என் சோலைப் பூவே 5 – 3

அதில் சற்றும் அசராமல், “கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்கள். நான் போகிறேன்.” என்றவளைப் பொசுக்கி விடுவது போன்று முறைத்தான் ரஞ்சன்.

 

அவளின் பிடிவாதத்துக்கு வளைந்துகொடுக்க சற்றும் மனமில்லாத போதும், யாராவது அவர்கள் இருவரையும் பார்த்தால்? ஏற்கனவே அவள் கையைப் பிடித்து இழுத்ததாகப் பெயர். இதில் இது வேறா?

 

அவள் கேட்ட கேள்வியும் அவனைத் தாக்க, அதில் உண்டான தாக்கத்தில், “அது என் வேலைதானே. அதைத்தானே செய்தேன்.” என்றான் நக்கலாக.

 

அதைச் சொல்கையில் அவன் குரலில் என்ன இருந்தது?

 

அதைப் புரிந்துகொள்ள முடியாமல் நின்றவளிடம், “உன் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டேன். இப்போது போகிறாயா வெளியே?” என்றான் ரஞ்சன்.

 

“அது உங்கள் வேலை என்பதற்காக யாரின் காலையும் பிடிப்பீர்களா? அவன் வேண்டுமென்றேதான் உங்களைச் செய்யச் சொல்கிறான் என்று தெரியாதா?” என்று அவளும் குறையாத கோபத்தோடு கேட்டாள்.

 

“ஏன் தெரியாமல்? நன்றாகத் தெரியும். அதுவும் அவன் உன் நண்பன்தானே. உன்னைப் போலத்தானே இருப்பான்.” என்றான் ஏளனமாக.

 

அவளுக்கு கோபம்தான் வந்தது.

 

முதலும் கோபம் இருந்ததுதான். அது, முகேஷின் காலை இவன் பிடித்தானே என்பதாலும், அவன் அதை வேண்டுமன்றே ரஞ்சனைச் செய்ய வைத்தானே என்பதாலும் உண்டானது. இப்போது வந்த கோபமோ முகேஷ் வேண்டுமென்று செய்ததையும் அவள் சிந்தியாமல் செய்ததையும் ஒன்றாக ரஞ்சன் சொல்கிறானே என்பதால் உண்டானது.

 

அந்தக் கோபத்தில் தன்னை மறந்து, என்ன சொல்கிறோம் என்பதையும் உணராமல், “நான் உங்களை அடிப்பேன். என்னவும் செய்வேன். அதற்காக யார் என்ன சொன்னாலும் செய்வீர்களா? கொஞ்சமும் ரோசம் என்பதே இல்லையா உங்களுக்கு?” என்று அவனிடமே கேட்டாள், அவனால் திமிர் பிடித்தவள் என்று நாமம் சூட்டப் பட்டவள்.

 

அதைக் கேட்டவனின் நிதானம் முற்றிலும் பறந்தது. “ஏய்!” என்று உறுமியவனின் கை மிக வேகமாக அவளின் கழுத்தைப் பற்றிப் பெட்டியோடு பெட்டியாக அழுத்தியது. “என்னைப்பற்றி என்னடி நினைத்துக் கொண்டிருக்கிறாய் உன் மனதில்? உன் வீட்டு வேலைக்காரன் என்றா? அல்லது நீ சொல்வது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக்க என்னை என்ன பெட்டை என்று நினைத்தாயா? எப்படி எப்படி? என்னை நீ அடிப்பாயா? தொலைத்துவிடுவேன் ராஸ்கல்! பெண்ணாக இருக்கிறாயே என்று பொறுமையாகப் போனால் உனக்கு என்னைப் பார்க்கக் கையாலாகதவன் போல் தெரிகிறதோ?” என்று ஆத்திரத்தில் இரைந்தான் ரஞ்சன்.

 

அதற்குக் கொஞ்சமும் பயப்படாது, என் அப்பாவின் கடையில் இவனால் என்னை என்ன செய்துவிட முடியும் என்கிற தைரியத்தோடு, “கையை எடு. கழுத்து வலிக்கிறது.” என்றாள் அவன் விழிகளைப் பார்த்து.

 

தனியாக மாட்டி, அவள் கழுத்தை அவன் நெரித்துக் கொண்டிருக்கும் அந்த நிலையிலும் அவன் கண்களைப் பார்த்துப் பயப்படாமல் நிதானமாகச் சொன்னவளின் அந்தத் தைரியம் அவனை இன்னுமே உசுப்பியது.

 

“கையை எடுக்காவிட்டால் என்னடி செய்வாய்?”

 

“கத்தி எல்லோரையும் கூப்பிட்டு அன்று போல இன்றும் உன்னை அவமானப் படுத்துவேன்..” என்றாள் அசராமல்.

 

அவனை அவமானப் படுத்துவேன் என்ற அவளின் வார்த்தைகளில் வெகுண்டு போனான் ரஞ்சன்.

 

கழுத்தை விட்டுவிட்டு பிடரியில் கையைக் கொடுத்து அவள் முகத்தைத் தன்னருகே இழுத்து, “எங்கே தைரியம் இருந்தால் கத்து பார்ப்போம்.” என்றான் அவனும்.

 

அவன் இழுத்ததில் தடுமாறியவள், அன்றுபோல் இன்றும் அவனுடன் மோதிவிடாமல் இருக்க, அவன் நெஞ்சில் தன் கைகளை வைத்து அவனுக்கும் தனக்குமான இடைவெளியை உண்டாக்கிக் கொண்டே, “கத்தினால் என்ன செய்வாய்?” என்று அஞ்சாது கேட்டாள்.

