அதற்கு மேலும் அவன் சொல்லும் எதையும் கேட்கும் தைரியமோ தெம்போ அவளிடம் இல்லை.
அவ்வளவு நாட்களும் அவன் செய்தவைகளை நினைத்து நினைத்து மருகி மூச்சு முட்டுவதாக உணர்ந்துதான் இன்று வெடித்தாள், வெடித்த பிறகோ ஏன்டா அதையெல்லாம் இவனிடம் கேட்டோம் என்றிருந்தது.
அந்தளவுக்கு மனம் கசந்துபோய்க் கனத்தது. அதற்குமேலும் அங்கே நிற்க முடியாது போகவே, “நான் அம்மா வீட்டுக்குப் போகப் போகிறேன்..” என்றாள் சித்ரா.
அவள் என்னவோ அந்த நிமிடம் எங்காவது சென்றால் மனதுக்குக் கொஞ்சம் நன்றாக இருக்குமோ என்று நினைத்துத்தான் சொன்னாள். ஆனால் ரஞ்சனுக்கோ, அவன் சொன்னவற்றை எல்லாம் கேட்டுவிட்டு நிரந்தரமாக அவனைப் பிரிந்தே போகப் போகிறாள் என்று தோன்றிய மாத்திரத்தில் ஆத்திரம்தான் வந்தது.
வேகமாக அவளை நெருங்கி, அவள் தாடையில் கைவைத்துத் தன்பக்கமாகத் திருப்பினான்.
“ஏய்!இங்கே பாருடி! நான் கெட்டவன்தான். செய்தது எல்லாமே பெரும் பிழைதான்! அதெல்லாம் திருமணத்துக்கு முதல்! இப்போது உன்முன்னால் நிற்பவன் உன் புருஷன். உன்னை உயிராய் நேசிக்கிற உன் காதலன்! நீயில்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று நினைக்கிறவன். என்னை விட்டு நீ எங்கேயும் போகமுடியாது! போகவும் விடமாட்டேன்! அப்படிப் போக நினைத்தாய் என்று வை, அடித்துக் காலை முறித்து மூலையில் போட்டுவிடுவேன் ராஸ்கல்! நீ வாழ்ந்தாலும் சரி செத்தாலும் சரி, எல்லாமே என் கூடத்தான். தைரியமிருந்தால் இந்த வீட்டுப் படியை தாண்டிப் பாருடி!” என்று உறுமியவனை விழிகள் தெறித்துவிடுமோ என்கிற அளவுக்கு அதிர்ந்துபோய்ப் பார்த்தாள் சித்ரா.
“என்னடி பார்க்கிறாய்? ஒரு இயந்திரம் மாதிரி இருந்தவனிடம் வந்து வாழ்க்கை என்றால் என்ன? காதல் என்றால் என்ன? சந்தோசம் என்றால் என்ன? என்று காட்டிவிட்டு, உயிரோடு உயிராக வாழ்ந்துவிட்டு இடையில் என்னை அநாதை போல் விட்டுவிட்டுப் போகிறேன் என்பாய். அதைக் கேட்டுக்கொண்டு பேசாமல் இருப்பேன் என்று நினைத்தாயா? நான் நல்லவனோ கெட்டவனோ எனக்குத் தெரியாது. அனால் நீ நல்லவள்! என் தேவதை! என் வாழ்க்கை! உன்னை என்னால் இழக்க முடியாது. மரியாதையாக என்னோடு இருந்து குடும்பம் நடத்தும் வழியைப் பார். இல்லையானால் நான் மனிதனாகவே இருக்க மாட்டேன்!” என்றவனை அப்போதும் பேச்சற்றுப்போய்ப் பார்த்தாள் சித்ரா.
அந்த விழிகளையே உற்றுப் பார்த்தவன், சிலநொடிகளுக்கு மேலே அவற்றைப் பார்க்கமுடியாமல் அவளை இழுத்து வேகமாக அணைத்துக் கொண்டான்.
“நீயில்லாமல் என்னால் வாழமுடியாதுடி சித்து. அப்பா இறந்ததோடு இருண்டு போன என் வாழ்க்கை உன்னைத் திருமணம் செய்தபிறகுதான் மலர்ந்தது. இப்போதுதான் நான் மனமார சிரிப்பதும் சந்தோசமாக வாழ்வதும். அதைத் தந்தவள் நீதான். நீயில்லாமல் போனால் நான் பிணம்டி சித்து.”
அவள் கூந்தலுக்குள் முகத்தைப் புதைத்தபடி குமுறினான் ரஞ்சன்.
கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. வாய் வார்த்தைகள் எதையும் உதிர்க்க முடியாமல் நின்றாள் சித்ரா. “இவ்வளவு சொல்கிறேன் வாயைத் திறக்கிறாயா? அப்படி என்ன கோபம் உனக்கு? நித்தியின் வாழ்க்கையைக் கெடுத்துவிடுவேன் என்று சொல்லி நீயும் தான் என்னை மிரட்டினாய். நானும் என்ன உன்னைப் போல அதைப் பிடித்துக்கொண்டு தொங்கினேனா? நம் காதலுக்கு முன்னால் அதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்று ஒதுக்கவில்லையா? அப்படி நீயும் செய்யமாட்டாயா?”
அவள் வாயைத் திறந்து நான் அம்மா வீட்டுக்குப் போகவில்லை என்று சொல்லவில்லையே என்கிற ஆத்திரத்தில் கேட்டவனைப் பிடித்து மீண்டும் தள்ளிவிட்டாள் சித்ரா.
