“இந்த ரஷியாக்காரன் அறுவான் மூண்டாம் உலகப் போரத் தொடங்கி வச்சிட்டுத்தான் மற்ற வேல பார்ப்பான் போல! பாவம் அந்த மனுசன். போய்ச் சேர்ந்திட்டு! சாகமுதல் சிரிச்சுக்கொண்டே நிண்டதுதான் கண்ணுக்க நிக்குது!”பக்கத்தில் நின்று பார்த்ததுபோல் புலம்பினார், ரவிக்குமார்.
“ஆரப்பா?”
“என்ன ஆர் எண்டுறீர்? ரஷ்யாட கறுப்பு மண்டேலா …Alexei Navalny. பொடி(Body) குடுக்கவே என்ன பாடு படுறான். பிணந்தின்னிப் பேய் புட்டின்!” ஏசிக்கொண்டே திரும்பிய ரவிக்குமாரின் விழிகள் வியப்பில் விரிந்திட்டு!
“மருமகளே!” மகிழ்வோடு வார்த்தை உதிர்ந்திருந்தது. பதற்றத்தோடு உள்ளிட்டிருந்தவள் உள்ளத்தை இதமாக வருடியது, அந்த வரவேற்பு.
“உள்ளுக்கு வாங்கம்மா! உண்மையா நான் எதிர்பார்க்கேல்ல. வாங்க வாங்க. நிவி வந்து பாருங்க, மருமகள் வந்திருக்கிறா!” மகனுக்கும் மகளுக்கும் கண்ணடித்தபடி கூப்பிட்டிருந்தார்.
‘மருமகளா, இதென்ன கத?’ நிவேதாவின் நெஞ்சம் அதிர்ந்திட்டு. புட்டுக் குத்திய கையோடு ஓடி வந்தார்.
வேகமாக வந்தவர் பார்வையில் கவினி பட்ட கணம், உச்ச பட்சமாக அதிர்ந்து நின்றார். தான் மறுத்த ஒன்றை சத்தமேயில்லாது நடத்தியிருக்கிறார்கள்.
மண்டைக்குள் குடைச்சல் தரும் மதிவதனியின் ஏளனச்சிரிப்பு எதிரொலித்தது.
‘உன்ர மகன்தான் அவளுக்குப் பின்னால திரிகிறான்.’ என்று, எத்தனை எகத்தாளமாகக் கதைத்திருந்தார். ‘இப்ப இதுக்கு என்ன சொல்லப் போறாள்?’ என்று எண்ணியவர், முன்னால் மதிவதனி நின்றிருந்தால் கன்னம் கன்னமாக விளாசித் தள்ளியிருப்பார். எல்லாம் கடந்து, அவர் குடும்பமே அவரை அவமானப்படுத்திவிட்டார்கள்! மனம் உலைக்கலமாகிற்று!
“அம்மா….” சேந்தன் குரலில் அதிர்விலிருந்து மீண்டிருந்தவர், கவினியைக் கோபத்தோடு பார்த்தார்.
“இதென்ன கூத்து ரவி? ஆர மருமகள் எண்டனீங்கள்? இந்தப் பிள்ளய ஸ்பொன்சர் செய்து கூப்பிட்டிட்டியா தம்பி? இவ்வளவும் தான் எனக்கு இந்த வீட்டில மரியாதையா? இங்க பாருங்க, நான் செத்தாலும் இதுக்கு ஒத்துக்கொள்ள மாட்டன்.” அவமான உணர்வு ஏற்படுத்திய அழுகையிலும் கோபத்திலும் அவருக்குக் கதைக்க வரவில்லை.
“நிவி என்ன கத இதெல்லாம்?” அதட்டலாக இடையிட்ட கணவர் வேறு ஆத்திரத்தை அதிகரிக்கப்பண்ணினார்.
கவினியின் முன்னால் சென்று உறுத்து விழித்தார்.
அவளுக்கோ பெரும் சங்கடமாக இருந்தது. அவளையுமறியாது சேந்தனைப் பார்த்துவிட்டாள்.
“அப்ப, அண்டைக்கு விரும்பேல்ல எண்டு சொன்னது பொய்! நடிச்சிருக்கிற என்ன?” சீறினார், நிவேதா.
“மதிவதனிட மகளுக்கு நடிக்கச் சொல்லியா தரோணும்? இளைச்சவன் கிடைச்சா சத்தமே போடாம மொட்டை அடிக்க வெளிக்கிட்டிருவீங்களே! நீ வெளிநாடு வாறதுக்கு என்ர மகன் தான் கிடைச்சானா?” குரல் உயர்த்திக் கத்தினார் என்றே சொல்லலாம்.
