கரையுடைக்கும் கணமொன்றில் – 26 (3)

“இப்ப அதான் உம்மட பிரச்சினையா? என்ர தங்கச்சி அவள். தள்ளி தள்ளி நிண்டம் எண்டா கட்டிப்பிடிச்சுக்கொண்டு நில்லுங்க எண்டு சொல்லுவாள்.” கண்ணடித்தபடி அவள் தலையோடு முட்டி விடுவித்தவன் மனத்தை நிறைக்கும் வண்ணம், இருபதிற்கும் மேலே ‘நச்’ கிளிக்குகளை எடுத்திருந்தாள், அவன் சகோதரி. 

கண்கள் கலங்க அவனைப் பார்த்தவள் வாய் திறக்க முதல் “பிளீஸ் கவினி, ஒண்ணும் சொல்லிராதேயும். என்ன ஏசுறது எண்டாலும் நானும் நீரும் மட்டும் இருக்கேக்க .ப்ளீஸ்!” அவள் காதோரம் முணுமுணுத்தான்.

“ஹா..ஹா…கவினி  வாய் திறந்து ஒண்ணுமே சொல்லத் தேவேல்ல. அண்ணாட  முழுசல் பார்வையே எல்லாம் சொல்லிற்று. நான் அதைப் பாத்தும் விட்டன். விழுந்தும் ஒட்டாத கதை விடாதீங்க அண்ணோய்!” நக்கலாகச் சொல்லிக்கொண்டு வந்து கைப்பேசியைக் கொடுத்தாள், இயல்.

“அவர் சொல்லுறத எல்லாம் நீங்க கேட்கத்  தேவேல்ல கவினி. பிடிக்கேல்லையோ கன்னத்தில ரெண்டு பளார் இழுவை வையுங்க!” தமையனுக்கு வில்லியாக மாறிப்போனாள், இயல்.

கவினியோ, பற்களைக் கடித்துக்கொண்டு நின்றவள், அவனே எதிர்பாராத விதமாக கை நிறைய அள்ளிய பனியை அவன் முகத்தில் வீசியெறிந்தாள். 

“ஏய் …”அவன் விலக  முதல் மீண்டும் மீண்டும் அள்ளி எறிந்தாள். 

இயலும் இதை எதிர்பார்க்கவில்லை. பட்டென்று விலகி நின்று தன் கைப்பேசியில் வீடியோவாக்கினாள்.

சேந்தன் அப்படியே கவினியைப் பிடித்து பனியில் உருட்டி  விட , “அண்ணா விசரா உங்களுக்கு?” என்று வந்தவளும்  அதே பனியில் உருட்டப்பட்டாள்.

“ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு விளையாட்டா காட்டுறீங்க?” பனிக்குவியலில் விழுந்தவர்களை எழவிடாது பனியால்  குளிப்பாட்டினான், சேந்தன். அவன் மனம் பஞ்சிபோல் இலகுவாகத் துள்ளிக் குதித்திட்டு. 

“அண்ணா ப்ளீஸ், உங்களுக்கு என்ன விசரே? ஐயோ பல்லுக்கிட்டுது! இங்க பாருங்க, அம்மா கோல் பண்ணுறா!”  கத்தினாள், இயல். 

கையில் அள்ளிய பனியை  இயல் மீது கொட்டாது நிதானித்தவன், மறுகணமே எழ முயன்ற கவினியில் அதைக் கொட்டினான். 

“அய்யோம்மா!” கத்திக்கொண்டு எழுந்தவள் என்ன செய்கிறாள் என்று உணர முன்னரே கையிரண்டிலும்  அள்ளியிருந்த பனியை சேந்தன் முகத்தில் அடித்திருந்தாள். அப்படியும் கோபம் குறையவில்லை. 

கோபமா? அப்படித்தான் அவள் நினைத்துக்கொண்டாள். முகமோ வேறு கதை சொன்னது. அந்தளவு மகிழ்வை, சீண்டலை அவள் முகத்தில் இதுவரையில் கண்டதில்லை. மீண்டும் கைகள் கொள்ளாது பனியைக் கூட்டி அள்ளிக்கொண்டவள், அப்படியே அவன் முகத்தில் தேய்த்து விட்டாள்.

“டேய்ய்ய்ய் …கவினி வேணாம் …” ஒரு கையால் முகத்தைத் துடைத்தபடி அவளை எட்டிப்பிடித்துக்கொண்டான், சேந்தன். அதே வேகத்தில்  கழுத்தோடு கைபோட்டு இறுக்கிப் பிடித்துக்கொண்டவன், “அண்ணாவோட தான்மா நிக்கிறன். வரக் கொஞ்சம் லேட்டாகும். சாப்பாடு வெளில சாப்பிடுறம். ஓம் ஃப்ரெண்ட்ஸ் நிக்கினம்.” என்று சகோதரி சொல்ல,  கவினியைப் பார்த்தான். அதேநேரம், அவன் நெஞ்சோடு நெரிபட்டு நின்றவளும் நிமிர்ந்து அவனைத்தான் பார்த்தாள்.

