“இன்று உன் பிறந்தநாளா? என்றைக்கும் எந்தக் குறையும் இன்றி வாழ என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் சித்ரா.” என்று மனமார வாழ்த்தினார் அவர்.
“நன்றி அண்ணா..” என்றவளின் விழிகள், எதிர்பார்ப்போடு ரஞ்சனின் புறமாகத் திரும்பின.
அவனோ சட்டென்று அவளுக்கு முதுகுகாட்டித் திரும்பிக் கொண்டான். திரும்பியவனின் ஒரு கை உயர்ந்து, தடுமாறிக் கொண்டிருந்த நெஞ்சைத் தடவிக் கொடுத்தது.
இவ்வளவு நேரமும் அவளைப் பார்த்தது பொய்யோ என்று நினைக்கும் வகையில் இருந்த அவனது முகத் திருப்பலைப் பார்த்து குழம்பிப் போனாள் சித்ரா.
அதைவிட, பிறந்தநாள் என்று அவள் சொல்லியும் கூட அவன் வாழ்த்துச் சொல்லாததில் ஏமாற்றம் படர்ந்தது. அவனுக்குக் கேட்கவேண்டும் என்பதற்காகவே கண்ணனிடம் சற்று உரக்கவே சொல்லியிருந்தாள்.
அவனும் அவளும் எப்போதும் மோதிக்கொள்வார்கள் தான். என்றாலும் ஒரு பிறந்தநாளில் வாழ்த்தாமல் இருக்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒன்றும் இல்லையே!
அதுவரை அவளை ரசித்தவனுக்குத் திடீரென என்னவாகிற்று? அதுவும் சாதாரண ரசிப்பு அல்ல! உலகை மறந்த ரசிப்பு. எப்போதும் கவனமாகவும் இறுக்கமாகவும் இருப்பவனிடமிருந்து அப்படியான ஒரு பாவனை மிக அதிகப் படியே!
அப்படி ரசித்தவன் இப்போது எதற்காக அவளுக்கு ஒரு வாழ்த்துச் சொல்லாமல் நிற்கிறான்.
குழம்பி நின்றவளைத் தாண்டிச் சென்றவனையே கேள்வியுடன் பார்த்த சித்ராவின் மனதில் ஒருவித ஏமாற்றம் சூழ, அதுவரை இருந்த சந்தோசமான மனநிலை மாற, அப்பாவின் அறைக்குச் சென்றாள்.
அங்கு அவர் சொல்லியிருந்த வேலைகளைக் கைகள் பார்த்தபோதும், மனதோ அவனது புறக்கணிப்புக்கான காரணத்தைத் தேடி அலைந்தது.
கடையில் வேலை செய்யும் அனைவரும் ஒவ்வொருவராய் வந்து பிறந்தநாள் வாழ்த்தினைச் சொல்லச் சொல்ல அவன் ஏன் சொல்லவில்லை என்கிற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது.
எப்போதும் போல் அவன் பாராமுகமாக இருந்திருக்க அவளுக்கு இந்தக் குழப்பம் வந்திராதே!
எதிர்பாராதபோது காணததைக் கண்டவன் போன்று ரசித்துவிட்டு, எதிர்பார்ப்போடு அவள் பார்த்தபோது எதற்காக முகத்தைத் திருப்பிக் கொண்டான்?
சிடுமூஞ்சி சிடுமூஞ்சி! எனக்கென்று வந்து வாய்த்திருக்கிறான்! மனதில் என்ன நினைக்கிறான், என்ன செய்கிறான் என்றே கணிக்க முடியவில்லை என்று பொருமியவள், அதற்கு மேலும் அங்கே தனிமையில் இருந்து புலம்ப முடியாமல் எழுந்து கண்ணனை நாடிச் சென்றாள்.
“கண்ணன் அண்ணா, இந்தாருங்கள் பில். இதை அப்பா இன்றே வங்கியில் போட்டுவிடச் சொன்னார்.” என்றபடி ‘பில்’லை நீட்டினாள்.
“உன் அப்பாவும் வரமாட்டார் என்றால் நான் எப்படிக் கடையை விட்டு வெளியே போவது?” என்று அவளிடமே கேட்டவர், “சரி, தா. நான் ரஞ்சனிடம் கொடுத்துப் போடச் சொல்கிறேன்..” என்றபடி, வாங்கக் கையை நீட்டினார்.
கொடுக்காது, “ஏன் கண்ணன் அண்ணா, அவன் எதற்கு எப்போது பார்த்தாலும் இஞ்சியைத் தின்ற மங்கி மாதிரியே இருக்கிறான்.. சரி சரி முறைக்காதீர்கள். இருக்கிறார்.” என்று, அவரின் முறைப்பில் அவனுக்கு மரியாதையைக் கொடுத்துக் கேட்டாள் சித்ரா.