அதிலும் அவர் கதைக்க கதைக்க கவினியின் முகம் கோபத்தில் கன்றியதா? கொதித்துப் போனார்,நிவேதா. அருகில் அதிர்ந்து நின்ற கணவரையும் மகன், மகளையும் அதே எரிபார்வையால் சுட்டுப் பொசுக்கினார்.
“அம்மா வேணாம். கதைக்க முதல் கொஞ்சம் யோசிச்சுக் கதையுங்கோ!” இறுகிய குரலில் சொன்ன சேந்தனும் “நிவேதா போதும், நீரா இப்பிடியெல்லாம் கதைக்கிறீர் எண்டு இருக்கு. கொஞ்சம் அமைதியாகும்” என்ற ரவியும், தாயை முறைத்த இயலும் சேர்ந்து நிவேதாவைத் தன்னிலை இழக்கச் செய்தார்கள்.
கவினியின் முன்னால் வைத்து எல்லோருமாகச் சேர்ந்து அவரையல்லவா அதட்டுகிறார்கள்! அவர் ஒரு செல்லாக்காசு என்று நினைப்பாளா இல்லையா ? நிவேதா, மனத்தில் வெகுண்டு போனார்.
“அதெல்லாம் வடிவா யோசிச்சுத்தான் கதைக்கிறன்.” தீவிழியோடு மகனுக்குப் பதில் சொன்னார்.
“போயும் போயும் ஒரு பெட்டையிட்ட ஏமாந்து போயிருக்கிறீங்களே, உங்களுக்கு வெக்கமா இல்லையா?” இகழ்ச்சியாகக் கேட்டுவிட்டார்.
பதிலாக, “போதும் நிவி, இனி ஒண்டும் கதைச்சிராதீங்க! எங்கட தரத்த நாங்களே குறைச்சுக் கொண்டது போல இருக்கும்.” ரவியின் குரல் உறுமலாக வந்தது.
காதே கேளாத பாவனையில் மகனைப் பார்த்தார், நிவேதா.
“இங்க பார் சேந்தன், நீ தலைகீழா நிண்டாலும் இந்த வேல செய்ய என்ர சம்மதம் கிடைக்காது! என்ர வீட்டில இவா ஒரு நிமிசமும் நிக்கக் கூடாது! கெதியா வெளில அனுப்பு! இது சம்பந்தமா ஒரு வார்த்தையும் ஆரோடையும் கதைக்க நான் தயாரா இல்ல!” விசுக்கென்று திரும்பி அருகிலிருந்த அறைக்குள் நுழைந்து கதவை அடித்துச் சாத்தியிருந்தார்.
நல்லது கெட்டது பகுத்தறியும் நிதானமும் பொறுமையும் அவரை விட்டுப் பறந்திருந்தது. கவினி சார்ந்து அவர் முடிவில் மாற்றுக் கருத்தென்பதே இல்லை. பிறகென்ன வக்காலத்து வேண்டிக்கிடக்கு என்றே அவர் மனம் உறுமிக் கொண்டிருந்தது.
இயல் உறைந்து நின்றிருந்தாள். இந்த அம்மாவை அவளுக்குத் தெரியவே தெரியாது. ரவிக்குக் கூட அதிர்ச்சி தான். இந்தளவு வெறுக்க என்ன காரணம் இருக்கு?
மதிவதனியில் மிகுந்த கோபமாக இருக்கிறார் என்று தெரியும்.நண்பிகள் என்று, காலையில் கண் முழிப்பதிலிருந்து இரவு தூங்கும் வரையும் எல்லாம் சொல்லிக் கதைத்துச் சிரித்துத் திரிந்தவர்கள் இன்று முட்டிக்கொண்டு நிற்பதே ஆச்சரியம். அதை அப்படியே கவினியில் கொட்டிவிட்டாரோ! என்னதான் என்றாலும் முதிர்ச்சியுள்ள பெண்மணிக்கு அழகா இது? மனைவியில் எக்கச்சக்கமான கோபம் அவருக்கு.
சேந்தன் நிலையைக் கேட்கவே வேண்டாம். தாய் இருகரம் விரித்து வரவேற்பார் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம், இப்படிச் சுடு சொற்களையும் வீண் பழியையும் அவள் மீது கொட்டுவார் என்றும் எதிர்பார்க்கவில்லை. தாயில் மிகுந்த வருத்தம் கொண்டான். அதை மீறிய கோபமும் ஏற்பட்டிட்டு.
