“இந்த வெதருக்க அண்ணணும் தங்கச்சியும் வீட்ட வாற எண்ணமில்லாமல் வெளில நிக்கினம். வரட்டும் இண்டைக்கு.” மகளோடு கதைத்துவிட்டு வைத்த நிவேதா சிடுசிடுத்தார்.
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார், ரவி. பதில் சொல்லவில்லை. மகனும் மகளும் கவினியோடு நிற்கிறார்கள் என்று தெரிந்ததில் நமுட்டுச் சிரிப்பை வேறு மறைக்க வேண்டியிருந்தது. சாதாரணமாக இருக்கவே பெரும்பாடுபட்டார்.
“நான் கதைக்கிறது காதில விழுதாப்பா?”
“விழாமல், நியூஸ் எல்லேப்பா பாக்கிறன். குழப்பாதீங்க” பரீட்சைக்குப் படிக்கும் பாவனையில் செய்தியில் ஆழ்ந்துவிட்டார், ரவிக்குமார்.
“பாக்கிற நேரமெல்லாம் செய்திதான். திரும்ப திரும்ப ஒரே விசயத்தக் கேக்கிறதில என்ன இருக்கோ!” புறுபுறுப்போடு கணவரை முறைத்துக்கொண்டு எழுந்துவிட்டார், நிவேதா.
“அவே ரெண்டு பேரும் வெளியில சாப்பிட்டுப்போட்டு வருவினமாம். நமக்கு மட்டும் ஏதாவது செய்வம்.” இரவுணவைத் தயாரிக்கச் சென்றார்.
மனம் தான் சரியிலை. அதுதான், எந்த வகையில் சமாதானம் செய்யப் பார்த்தாலும் என்ன கட்டுப்பாடு விதித்தாலும் மீறி சிடுசிடுக்க வைக்கிறது. அது என்ன இன்று நேற்றா? என்று கொழும்பு சென்று வந்தாரோ அன்றிலிருந்து இதே நிலைதான்.
மகன் பற்றிய நினைவுகள் மண்டைக்குள் நர்த்தனமாடிக்கொண்டிருக்க, “தோசை சுடுறன் என்னப்பா?” என்று கேட்ட போது அவர் கைப்பேசி அதிர்ந்தது.
எடுத்துப்பார்த்தால் ‘மூன்று பேர் சாப்பிட வாறம் அம்மா’ என்று செய்தி அனுப்பியிருந்தான், சேந்தன்.
“இந்த சினோக்க பிள்ளைகளுக்கு விசர், ஆரோ ஃப்ரெண்டோட வருகினமாம்.” கணவரிடம்தான் சொன்னார். அவர் காதில் அது ஏறவில்லை. இப்போது உண்மையாகவே செய்தியில் ஆழ்ந்திருந்தார்.
“புட்டும் கொஞ்சம் அவிச்சு, இறால் கறி ஓகே என்னப்பா? தோசையும் இருக்கு. ” என்றதும் தான், “எது எண்டாலும் சிம்பிளா முடியுங்க நிவேதா.” என்றிருந்தார். தமக்கு இருவருக்கும் தானே என்ற எண்ணத்தில்தான் அப்படிச் சொல்லியிருந்தார். நிவேதா, உணவுத் தயாரிப்பில் இறங்கிவிட்டிருந்தார்.
இங்கோ, சேந்தன் நிதானமாகக் காரோட்டிக்கொண்டிருந்தான்.
“என்ன அந்த பஸ் ஸ்டொப்பில விட்டால் சரி” என்ற கவினி, “இது பே வடிவா இருக்கு எல்லா இயல்? இப்பவே ஒரு ஷோட்ஸ் போட்டுவிடப்போறன்.”என்றபடி அதில் ஆழ்ந்திருந்தவள், கார் அவள் வசிக்கும் பகுதியைத் தாண்டிச் சென்றதை அவதானிக்கவில்லை. இயலும் தான்.
வீட்டின் முன்னால் காரை நிறுத்திய சேந்தன் பின்னால் திரும்பிப் பார்த்தான். கவினியையே பார்த்துக்கொண்டு “வீட்டுக்கு வந்தாச்சு இறங்கி வாங்க!” என்றான்.
