என் சோலைப் பூவே 5 – 1

அத்தியாயம்-5

 

 

‘ரிபோக்’ கடையின் மேல் தளத்தில் அன்று காலையிலேயே வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. அது வருடக் கடைசி என்பதாலும் வரவிருக்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம், ஆங்கிலப் புத்தாண்டு அதைத் தொடர்ந்து தைத் திருநாள் என்று பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும் புது வகையான செருப்புகள் புதிதாக வந்து இறங்கியிருந்தது.

 

வீதியில் இருந்து பார்க்கும் போதே விசாலமாகக் காட்சி தரும் அந்தக் கடையின் பின் பகுதியில், சந்தானத்தின் கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்கு வசதியாக அலுவலக அறை ஒன்று அமைந்திருந்தது. அதோடு வேறு பிற தேவைகளுக்கு என்று இன்னொரு அறையும், வேலை செய்பவர்கள் அமர்ந்து உண்பதற்காக ஒரு அறையுமாக மொத்தம் மூன்று அறைகளையும் குளியலறையையும் கொண்டிருந்தது அந்தக் கடையின் பின் பகுதி. கடையோடு இவை எல்லாவற்றையும் சேர்த்து அமைந்திருந்த மேல் தளம் ‘ஸ்டோர் ரூம்’ ஆகப் பயன்படுத்தப் பட்டு வந்தது.

 

அங்கு பெட்டி பெட்டியாக வந்திறங்கியிருந்த செருப்புக்களை மற்றக் கடைகளுக்கும் பிரித்துக் கொண்டிருந்தார்கள் கண்ணனும் ரஞ்சனும். அவர்களுக்கு உதவியாக இன்னும் மூன்று பேர்.

 

சந்தானத்துக்குச் சொந்தமாக ஐந்து கடைகள் இருந்தாலும், எல்லாவற்றிலும் பெரிய கடை இதுதான். வியாபாரம் அதிகமாக நடப்பதும் இங்கேதான். அதனால் மொத்தமாகக் கொள்வனவு செய்யும் செருப்புகள் இங்கேயே வந்திறங்கும். இங்கிருந்தே மற்றக் கடைகளுக்கும் பிரித்து அனுப்புவார் சந்தானம்.

 

அதைத்தான் கண்ணனும் ரஞ்சனும் செய்து கொண்டிருந்தனர். ஆனால், வேலையைச் செய்ய விடாமல், கீழே இருந்து வந்துகொண்டிருந்த சிரிப்பும் கனைப்பும் ரஞ்சனுக்குச் சினத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

 

கண்ணனுக்கும் அப்படித்தானா என்று அறிய அவரைத் திரும்பிப் பார்த்தான். அவரோ வெகு இயல்பாக வேலை செய்து கொண்டிருந்தார்.

 

அவன் பார்வையை உணர்ந்து, “என்ன?” என்று கேட்டவரிடம் ஒன்றுமில்லை என்பதாகத் தலையை அசைத்துவிட்டு வேலைகளைப் பார்த்தவனுக்கு, கலீர் என்று கேட்ட சித்ராவின் சிரிப்பில் எரிச்சல் தான் வந்தது.

 

பின்னே, எப்போதெல்லாம் புது வகையான செருப்புக்கள் வந்திறங்குகிறதோ அப்போதெல்லாம் தன்னுடைய குரங்குப் பட்டாளங்களையும் கூட்டிக்கொண்டு வந்துவிடும் அவளை நினைத்தாலே அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

 

அன்று மன்னிப்புக் கேட்கிறேன் என்கிற பெயரில் அவள் காட்டிய திமிருக்குப் பிறகு அவளின் முகம் பார்ப்பதைக் கூடத் தவிர்த்துவிட்டான். அந்தளவுக்கு வெறுப்பு மூண்டிருந்தது.

 

ஆனால், எப்போதாவது எதிர்பாராமல் இருவரினதும் விழிகளும் சந்திக்கையில் அவள் விழிகளில் தெரியும் அலட்சியத்தையும் திமிரையும் பார்க்கையில், பார்வையாலேயே அவளை எரித்து விட்டுத்தான் செல்வான் ரஞ்சன்.