அவராவது அவளின் குழப்பத்தைத் தெளிவிக்க மாட்டாரா என்கிற ஆவல் அவளுக்கு. பில் கொடுக்கும் சாட்டில் அவள் கண்ணனைத் தேடி வந்ததும் அவனைப் பற்றி அறிந்துகொள்ளவே!
அவளது எண்ணம் அறியாத அவரும் ரஞ்சனைப் பற்றிச் சொன்னார். “அவனும் உன்னைப் போல இளம்பிள்ளை தானே சித்ரா. இந்த வயதில் அதுவும் செருப்புக் கடைக்கு வேலைக்கு வந்தால் கவலையாக இராதா? அதுவும் வைத்தியனாக ஆசைப்பட்டு, இரண்டு வருடங்கள் படித்துவிட்டு அதை விடுவது என்றால் சும்மாவா?” என்று அவர் கேட்டபோது, வியந்துதான் போனாள் சித்ரா.
படிக்காமல் வீட்டில் இருந்தால் அம்மா கல்யாணப் பேச்சை எடுத்துவிடுவாறே என்று பயந்து கல்லூரிக்குச் செல்பவள் தான் அவள். அவளைப் பொறுத்த மட்டில் அந்தக் கல்லூரியும் படிப்பும் அவளுக்கான ஒரு பொழுது போக்கு! அவ்வளவுதான்!
அவனானால் மருத்துவப் படிப்பைப் படித்துவிட்டு இடையில் விட்டுவிட்டானே என்று நினைத்தவளுக்கு அவனை எண்ணி வேதனையாக இருந்தது.
“ஏன் அண்ணா படிப்பை விட்டார்?”
“விடாமல் என்ன செய்வது? அவன் வேலைக்கு வந்தபடியால் தான் அவர்கள் குடும்பமே வாழ்கிறது.” என்றவர் தொடர்ந்தார்.
“அவனும் உன்னைப் போல வசதியான குடும்பத்துப் பொடியன் தான் சித்ரா. நன்றாக வாழ்ந்தவன். அப்பா ஒரு டாக்டர். அவரும் இறந்துவிட சொந்த பந்தங்களும் சொத்துக்களைச் சுருட்டி விட்டார்கள். குடும்பத்துக்காக படிப்பையும் விட்டுவிட்டு கௌரவம் பாராமல் இங்கே வந்து வேலை செய்வது என்றால் சும்மாவா? அதுதான் ரோஷமும் கோபமும் கொஞ்சம் அதிகமாக வருகிறது. ஆனாலும் மிகவும் நல்லவன். எனக்கே அவனை நினைத்தால் ஆச்சர்யம் தான். அதனால்தான் எனக்கு அவனை நிரம்பவும் பிடிக்கும்..” என்றவரின் பேச்சைக் கேட்டவளின் மனதுக்கும் அவனைப் பிடித்துத்தான் போனது.
பிடிப்பு மட்டும் அல்ல வியப்பு, ஆச்சர்யம், பெருமை கூட உண்டாகிற்று!
உடனேயே அவனைப் பார்க்கவேண்டும் போல் ஆர்வம் எழ, மெல்ல அவரிடம் இருந்து கழன்று கொண்டாள். “சரியண்ணா. இதை நான் அவரிடம் கொடுத்துவிட்டு அப்படியே வீட்டுக்குப் போய்விடுவேன். அம்மா இன்று ஒரு இடமும் போகாமல் வரச்சொன்னார்..” என்றவள், ஒரு துள்ளலுடன் அவனைத் தேடிச் சென்றாள்.
அவன் மேலே ஸ்டோர் ரூமில் இருப்பதைக் கண்டுகொண்டு, அங்கே சென்றவளின் விழிகள், அவளுக்கு முதுகாட்டி வேலை செய்து கொண்டிருந்தவனை ரசனையுடன் தழுவியது.
விரும்பிப் படித்த படிப்பை, அதுவும் மருத்துவப் படிப்பை விடுவது என்பதே பெரிய விடயம். அப்படியிருக்க அதை விட்டுவிட்டுச் செருப்புக் கடை ஒன்றில் வேலைக்கு வருவது என்பது அதைவிடப் பெரிய விடயம்.
அவளையே, ‘ஓ.. செருப்புக்கடை முதலாளியின் மகளா நீ…’ என்று ஏளனம் செய்பவரே உண்டு. அப்படியிருக்க அவனது நிலை?
