“இப்ப, கிட்டத்தட்ட ரெண்டு வருசங்களுக்குப் பிறகு சந்திச்ச சேந்தன், அண்டைக்குப் போலவே விருப்பத்தச் சொல்லுறார். பக்கத்தில, மருமகளே எண்டு மாமாவும் என்னை ஏற்றுக் கொள்ளுறார். இயல் பற்றிச் சொல்லவே வேணாம். என்னில அவ்வளவு விருப்பம். நான் விரும்பினவரை கலியாணம் செய்ய, அதுவும் அவர் குடும்பமே என்னை அன்பு செய்யேக்க மாட்டன் எண்டு சொல்ல எனக்கு என்ன விசரா பிடிச்சிருக்கு?” என்று கேட்டவளின் திடமான குரலும் துணிவான உடல்மொழியும் நிவேதாவின் வாயைக் கட்டிப் போட்டுட்டோ! வார்த்தை வராது நின்றார், அவர்.
“அன்பக் காட்டுறவேய அவமதிக்க என்னால ஒருக்காலும் ஏலாது. ஏன் எண்டா, என்ர வாழ்க்கையில உண்மையான அன்பக் காட்டினவேய விரல் விட்டு எண்ணலாம். ஆனா ஒண்டு, உங்களுக்கு விருப்பம் இல்லாமல் நான் அவரக் கலியாணம் செய்ய மாட்டன். விரும்பிறதுக்குத் தடை போட எனக்கே அனுமதி இல்ல, பிறகு மற்றவே எந்த மட்டுக்குச் சொல்லுங்க. நான் போயிட்டு வாறன்.” இதைச் சொன்ன மறுகணமே வெளியேறியிருந்தாள். நிவேதாவோ, வார்த்தைகள் எழாது நின்றிருந்தார்.
வெளியில் வந்தவளை கதவோரமாக நின்ற சேந்தனின் கரம் பிடித்து நிறுத்தியிருக்க, அவனோ, இறுக அணைத்துக்கொண்டான்.
தன் அன்பிற்கான எதிரொலியை ஏற்கனவே உணர்ந்துவிட்டாலும் வார்த்தைகள் கரையுடைந்த கணம் இதுவல்லவோ!
பேச்சின்றி உச்சியில் அழுந்தக் கொஞ்சினான். கசிந்த விழிகளை அவன் நெஞ்சிலேயே அழுந்தத்துடைத்தவள், “விடுங்கோ சேந்தன்!” பட்டென்று விலகியும் விட்டாள். அவர்கள் எவரையும் பார்க்கவில்லை. வெடித்து அழுதிடுவாள்.
“நான் போய்ட்டு வாறன் சேந்தன், பக்கத்தில தானே.”என்று நகர்ந்தவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தான், சேந்தன்.
ஏதாவது சொல்லி கவினி மனத்தை உடைத்தனுப்ப வேண்டுமென்று எண்ணினாலும் வார்த்தைகள் வராது நின்ற நிவேதா, மகன், அவள் கரத்தைப் பற்றியபடி உள்ளிட்டு நிற்க மனத்துள் பதைபதைத்துப் போனார்.
“உங்களுக்கு விருப்பம் இல்ல, வீண் பிரச்சனை ஏன், இது சரிவராது எண்டு, கவினி இண்டைக்குக் காலமையும் அப்பாட்டச் சொன்னனவா அம்மா.” இறுகிய குரலும் அதிருப்தியான முகபாவனையுமாகச் சொல்லியிருந்தான். அதுவே, இன்னும் இன்னும் நிவேதாவின் கோபத்தை கிளறிவிடப் போதுமாக இருந்தது.
“ஓ ரியலி! பிறகு அதுக்கிள்ள மனம் மாறி உன்னில விருப்பம் வந்திட்டோ? அல்லது எனக்குத்தான் இவவில அன்பு வந்திட்டோ? இதத்தான் நான் நடிப்பு எண்டுறன். ஏமாந்து போகாத தம்பி!” கோபமும் நக்கலுமாகச் சொன்ன நிவேதாவின் பார்வை கவினியை எரித்தது.
