கரையுடைக்கும் கணமொன்றில் – 24 (2)

சாரதியின் பக்கக்  கண்ணாடி மெல்ல… நிதானமாகக் கீழே இறங்கியது.தெரிந்த முகம்…

“சே…ந்…தன்!”அவளையுமறியாது முணுமுணுத்தாள். 

கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையே! அப்படியே பார்த்துக்கொண்டு திகைத்து நின்றிந்தாள் .

அவனோ, வசீகரமாக முறுவலித்தான். நெற்றி ஏறியிறங்கி நலம் விசாரித்தது. கூடவே “ஹலோ கவினி பூங்குன்றன்!” சீண்டலாக அழைத்தான்.

“என்னக் கொஞ்சமும்  எதிர்பார்க்கேல்ல என்ன? நான் லண்டனில இருக்கிறன் எண்டுறதாவது  நினைவிருக்கா? அதுக்கு முதல் என்னை ஆர் எண்டு நினைவிருக்கா?” சீண்டலைத் தொடர்ந்தான். 

“டோய்! ஓடி வாரும், கூட்டிக்கொண்டு போய் விடுறன். என்ர வேலையும் அந்தப் பக்கம் தான். பஸ் அநேகம் வராது. ” என்ற போதும், அவனைத்  திடுமென்று கண்ட திகைப்பு மாறாது உறைந்து நின்றிருந்தாள்,கவினி. எல்லாவற்றுக்கும் மேலாக, அவனுருவைக் கண்டதும் தான் தாமதம்,  உச்சி வரை ஒரு துள்ளுத் துள்ளி ஆட்டம் போட்ட உள்ளம், அவளைப் பெரிதும் பயம் கொள்ள வைத்திருந்ததே!

“ஓடி வாரும் கவினி, எனக்கு நேரம் போகுது.” மீண்டும் அவன் அழைக்க மெல்ல இயல்புக்கு வந்திருந்தாள். அதுவே முறைத்துப் பார்க்க வைத்திருந்தது. தலையைப் பேரூந்து வரும் திசையில் திரும்பவும் வைத்திருந்தது. 

அவன் முகத்தில் சுவாரசியம். சின்னச் சிரிப்போடு தன்னருகில் திரும்ப, அதுவரை அமைதியாக அமர்ந்திருந்தவர் கதவைத் திறந்துகொண்டு இறங்கினார்.

காரைச் சுற்றிக்கொண்டு நிதானமாக நடந்து வந்தவர் அவள் முன்னால் சென்று முறுவலோடு நின்றார்.

அவளுக்கு யார் என்று தெரியவில்லை. என்றாலும் முகத்தைப் பார்த்து அனுமானிக்க முடிந்ததில் ஒருவகையில் பதற்றமானாள். பதறும் அளவுக்கு அவள் என்னதான்  செய்தாள்? புரிந்தாலும் தடுமாறினாள்.

 நேர் மாறாக, அவர் முகத்தில் முறுவல் விரிந்தது. பார்வையில் சுவாரசியமும் கனிவும். அவளை நோக்கிக்  கை நீட்டி, “மருமகளே… நான் சேந்தனிட அப்பா ரவிக்குமார்!” அறிமுகம் செய்து கொண்டார். அவள் விழிகள் விரிவதைப் பார்த்தவர், பின்னால் திரும்பி மகனைப் பார்த்து நெற்றியை ஏற்றி இறக்கினார்.

 அவர் உச்சரித்த ‘மருமகளே’ விளிப்பில்  கவினி முற்றாக  உறைந்து போனாள். கையெல்லாம் கொடுக்கவில்லை. அவரும் அதைப் பொருட்படுத்தவில்லை. 

“இளம் பிள்ளைகளுக்கு குளிரென்ன கூதலென்ன? மாமாவுக்கு ஏலாதம்மா, வாரும் காருக்க இருந்து கதைக்கலாம்.” என்றவரிடம் மறுத்து அடம்பிடிக்க முடியவில்லை.  

அவள் பின்புறம் ஏறியதும் கதவைச் சாத்திவிட்டு மகனருகில் ஏறியமர்ந்த ரவி, “ காரை எடுக்கிற ஐடியா இருக்கா மகனே?” சீண்டினார். 

“அப்பா… தாங்க்ஸ் அப்பா!”தந்தையைத் தோளோடு அணைத்துவிட்டு, காரை நிதானமாக ஓட்ட ஆரம்பித்தவன் பார்வை, ரியர்வியூவில் சற்று அதிகநேரம் செலவிடத் தொடங்கியிருந்தது.

“லண்டன் வந்து இரண்டு மாதமாகப்  போகுது. என்ன மறந்திட்டீர் என்ன?” குற்றச்சாட்டோடு சொன்னவனை முறைத்தார், தகப்பன்.

“உங்கள மறந்திருந்தா கார்ல ஏறியிருப்பவா?” என்றவர், சற்றே பின்னால்  திரும்பி கவினியைப் பார்த்தார்.

“மருமகள் வந்திட்டா எண்டோன்ன வந்து பாக்க வேணும் எண்டு விருப்பமா இருந்ததம்மா. நீங்க வந்திறங்கிறதுக்கு முதல் நாள்தான் இலங்கை போயிருந்தனான். நாலு நாளுக்கு முதல்தான் வந்தன். உங்கண்ட அப்பாவச் சந்திச்சனான். சொல்ல வேணாம் எண்டனான், சொல்லேல்ல தானே?” 

