Skip to content
“உன்ர அம்மா பற்றி இப்பவா தெரியும்?அவா சொல்லுற கதைகள ஒரு விசயம் எண்டு பெரிசா எடுத்துக்கொண்டு இதெல்லாம் என்ன வேலை கவினி?”என்ற பூங்குன்றன், எவ்வளவோ எடுத்துச் சொன்னார். கோபமாகவும் தான். கவினி அசைந்து கொடுக்கவில்லை.
“எனக்கு உண்மையா அவவில ஒரு கோபமும் இல்ல. வெறுப்பும் இல்லையப்பா. அதேநேரம் அம்மா எண்ட விருப்பமோ அன்போ ஒண்டும் இல்லை. இங்க அவவோட இருந்து பிரச்சினைப்பட்டுக் களைச்சிட்டன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கு அப்பா. எனக்குள்ள எதிர்மறையான எண்ணங்களக் கொண்டுவந்து சிரமப்பட நான் இனியும் தயாரில்ல! நான் இந்த வீட்டில இருந்தனோ உங்கண்ட நிம்மதியும் பறிபோயிரும், எண்டையும் தான். இனி இந்தக் கதை வேணாம் பா, விட்டிருங்க!” என்றவள் குரலில் அவ்வளவு தீவிரம்.
இவ்வளவு நாட்களும் போல் மகளைச் சமாதானம் செய்ய முடியாது திணறிப்போனார், பூங்குன்றன்.
“விடு தம்பி, இப்ப என்ன துலைக்கா போகப்போறாள்? எங்கண்ட வீட்டில தானே இருக்கப் போறாள். அப்பச் சரி வதனிக்கு இவளிட அருமை விளங்குதா பாப்பம்!” என்றிருந்தார், பரமேஸ்வரி.
சாரலின் திருமணம் முடிந்து யாழ்ப்பாணம் வந்த கையோடு,கவினி, தன் இருப்பிடத்தை முழுமையாகவே பரமேஸ்வரி வீட்டிற்கு மாற்றிவிட்டாள். அதன்பின், இந்தா அந்தா என்று ஆறு மாதங்கள் கடந்திருந்தன. அன்று சந்தித்த பின்னர் மதிவதனியை அவள் சந்திக்கவில்லை. பக்கத்து வீட்டில் இருந்தாலும் அதற்குரிய சந்தர்ப்பங்களை மிகவும் கவனமாகத் தவிர்த்தாள்,கவினி.
முதலில் போனால் போடி என்ற கணக்கில் இருந்த மதிவதனிக்கு, நாளாக நாளாக பரமேஸ்வரியில் அவ்வளவு கோபம் வந்தது. இத்தனை வருடமும் தன்னிடம் குட்டுவாங்கிக் கொண்டிருந்த மகள் இவ்வளவு எதிர்க்கத் துணை நிற்பதே அவர் தானே!
“உங்கட மகன்மாரில ஒராள நான் இப்பிடிப் பிரிச்சாத் தாங்குவீங்களா? அயலட்டைக்க பரிசிகேடு. பெரியாக்கள் எண்டா புத்தி சொல்லோணும். அது எங்க, உங்கட அம்மாட குடியக் கெடுக்கிற குணம் உங்களுக்கு இல்லாமலா போகும்!” என்று,பரமேஸ்வரியோடு பெரும் வாக்குவாதத்தில் இறங்கிவிட்டார். அது சண்டையானது. இறுதியில், பேச்சு வார்த்தையற்ற நிலைக்கு வந்திருந்தார்கள்.
“எத்தின நாள் திட்டம் இது? கைநிறைய உழைக்கிறாள் சுரண்டி பெட்டிக்க வையுங்க. கிழவி குடுத்த சொத்துப்பத்து, நகைநட்டு எண்டு எல்லாத்தையும் அன்பு பாசம் எண்டு காட்டிச் சுருட்டிருங்க. நல்லது கெட்டது ஒண்டுக்கும் இனி அவளுக்கு இங்க இடமில்ல.பெத்த வயிறு எரிஞ்சு சொல்லுறன், நடுத்தெருவில தனியா நிக்கிற நிலை அவளுக்கு வந்தே தீரும். அதும் யூ டியூபில காட்டுற நெளிப்புக்குப் பரிசிகெடப் போறாள். அந்த நேரமும் இப்பிடியே துணை நிக்கிறீங்களா எண்டு பாக்கத்தானே போறன்.” சாபமே விட்டார்.
