அத்தியாயம்-9
அடுத்த வாரமும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் கடை ரஞ்சனின் கைக்கு வந்துவிடும். நண்பர்கள் கொடுத்த பணத்துக்கு செருப்புகளுக்கும் ஆர்டர் கொடுத்தாகிவிட்டது. சனிக்கிழமை அதுவும் வந்திறங்கி விடும்.
நாதன் ஒருபக்கம் தன் பொருட்களை ஒதுக்க, ரஞ்சன் தன் வேலைகளை மறுபக்கம் ஆரம்பித்து விட்டிருந்தான். காரணம் அடுத்த மாதத் தொடக்கத்திலேயே கடையைத் திறந்துவிட நினைத்திருந்தான். சும்மா நாட்களைக் கடத்துவதில் அர்த்தமில்லையே!
சனிக்கிழமை வந்திறங்கிய செருப்புகளைப் பார்த்தால், ‘இது எந்த மூலைக்கு’ என்றுதான் தோன்றிற்று. அவ்வளவு சொற்பமாக இருந்தன அவை. கடை முழுவதும் நிரப்ப வேண்டாம் என்றாலும், பார்ப்பதற்கு நிறைவாகத் தோன்றும் வண்ணமாகத் தன்னும் இருக்க வேண்டாமா?
ஒரு அறை போன்ற அமைப்பில் இருந்த கடையின் நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் முகப்பாக இருந்தால், மிகுதி மூன்று பக்கச் சுவர்களுக்கும் நண்பர்களே ராக்கைகள் அடித்திருந்தார்கள்.
அதில் ஒருபக்கச் சுவருக்கு மட்டுமே செருப்புக்கள் போதுமாக இருந்தது. மிகுதி இரண்டு பக்கத்துக்கும் என்ன செய்வது? வெறுமனே விடமுடியாதே!
“என்னடா செய்வது?” என்று கேட்டான் ஜீவன்.
“உன் முதலாளி சுகமாகி விட்டாரா? அவரிடம் கேட்டுப் பாரேன்.” என்றான் சுகந்தன்.
அவன் சந்தானத்தைப் பற்றிச் சொன்னபோதுதான், இன்னும் தெளியாத அவர் முகமும், அந்த வாரமும் வராத சித்ராவின் நினைவும் அவனுக்கு வந்தது.
அங்கிளுக்கு உடம்பு முடியவில்லை என்பது காரணம் என்றால், அவளுக்கு என்னவாகிற்று? முகேஷால் வேறேதும் பிரச்சினையோ? அன்று நடந்ததைப் பெரிதாக எடுக்கும் சுபாவம் அவளுக்கு இருப்பதாகவும் அவனுக்குத் தோன்றவில்லை.
சித்ராவைச் சுற்றிக் கொண்டிருந்த அவன் சிந்தனையை, “என்னடா அவரிடம் கேட்கிறாயா?” என்று மீண்டும் கேட்ட சுகந்தனின் பேச்சுக் கலைத்தது.
“ம்.. கேட்கத்தான் வேண்டும். திங்கள் கேட்கிறேன்.” என்றவனுக்கு இரண்டு லட்சங்களை அவரிடம் எப்படிக் கேட்பது? கேட்டாலும் தருவாரா? இல்லாவிட்டால் என்ன செய்வது? என்று பல யோசனைகளில் மண்டை காய்ந்தது.
அதிலிருந்து தன்னை வெளியே கொண்டுவர, “உங்கள் முதலாளியிடம் வேலையை விடப் போவதாகச் சொல்லிவிட்டீர்களாடா?” என்று கேட்டான்.
“ஓ.. நான் அன்றே சொல்லிவிட்டேனே..” என்றான் ஜீவன்.
“ஆமாம்டா. பிறகு சொல்லலாம் என்று நான் சொன்னதையும் கேட்காமல், சந்தோசத்தில் அன்றே சொல்லிவிட்டான் இவன். அவர் முகம் போன போக்கைப் பார்க்கவேண்டுமே.” என்றான் சுகந்தன் சிரிப்புடன்.
“பின்னே? நாங்கள் தனக்கு வாய்த்த அடிமைகள் என்று நினைத்திருப்பார். இனி அது இல்லை என்றதும் பெரும் சோகமாகப் போயிற்று அந்தக் கஞ்சனுக்கு.” என்ற ஜீவனைக் காட்டி,
“இவன் அவரிடம் என்ன சொன்னான் என்று கேளு..” என்றான் சுகந்தன்.
“என்னடா சொன்னாய்?”