அவர் கதைத்த விதத்தில்  சேந்தனின் சீண்டல் குணம் எங்கிருந்து வந்தது என்று விளங்கியது. அவளுக்கு வார்த்தைகள் வந்தால் தானே.

‘இல்லை’ என்று தலையசைத்தாள், அவ்வளவும்தான்.

“எல்லாம் மருமகளுக்கு ஒரு சர்ப்ரைசா இருக்கட்டும் எண்டுதான்.” என்றவர், “இலங்கையில இருந்து வரேக்க நல்ல வருத்தத்தோட வந்து இப்பதான் சுகமாகி இருக்கு. இண்டைக்குக் கலையகம் வந்து உங்களைச்  சந்திப்பம் எண்டுதான் வெளிக்கிட்டனான். பாத்தா வழியிலயே கண்டிட்டன்.” நெடுநாள் பழகிய தோரணையில் கதைத்தார்.

எப்படி வினையாற்றுவது என்று தெரியாது அமர்ந்திருந்தாள், அவள்.

“உங்கட அக்காட கலியாணத்துக்கு இலங்கை வந்து நிண்ட நேரமே, உங்களைப் பற்றித் தம்பி சொல்லிட்டார். குடும்ப வாழ்க்கைக்கு முக்கியம் ஒண்டா வாழப்போற  ரெண்டு பேரிட விருப்பமும் தானம்மா.  இருந்தாலும் கலியாணங்கள் ரெண்டு பக்கக் குடும்ப உறவுகளையும் இணைக்கிற பாலம் எண்டு நம்பிறவன் நான். அந்த நம்பிக்கை என்ர பிள்ளைகளுக்கும் இருக்கிறதாலதான் இன்னும் பொறுமையா இருக்கிறார், என்ர மகன்.” மகனைப் பெருமையாகப் பார்த்தவர் தோளில் அன்போடு தட்டியும் கொடுத்தார்.

“உங்கட மாமி உண்மையா நல்லவா. பிடிவாதம் கொஞ்சம் இருக்கு. தான் பாத்த பிள்ளைய இவர் கட்டேல்ல எண்டுற கோவம்தான் கூட. மற்றது எல்லாம் ஒரு சாட்டு. கெதியா உங்கட மாமி உங்கள விளங்கிக் கொள்ளுவா. அந்த நாளுக்காக உங்களோட சேர்ந்து நானும் காத்திருக்கிறன்.” அவர் கதைக்க கதைக்க இவள் பார்வை சேந்தனின் பார்வையோடு மோதியது. 

‘நானும் நீயும் எப்ப இருந்து விரும்புறம்? எப்ப உன்னட்ட அப்பிடிச் சொன்னன்?’ சுதாகரித்து விட்டிருந்தவள்  கோபமாகக் கேட்க நினைத்தாள்.  அது நினைப்போடு மட்டுமே நிற்கும்  படி கதைத்துக்கொண்டே சென்றார்,ரவிக்குமார்.

வீடு பிடிச்சிருக்கா, வேலை எப்பிடி, புது இடம்… எங்க எங்க  போனீர் என்று கதைத்து, அவள் வாயையும் திறக்க வைத்தார். 

சேந்தன் ஒற்றை வார்த்தை கதைக்கவில்லை. விழிகளுக்கு மட்டுமே வேலை கொடுத்தபடி காரோட்டிக் கொண்டிருந்தான்.

“மருமகள் சமையல் அந்த மாதிரியாமே . மகன் ஒரே சொல்லுறவர்.  வாயைத் திறந்தார் எண்டா  உங்கட கதைதான். எப்பம்மா மாமாக்குச்  சாப்பாடு சமைச்சித்  தரப்போறிங்க? இயலும் வரவேணும் எண்டபடி இருக்கிறா.” என்று கேட்டவருக்கு என்ன பதில் சொல்வதென்று முழிக்க வைத்தார்.

“அது வந்து…நான் …” தடுமாறினாள் கவினி. நான் உங்கட மகனை விரும்பேல்ல அங்கிள் என்று சொல்லி, அவர் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தாள். 

“வேலை பிசி எண்டு தெரியும் தானேம்மா. அவசரம் ஒண்ணும் இல்ல.” என்றவர், “ நீங்க இப்ப இருக்கிற வீட்டில இருந்து அஞ்சு நிமிச நடைதான் எங்கட வீடு. இந்த வீக் எண்ட் வீட்ட வாங்கவன். என்ன சேந்தன் கூட்டிக்கொண்டு வாங்க.” என்றபோது, தன்னைத்தானே குட்டிக்கொண்டாள்,கவினி. திடமாக வாய் திறக்க வேண்டிய அவசியம் உணர்த்தியது அவளுள்ளம்.

“அங்கிள், உண்மையாவே நான் உங்கட மகன விரும்பேல்ல. அவர்தான் ஏதோ சொன்னா நீங்க வேற …குறை நினைக்காதீங்க அங்கிள். நிவேதா ஆன்ட்டிக்குத் தெரிஞ்சா திரும்ப முதலில இருந்து வீண் பிரச்சினை. சொறி அங்கிள்! இப்பிடிக் கதைக்கிறதுக்கு உண்மையாவே சொறி!”என்றவள் கண்கள் கலங்கி விட்டன.  அதை அவர்களுக்கு காட்டக்  கூடாது என்று எவ்வளவோ முயன்றாலும் முடியவில்லை. உருண்டு தெறித்த கண்ணீரோடு குனிந்து கொண்டாள், கவினி. 

 

error: Alert: Content selection is disabled!!