சேந்தன் முகம் பாறை போலாக்கிற்று.
“எனக்கு உங்கள எவ்வளவு பிடிக்கும் எண்டு உங்களு நல்லாவே தெரியும் அம்மா. அந்தப் பிடிப்ப வெறுப்பா மாத்திராதீங்க பிளீஸ்!” என்றவன், “ அப்பிடிச் சொன்ன கவினிட்ட நான் என்ன சொன்னனான் எண்டு மட்டும் சொல்லிப் போட்டுப் போறன் சரியா?” கடினக் குரலில் தொடர்ந்தான்.
“விருப்பம் இல்லாத கலியாணத்தால, அவவிட அப்பம்மாவுக்கும் தாய்க்கும் இடையில மாட்டுப்பட்டு, இண்டு மட்டும் தான், வேதனையை அனுபவிக்கிறது போல ஒரு விசயம், தன்ர கலியாணத்தாலும் நடந்திரக்கூடாது எண்டவாம்மா. அதுக்கு நான் என்ன சொன்னனான் தெரியுமா? என்ர அம்மா ஒண்ணும் உம்மட அப்பம்மாவோ, அம்மாவோ இல்ல எண்டனான்.” என்றவன் விழிகள் கலங்கிற்று. கேட்டுக்கொண்டு நின்ற நிவேதா விழிகள் கூடக் கலங்கிற்று.
“அதுமட்டும் இல்ல, நான் மிஸ்டர் பூங்குன்றன் இல்லை எண்டும் சொன்னனான்.”என்றபோது, அவன் குரலில் இருந்த தீர்மானத்தில் நிவேதா மகனையே பார்த்து நின்றார்.
“இதுக்கும் மேல, எனக்கு என்ன சொல்லுறது எண்டு உண்மையாவே தெரியேல்ல அம்மா. இப்பவும் சொல்லுறன், உங்களுக்குப் பிடிக்காத விசயத்த நான் செய்ய மாட்டன். அது போலவே, எனக்கு விருப்பம் இல்லாததுகளையும் நீங்க செய்ய நினைக்கவே கூடாது. முக்கியமா என்ர கலியாணக் கதை இந்த வீட்டில வரக்கூடாது. நான் இப்பிடியே இருந்திர்ரன், சந்தோசம் தானே?” விருட்டென்று வெளியேறியவன், “கவினிய விட்டுட்டு வாறன் அப்பா.” என்று வெளியேறிய வேகத்தில் மீண்டும் உள்ளே வந்து நின்றான்.
“நான் கவினி வீட்டில சாப்பிடுறன் இயல். நீங்க எனக்காகப் பாத்துக்கொண்டிராமல் சாப்பிடுங்க.” சத்தமாக அவன் சொன்னதைக் கேட்டுத் தளர்ந்தமர்ந்தார், நிவேதா.
சிறுவயதிலிருந்து, சிறு சிறு விடயங்களிலும் பொறுமையோடு, நிதானமும் புத்தி சாதுர்யமுமாக நடக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தவரே அவர்தான். அவருக்கு எதிராகவே அது பயன்படுகிறதே! கண்ணீர் வழிய அமர்ந்திருந்தார்.
அதேநேரம், தான் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்த்த பொறுமை, நிதானம், புத்தி சாதுர்யம் எல்லாமே அவரை விட்டு எட்டாத தூரம் சென்றுவிட்டதை அவர் உணரவில்லை.
ஒருவர் ஒருவரை மதித்தல் என்பது, உறவுகளுக்கு ஆரம்பத் திறவுகோல் என்று போதித்தவர், இன்றோ, தன்னிலும் வயதில் மிகவும் சிறியவளை அற்பமானவள் போல் நடத்துவதையும் உணர்ந்தாரில்லை.
‘ஊருக்குத்தான் உபதேசம், உனக்கில்லை’ என்றது, நிவேதாவுக்கு மிகச் சரியாகப் பொருந்திப் போனது.
அவரோ, தனக்கெதிராக மொத்தக் குடும்பத்தையும் திருப்பிவிட்ட கவினி மீதான கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருந்தார்.