“ஓ..! பெரிய மனதுபண்ணி அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு என்னோடு குடும்பம் நடத்துகிறீர்களோ?” என்று ஆத்திரமும் எள்ளலுமாக அவள் கேட்க, “அப்படி இல்லை சித்து..” என்று ஆரம்பித்தவனின் சட்டையை, ஆவேசத்தோடு கொத்தாகப் பற்றினாள் சித்ரா.
“அவள் வாழ்க்கையைக் கெடுப்பேன் என்றுதானே சொன்னேன். ஆனால் கெடுத்தேனா? நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்துவிடுமா? அப்பா உங்கள் கடைகளை வாங்கி, வங்கி லோனை நிறுத்தி, செருப்புக்களை வாங்கவிடாமல் செய்வேன் என்று சொன்னார். சொன்னது மட்டுமல்ல வாழ்க்கையில் நீங்கள் இனி நிமிரவே முடியாத அளவுக்குச் செய்வார் என்றும் தெரியும். அப்படி நடந்தால் நடுத்தெருவுக்கு வந்துவிடுவீர்களே என்று நினைத்து, அப்பாவிடமிருந்து உங்களைக் காப்பாற்ற எண்ணித்தான் அப்படி மிரட்டினேன். என்னாலும் உங்களைத் தவிர வேறுயாரையும் திருமணம் செய்யவும் முடியாது என்றுதான் அப்படிச் செய்தேன். நீங்களானால் என் பிழையை மன்னித்து என்னோடு குடும்பம் நடத்துகிறேன் என்கிறீர்கள். அப்படி யாரும் என்னுடன் வாழத்தேவையில்லை. உங்களுக்குப் பிடித்தவளையே கட்டிக்கொள்ளுங்கள்! போங்கள்! போய்த் தொலையுங்கள்!” என்றபடி, அவன் நெஞ்சில் கையை வைத்துத் தள்ளிவிட்டவளைப் பாய்ந்து கட்டிக்கொண்டான் ரஞ்சன்.
“விடுங்கள்!!” என்று சீறியவளிடம், “நீதானே எனக்குப் பிடித்தவளைக் கட்டிக்கொள்ளச் சொன்னாய். பிறகு ஏன்டி விடச்சொல்கிறாய்.” என்றவனின் விழிகளிலும் குரலிலும் எல்லையில்லா நேசம் பொங்கி வழிந்தது.
பின்னே, தனக்கென்று ஒரு முகவரியைத் தேடி அலைந்து கொண்டிருந்தவனுக்கு முகவரி கொடுத்ததே அவள்தான்! அது தெரியாமல் இவ்வளவு நாளும் மூடனாக அல்லவோ இருந்துவிட்டான். இனியும் விடுவானா?
“ப்ச்! நடிக்காமல் என்னை விடுங்கள்!!” என்றவளின் விழிகளையே காதலுடன் பார்த்தபடி அவன் சிந்திய மாயப் புன்னகையில் அவள் மனமும் மெல்லமெல்லக் கரைந்துதான் போனது.
அதைக் காட்டிக் கொள்ளாமல், “விடச் சொன்னால் விடுங்கள்!” என்றவளின் குரலில் முதல் இருந்த கோபத்தில் பாதியும் இப்போது இல்லை.
அவளின் கழுத்து வளைவில் பலவந்தமாகத் தன் உதடுகளைப் பொருத்தி, “அப்படி விடவாடி இப்படிக் கட்டியிருக்கிறேன்..” என்றவனின் கேள்வியில் வெடித்த விம்மலுடன் அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள் சித்ரா.
“என்ன இருந்தாலும் காசுக்காக என்னுடன் பழகியவர் தானே நீங்கள்..” அப்போதும் மனச்சிணுக்கத்துடன் கேவியவளின் வேதனை அவனுக்குப் புரியாமலில்லை.
அந்தச் சிணுக்கம் மனதில் இருந்தபோதிலும், அவன் நெஞ்சிலே தஞ்சமடைந்து அழும் மனைவியின் தலையை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டான் ரஞ்சன்.
“என்னை மன்னிப்பா..
“தயவு செய்து எதையும் என்னிடம் கேட்காதீர்கள். நீங்கள் கேட்டு ஒன்றை மறுக்கும் சக்தி என்னிடம் இல்லை. என்னால் தரமுடியாததைக் கேட்டு என்னை இன்னும் சாகடிக்காதீர்கள்..” என்று, அவன் மன்னிப்பைக் கேட்க முதலே மறுத்தாள் சித்ரா.
விக்கித்துப்போய் மனைவியைப் பார்த்தான் ரஞ்சன்.
அவளின் பேச்சு உணர்த்திய விஷயத்தை எண்ணி அதிர்வதா ஆனந்தப்படுவதா என்று அவனுக்குத் தெரியவில்லை.
‘என்னால் தரமுடியாததைக் கேட்காதீர்கள்’என்று சொல்லி அவனுக்கு மன்னிப்பை வழங்க மறுத்தவள், ‘நீங்கள் கேட்டு ஒன்றை மறுக்கும் சக்தி என்னிடம் இல்லை’ என்று சொல்லித் தன் ஆழமான காதலையும் அல்லவா நிரூபித்துவிட்டாள்!
அந்தக் காதலுக்கு முன்னால் அவள் வழங்க மறுத்த மன்னிப்பு அவனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
மன்னிப்பும் வேண்டாம்! மன்னிக்கவும் வேண்டாம்! தண்டனையாக வாழ்நாள் பூராக அவனுடன் இருந்தாலே போதும் என்று நினைத்தவன், “என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போகமாட்டாயே..” என்று கேட்டான்.
பெருங் கேவலுடன் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “நான் செத்தால் மட்டும்தான் அது நடக்கும்.” என்றாள் அவள்.
“உளறாதடி!” என்றபடி அவனுமே கட்டிக்கொண்டான் தன் சொர்க்கத்தை!

