அத்தியாயம்-37
சட்டென அவளைத் தன்னிடமிருந்து பிரித்து அவள் தோள்களைப் பற்றியவன், “உனக்கு நன்றாகத் தெரியும்தானே. அல்லது.. வா எதற்கும் வைத்தியரிடம் போகலாம்..” என்று பரபரத்தான்.
“இப்போதுதான் போய் செக் பண்ணிக்கொண்டு வந்தேன். அதோடு..” என்றவளை, திடீரென்று ஒருவித வெட்கம் வந்து சூழ்ந்தது.
அவளையே ஆர்வமாகப் பார்த்தபடி, “அதோடு?” என்று அவனும் கேட்டான்.
“அதோடு.. ந..மக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கப் போகிறது..” என்றவள், வெட்கம் தாளாது அவன் நெஞ்சிலேயே தன் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
ரஞ்சனுக்கோ ஆனந்த அதிர்ச்சியில் ஒருநிமிடம் என்ன சொல்வது, என்ன செய்வது என்றே தெரியவில்லை. அடுத்த நிமிடமே, “என் யாழி..” என்று உருகியவன், இப்போது அவள் முகமெங்கும் அவன் முத்தமழை பொழிந்தான்.
சட்டென முழங்கால் இட்டவன், அவள் வயிற்றை மறைத்த சேலையை விலக்கிவிட்டு, அங்கே வீற்றிருக்கும் தன் செல்வங்களுக்கும் முத்தங்களை வாரி வழங்கினான்.
ஏதோ தோன்றவும் அவளை அண்ணாந்து பார்த்து, “என் பிள்ளைகளுக்கு மீசை குத்தாதா?” என்றான்.
சித்ராவின் இதழ்களில் புன்னகை மின்னியது.
அவன் தலையைக் கோதியபடி, “இல்லை. குத்தாது..” என்றாள்.
“எதற்கும் நான் மீசையை எடுத்துவிடவா? அடிக்கடி கொஞ்சுவேனே.. அபோதெல்லாம் வலிக்காதா..” என்று கேட்டவனும் இப்போது அவள் கண்களுக்கு ஒரு குழந்தையாகத்தான் தெரிந்தான்.
“ம்கூம்! வேண்டுமானால் கொஞ்சம் ஒட்டி வெட்டிக் கொள்ளுங்கள்.”
சம்மதமாகத் தலையை அசைத்தவன், மீண்டும் தன் குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கத் தொடங்கினான்.
சித்ராவுக்குத்தான் அவன் செய்கைகளால் மேனி சிலிர்த்தது.
இந்தளவுக்கு அவனும் உணர்ச்சிவசப்படுவான் என்பது அவள் எதிர்பாராதது!
“இதனால்தான் நேற்று ஒருமாதிரி இருந்தாயா? என்னிடம் ஏன் நீ நேற்றே சொல்லவில்லை..” மனைவியை அணைத்தபடி கட்டிலில் அமர்ந்திருந்தவன் கேட்டான்.
“உறுதியாகத் தெரியாமல் சொல்லப் பயமாக இருந்தது..”
“ம்ம்.. நாம் அம்மா அப்பா ஆகிவிட்டோம் என்று நினைத்தாலே, ஏதோ கனவு மாதிரி இருக்கிறது சித்து. அதுவும் நமக்கு இரண்டு குழந்தைகள் வரப்போகிறார்கள். எனக்கு ரெண்டுமே பெண் குழந்தைகள் தான் வேண்டும். அதுவும் உன்னைப் போலவே..” என்றவன், “உனக்கு?” என்று மனைவியையும் ஆர்வத்தோடு கேட்டான்.
“எனக்கு.. எந்தக் குழந்தைகள் என்றாலும் சந்தோசம் தான். இவர்களையாவது நான் நல்லபடியாகப் பெற்றெடுத்து என் மடியில் போட்டு ஆசையாகக் கொஞ்சவேண்டும்.” என்றாள் முதல் குழந்தையின் நினைவில்.
“ம்ம்..” என்று கேட்டுக் கொண்டவன், அவள் சொன்னதன் முழு அர்த்தமும் புரிய, அதிர்ந்து, “அதென்ன இவர்களையாவது என்கிறாய்?” என்று கேட்டான்.
அதுவரை இதமாக அவன் நெஞ்சில் சாய்ந்து இருந்தவள் அதிர்ச்சியோடு எழுந்து அமர்ந்தாள். இலகுவாக இருக்க முடியாமல் தடுமாறினாள். உள்ளே படபடத்தது. காரணமில்லாப் பயத்தில் வியர்த்துக் கொட்டியது.
திடீரென மனைவியிடம் தெரிந்த தடுமாற்றத்தில் அவன் விழிகள் கூர்மை பெற்றன.
அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் விழிகளை அவள் தழைத்துக் கொள்ளவும், அவள் சொன்னதில் என்னவோ இருக்கிறது என்பது உறுதியானது அவனுக்கு.