அப்படித் தன்னிலை இறங்கி, படிப்பையும் அதனால் வரக்கூடிய ஒளிமயமான எதிர்காலத்தையும் இழந்து, கௌரவம் பாராது குடும்பத்துக்காக அவன் இங்கே வேலைக்கு வந்திருக்கிறான் என்றால், குடும்பத்தின் மீதான அவனது பாசம் புரிந்தது. அக்கறை புரிந்தது.
அதையெல்லாம் தானும் அனுபவிக்க வேண்டும் என்கிற வேகம் எழுந்தது. அவனது மன சாம்ராஜ்ஜியத்தின் ராணியாய் வலம்வர ஆவல் கொண்டாள். தனக்கே தனெக்கென்று அவனைச் சொந்தமாக்கும் ஆசை எழுந்தது.
“இதய..ன்” இதயரஞ்சன் என்று அழைக்க நினைத்தவளின் நா, ‘இதய’வுக்கு மேலே நகர மறுத்ததில், அவன் அவளது இதயன் என்கிற எண்ணமும் எழவே ‘இதயன்’ னோடு நின்றுபோனது அவளது அழைப்பு.
அப்படி அழைத்தவளின் குரலில், நெஞ்சத்து நேசம் முழுவதும் நிறைந்திருந்தது. அந்தப் பெயரைச் சொல்கையிலே அவள் இதயம் நிறைந்து போனது.
அந்த அழைப்பில், அது வந்த தொனியில் ஒரு பெட்டிக்குள் குனிந்து எதையோ செய்து கொண்டிருந்தவனின் கைகள் அப்படியே நின்றன. கைகள் மட்டுமல்ல, அவனது மொத்த உடலுமே தன்னுடைய அசைவை சில நொடிகள் நிறுத்தியது. வேகமாக நிமிர்ந்தவனின் உடல் முழுவதும் இறுக, சில நொடிகள் அப்படியே அவளுக்கு முதுகு காட்டி நின்றவன், நிதானமாகத் திரும்பினான்.
அவன் முகத்தில் உணர்ச்சிகள் அனைத்தும் துடைக்கப் பட்டிருக்க விழிகள் மட்டும் நெருப்பைக் கக்கின.
அதைக் கண்டு கொண்டவளுக்கு எப்போதும் உண்டாகும் கோபமோ ஆத்திரமோ உண்டாக மறுத்தது. மாறாக நேசமே இன்னும் பொங்கியது.
மலர்ந்த விழிகளால் அவனை நோக்கி, “இந்த ‘பில்’லை வங்கியில் போட்டு விடுகிறீர்களா இதயன்?” என்று கேட்டாள்.
அதை வாங்காது கோப விழிகளால் அவளை நோக்கி, “என் பெயர் ரஞ்சன்.” என்றான் கடினமான குரலில்.
“இல்லையே. உங்கள் பெயர் இதயரஞ்சன்.” என்றவளின் உள்ளம், என் இதயத்து ரஞ்சன் என்று சொல்லிக் கொண்டது.
“அப்படியே கூப்பிடு.”
“முடியாது! உங்கள் முழுப்பெயர் சொல்லிக் கூப்பிட எனக்கு வாய் வலிக்கிறது.”
இவ்வளவு நாளும் அப்படிக் கூப்பிட்டவளுக்கு இப்போது வாய் வலிக்கிறதாமா என்கிற ஆத்திரத்தில், “அதுதான் ரஞ்சன் என்று கூப்பிடு என்று சொன்னேனே.” என்று எரிந்து விழுந்தான் அவன்.
“முடியாது! எனக்குப் பிடித்த மாதிரித்தான் நான் கூப்பிடுவேன். இதயன் என்று கூப்பிடத்தான் எனக்குப் பிடித்திருக்கிறது.” என்றாள் அந்தப் பிடிவாதக்காரி.
ஆத்திரத்தோடு அவளை உறுத்தவன் சில நொடிகளிலேயே தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். “உன் திமிரை என்னிடம் காட்டாதே என்று அன்றே உனக்குச் சொல்லிவிட்டேன். மரியாதையாக இங்கிருந்து போ!” என்றான் அவள் முகம் பாராது.
இந்தச் செயல் கூட ரஞ்சனிடம் புதிதாகத் தெரிந்தது சித்ராவுக்கு. அதுவரை காலமும் அவளிடமிருந்து பார்வையை அவன் திருப்பியதே இல்லை. அவளைப் போலவே!
தளராது அவளை நோக்கும் அவன் விழிகளுக்கு என்னவாகிற்று? சிந்தனை உள்ளே ஓடியபோதும்அவனுக்குப் பதில் சொன்னாள் சித்ரா. “சரி போகிறேன். இந்த ‘பில்’லை வாங்கிக் கொள்ளுங்கள்.”