 

அவளோ அவன் பார்வையைக் கண்டு கொண்டதும் இல்லை. அவனை அதற்கு மேல் பொருட் படுத்தியதும் இல்லை. அன்று செய்தது பிழை என்று உணர்ந்து மன்னிப்புக் கேட்டுவிட்டாள். அவன் திமிராகக் கதைத்ததற்குப் பதிலும் கொடுத்துவிட்டாள். அவளைப் பொறுத்த மட்டில் அதோடு அந்தப் பிரச்சினை முடிந்தது. ‘திமிர் பிடித்த சிடுமூஞ்சி’ இதைத் தாண்டி அவன் சம்மந்தமான எந்த எண்ணமும் அவளிடம் இல்லை.

 

அதன்பிறகு கிட்டத் தட்ட மூன்று மாதங்கள் கழிந்திருந்தது. முன்புமே ரஞ்சன் யாருடனும் பெரிதாக ஒட்டுதல் காட்டமாட்டான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கண்ணனுடன் சற்று நெருக்கமாகிப் போனாலும் மற்றவர்களிடம் இருந்து இன்னுமே விலகியிருந்தான்.

 

மனதில் மட்டும் அவனை அவமானப் படுத்திய அத்தனை பேருக்கும் முன்னால் வாழ்ந்து காட்டவேண்டும் என்கிற நெருப்பொன்று எரிந்துகொண்டே இருந்தது. அவர்களை அவனைத் தேடி வரவைக்க வேண்டும் என்கிற உறுதி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. சில திட்டங்கள் அவன் மனதில் இருந்தாலும் அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

 

என்னென்னவோ சிந்தனைகளுடன் வேலையில் மூழ்கி இருந்தவனை, “கண்ணன் அண்ணா, லாரி வந்துவிட்டது. இந்தப் பெட்டிகளை ஏற்றவா?” என்று அங்கிருந்த பெட்டிகளைக் காட்டிக் கேட்ட முருகனின் பேச்சுக் கலைத்தது.

 

“ம்.. ஏற்று.” என்ற கண்ணன், “ரஞ்சன், பெட்டிகளை ஏற்றியதும் நீயும் போய் எந்தக் கடைக்கு எத்தனை பெட்டிகள் என்று பார்த்து இறக்கிவிடு.” என்றார்.

 

“சரிண்ணா..” என்றவனும், அவர்களுடன் சேர்ந்து பெட்டிகளை லாரியில் ஏற்றலானான்.

 

ஒரு பெட்டியை வீதியில் நின்ற லாரியில் ஏற்றிவிட்டு கடைக்கு உள்ளே வந்து கொண்டிருந்தவனை, “ஹலோ” என்கிற அழைப்புத் திரும்பிப் பார்க்க வைத்தது.

 

செய்து கொண்டிருந்த வேலைக்கு இடைஞ்சலாக வந்த அழைப்பும், ஹலோ என்று அழைத்த விதமும் கொடுத்த எரிச்சலோடு திரும்பிப் பார்த்தவனை, “இங்கே வாருங்கள்.” என்று கைநீட்டி அலட்சியமாக அழைத்தான் முகேஷ்; சித்ராவின் நண்பன். அவனோடு இன்னும் சிலர்.

கடைக்குள் வாடிக்கையாளர்களைக் கவனிப்பதற்காக என்று வேலையாட்கள் அங்கங்கே நின்றபோதும் அவனை அவர்கள் அழைத்ததில் மூண்ட சினத்தை அடக்க முயன்றபடி ‘அந்தத் திமிர் பிடித்தவள் எங்கே’ என்று தேடியது அவன் விழிகள்.

 

அவள் அங்கே இல்லாததை உறுதி செய்தவன், அவளைப் போல்தானே அவள் நண்பர்களும் இருப்பார்கள் என்று எண்ணியபடி அவர்களை நெருங்கி, “என்ன?” என்று கேட்டான்.

