கரையுடைக்கும் கணமொன்றில் – 24 (1)

பனிக்குளிரும் பனித்தூவலும் திரைப்படங்களில் பார்க்கையில், அடுத்தவர் வாயால் கேட்கையில் அந்த அனுபவம் கிடைக்காதா என்று ஏங்க வைத்துவிடும். கற்பனையில் அங்கெல்லாம் சுற்றித் திரிய வைத்துவிடும். அதுவே, தினம் தினம் அதனுள் வாழும் நிலை வந்தால்?

ரசனையின்  அளவு ஒரு அளவுக்கு மேல் தாக்குபிடிப்பதில்லை என்பதே உண்மை.  அப்படியே விழுந்து குறண்டிச் சுருண்டு வெம்மைக்கு ஏங்க வைத்துவிடும். 

அதே மனநிலையில் தான் கவினியும் இருந்தாள். அடுக்கடுக்காக உடைகள் அணிந்து, பனிக்காலத்துக்குரிய காலணி,தொப்பி, தடித்த கம்பளிச் சால்வை , கையுறை சகிதம்  வெளிக்கிட்டாலும் சுர்ரென்று தாக்கும் குளிரிலிருந்து தப்ப முடியவில்லை. 

வேலைக்கு வெளிக்கிட்டிருந்தவள் தன்னைத்தானே குனிந்து பார்த்தாள். அறிந்தவர் தெரிந்தவர் உற்றுப் பார்த்தாலே அடையாளம் காண்பது கடினம். சிரித்துவிட்டாள். 

முகப்பகுதி தவிர்த்து மிகுதி முழுமையாக மூடியிருந்தாள். இருந்தும் வெளியில் இறங்கினால் போதும், விழிகளில் மோதும் குளிரால் அவை நிறைந்து தளும்பும்.  மூக்கோ நமநமக்கும். கையுறையோடு டிசுவால் துடைப்பதோ பெரும் சிரமமான வேலைதான். மூக்கு நுனி எந்நேரமும் சிவப்புத்தான்.

 வீட்டிலிருந்து அருகில் தான் பேரூந்து  நிலையம். புகையிரத நிலையம் சென்றுவிட்டால்  பதினைந்து நிமிடங்கள் நெருக்கியடித்துப் பயணம். பின், பொடிநடையில் சில நிமிடங்கள், கலையகம் வந்துவிடும். இவள்தான் அதற்குள் விறைத்துப்போவாள். இந்த  அழகில் ‘ஷோர்ட்ஸ்’ எடுக்கும் ஆசையும்.  சமயம்தான் வாய்க்கவில்லை. 

கலையகத்துள் நுழையும் வரைதான் எல்லாம். அதன் பின்னர், கிடைத்த சந்தர்ப்பத்தை நிமிடமும் வீணாக்காது பயன்படுத்த வேண்டும் என்ற முடிவிலிருக்கும் வாணனும் அவளும் வேலையில் மூழ்கிப் போவார்கள். 

மதிய உணவு வேளை வாணனோடு கலகலப்பாகப் போகும். சமைத்துக்கொண்டுவரும் உணவை கன்டினில் சூடாக்கி உண்பார்கள்.  மாலை, இருள் கவிந்த வேளையில் வேலை முடித்து வெளிவரும் வரை கலகலப்பாக இருக்கும் மனம்,முதல் பார்வையில் அதிசயிக்க வைத்த வீட்டுக்குள் நுழைந்தால் தனிமையை உணர்ந்து விடும். மிகவும் களைப்பாக உணர்வாள், கவினி.

வந்த ஆரம்ப நாட்கள் வீடு வந்தாலும் தூங்கும் வரை ஏதோவொன்று செய்யவிருக்கும். நாள்கள் செல்ல செல்ல அலுப்படித்தது. 

இடையில் ஒரு தடவை இரயில் நிலையத்தில் இயலைச் சந்தித்தாக வாணன் கூறியிருந்தான். அவளை மிகவுமே கேட்டாளாம். கோல் பண்ணச் சொன்னாளாம். அதன்பின்னர்தான் இந்த அலுப்பு மனநிலை வந்ததோ!

வேண்டாத நினைவுகளின் தீண்டல் அவள் விருப்பு வெறுப்புகளையெல்லாம் கடந்து உலா வந்தபடியிருந்தன.

‘பச்! ஒரு தொடர்பும் வேணாம் பா.  பிறகு முதலில இருந்து தொடங்கவா?’ என்றெண்ணியவள் மனத்தில் தாய் வந்து போனார். என் சினேகிதி குடும்பத்தோடு தொடர்பு வைத்துவிடாதே என்று அவர் எச்சரித்தது நினைவில் வந்து வந்து போனது.

அன்று பனிப்பொழிவு வேறு எக்கச்சக்கமாக இருந்தது. முதல் நாள் மாலை தொடங்கியது ஓய்ந்தபாடில்லை. மனத்தில் சோர்வு அதிகரித்தது. அதைப் பொருட்படுத்தாது வேலைக்குப்  புறப்பட்டிருந்தாள்.

பனிக்குவியலில் கால்கள் புதைந்தன. இரு தடவைகள் சறுக்கி விழுந்திடப் பார்த்தாள். ஒருவாறு சமாளித்து பேரூந்து நிலையத்துக்கு வந்துவிட்டாள். 

வழமையாக வந்து நிற்கும் சிலரும் அங்கில்லை. தனியாக நிற்க ஒரு மாதிரியாக இருந்தது. இரு இரும்பு இருக்கைகள், மூன்று புறமும் கண்ணாடி மறைப்போடு மேலே கூரை என்றிருந்த பேருந்து நிலையத்துள் ஒதுங்கி நின்றுகொண்டவள் பார்வை பேருந்து வரும் திசையில். கார்கள் வழுக்கிக்கொண்டு சென்றனவேயொழிய பேரூந்து வரும் அசுமாத்தமே இல்லை. 

வாணன் அழைத்தான். கடும் பனிப்பொழிவு இருந்தால் சிலவேளைகளில் பேரூந்து வராமல் போகுமாம். பிந்தி வருமாம். தான் அறையில் உள்ளவனின் காரில் செல்வதாகச் சொன்னான்.

“நீ இண்டைக்கு வர வேணாம் கவினி. வீட்ட போ, நான் இங்க சொல்லுறன்.” என்றும் சொன்னான்.

சிறிது நேரம் பார்த்துவிட்டுப் போகலாம் அல்லது ஊபருக்கு அழைத்துப் பார்க்கலாம். வீட்டில் சென்று தனிமையில் முட்ட முட்ட என்ன செய்வதாம்? யோசனையோடு நின்றபோது கார் ஒன்று வந்து அருகில் நின்றது. 

கறுப்புக் கண்ணாடிகள் உள்ளிருப்பவர்களைக் காட்டவில்லை. சில அடிகள் பின்னால் சென்று நின்றுகொண்டவள் கைபேசியை வெளியில் எடுத்துக்கொண்டாள். அவசர உதவிக்குக் காவல்துறையை  அழைக்கத்தான்.

 

error: Alert: Content selection is disabled!!