“உண்மையாடா..?” ஆச்சர்யமாகக் கேட்டான் மோகன்.
மகி நம்பாமல் அவனைப் பார்க்க, “இந்தச் சோத்து மூட்டையா..?” என்று கலகலத்தது சித்ரா.
அவள் சொன்ன ‘சோத்து மூட்டை’யில் முகம் வாடியவனைப் பார்த்துவிட்டு, “ஏண்டி! அவனுக்கு என்ன குறை? கொஞ்சம் குண்டு. மற்றும்படி அழகாகத் தானே இருக்கிறான்..” என்று அவனுக்காகக் கேட்டாள் ராகினி.
அதைக் கேட்டதும் கையை நீட்டி, “ஹேய் ராக்கி! நீதானா அது? கொடு கொடு கையைக் கொடு. இது தெரியாமல் நான் சும்மா அவனை ஓட்டினேன். சூப்பர் ஜோடி நீங்கள் இருவரும்.” என்று ஆர்ப்பரித்தாள் சித்ரா.
“பார் மகி. கூடவே இருக்கிறோம் இந்தக் கழுதைகள் இரண்டும் நம்மிடம் சொல்லவே இல்லையே. நாமும் கண்டு பிடிக்கவில்லை.” என்றவளைக் கொலை வெறியுடன் பார்த்தாள் ராகினி.
“லூசு மாதிரி உளறாதே. அவன் என்னைக் காதலிக்கவில்லை.” என்று கடுப்புடன் அவள் சொல்ல, “ஓ.. நீயில்லையா? சாரிடி, அவனுக்காக சப்போர்ட் பண்ணவும், நீயாக்கும் என்று நினைத்துவிட்டேன்.” என்றாள் சித்ரா.
முகேஷிடம் திரும்பி, “யாருடா உன் ஆள்? நமக்குத் தெரியுமா? நம் கல்லூரியா? உன் பின்னாலேயே சுற்றினாளே அந்த வேணியா ?” என்று, அவன் காதலியை அறியும் ஆர்வத்தோடு கேள்விகளை அடுக்கினாள்.
அப்போதும் அவன் தடுமாற, அருமையாகக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடுகிறானே என்கிற கடுப்பில், “வாயைத் திறந்து சொல்லேன்டா..” என்று முகேஷிடமும் பாய்ந்தாள் ராகினி.
எல்லோரும் குழப்பமும் கேள்வியாக அவனைப் பார்க்க, அவனுக்கோ வெளிப்படையாகவே உதறல் எடுத்தது. வேகமாக எழுந்து, “இதோ வருகிறேன்..” என்றபடி அந்த இடத்தை விட்டு அகன்றான்.
அவன் சென்றதும் ராகினியைப் பிடித்துக் கொண்டாள் சித்ரா. “சொல்லுடி. அவன் விரும்பும் பெட்டை(பெண்) யார்?”
“எனக்கு.. எனக்குத் தெரியாது.”
“பொய் சொல்லாதே. நீங்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே நல்ல நண்பர்கள். அவனைப் பற்றி உனக்குத் தெரியாமல் இருக்காது.”
“தெரியாதுடி..”
“சும்மா விளையாடாதே ராக்கி. நமக்குள் என்ன ஒளிவு மறைவு? நானும் மோகனும் எங்களைப் பற்றி உங்களிடம் சொல்லாமல் மறைத்தோமா.” என்று மனத்தாங்கலுடன் கேட்டாள் மகி.
அவர்கள் விடப் போவதில்லை என்பதை உணர்ந்து, “எனக்குத் தெரியும்தான். என்றாலும் அதை அவன் சொல்வதுதான் சரி. அதனால் அவனிடமே கேளுங்கள்.” என்று தான் கழன்று கொண்டாள் ராகினி.
ஏனெனில் அவளுக்கு சித்ராவைப் பற்றி மிக நன்றாகவே தெரியும். எவ்வளவுதான் இலகுவாகப் பழகினாலும், அவளுக்குக் கோபம் வந்தால் என்ன செய்வாள் என்று யாராலுமே கணிக்க முடியாது. அதேபோல, அவளது பிடிவாதமும் ராகினி அறிந்ததே!
இசகுபிசகாக தான் ஏதும் சொல்லி, அதுவே முகேஷின் காதலுக்கு சித்ரா மறுப்புச் சொல்லக் காரணமாக அமைந்து விட்டால்? இதை எல்லாம் தெரிந்து வைத்திருப்பதால் தான் முகேஷ் அவ்வளவு தயங்குகிறான் என்பதும் அவள் அறிந்ததே!