அவள் எங்கிருக்கிறாள் என்று இவனுக்கு எப்படித் தெரியும்? கவினி திடுக்கிட்டு வெளியில் பார்த்தாள்.
அதேநேரம், “வீட்ட வந்திருக்கிறீங்க அண்ணா!” இயல் திகைப்போடு சொன்னாள்.
“உங்கட வீடா?” என்ற கவினியின் பார்வை சேந்தன் பார்வையோடு மோதியது.
“ அம்மாவ இன்னும் சந்திக்கேல்ல எல்லா? ஒரு ஹாய் சொல்லிப்போட்டுச் சாப்பிட்டுட்டு வீட்ட போகலாம். பக்கத்தில தானே!” என்றவன், ஒற்றைப் புருவம் ஏறியிறங்கியது.
‘இப்ப நிவேதா அன்ரிட்ட என்னோட நிக்கிறன் எண்டதச் சொல்லேலுமா?’ என்று கேட்டிருந்தாள் தானே? செய்கையில் பதில் சொல்லிவிட்டான். அதுமட்டுமா? தன் நிலைப்பாட்டில், அவள் மீதான தன் விருப்பில் எவ்வளவு உறுதியாக நிற்கிறான் என்று இதைவிடவும் வேறெப்படி உணர்த்துவது.
விழிகள் கலங்கப் பார்த்தாள், கவினி.
“நீர் லண்டன் வந்திறங்கிய அண்டைக்கே உம்மட்ட வந்திருப்பன். அப்பா வாற வரைக்கும் பொறுமையாப் பாத்துக்கொண்டிருந்தனான். காரணம் நீர் தான்.” என்றவன், அவள் விழிகளை ஆழ்ந்து பார்த்தான்.
“என்ர விருப்பத்த, ஏன் கனக்க, ரெண்டு பேரும் ஒருத்தர் ஒருத்தர விரும்பிறம் , எல்லாம் நல்லபடி நடக்கும் எண்டுறதில உமக்குச் சந்தேகமே இருக்கக் கூடாது கவினி. அம்மாவோட கதைச்சிருக்கிறீர். அவவிட மறுப்புக்கு நேர் எதிரா, உம்ம அன்பா வரவேற்க அப்பா காத்திருக்கிறார் எண்டுறது தெரியோனும் எண்டு நினைச்சன் . நம்மட உறவை நாமளே நம்பாட்டி எப்பிடி?”
சிறுபிள்ளைக்கு விளங்க வைக்கும் பாவனையில் கதைத்தான், சேந்தன். கண்ணீர் கசிய அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள், கவினி.
“அதுதான் சந்திக்க வரேல்லையே ஒழிய, ஆருக்கும் பயந்துகொண்டு இல்ல. வீட்டுக்கு உம்மைக் கூட்டிக்கொண்டுவாறதிலயோ, இண்டைக்குப் பின்னேரம் கவினியோட டைம் ஸ்பென்ட் பண்ணினன் அம்மா எண்டு சொல்லுறதிலோ எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. கண்ணத்துடைச்சிட்டு இறங்கும்!” என்றபடி இறங்கியவனின் இடக்கை காரை லொக் செய்தது. வலக்கையோ , தயக்கமாக இறங்கி நின்றவள் இடக்கரத்தைப் பற்றிப் பொத்திப் பிடித்துக் கொண்டது.
இயலுக்கு அவ்வளவு மகிழ்ச்சி! இவர்கள் கதைத்துக்கொண்டிருக்கையிலேயே இறங்கி ஓடிச் சென்று வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு நின்றாள்.
சாப்பாத்து, கையுறை, சால்வை, தொப்பி, குளிர் கோட் என்று கழட்டி வைத்துவிட்டு, மீண்டும் அவள் கரம் பற்றியபடியே வரவேற்பறைக்குள் நுழைந்தான், சேந்தன்.
“கதவு திறந்து கேட்டதாப்பா? ஒருக்காப் பாருங்கோவன். ஃபிரெண்ட் எண்டு போட்டிருந்தவர் தம்பி, ஆர் எண்டு போடேல்ல. நிலவனோ?” மனைவி சொல்ல, தொலைக்காட்சியில் கண்ணும் காதும் இருக்கவே எழுந்து நகர்ந்தார், ரவிக்குமார்.

