என் பிரியமானவளே 8 – 2

அவன் உதட்டுச் சிரிப்பு விரிந்தது. பார்வை அவள் முகத்திலேயே இருக்க, விரல்களின் அழுத்தம் மெலிதாக அதிகரித்தது. அவள் வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டாள்.

 

“ஹல்லோ மேடம்! கொஞ்சம் நீங்களும் ஹெல்ப் பண்ணுங்க. எனக்கும் இதெல்லாம் புதுசுதான்.” என்றவனின் பேச்சில் சிரிப்பை அடக்கமாட்டாமல், “கோகுல்!” என்று அதட்டியபடி அவன் கையிலேயே ஒன்று போட்டாள், பிரியந்தினி.

 

சூழ்நிலையே இலகுவாயிற்று. சிரிப்புடன் அவளை நெருங்கி அமர்ந்தான் கோகுலன். அவளின் தாடையைப் பற்றித் தண்புறம் திருப்பி, “உனக்கு ஓகே தானே? இல்ல, களைப்பா இருக்கா?” என்றான்.

 

அன்றைக்கு அவன் கேட்டதுபோல, ‘எதற்கு ஓகே?’ என்று கேட்கவேண்டும்போல் இருந்தது. அதற்குப் பேச்சு வரவேண்டுமே. அவள் பார்வையை அகற்றப்போக அவன் விடவில்லை.

 

“விருப்பம் இல்ல, டைம் வேணும் எண்டாலும் சொல்லு. எனக்கு விளங்கும்.”

 

“அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல.” இமைகளைத் தாழ்த்தியபடி மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

 

அது அவனை ஈர்த்தது. “அத என்னைப் பாத்துச் சொல்லுறது!” என்றான்.

 

“ம்ஹூம்!”

 

“பார் யதி!” அவளை இன்னும் நெருங்கி உரிமையோடு இழைந்தான். அவள் விழிகள் மயக்கத்தில் மூடிக்கொண்டன. அந்த இமைகளின் மீது அவன் உதடுகள் மென்மையாகப் பதிந்து மீண்டன. இத்தனை நாட்களாகப் பார்க்கத் துடித்த முகத்தை மிக அருகினில் ஆசை தீரப் பார்த்து ரசித்தான். மூக்கோடு மூக்கை உரசினான். விரல்களினால் கோலமிட்டான். அவள் தடுமாற்றத்துடன் கீழுதட்டைப் பற்றினாள். அவன் விரல்கள் அதனைச் சிறை மீட்டு வருடியது. மீண்டும் சிறைப்படப்போவதை அறிந்தோ என்னவோ அவள் இதழ்கள் நடுங்கின. அதற்குமேல் முடியாமல் அவளின் இதழ்களை நோக்கிக் குனிந்தான் அவன்.

 

மடை திறந்த வெள்ளமாக அவர்களின் உணர்வுகள் தடைகளை உடைத்துக்கொண்டு பாய்ந்தது. இருவருக்குமே களம் புதிது. உணர்வுகள் புதிது. ஆசைகளும் புதிது என்பதில் தேடல்கள் தீராமல் போயிற்று. ஆனந்தமாய் நகர்ந்தது இரவு.

 

அன்று மட்டுமல்ல அடுத்து வந்த நான்கு நாட்களுமே சொர்க்கமாய் நகர்ந்தது. அவளின் வீட்டுக்கும் சென்று தங்கினர். விருந்துண்டனர். எங்கும் எந்தக் குறையும் இல்லை. தனிமை கிடைக்கிறபொழுதுகளில் எல்லாம் அணைத்தான். தன் விருப்பத்தைக் காட்டினான். அவளை மிகவுமே தேடினான். அவளும் ஒன்றும் இதையெல்லாம் வெறுக்கவில்லை. மாறாக, அவனையும் அவனுடைய அருகண்மையையும் மிகவுமே தேடினாள். குழந்தை இப்போதைக்கு வேண்டாம், அவன் கொழும்புக்கு வந்தபிறகு பார்த்துக்கொள்ளலாம் என்பதுவரை பேசிக்கொண்டார்கள். மாமா, மாமி, மச்சாள் மூவருமே ஒரு சிறு குறை சொல்லமுடியாத உறவாக அவளுக்கு அமைந்து போயினர்.

 

இவ்வளவு இருந்தும் ஏதோ ஒன்று குறைந்தது.