அதற்காகக் கடைசிவரை காதலைச் சொல்லாமலும் இருக்க முடியாதே! அதனால்தான் சொல்லிவிடும் படி முகேஷை வற்புறுத்தினாள்.
இப்போதானால் அவளே மாட்டிக் கொண்டாள். இப்படி அவளை மாட்டி விட்டுவிட்டு அவன் எங்கே தொலைந்தான் என்றபடி பார்வையைச் சுழற்றியவளின் விழிகளில் ஹோட்டலுக்குள் வந்து கொண்டிருந்த முகேஷ் பட்டான்.
சிவப்பு ரோஜாக்கள் நிறைந்த அழகான பூ பொக்கேயும் வாழ்த்து கார்ட்டுமாக வந்து கொண்டிருந்தவனைப் பார்த்தவளின் விழிகள் அவனை மெச்சிக் கொண்டது.
அவளின் பார்வையைத் தொடர்ந்த மற்றவர்களும், அவனையும் அவன் கையில் இருந்தவைகளையும் கண்டதும் ஆர்வமும் கேள்வியுமாகப் பார்த்தனர்.
அருகில் வந்தவனோ உலகில் இருக்கும் அனைத்துக் கடவுள்களையும் வேண்டிக்கொண்டு, “சித்து! ஐ லவ் யு!” என்றபடி, அந்த பொக்கேயையும் கார்ட்டையும் நீட்டினான்.
ராகினி மனதுக்குள் சபாஷ் போட, மகி அதிர்ச்சியில் வாயைப் பிளக்க, மோகனோ சித்ராவையே பார்த்தான்.
அவளுக்கும் முகேஷின் செய்கை அதிர்ச்சியே.. மெல்ல மெல்ல அதிர்ச்சி நிறைந்திருந்த இடத்தைக் கோபம் ஆட்கொள்ள ராகினியை சித்ரா முறைக்க, அவளோ தலையைக் குனிந்து கொண்டாள்.
இதற்கிடையில் அங்கு அமர்ந்திருந்த வேறு சிலரும் முகேஷையும், அவன் கையில் இருந்த பொக்கேயையும், சித்ராவையும் வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டனர்.
அப்படித் தன்னை பலருக்குக் காட்சிப் பொருளாக்கிய முகேஷின் மீது எழுந்த கோபத்தைக் கட்டுப் படுத்தியபடி, “இது என்ன முகேஷ்?” என்று பார்வையால் அவன் கையில் இருந்தவைகளைக் காட்டிக் கேட்டாள்.
அவற்றை இன்னும் அவள் புறமாக நீட்டியபடி, “நான் உன்னை விரும்புகிறேன்..” என்றான் அவன் மீண்டும்.
எரிச்சல் கோடுகள் முகத்தில் தெரிய, “உளறாதே!” என்று அதட்டினாள் சித்ரா. “நான் அப்படி உன்னுடன் பழகவில்லை. மோகன் எப்படியோ அப்படித்தான் நீயும் எனக்கு.” என்று படபடத்தாள்.
“ஆனால் எனக்கு உன்னை நிறையப் பிடிக்கும். உன்னைப் பார்த்த நொடியில் இருந்து காதலிக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது. நீதான் என் உயிர்.” என்றவனின் உளறலைக் கேட்டவளின் பொறுமை பறந்தது.
வேகமாகக் கதிரையில் இருந்து எழுந்து, “எருமை! ஒருக்காச் சொன்னால் விளங்காதா உனக்கு? நான் உன்னை விரும்பவில்லை!” என்றவள், அவன் கையில் இருந்ததை கோபத்தோடு தட்டி விட்டாள்.
கீழே விழுந்த ரோஜாக்களையும் கார்ட்டையும் பார்த்து அவமானப்பட்டு முகம் சிறுக்க அதிர்ந்து நின்றான் முகேஷ்.
அவளின் கோபத்தில் கலவரம் அடைந்த மகி, “சித்து இரடி. எல்லோரும் பார்க்கிறார்கள்.” என்றபடி, அவள் கையைப் பிடித்து மீண்டும் கதிரையில் அமர்த்தப் பார்த்தாள்.