 

“என்ன.. செய்வேனா?” என்று கேட்டவனின் விழிகள் நிதானமாக அவள் மேனியை ஒருமுறை வலம் வந்தது.

 

அந்தப் பார்வையில் சித்ராவின் நெஞ்சுக் கூட்டுக்குள் முதன் முதலாக ஒருவித பய அதிர்வொன்று தாக்கியது. கைகால்களில் நடுக்கம் பரவியது. இப்படித் தனியாக அவனிடம் வந்து மாட்டியது தவறோ என்று முதன் முறையாக யோசித்தாள். ஆனாலும், அப்படி அவனால் அவளை என்ன செய்துவிட முடியும்? முருகனோ கண்ணனோ எப்போது வேண்டுமானாலும் வரலாம். கீழே அப்பா இருக்கிறார் என்று தைரியத்தைத் திரட்டினாள். அவன் பார்வையைச் சளைக்காது எதிர்கொண்டாள்.

 

அவனோ, அவள் கழுத்தில் அவளைப் போலவே அலட்சியமாகக் கிடந்த ஷாலை தன்னுடைய மற்றக் கையில் சுத்திக் கொண்டே, “கத்த நினைக்கும் வாயைக் கதைக்க முடியாமல் செய்துவிடுவேன்.” என்றான் வெறியுடன்.

 

அதைச் சொல்கையில் அவளை நெருங்கிய அவன் முகத்தைப் பார்த்தவளுக்குப் பேச்சு மறந்து.. மறந்தே போனது. கதைக்க முடியாமல் செய்வேன் என்றால் என்ன செய்வான் என்கிற திகிலுடன் அவனைப் பார்த்தாள்.

 

இடுங்கிய அவன் விழிகளில் தெரிந்த கடுமை, நீண்ட நாசியில் தெரிந்த கோபம், முகத்தில் வேகமாக வந்து மோதிய அவன் மூச்சுக் காற்றில் கூடக் கலந்திருந்த ஆத்திரம், அழுத்தமாக வளைந்த உதடுகளில் இருக்கும் பிடிவாதம், அதற்கு மேலே அடர்த்தியாக அவன் முகத்தையே கம்பீரமாகக் காட்டும் அந்த மீசையில் தெரிந்த வீரம் என்று அவள் விழிகள், ஆத்திரத்தில் ஜொலித்த அவன் முகத்தை ஒருவித அதிர்ச்சியோடு சுற்றிச் சுழன்றது.

 

மெல்ல மெல்ல பயம்.. பயமே அவள் விழிகளில் தோன்றியது.

 

அவள் முகத்தில் தோன்றிய கலக்கம், தடுமாற்றம், பயம் என்று அத்தனை உணர்வுகளையும் துல்லியமாகப் படித்தவனின் உதடுகளில் ஆத்திரத்துடன் கூடிய திருப்தியான சின்னப் புன்னகை ஒன்று ஏளனத்துடன் உதித்தது.

 

“இப்போது புரிந்ததா? பெண் என்றைக்கும் பெண்தான். அந்நிய ஆடவனிடம் அளவுக்கு அதிகமாகத் திமிரைக் காட்டக் கூடாது. அதுவும் என்னிடம் வாலாட்டினாய் என்று வை. ஒட்ட நறுக்கி விடுவேன்!” என்றவன், அப்போதுதான் அவளை விட்டான்.

 

சட்டென்று இரண்டடி விலகி நின்றாள் சித்ரா.

 

ஆனால் அதுவரை அவள் கழுத்தில் கிடந்த ஷாலோ இப்போது அவன் கையில் சுற்றுப் பட்டுக் கிடந்தது.

 

அந்த ஷாலையும், அது இன்றி நின்றவளையும் ஒரு பார்வை பார்த்தவனின் உதடுகள் ஏளனமாக வளைந்தது. “இனியாவது ஒழுங்காக இரு.” என்றவன், ஷாலைக் கழற்றி அவள் முகத்தில் வீசினான்.

 

சட்டென்று அதை எடுத்துத் தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்டவளுக்கு, எந்தச் சேதாரமும் இன்றி அவனிடம் இருந்து தப்பிவிட்டோம் என்று அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.

 

தன்னை மெல்ல நிலைப்படுத்திக் கொண்டவளுக்கு, மிரட்டியபோதும் அத்துமீறி நடக்காமல் இருந்தவனின் அந்தக் கண்ணியம் மெல்ல உறைத்தது. அதை எண்ணி உள்ளூர வியந்து கொண்டாள்.

 

அதை அவனிடம் காட்டிக் கொள்ளாது கதவு வரை அமைதியாக நடந்தவள் நின்று திரும்பி, “டேய் சிடுமூஞ்சி, இப்போது போகிறேன். ஆனால் இனி உன்னை விடமாட்டேன்டா. அதென்ன உனக்குப் பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா? இனிப் பார்க்கலாம் நீயா நானா என்று?” என்றாள் சவாலாக.

 

அதைக் கேட்டவனின் முகத்தில் உண்டான கடுப்பை ரசித்தபடி, “பாய் சிடுமூஞ்சி” என்றுவிட்டு மின்னெலெனப் பாய்ந்து படிகளில் இறங்கி ஓடினாள் சித்ரயாழி.

 

 

error: Alert: Content selection is disabled!!