“இப்ப நிவேதா அன்ரிட்ட என்னோட நிக்கிறன் எண்டதச்  சொல்லேலுமா உங்களால? ஏலாது எல்லா சேந்தன். பிறகு இது…எப்பிடி? ப்ளீஸ்  என்ன விட்டிருங்க!”

பனியில் குளித்து நின்றவள் விழிகள் கலங்கச் சொன்னாள். அவள் தேகச் சூட்டுக்கு முகத்தில் ஒட்டி நின்ற பனி உருகி, கசிந்த  கண்ணீரோடு கலந்து வழிந்தது. பதில் சொல்லாது ஆழ்ந்து பார்த்து நின்றான், சேந்தன். 

“இப்பவும் கொஞ்சம் சரி என்னில, எங்களுக்க இருக்கிற அன்பில நம்பிக்கை வரேல்லையா? எனக்கு மலையளவு இருக்கு. இப்பிடியெல்லாம் சந்தேகமோ, ஆரையும் பாத்துப் பயமோ எனக்குள்ள வரேல்ல கவினி. ஈஸியா விட்டிரலாம் எண்டு மட்டும் நினையாதீர்!” அவள் விழிகளுள் பார்த்தபடி சொன்னான்.

அழைப்பைத் துண்டித்த இயலோ, “ வாவ்! இதல்லோ போஸ்!”அவர்கள் இருவரையும் சுற்றி சுற்றிப் புகைப்படங்களை எடுக்க, அவன் சொன்னவற்றை உள்வாங்கி உதடுகள் துடிக்கக் கசிந்த கண்ணீரை மறைக்காது பார்த்து நின்றவள் கழுத்திலிருந்து கரத்தை விலக்கியவன், “போகலாம், வாங்க” காரை நோக்கி விறுவிறுவென்று நடந்தான்.

“அண்ணோய் என்ன நீங்க? இன்னும் உள்ள கொஞ்சத் தூரம் போவமே!” என்ற இயல், காதுகள் கேளாதவன் போல் அவன் செல்லவும், கேள்வியாகக் கவினியைப் பார்த்தாள். அவளோ, விழிகளைத் துடைத்துக்கொண்டு நின்றாள்.

பெருமூச்செறிவதை விடுத்து வேறென்ன செய்யவியலும்! 

 “வாங்க கவினி.” என்றபடி, தமையனைப் பின் தொடர்ந்தாள்.

 “அண்ணா இப்பிடியே கவினி வீட்ட  போயிட்டு வீட்ட போகலாம்.” என்று கேட்ட தங்கைக்குப் பதில் சொல்லாது, “ ஸ்நோவ தட்டிட்டு ஏறும்.” கவினியின் உச்சியில் தொத்தி நின்ற பனியைத் தட்டிவிட்டான். 

நமுட்டுச் சிரிப்போடு பார்த்த இயல், தன்னைத் தட்டிக் கொண்டு காருக்குள் ஏறிவிட்டாள். அவன் கோபம் இந்தளவு தாக்கும் என்று இப்போதுதான் உணர்ந்தாள், கவினி. அவன் முகத்தையே பார்த்தவள், “நான் ரியாலிட்டிய சொன்னன் சேந்தன். உங்களுக்கு விளங்குதே இல்ல.” சற்றே தள்ளி நின்று தன்னில் இருந்த பனியைத் தட்டிவிட்டு காருக்குள் ஏற முயன்றாள்.

“ஹலோ, உதவி செய்தவேக்கு உதவி தேவையா எண்டு பாத்துச் செய்யிறது மேனர்ஸ் …பின்னால தட்டி விடுறீரா?” தன் பின்புறத்தைக் காட்டிக்கொண்டு அவளை இடித்துக்கொண்டு வந்து நின்றான், சேந்தன்.

“என்ன சொன்னாலும் செவிடன் காதில சங்கு ஊதின கணக்கில” என்றவள், குனிந்து பனியை அள்ளி அவன் தலையில் கொட்டிய வேகத்தில் காருக்குள் ஏறிவிட்டாள். அதையும் தன் கைப்பேசிக்குள் அடக்கிக்கொண்டிருந்த இயலோ, வாய்விட்டே சிரித்தாள்.

 சற்றுமுன் கலங்கி நின்ற கவினிக்கும் முறைத்துக்கொண்டு நின்றவனைப் பார்க்கையில் சிரிப்புத்தான் வந்தது. அவள் மனத்தை இதமாக்கும் அந்த இருவரும், அக்கணம் ,  அவள் நினைவிலிருந்து நிவேதாவை விரட்டி விட்டிருந்தார்கள்.

பொய்யான முறைப்போடு சாரதியாசனத்தை ஆக்கிரமித்தான், சேந்தன். 

இயலோ  கவினியைச் சிந்திக்கவிடவில்லை. எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை காட்ட ஆரம்பித்திருந்தாள்.

ரியர் வியூவால் அவர்களைப் பார்த்தவன், கைபேசியை எடுத்தான். தாமதியாது படபடவென்று ஒரு மெசேஜ் தட்டி அனுப்பிவிட்டு காரை உயிர்ப்பித்தான்.

அவன் முகத்தில் அவனுக்கேயுரிய பிடிவாதம்!

error: Alert: Content selection is disabled!!