“இல்லை மச்சான். அடுத்த மாதத்தில் இருந்து வேலையை விடுகிறோம் என்று நான் சொல்கிறேன். அதற்கு அந்தக் கஞ்சன், அவனை விட்டால் வேறு யாரும் எங்களுக்கு வேலை தரமாட்டார்களாம் என்கிறான். தெருத்தெருவாகத் தட்டு ஏந்தப் போகிறீர்களா என்று நக்கலாகக் கேட்கிறான். எனக்கு வந்ததே கோபம்.” என்றவனின் குரலில் அப்போதும் கோபம் மிச்சம் இருந்தது.
“சரிடா. அதற்கு நீ என்ன சொன்னாய்?” என்று மீண்டும் கேட்டான் ரஞ்சன்.
“தட்டு ஏந்தமாட்டோம். திருகோணமலைக் கடலில் போகும் கப்பல்கள் பழுதாகி நடுவில் நின்றால் இறங்கித் தள்ளப் போகிறோம் என்றேனா, அவன் முகம் போன போக்கைப் பார்க்கவேண்டுமே..” என்றவனுக்கு, இப்போதும் அதை நினைத்துச் சிரிப்புத்தான் வந்தது. அவனுக்கு மட்டுமல்ல மற்ற இருவருக்குமே!
நண்பர்கள் மூவருமே மனம் விட்டுச் சிரித்தனர். அந்த நேரத்தில் அது அவர்களுக்குத் தேவையாகவே இருந்தது.
அன்று திங்கட்கிழமை. காலையிலேயே வேலை சூடு பிடித்திருந்தது ‘ரிபோக்’கில். ஒரு வயதான பெண்மணியுடன் வந்திருந்த அவரது பேத்திக்கு ஷூ ஒன்றினைப் போட்டு விட்டுவிட்டு , “இது பிடித்திருக்கிறதா என்று பாருங்கள் ஆன்ட்டி..” என்றபடி நிமிர்ந்தவனின் பார்வையில் விழுந்தாள் சித்ரா.
சேலையில் அழகிய மாலையென வந்து கொண்டிருந்தவளைக் கண்டவனின் விழிகள் அவளிடமே நிலைகுத்தி நின்றன!
அன்று சந்தானத்திடம் பணம் கேட்பதற்காக, அவரின் வருகைக்காகக் காத்திருந்தவன் ஒரு கண்ணைக் கடையின் வாசலிலேயே வைத்திருந்தான். ஆனால் சித்ராவைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளின் வரவு எப்போதும் வார இறுதிகளில் மட்டுமே இருக்கும்.
கிட்டத் தட்ட இரண்டு வாரங்களாகக் காணாததும், முதன் முதலாய் அவளைச் சேலையில் கண்டதும் அவனையும் மீறி, அவனது கட்டுப்பாட்டையும் மறந்து அவன் விழிகள் வியப்போடும் ரசனையோடும் அவளைத் தழுவியது.
தங்க நிறத்தில் மெல்லிய ஜரிகை பிடித்த ரோஜா வண்ணச் சேலையில், விரித்து விட்டிருந்த கூந்தலில் காதோரமாய் சிவப்பு நிற ரோஜா சிரிக்க, நெற்றியில் திருநீறு, சந்தனம் தாங்கி, அம்சமாய், அழகாய், ஒரு நிலவு மங்கையென கடைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள் அவள்.
வீதியில் இருந்து மூன்று படிகள் உயரத்தில் கட்டப் பட்டிருந்தது அந்தக் கடை. கீழ்ப் படியில் இருந்து கடைக்குள் ஒரு காலைத் தூக்கி வைக்கையில் சேலை தடுக்கி விடாமல் இருக்க, சற்றே சேலையைத் தூக்கிப் பிடித்திருந்தாள். அப்போது வெளியே எட்டிப் பார்த்த வெண்பஞ்சுப் பாதத்தையும், அதன் கழுத்தாரமாய்க் கிடந்த காற்சலங்கையையும் பார்த்தவனின் இளம் நெஞ்சம் வேகமாய்த் துடித்தது.
இப்போது கடைக்குள் வந்துவிட்டிருந்தவளின் சேலை மடிப்பில் விழுந்த அவன் விழிகள் மெல்ல உயர்ந்து தேய்பிறையாய் மின்னிக் கொண்டிருந்த எலுமிச்சை நிற இடையைக் கண்டதும் கூசியது என்றால், இதயமோ இருந்த இடத்தை விட்டு எம்பிக் குதிக்கப் பார்த்தது.
கஷ்டப்பட்டு அந்த இடத்தில் இருந்து விழிகளை உயர்த்தியவனின் பார்வை படக்கூடாத இடங்களில் பட்டதில், அதுவரை அனுபவிக்காத அவஸ்தைகளை அனுபவித்தது அவனது ஆண் நெஞ்சம்!
கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாது, அவள் பொன் மேனியுடன் மிக நன்றாக ஒட்டிக்கொண்ட சேலை காட்டிய ஆபத்தான வளைவு நெளிவுகளில் விழுந்து எழுந்து நிலையின்றித் தடுமாறியது அவன் விழிகள்!
சங்குக் கழுத்துத் தாங்கி நின்ற மதி போன்ற வதனத்தைப் பார்த்தவன் சொக்கித்தான் போனான்.
அன்றுதான் அவன் கண்களுக்கு அவள் பெண்ணாகத் தெரிந்தாள்! அழகியாகத் தெரிந்தாள்!
என்ன அழகு என்று வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால். நீள விழிகளின் பளிச்சிடலும், விரியக் காத்திருக்கும் மல்லிகை மொட்டைப் போன்ற மூக்கும், சிவந்த சின்ன இதழ்கள் மெல்லப் பிரிய எட்டிப் பார்த்த முத்துப் பற்களுடன் அவள் இதழ்கள் சிந்திய மோகனப் புன்னகையில் அவன் மனது ஆட்டமல்ல பேராட்டம் கண்டது.
தன்னை மறந்து, நிற்கும் இடம் மறந்து, உலகை மறந்து விழி வழி நுழைந்த அழகியவளின் யவ்வனத்தில் ஸ்தம்பித்துப்போனான் இதயரஞ்சன்.
கடைக்குள் நுழையும் போதே அவனைக் கண்டுகொண்ட சித்ராவின் விழிகள் அவனது பார்வையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து தடுமாறின.
அவனது கூரிய விழிகளில் இருந்த ரசனை, ஆச்சர்யம், வியப்பு, அதையும் தாண்டிய இன்னும் ஏதோ ஒன்று அவளை என்னவோ செய்தது. அதுவரை நாளும் அவனது பார்வைகளை அவளது விழிகள் தயங்காது சந்திப்பதும் பதிலடி கொடுப்பதும்தான் வழமை!
அவன் கோபப் பார்வையை எதிர் கொண்டிருக்கிறாள், வெறுக்கும் விழிகளை அலட்சியப் படுத்தி இருக்கிறாள், ஏளனப் பார்வையைக் கேலி செய்திருக்கிறாள், ஏன், அன்று தனியறையில் அவளை மிரட்டியவனின் விழிகளில் பறந்த நெருப்பை, ஆத்திரத்தைக் கூடத் தாங்கி அவன் விழிகளையே தயங்காது நோக்கியவளால் இன்று ஏனோ முடியவில்லை.
கூச்சமா, தடுமாற்றமா, சங்கடமா ஏதோ ஒன்று அவளைப் படாத பாடு படுத்தியது.
தலை அவள் சம்மதம் இன்றியே நிலம் பார்க்க, கன்னக் கதுப்புகள் காரணம் இன்றியே சூடாகின. கைவிரல்களில் மெல்லிய பதட்டம். நெஞ்சுக் கூட்டுக்குள் இதயம் பலமாகத் துடித்தது.
அவனை நிமிர்ந்து பார்க்கச் சொன்ன அதே மனது அவனது பார்வையை தாங்க முடியாமல் தடுமாறியது.
அவன் விழிகளில் அப்படி என்னதான் இருந்தது? காந்த சக்தியா? அல்லது மாயவலையா? ஏதோ ஒன்று!
ஆனால், அது அவளை அவன்பால் மொத்தமாகக் கட்டியிழுக்கப் பார்த்தது.
புதுவிதமான உணர்வுகளின் வலைக்குள் சிக்கிக் கொண்டு, தடுமாறி நின்றவளைக் கண்ட கண்ணன், “என்ன சித்ரா இன்று கடைக்கு வந்திருக்கிறாய். அதுவும் சேலையில். என்ன விசேசம்?” என்று கேட்டார்.
ரஞ்சனின் பார்வையில் இருந்து தப்பிக்க எண்ணி, சட்டென்று அவர் புறமாகத் திரும்பினாள் சித்ரா.
இதழ்கள் புன்னகையில் மலர, “இன்று என் பிறந்தநாள் அண்ணா. கோவிலுக்குப் போய்விட்டு அப்படியே இங்கே வந்தேன். அப்பாவுக்குக் கொஞ்சம் முடியவில்லை. ஏதோ பில் இன்று வங்கியில் போட வேண்டுமாம். அதை உங்களிடம் கொடுத்துவிடச்சொன்னார்.” என்ற சித்ராவுக்கு, அப்போதும் ரஞ்சனின் பார்வை தன்னைத் துளைப்பதை உணர முடிந்தது.