 

இதோ, அவர்களுக்குத் திருமணமாகி ஐந்து நாட்களும் ஆயிற்று. இன்னுமே தயக்கமின்றி, எந்த யோசனையுமின்றி, தான் நினைத்ததை அவனிடம் பேச அவளால் முடியவில்லை. எப்போதும் ஒரு கவனம் இருந்தது. வார்த்தைகளை யோசித்துக் கதைத்தாள். அவள் எதையாவது இயல்பாகச் சொல்லப்போக, அவன் கோபப்பட்டு, பழசைச் சுட்டிக்காட்டி, மனம் நோகிற மாதிரி பேசிவிட்டான் என்றால், அவனை உயிராக நேசிக்கும் இன்றைய நாளில் நிச்சயம் அவளால் தாங்கிக்கொள்ளவே முடியாது.

 

அவனுக்கு எந்த நொடியில் மூக்கு முட்டக் கோபம் வரும் என்று இன்னும் அவளுக்குக் கணிக்கத் தெரியவில்லையே. ஒருமுறை அவன் கோபத்துக்கு ஆளாகி படுகிற பாடே போதாதா? அந்தப் பயம் தான் அவளை அவனிடமிருந்து தள்ளி நிறுத்துகிறதா என்றும் விளங்கவில்லை.

 

அல்லது, இந்தத் திருமண வாழ்க்கையே இப்படித்தானா? அவர்கள் ஒன்றும் முதலே காதலர்கள் இல்லையே. அதனால் தான் இப்படியோ? அவனைப்பற்றி அவளுக்கும் அவளைப்பற்றி அவனுக்கும் பெரிதாக ஒன்றும் தெரியாதே. தெரிந்தபிறகு இந்தக் குறை நீங்குமோ? ஒன்றும் விளங்கவில்லை அவளுக்கு.

 

அவளின் விடுமுறை நாட்கள் முடிந்திருந்தது. அடுத்தநாள் புறப்பட வேண்டும். ஆனால், அவனுக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருந்தது. அவனைப் பிரிந்து போகவே மனமில்லை. மீண்டும் கொழும்புக்குச் சென்று தனியே இருக்கவேண்டும் என்பதை நினைக்கவே தொண்டை அடைக்கும் உணர்வு.

 

அம்மா அப்பாவின் கடன்களைத் தீர்த்து, அவர்களுக்குத் தேவையானபோது தோள்கொடுத்து, தன் திருமணத்துக்குத் தானே பணமும் நகையும் சேர்த்து என்று, அனைத்தையும் அவளுக்கு வாய்க்கப்பண்ணித் தந்தது அந்த வேலைதான். அதனாலோ என்னவோ தன் வேலையை மிகவுமே நேசிப்பவள் அவள். அதனாலும் தான் திருமணப்பேச்சின் போது எக்காரணத்தைக் கொண்டும் வேலையை விடமாட்டேன் என்றாள். இன்றோ, அந்த வேலைக்குப் போவதற்குக் கூட விருப்பமற்று மனம் முரண்டியது. மெயில் எழுதி மேலும் இரண்டு நாட்கள் கேட்டுப் பார்த்தும் மறுத்திருந்தார்கள்.

 

அன்று மாலை, கோகுலனின் வீட்டுக்கு வந்திருந்தனர். கழுவிக் காய்ந்து வந்த உடைகளை எல்லாம் மடித்துப் பெட்டி கட்டிக்கொண்டிருந்தாள், பிரியந்தினி. அறைக்குள் வந்தவன், அதைக் கவனித்துவிட்டு, அவளைப் பின்னிருந்து அணைத்தான். அவளும் இசைந்து நின்றாள். அவன் உதடுகள் அவளின் கழுத்து வளைவில் புதைந்தது. “கட்டாயம் போயே ஆகோணுமா?”

 

முதல் பிரிவு. நினைக்கவே கண்ணைக் கரித்தது அவளுக்கு. அவனும் இப்படிக் கேட்கவும் இன்னுமே உடைந்தாள். தொண்டையை நம்ப மாட்டாமல், “ம்ம்..” என்றாள்.

 

அவளைத் தன் புறமாகத் திருப்பி, “இன்னும் ரெண்டு நாள் தானே. லீவு கேட்டுப் பாரன்.” என்றான் அவன்.

 

அதுதான் ஏற்கனவே கேட்டு, அவர்கள் மறுத்துமாயிற்றே. அதில், “கிடைக்காது கோகுல்! நான்..” என்று அவள் முடிக்க முதலே, “கிடைக்காதா? கிடைக்க வேண்டாம் எண்டு நினைக்கிறியா?” என்றான் அவன் ஒருமாதிரிக் குரலில்.

 

அந்தக் குரல் அவளை உசுப்பிவிட்டது. கூடவே, இனிய கனவொன்று கலைந்துபோகிற துயர் மனதில் உண்டாயிற்று. “நான் ஏன் கிடைக்கவேண்டாம் எண்டு நினைக்கோணும்?” என்று நிதானமாகத் திருப்பிக் கேட்டாள்.

 

error: Alert: Content selection is disabled!!