அப்படி எதை அவனிடம் மறைக்கிறாள்?
“சொல்லு! நீ சொன்னதன் அர்த்தம் என்ன?” என்று அழுத்தமான குரலில் திரும்பக் கேட்டான் ரஞ்சன்.
அதுநாள் வரை முதல் குழந்தையை அவள் இழக்க அவனே காரணம் என்று உறுதியாக நம்பியவளால் இன்று ஏனோ அவன் விழிகளைப் பார்த்து அதைச் சொல்ல முடியவில்லை.
சித்ரா அப்போதும் அமைதியாக இருக்க, முதல் நாள் அவள் பூடகமாகப் பேசியவை அனைத்தும் ரஞ்சனின் காதுகளுக்குள் திரும்பவும் எதிரொலித்தன!
“சொல்லு சித்ரா! என்ன அர்த்தத்தில் அப்படிச் சொன்னாய்? நேற்றும் எதையோ இழந்ததாகச் சொன்னாயே, அது என்ன?” புயலை உள்ளடக்கிய குரலில் கேட்டான் அவன்.
கேள்விகளைக் கணைகளாகத் தொடுத்த கணவனின் விழிகளைப் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்தவள், தான் தாய்மை அடைந்தது முதல் தாய் அவளுக்குத் தெரியாமல் அதை அழித்தது வரை அனைத்தையும் நெஞ்சம் நடுங்கச் சொல்லிமுடித்தாள்.
அவனிடமிருந்து எந்தவிதமான சத்தத்தையோ அசைவையோ காணவில்லையே என்று தயங்கித்தயங்கி நிமிர்ந்து பார்க்க, அவளைப் பார்க்கவே பிடிக்காதவன் போன்று சட்டென எழுந்த ரஞ்சன் அவளிடமிருந்து தள்ளிப்போய் நின்றான்.
அவள் சொன்னதை ஜீரணிக்கவும் முடியாமல், ஆத்திரத்தில் வார்த்தைகளை விடவும் பிடிக்காமல் தன்னைக் கட்டுப்படுத்தப் போராடினான். அவளை இழுத்து நன்கு சாத்துச் சாத்தினாள் என்ன என்றுகூட ஆத்திரம் வந்தது.
இரும்பென விறைத்த தேகமும், பாறையென இறுகிப் போயிருந்த முகமும், சிவப்பேறிய விழிகளுமாக கோபத்தைக் கட்டுப்படுத்தப் போராடுபவனைப் பார்க்கவே நடுங்கியது சித்ராவுக்கு.
“இதயன்?” குரல் நடுங்க மெல்ல அழைத்தாள் சித்ரா.
சரேலெனத் திரும்பியவனின் இடுங்கிய விழிகளில் தெரிந்த ஆக்ரோசத்தில் சித்ராவுக்கு உள்ளே குளிர் பிறந்தது.
ஆத்திரத்தோடு அவளை வேகமாக நெருங்கி, அவள் தாடையை இறுகப் பற்றியவன், “என் குழந்தையை அழிக்க உன் அம்மாவுக்கு எவ்வளவு தைரியம்டி?” என்று உக்கிரமாக இரைந்தபோது பயத்தில் அவள் மேனி வெளிப்படையாகவே நடுங்கியது.
“என்னிடம் ஒரு வார்த்தை சொன்னீர்களாடி? சொல்லியிருக்க என் குழந்தை பிழைத்திருக்குமே. எந்தப் பிரச்சினையும் வந்திருக்காதே. மொத்தக் குடும்பமுமே என்னை முழுக் கெட்டவனாக, கொடுமைக்காரனாக நினைத்து என் குழந்தையை அழித்தீர்கள் என்றால் பிறகு என்ன தேவைக்கு இந்தத் திருமணத்தை நடத்தினீர்கள்?” அந்த எரிமலைச் சீற்றத்தில் அவள் கைகால்கள் எல்லாம் நடுங்கின. அந்தளவுக்குப் பயங்கரமாக இருந்தது அவன் முகம்.
“உன் அம்மாவும் ஒரு பெண்தானே. உன் அப்பா.. அந்தப் பெரிய மனிதருக்குக் கூடவா என்னிடம் சொல்லத் தோன்றவில்லை. அல்லது இந்தப் பிச்சைக்காரப் பயலின் குழந்தை எதற்கு என்று அவரும் நினைத்தாரா?”
“நடந்தது எதுவும் அப்பாவுக்கும் தெரியாது ரஞ்சன்..” என்றாள் சித்ரா நடுங்கும் குரலில்.
நடந்தது பெரும் தவறுதான் என்றாலும், அதை யாருமே திட்டமிட்டுச் செய்யவில்லையே!
அம்மா, தன் மகளின் வாழ்க்கைக்காக அப்படிச் செய்தார் என்று சொல்லியும் இப்படிக் கேட்பவனிடம் எதைச் சொல்லிப் புரியவைப்பது என்று தெரியாமல் நின்றாள் அவள்.

