனோ அவளைத் தன் தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தான்.

 

ரஞ்சனையும் அந்தக் காட்சி பாதித்தபோதும், மனைவியின் நிலை இன்னும் அதிகமாகப் பாதித்தது.

 

மணமக்களையும் அவர்கள் ஒருவரையொருவர் அணைத்துக் கொள்வதையும் இவ்வளவு ஆசையோடும் ஆர்வத்தோடும் பார்க்கிறாள் என்றால், அவள் மனதில் எந்தளவுக்கு ஏங்கிப் போயிருக்கிறாள் என்பது புரிய மிகவும் வேதனையாக உணர்ந்தான்.

 

இது எதையும் அவனிடம் அவள் காட்டிக் கொண்டதே இல்லையே! நெஞ்சுக்குள் என்னவோ உடைய அவளது காரத்தைப் பற்றி மெதுவாக அழுத்தினான்.

 

திடுக்கிட்டுத் தன் மோனநிலை கலைந்து அவனைத் திகைப்போடு பார்த்தவள், சட்டெனத் தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டாள்.

 

அதைப் பார்த்தவனின் நெஞ்சில் வலித்தது. அந்த நிமிடமே அவள் மனதில் இருக்கும் ஏக்கத்தை எப்பாடு பட்டாகினும் போக்கிவிட வேண்டும் என்கிற வெறியே எழுந்தது.

 

மனம் கனிய, “நித்தியின் தலை முழுவதும் அர்ச்சதை கிடக்கிறது பார். அதைக் கொஞ்சம் தட்டிவிடு..” என்றவனின் குரலும் கனிந்து கிடந்தது.

 

உள்ளம் உள்ளே அலைபாய்ந்து கொண்டிருந்ததில் அவன் குரலில் இருந்த மாற்றத்தை உணராது, இயந்திர கதியில் அவன் சொன்னதைச் செய்தாள் சித்ரா.

 

அதன்பிறகான திருமணச் சடங்குகள் அனைத்துமே அதன்பாட்டில் நடந்து கொண்டிருந்தபோதும் அவ்வப்போது மனைவியைக் கவனிக்கத் தவறவில்லை ரஞ்சன்.

 

அனைவரோடும் சிரித்த முகமாக உரையாடி, சாப்பிடாதவர்களை சாப்பிடச் சொன்னபடி, சாப்பிட்டவர்களுக்கு காபியோ, குளிர்பானமோ அவரவர்க்கு ஏற்ப எடுத்துக் கொடுத்தபடி நின்றவளைப் பார்த்து வியந்தான்.

 

அந்தத் திருமண மண்டபத்தில் அவன் மனைவியாக, நித்தியின் அண்ணியாக, அவன் தாயாரின் மருமகளாக இயல்பாகப் பொருந்தி அனைத்து வேலைகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருக்கும் இவளா அன்று ‘உன் தங்கையின் வாழ்க்கை கெட்டாலும் பரவாயில்லையா’ என்று அவனிடம் கேட்டாள்.

 

தன் சிந்தனை முழுவதும் மனைவியே நிறைந்து இருக்கிறாள் என்பதை உணராமலேயே அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் ரஞ்சன்.

 

ஒருவழியாகத் திருமணமும் முடிந்து மதிய உணவும் முடிந்து, வந்தவர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி மெல்ல மெல்ல விடைபெற, அவர்களின் சொந்தங்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

 

மணமக்கள் ஓய்வாக அமர்ந்திருக்க, சித்ராவின் பெற்றோர்கள் உட்பட நெருங்கிய சொந்தங்கள் ஆங்காங்கே அவர்களுக்கு அருகே அமர்ந்திருந்தனர்.

 

அப்போது அங்கே வந்த ரஞ்சன், “இனி வீட்டுக்குக் கிளம்பலாம் அம்மா. கார் வெளியே நிற்கிறது. உங்களை வீட்டில் விட்டுவிட்டு நான் திரும்ப வரவேண்டும்.” என்று சொல்ல, தன் அத்தை சுசீலாவை ஒருபார்வை பார்த்துவிட்டு, “அண்ணா!” என்று அழைத்தாள் நித்யா.

 

“என்ன நித்தி? ஏதாவது வேண்டுமா?”

 

இன்றிலிருந்து அவள் இன்னொருவனுடைய மனைவியாக வேறு வீட்டுக்குச் செல்லப் போகிறாள் என்பதால் உண்டான கனிவோடு அவன் விசாரிக்க, “உங்களோடு கொஞ்சம் கதைக்கவேண்டும். இப்படி அமருங்கள்.” என்று ஒரு இருக்கையைக் காட்டினாள் அவள்.

 

நேரம் போகிறதே என்று எண்ணியபோதும் அவளது பேச்சைத் தட்டாமல் அமர்ந்தவன், “சொல்லு.” என்றான்.

 

மீண்டும் ஒருமுறை அத்தையைப் பார்த்துவிட்டு, “எனக்கு நம் வீடும் உங்கள் கடையும் வேண்டும்!” என்றாள் நித்யா பட்டென.

 

புரிந்தும் புரியாமல், அதிர்ச்சியா குழப்பமா என்று வரையறுக்க முடியாத உணர்வுகளோடு தாயையும் தங்கையையும் மாறிமாறிப் பார்த்தான் ரஞ்சன்.

 

பார்த்தளவில் தாய்க்கும் அது புதுச் செய்தியே என்பது மட்டும் புரிந்தது.

 

மீண்டும் தங்கையிடமே பார்வையைப் பதித்து, “விளங்கவில்லை?” என்றான்.

 

“என்ன அண்ணா விளங்கவில்லை? நாம் இப்போது இருக்கும் அப்பாவின் அந்த வீடும், நீங்கள் புதிதாகத் திறந்த பெரிய கடையும் எனக்கு வேண்டும்!” என்றாள் அவன் தங்கை சற்றே குரலை உயர்த்தி.

 

கழுத்தில் ஏறிய மாங்கல்யம் அந்தத் துணிவைக் கொடுத்ததா? அல்லது அவளது அத்தையின் போதனையா?

 

ஏதோ ஒன்று!

 

எல்லோர் முன்னிலையிலும் சத்தமாகவே கேட்டாள் நித்யா.

 

அப்படிக் கேட்டவளை முகம் இறுகப் பார்த்தான் ரஞ்சன்!

 

ஒரு குறையுமில்லாது அவர்கள் கேட்ட சீரையும் கொடுத்து சிறப்பாக திருமணத்தையும் முடித்தபிறகு இது என்ன?

 

அவள் அப்படிக் கேட்டது ஒருபக்கம் ஆத்திரம் என்றால், ஏதோ தனியாகக் கேட்டால் அவன் தரமாட்டான் என்பது போல் எல்லோர் முன்னிலையிலும் அதுவும் சித்ராவின் பெற்றோரும் இருக்கையில் இப்படி உரக்கக் கேட்டது அவனுக்குப் பெரிய அடியாக இருந்தது!

 

அவமானமும் ஆத்திரமுமாகத் தாயைப் பார்த்தவனின் விழிகள், ‘என்னம்மா இதெல்லாம்?’ என்று சினத்தோடு வினவின.

 

error: Alert: Content selection is disabled!!