வேலையால் வந்த பூங்குன்றன் மனைவியை அறையப் போனார்.
“கை மட்டும் படோணும் ஆர் எவர் எண்டு பாக்க மாட்டன். சப்பெண்டு திருப்பித் தந்திருவன். கொழுப்புப் பிடிச்சுத் திரியிற மகள அடக்க வக்கில்ல, இங்க வந்திட்டார்.” என்று, ஒருபோதுமின்றிக் கதைத்த மதிவதனி, மாதத்தில் ஒரு கிழமைக்குக் கொழும்பு சென்றுவிடுவார். கணவன் மனைவிக்கிடையில் தெரிந்தும் தெரியாமலும் இருந்த சிறு விரிசல் நன்றாகப் பிளந்து கடகடவென்று சிதலமடைந்து கொண்டு சென்றது.
விமலாவுக்கோ மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாத நிலை. சினேகிதியாச்சே! மருமகளுக்காகவும் பார்க்க வேண்டும். சும்மாவே என்ன சொன்னாலும் ஒரு காதால் வாங்கி மறு காதால் விட்டு விடுபவர் மதிவதனி. தான் நினைப்பது, செய்வதே சரியென்று நடக்கும் குணம் கொண்டவர். சினேகிதி என்றளவில் இருந்தபோது அது இவர்களைத் தாக்கவில்லை. இப்போதோ சகிக்க, சமாளிக்க வேண்டிய நிலையில் இருந்தார்.
இப்படியே மேலும் ஏழெட்டு மாதங்கள் கடந்த நிலையில் கவினி கொழும்பு சென்றிருந்தாள். தமக்கை வீட்டுக்குச் செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. சாரல், வெள்ளவத்தை இந்துக் கல்லூரியில் ஆசிரியையாக இருக்கிறாள். பாடசாலை முடியும் நேரமாகச் சென்று எதிர்ப்புறமிருந்த கட்டிட நிழலில் ஒதுங்கி நின்றாள்.
எப்போதுமே அவர்கள் நெருக்கமான சகோதரிகளாக இருக்கவில்லை. வளர்ந்த விதம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தேவைக்குக் கதைத்துக்கொள்வார்கள், அவ்வளவே! கலகலப்பும் நட்பும் இல்லாத அவர்கள் உறவில், ‘நான் உன்ர அக்கா’ என்ற அதிகாரம் மட்டும் எப்போதுமே இருந்திருக்கிறது. தங்கைக்காக மிகச் சில வேளைகள் தாயோடு கதைக்க முனைவாள். அதே வேகத்தில், “ இதுக்க இழுப்பட்டுச் சில்லல்பட என்னால முடியாதப்பா!” என்று விட்டுவிடுவாள்.
சேந்தன் விரும்பியது, பிறகு நடந்த பிணக்குகள் எல்லாம் நிவேதா ஆட்கள் இலண்டன் புறப்பட்டுச் சென்ற பின்னர் தான் அவளுக்கும் ஆதவனுக்கும் தெரிய வந்திருந்தது.
“ஏன், கவினிக்கு என்ன குறை? அருமையான பிள்ள. தாய் மகள் பிரச்சினைக்கும் இதுக்கும் என்ன தொடர்பு? நிவி மாமியோட நான் கதைக்கவோ? ” தாமதியாது கேட்டிருந்தான், ஆதவன்.
“உள்ள பிரச்சினை போதும் சும்மா இருங்க தம்பி. முதல், கவினி தனக்குப் பிடிக்கேல்ல எண்ட பிறகு என்ன கதைக்க இருக்கு?” வெடுக்கென்று சொல்லியிருந்தார், விமலா. தாயின் குரல் பேதமே ஆதவன் வாயை மூட வைத்துவிட்டது.
error: Alert: Content selection is disabled!!