“யார்? நீயா அனைத்தையும் தூக்கிக் கொடுக்கிறவள். பணத்துக்காக பச்சோந்தியாக மாறும் நீயெல்லாம் என்னைப் பற்றிப் பேசாதே! நீயொரு பணப்பிசாசு! உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா?” என்று சித்ரா ஆத்திரத்துடன் சொல்லி முடிக்க முதலே பலகுரல்கள் அவளை அதட்டின.
“வாயை அடக்கிப் பேசு!” இது மல்லிகா.
“யாரைப் பார்த்து பச்சோந்தி என்கிறாய். நீதான் பணப்பிசாசு!” என்றாள் சாதனா.
“சித்ரா! வாயை மூடு!” இது அவள் மாமியார்.
இப்படிக் கேட்ட பலகுரல்களுக்கு இடையில் லக்ஷ்மி பதட்டத்துடன் மகளின் கையைப் பற்றிக்கொள்ள, “சித்து! பேசாமல் இரு. இருக்கும் பிரச்சினையை நீ பெரிதாக்கதே!” என்றார் சந்தானம் கண்டிக்கும் குரலில்.
“சும்மா இருங்கள் அப்பா. வாயை மூடிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது!” என்று தந்தையிடம் ஆத்திரத்தோடு சொன்னவளிடம், “ஆமாமாம்! நீ எப்படி வாயை மூடிக்கொண்டு இருப்பாய். ரஞ்சனோடு பழகியதைப் போட்டோ எடுத்து எங்களுக்கு எல்லாம் அனுப்பியவள் தானே நீ..” என்றார் மல்லிகா ஏளனமும் எகத்தாளமுமாக.
“ஆமாம். அனுப்பினேன் தான். அதற்கு என்ன? அவரைக் காதலித்தேன். அவரோடு எடுத்த போட்டோக்களைத்தான் அனுப்பினேன். அதேபோல அவரையே கட்டிக்கொண்டேன். இதில் என்ன தவறு கண்டீர்கள்? நானென்ன உங்கள் மகளைப் போல ஒருவனோடு பழகுவதும் அவனிடம் பணமில்லை என்றதும் இன்னொருவனைப் பிடிப்பதும் என்று நேரத்துக்கு ஒரு மாப்பிள்ளை பிடிப்பவள் என்று நினைத்தீர்களா?” என்று அவள் கேட்டது, அங்கிருந்த அனைவரையுமே அது மிக நன்றாகத் தாக்கியது.
“ஏய்! யாரைப் பார்த்து என்ன பேசுகிறாய்..” என்று ஆங்காரமாக ஆரம்பித்த மல்லிகாவிடம், “உங்கள் மகளைப் பார்த்துத்தான் சொல்கிறேன்!” என்றாள் சித்ரா.
“நான் போட்டோ அனுப்பியதும் திருமணத்தை நிறுத்தும் அளவுக்கு மிக நல்லவர்களா நீங்கள் எல்லோரும்?” என்றாள் ஏளனமாக.
“அல்லது ஒருசில போட்டோக்களை மாத்திரம் பார்த்துவிட்டு திருமணத்தை நிறுத்தும் அளவுக்கு நீ என்ன பெரிய ஒழுக்கசீலியா?” என்று சாதனாவைப் பார்த்து அவள் கேட்டபோது தங்கள் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று சுசீலாவும் மல்லிகாவும் வாயடைத்து நிற்க, இராசமணிதான் மருமகளை அதட்டினார்.
“யாரிடம் என்ன பேசுகிறோம் என்றில்லாமல் பேசாதே!” என்றவர், “இதுதான் உங்கள் பெண்ணை நீங்கள் வளர்த்த லட்சணமா?” என்று சந்தானத்தைப் பார்த்துக் கேட்கவும் தவறவில்லை.
சந்தானம் எதுவோ சொல்லவர, “கொஞ்சம் பொறுங்கள் அப்பா!” என்று தந்தையை அடக்கியவள், “யாரிடம் என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறேன் அத்தை. இவர்களுக்கு நான் போட்டோக்களை மட்டும்தான் அனுப்பினேன். கடிதவுரையில் இருந்த எங்கள் வீட்டு விலாசத்தை வைத்து எப்படியோ எங்கள் வீட்டுத் தொலைபேசி இலக்கத்தைக் கண்டுபிடித்து, என்னோடு பேசினார்கள் இந்த அம்மாவும் அவர் மகளும்!” என்று அங்கிருந்த மல்லிகாவையும் சாதனாவையும் சுட்டிக் காட்டினாள் சித்ரா.