“ப்ச், விடு மகி. பார் இவன் வேலையை. நான் போகிறேன். இங்கேயே நின்றேன் என்றால் இவனை அடித்தாலும் அடித்து விடுவேன்.” என்றவள், அங்கிருந்து வெளியேறினாள்.
ஹோட்டலின் வெளியே வந்தவளின் கையை, ஓடிவந்து முகேஷ் பற்றினான். “மரியாதையாகக் கையை விடு முகேஷ்!” என்றாள் பல்லைக் கடித்தபடி.
“நீ என்னை விரும்புகிறேன் என்று சொல் விடுகிறேன்..” என்றவனின் பேச்சில் இப்போது மெல்லிய குழறல் வந்திருந்தது.
அதில் அதிர்ந்து அவனை பார்க்க, முகேஷின் பின்னாலேயே வந்த ராகினியும், எதுவும் விபரீதமாக நடந்து விடுமோ என்று பயந்து, “முகேஷ், அவளை விடு.” என்றாள்.
“அவளை என்னைக் காதலிப்பதாகச் சொல்லச் சொல் விடுகிறேன்.” என்றான் அவன்.
அவன் பேச்சில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்த ராகினியும் அதிர்ந்து, சித்ராவைக் குற்ற உணர்ச்சியோடு பார்த்தாள். முகேஷைக் குடிக்கச் சொல்லி அவள் சொல்லாவிட்டாலும், இதற்கு அவளும் ஏதோ ஒருவகையில் காரணம் அல்லவா!
வெறுப்போடு அவளைப் பார்த்த சித்ரா பொறுமை இழந்து, “எல்லோரும் பார்க்கிறார்கள். கையை விடு முகேஷ்.” என்றபடி அவனிடம் இருந்து கையை உதற முயன்று கொண்டிருந்தாள்.
அதற்குள் உண்ட உணவுக்குப் பணத்தைச் செலுத்திவிட்டு மகியுடன் வந்த மோகன், அங்கிருந்த சூழ்நிலையை நொடியில் கணித்து, முகேஷை நெருங்கி,“அவளை விடு முகேஷ்.” என்று அதட்டினான்.
“இல்லை. விடமாட்டேன். அவள் எனக்கு வேண்டும்..” என்றவனிடம் இருந்து வந்த நெடியில் முகத்தைச் சுளித்தான் மோகன்.
“குடித்திருக்கிறாயா?”
மோகனின் காதருகில் குனிந்து, “ம்.. கொஞ்சம். அதனால்தான் தைரியமாகக் காதலைச் சொல்ல முடிந்தது.” என்று கோணல் சிரிப்புடன் ரகசியமாகச் சொன்னான் முகேஷ்.
‘அதுதானே பார்த்தேன். உன் தைரியம் எங்கிருந்து வந்தது என்று..’ என்று மனதில் எண்ணியபோதும், “வா.. வீட்டுக்குப் போகலாம்..” என்றான் மோகன்.
குடித்திருப்பவனோடு இப்போது எதையும் பேசவும் முடியாது. அப்படிப் பேசுவதில் ஏதும் பலன் கிடைக்கும் என்றும் தோன்றவில்லை. அதானால் இப்போது அவனை இந்த இடத்தில் இருந்து அகற்றுவதே முக்கியமாகப் பட்டது மோகனுக்கு.
“இல்லை. சித்து இல்லாமல் நான் எங்கும் வரமாட்டேன்.” என்று உளறத் தொடங்கினான் முகேஷ்.
மகி பயந்தபடி நிற்க, காதலைச் சொல் என்று முகேஷைத் தூண்டிய தன்னுடைய மடத்தனத்தை நொந்தபடி ராகினி நிற்க, வீதியில் வைத்து எதையும் செய்ய முடியாது தடுமாறினாள் சித்ரா.
கையை விடுடா!” என்றாள் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.
மோகனோ, “இது வீதி முகேஷ். போகிற வருகிறவர்கள் எல்லோரும் பார்க்கிறார்கள். அவளை விடு. பிறகு நாம் இதைப்பற்றிக் கதைக்கலாம்..” என்று முகேஷிடம் நைச்சியமாகச் சொல்லிக் கொண்டே, அவன் கையைப் பிடித்து இழுக்க, தடுமாறிய முகேஷ் முன்தினம் பெய்த மலையில் சேறாகி இருந்த இடத்தில் ஒற்றைக் காலை வைத்துவிட்டான்.