 

சற்று அதட்டலாக இருந்த அந்த ‘என்ன’வில் அங்கு நின்ற நண்பர்களின் பார்வைகள் அவசரமாகச் சந்தித்துக் கொண்டன.

 

‘சொன்னேனே.. அவன் திமிரைப் பார்த்தாயா..’ என்று முகேஷிடம் பார்வையாலேயே சொன்னாள் ராகினி.

 

‘நடப்பதைப் பார்..’ என்பதாக அவனும் விழியசைவில் அவளிடம் காட்டிவிட்டு, ரஞ்சனின் முகத்துக்கு நேராக செருப்பு ஒன்றை நீட்டி, “இந்தச் செருப்பு எனக்குப் பொருந்தவில்லை. அடுத்த சைஸ் இல்லையா?” என்று கேட்டான்.

 

அந்தச் செயலிலேயே அவர்களது எண்ணத்தை ஓரளவுக்கு ஊகித்துக் கொண்டபோதும், நின்ற இடத்தில் இருந்து அசையாது, “உன் கால் என்ன சைஸ்?” என்று கேட்டான் ரஞ்சன்.

 

“நாற்பது. இதுவும் நாற்பதுதான். ஆனாலும் அளவில்லை.”

 

“அப்படி அளவில்லாமல் போகாது. ஒழுங்காகப் போட்டுப்பார்.”

 

“ஒழுங்காகப் போட்டுப் பார்க்காமல் சும்மா சொல்வேனா? வேண்டுமானால் என் காலுக்கு நீங்களே போட்டுப் பாருங்கள்.” என்றான் முகேஷ். விழிகளோ நண்பர்களிடம், ‘எப்படி?’ என்று கேட்டது.

 

அவன் கெட்டித்தனத்தை மெச்சும் பார்வையை அவன் புறம் வீசிவிட்டு, ரஞ்சனின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர் மூவரும்.

 

தன் கூரிய விழிகளால் நால்வரினதும் முகத்தை அளந்தவன், எதையும் காட்டிக் கொள்ளாது, “அந்த முக்காலியில் அமர்ந்துகொள். போட்டுப் பார்க்கலாம்..” என்றான் முகேஷிடம்.

 

அவர்களது பார்வைகளோ வெற்றிக் களிப்பில் மின்னியது. “இதோ..” என்றபடி வேகமாக அமர்ந்து காலை நீட்டினான் முகேஷ்.

 

செருப்பின் கொளுக்கியைக் கழட்டிவிட்டு கீழே குனிந்து முகேஷின் காலில் அதை மாட்ட முயன்றான் ரஞ்சன். குனிந்திருந்தவனின் அடர்ந்த கருமை நிறக் கேசத்தைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டார்கள் நால்வரும்.

 

அவனைத் தன் காலைப் பிடிக்க வைத்துவிட்ட பெருமை மின்ன நண்பர்களைப் பார்த்த முகேஷை நோக்கி வெற்றி என்பதாக கட்டை விரலை உயர்த்திக் காட்டினர் மற்றவர்கள்.

 

அப்போதுதான் தந்தையின் அறையில் இருந்து வெளியே வந்த சித்ரா, அந்தக் காட்சியைக் கண்டதும் ஒருநொடி திகைத்து நின்றுவிட்டாள்.

 

ரஞ்சன் அப்படிச் செய்வது அதுதான் முதல் முறை என்றல்ல. அவளே பலமுறை பார்த்திருக்கிறாள். அதுவும் வயதானவர்களுக்கு முகம் மாறாமல் சரளமாகக் கதைத்துச் செருப்பை மாட்டி விடுகையில், சின்னக் குழந்தைகளிடம் அவர்களுக்கு ஏற்ற வகையில் சிரித்துக் கதைத்தபடி போட்டுவிடுகையில் எல்லாம் ‘இந்தச் சிடுமூஞ்சிக்கு இவ்வளவு பொறுமை இருக்கிறதா..’ என்று வியந்திருக்கிறாள்.

error: Alert: Content selection is disabled!!