இதென்ன புதுக்கதை என்பதாக இராசமணி பார்க்க, “இதோ அவர்கள் முன்னால் தான் சொல்கிறேன். எங்கே சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம், நான் சொல்வது எல்லாம் பொய் என்று. எனக்கு அழைத்து, இந்தப் போட்டோக்களைப் பார்த்ததும் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என்று நினைத்தாயா என்று கேட்டார்கள். அப்படி நிறுத்தாவிட்டால், ரஞ்சனின் கடைகளை வாங்கிய என் அப்பா அவரது கடை லோனையும் நிறுத்திவிடுவார், செருப்பும் எங்கிருந்தும் வந்திறங்காது என்று நான் மிரட்டியதற்கு, அப்படி நடுத்தெருவுக்கு வரும் பிச்சைக்காரனைக் கட்டி நான் என்ன செய்ய என்று உங்கள் அருமை மருமகள் சொன்னாள். அதன்பிறகுதான் திருமணத்தையே நிறுத்தினார்கள்.” என்று அவர்களின் குட்டை எல்லோர் மத்தியிலும் போட்டுடைத்தாள் சித்ரா.
மல்லிகா, சுசீலா குடும்பத்தவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் எல்லோருக்கும் இது அதிர்ச்சியாக இருந்ததில் அனைவருமே வாயடைத்து நிற்க, “பார்த்தீர்களா அம்மா அண்ணாவின் குணத்தை. அந்தக் கடைகள் இரண்டும் வாடகைக்கு எடுத்து நடத்துகிறேன் என்றுதானே நம்மிடம் சொல்லியிருந்தார். இப்போது இவரானால் அதுவும் அவர்கள் கடை என்கிறார். இதை அண்ணா நம்மிடம் சொல்லவில்லையே.” என்றாள் நித்யா.
அவளுக்கோ இப்போது கடையையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்கிற பேராசை வந்திருந்தது. அதில் தமையனைத் தாயிடம் போட்டுக்கொடுத்தாள்.
சித்ராவுக்கோ மொத்தமாக அவளை வெறுத்தே போனது.
“சேச்சே! நீயெல்லாம் என்ன பெண். அந்தக் கடைகளை வாங்கியது என் அப்பா. அதற்கு உன் அண்ணா இன்னமும் வாடகை கட்டிக்கொண்டுதான் இருக்கிறார். இப்படி எல்லோருக்கும் முன்னால் அவரை நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்கிறாயே, கொஞ்சம் கூடவா உனக்கு அவர்மேல் பாசம் இல்லை?”
“அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் கதைக்கத் தேவையில்லை. அது எனக்கும் அண்ணாவுக்குமான பிரச்சினை. அதுதான் எப்படியோ என் அண்ணாவைக் கட்டிக் கொண்டீர்கள் தானே. முடிந்தால் அவரை அந்தக் கடையையும் வீட்டையும் எனக்குத் தரச்சொல்லுங்கள்.” என்று, அப்போதும் தன் காரியத்தில் குறியாக நின்றாள் நித்யா.
அதற்கு மேலும் அவளிடம் பேச சித்ராவுக்குப் பிடிக்கவே இல்லை. நீயெல்லாம் ஒரு மனிதப் பிறவியா என்று அற்பபுழுவைப் பார்ப்பது போல் பார்த்தவள், அவளை அலட்சியம் செய்துவிட்டு கணவனை நாடிச் சென்றாள்.
அங்கிருந்த கட்டிலில் அமர்ந்திருந்தவன், இரண்டு கைகளாலும் தலையைத் தாங்கியபடி குனிந்திருந்த நிலை அவளை என்னவோ செய்ய, “ரஞ்சன்..!” என்றபடி ஓடிச்சென்று அவன் தலையைத் தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் சித்ரா.
தாளமுடியாத வேதனையோடு அவளை ஒருநொடி நிமிர்ந்து பார்த்தவன், அடுத்தநொடியே அவள் இடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு அவள் வயிற்றுக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
ஆறுதல் தேடும் குழந்தையாய் நடந்துகொண்டவனின் செயலில் முகம் கனிய அவன் தலையைக் கோதிவிட்டவளின் விழிகளில் நீர் திரண்டது.
அவன் மீது அவளுக்குக் கோபம் இருக்கிறதுதான். அவளை ஏமாற்றப் பார்த்தான் என்கிற ஆறா வடு இருக்கிறதுதான்! ஆனால் அதற்கும் மேலே காதல் இருகிறதே! நேசம் இருகிறதே! பைத்தியம் போல் அவனையே சுற்றும் மனம் இருகிறதே! இன்று அவன் துடிக்கையில் தன் உயிரைக் கொடுத்தாவது அவன் வேதனையைப் போக்கவேண்டும் என்கிற வெறி இருக்கிறதே!
தன் வயிற்றில் ஈரத்தை உணர்ந்தவளுக்கும் விழிகளில் நீர் மல்கியது. அந்த நொடியில் தன்னால் முடிந்ததாய் எண்ணி அவனை அரவணைத்தபடி நின்றாள் சித்ரா.