“கவினியை அவமதிக்கிறது என்னையே அவமதிக்கிறதுக்குச் சமம் அம்மா. அது இப்பயும் உங்களுக்கு விளங்கேல்லையோ நான் ஒண்டும் செய்யேலாது!” குரலுயர்த்திச் சொன்னவன், கவினி, தன் பிடிக்குள்ளிருந்து கையை உருவிக்கொள்ளவும் அவளைப் பார்த்தான்.
“அம்மா கதைச்சதுக்கு எல்லாம் சொறி கவினி! பெரிசா எடுக்காதேயும். ப்ளீஸ்!” என்றான், மிகுந்த வருத்தமான குரலில்.
“ நீங்க ஒண்டுக்கும் யோசிக்க வேணாம். வாங்க, உள்ள வந்திருங்க.” நிலைமையைச் சமாளிக்க வேண்டுமே. வரவேற்றார் ரவிக்குமார்.
“முதல் நான் ஒருக்கா அன்ரியோட கதைச்சிட்டு வாறன்.” அவள் சொன்னதை அங்கு நின்றவர்கள் உணர முன்னரே, நிவேதா உள்ளிட்ட அறைக்கதவைத் திறந்து உள்ளிட்டிருந்தாள், அவள்.
“அவள் போய்ட்டாளா? என்ன துணிவிருந்தா இவ்வளவு சொன்ன பிறகும் மருமகளே எண்டுவீங்க ரவி?” என்று திரும்பிய நிவேதா திகைத்து நின்றார்.
“நிவி அன்ரி …”
“என்ன அப்பிடிக் கூப்பிட வேணாம். என்ன துணிவிருந்தா அறைக்க உள்ளிடுவ. முதல் வெளில போ!”
“நீங்க என்னைப்பார்த்து என்ன எல்லாம் சொன்னீங்க? கேட்டுட்டுப் போக நான் ஒண்ணும் பெக்கோ இல்ல. பதில் சொல்ல வேணாமா?”
அறைக்குள்ளிருந்து வந்த கவினியின் குரலில் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார், ரவிக்குமார்
“சேந்தன் அவவக் கூட்டிக்கொண்டு வாங்க. இதென்ன ரெண்டு பேரும் குடுமிப்பிடி சண்டை போடப் போகினமோ!” அசையாது நின்ற மகனிடம் சொன்னார்.
“அண்ணா போங்க!”அறைப்பக்கம் தமையனைத் தள்ளிவிட்டாள், இயல்.
அவன் அசையவில்லை.
“நான் இங்க வந்து ரெண்டு மாதம் ஆகுது. ஆரும் ஸ்பொன்சர் செய்துதான் வெளிநாடு வரோணும் எண்ட நிலை எனக்கு இல்ல. வேலைக்கு வந்திருக்கிறன்.” என்று ஆரம்பித்தவள், இன்று காலை சேந்தனையும் மாமாவையும் சந்தித்தேன் என்றிருந்தாள். அந்த மாமாவில் அவள் கொடுத்த அழுத்தத்தில் நிவேதாவுக்கு இரத்த அழுத்தம் எகிறியது.
“ஆர் ஆருக்கு மாமா?”
“ஆரச் சொல்லுறன் எண்டு உங்களுக்கு விளங்கேல்லையா?” என்றவளின் நக்கல் தொனி அவரைச் சீண்டிட்டு. அதையும் கடந்து, இப்படி நேரடியாக அவள் கதைக்கும் அதிர்வில் வாயடைத்து நின்றிருந்தார், நிவேதா.
கடினமாகவே தொடர்ந்தாள், கவினி. “மற்றது, அண்டைக்கே, சேந்தனைப் பிடிக்கேல்ல எண்டு சொல்ல ஒரு காரணமும் எனக்கு இருக்கேல்ல. அப்பிடியிருக்க பிடிக்கேல்ல எண்டனான். அதுக்குக் காரணம் ஒண்டே ஒண்டுதான். கலியாணம் செய்யிறது மூலம் எனக்கு ஒரு குடும்பம் கிடைக்கோணும் எண்ட ஆசை மட்டும் தான். ஒருக்காலும் எதிர்ப்பில கலியாணம் செய்யிறது இல்ல எண்ட உறுதி எனக்குள்ள இருக்கு. அது என்ர சொந்த அனுபவம் தந்த பாடம். உங்களுக்குத் தெரியாதது ஒண்டும் இல்லையே!”கசப்போடு முறுவலித்தாள்.

